Wednesday, 24 August 2016

என்ன தவம் செய்தோம்?


இளமை ததும்பும் புதுமணமக்களைப் பார்ப்பது ஓர் இன்பம். அதுவும் நாம் கொஞ்சி மகிழ்ந்த குழந்தைகளைச் சிறுவர்களை மணமக்களாகப் பார்ப்பது பேரின்பமாகும். ஆவணி மாதம் திருமணக் காலம். இலண்டன் மாநகரில் ஒவ்வொரு கிழமையும் ஒன்றிற்கு இரண்டு மூன்று எனத் திருமணங்களுக்கு சென்று, புதுமணமக்களைப் கண்டு, மகிழ்ந்து ஆசி வழங்கி வந்த மனநிறைவில் இதனை எழுதுகிறேன். நாம் பார்த்திருக்க வளர்ந்து மணமக்களாக மேடையில் நிற்கும் பிள்ளைகளைக் கண்ட போது ‘என்ன தவம் செய்தோம்?’ என மனம் அசைபோடுகிறது. கூடவே திருவிளையாடற் புராணத்தில் வரும் மதுரை மீனாட்சி, சுந்தரேசர் திருமணக்காட்சியும் கண்ணில் விரிகிறது.

இலண்டன் மாநகரத்தில் நடைபெறும் திருமணங்களை நாம் பார்த்து மகிழ்வது போல மதுரை மாநகரில் மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேசருக்கும் திருமணம் நடைபெறுவதைக் கண்டு மகிழ்ந்தோர் சொன்னதை 
“நங்கை என் நோற்றாள் கொல்லோ 
          நம்பியைத் திளைத்தற்கு என்பர்
மங்கையை மணப்பான் என்னோ
          வள்ளலும் நோற்றான் என்பர்
அங்கடி மதுரை என்னோ
          ஆற்றிய தவம்தான் என்பர்
இங்கிவர் வதுவை காண்பான்
          என்ன நாம் நோற்றோம் என்பர்”
                              - (திரு.வி.புராணம்: திருமணப்படலம்: 120)
இப்பாடல் சொல்கிறது. திருமணத்தைக் காண வந்தோரில் சிலர் ‘பெண்மை நலங்கள் மிக்கவளான மீனாட்சி ஆண்மையிற் சிறந்த சுந்தரேசனை அநுபவிக்க என்ன தவம் செய்தாளோ?’ என்பர். வேறு சிலர் ‘மங்கைப் பருவத்தை உடைய மீனாட்சியை மணக்க வள்ளளான சுந்தரேசனும் தவம் செய்திருகிறான்’ என்பர். இன்னும் சிலர் ‘கடைகள்[அங்கடி] உள்ள மதுரை செய்த[ஆற்றிய] தவம் தான் என்னவோ?’ என்பர். ‘இவர்களது திருமணத்தைக்[வதுவை] காண நாம் என்ன தவம் செய்தோம்’ என்று எல்லோரும் சொல்வர். அத்தகைய மன நிலையில் தான் நல்ல திருமணத்தைப் பார்த்தோர் இருப்பர்.

மீனாட்சி, சுந்தரேசர் போன்ற அழகும் ஆற்றலும் உள்ள நங்கைக்கும் நம்பிக்கும் நாள், நட்சத்திரம் பார்த்து தீவளர்த்து செய்து வைக்கும் திருமணங்களை ஐயர்மாரும் சாத்திரம் சொல்வோரும் குறித்துக் கொடுக்கும் நாட்களில் செய்கிறோம். அவர்கள் குறித்துக் கொடுக்கும் நாட்கள் திருமணத்திற்கு ஏற்ற நல்ல நாட்களா என்று எத்தனை பேர் சரி பார்த்திருக்கிறோம்? எமது சிந்தனையை நாமே செதுக்கிப் பார்க்க வேண்டும். 

புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் நம்மில் பலருக்கு நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டும் என்பது மட்டும் தெரியும். அது சரியான நாளா! பிழையான நாளா! என்பதை எப்படி அறிவது? என்ற விடயம் தெரியாது. தெரிந்த பலரும் தத்தமது நன்மைக்காக வாய்மூடிக் கொள்கிறார்கள் என நினைக்கத் தோன்றுகிறது. அந்த வரிசையில் ஐயர்மாரும் சாஸ்திரம் சொல்வோரும் மட்டுமல்ல கோயில் அறக்காவலர்கள், திருமண மண்டபங்களை வாடகைக்கு விடுவோர், திருமணவிழாவிற்கான ஒழுங்குகள் செய்வோர், திருமணத்திற்கு வேண்டிய உணவு கொடுப்போர், பெண்ணிற்கு அலங்காரம் செய்வோர், படம் எடுப்போர் எனப்பலரையும் சேர்க்கலாம். இவர்களுக்கு தேய்பிறையில் திருமணம் செய்யக்கூடாது என்ற அடிப்படை உண்மை தெரியாமலா இருக்கும்? அதைத் திருமணம் செய்ய வருவோருக்குச் சொல்லலாம் அல்லவா?

இந்த மாதம் [ஆவணி] தேய்பிறையில் வந்த திரிதியை, சதுர்த்தி, துவாதசி ஆகிய மூன்று நாட்களிலும் நடந்த திருமணங்களுக்குச் சென்று வந்தேன். நாள் நட்சத்திரம் பார்த்து திருமணம் செய்து வைப்பதாக இருந்தால் இந்த நாட்களைத் தேர்வு செய்திருக்கமாட்டேன். நான் தூக்கி மகிழ்ந்த பிள்ளைகளின் திருமணங்கள் நம்மவர்களின் பொறுப்பு இல்லாத் தன்மையினால் நல்ல நாள் [சுபமுகூர்த்தம்] எனும் போர்வையில் நடைபெற்றதே என்ற நெருடல் உண்டு.  நான் சாத்திரத்தின் மேல் நம்பிக்கை கொண்டவள் அல்ல. ஆனால் முறையாக என் தந்தையிடம் சோதிட சாத்திரம் கற்றவள்.  சில நூறு ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்தும் இருக்கிறேன். சாத்திரத்தில் இருக்கும் குளறுபடிகளும், இடைச்செருகல்களும், சோதிடக் கணிப்பில் பலர் செய்யும் தவறுகளுமே நம்பிக்கை இன்மைக்கு முக்கிய காரணங்களாகும். எனினும் சோதிடத்தின் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்காக திருமணத்துக்கு நாள்குறிக்கும் போது கவனிக்க வேண்டிய அடிப்படை விதிகளைச் [மணமக்களின் ஜாதகத்தில் உள்ள கிரகநிலைகளைக் கொண்டல்ல] சொல்கிறேன்.

திருமண நாளைத் தேர்ந்தெக்கும் போது…
1. திருமணங்கள் வளர்பிறையில்[சுக்கில பட்சம்] செய்யவேண்டும். தேய்பிறையில்[ கிருஷ்ண பட்சம்] செய்வதில்லை.
2. சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி மாதங்கள் திருமணம் செய்ய உகந்த மாதங்களாகும். [ஆனால் எனக்கு மார்கழியில் திருமணம் நடந்தது. ஏனெனில் தேவர்கள் திருமணம் செய்யும் மாதம் மார்கழியாம். அம்மாதத்தில் செய்தால் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ளச் செய்தது.
3. ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமி அல்லது இரண்டு அமாவாசை வந்தாலும் [மல மாதம்] அம்மாதத்தில் திருமணம் செய்வதில்லை.
4. புதன், வியாழன், வெள்ளி கிழமைகளே திருமணம் செய்ய ஏற்ற கிழமைகளாகும். செவ்வாய், சனிக் கிழமைகளில் திருமணம் செய்து வைப்பதில்லை. மணமக்கள் பிறந்த திகதி, கிழமைகளில் திருமணம் நடைபெறுவது நன்றல்ல.
5. மணமக்கள் பிறந்த நட்சதிரங்களில் திருமணம் செய்வதில்லை. அத்துடன் அந்த நட்சத்திரங்களுக்கு 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 25 ஆகிய நட்சத்திரங்களிலும் திருமணம் செய்வதில்லை.
6. ரோகிணி, மிருகசீரிடம், மகம், உத்தரம், உத்தராடம், அத்தம், உத்திரட்டாதி, சுவாதி, அனுசம், மூலம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் திருமணம் செய்ய ஏற்றது. பரணி, கார்த்திகை, ஆயிலியம், கேட்டை,  ஆகிய நட்சத்திரங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பர்.
7. வளர்பிறையில் வரும் துவதியை, திரிதியை, சப்தமி, தசமி, திரயோதசி, பௌர்ணமி ஆகிய திதிகளில் திருமணம் செய்யலாம். பிரதமை, அட்டமி, நவமி திதிகளில் திருமணம் செய்வதில்லை.
8. இடபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய இலக்கினங்களில் திருமணம் செய்யலாம்.
9. மரணயோகத்தில் திருமணம் செய்வதில்லை.
10. பதினொரு கரணங்களில் பத்திரை என்ற கரணத்தில் திருமணம் செய்வதில்லை.

என்பவற்றைக் கருத்தில் கொண்டு திருமணநாள் குறிப்பது நல்லது என்பதை நினைவில் வைத்திருங்கள். திருமணத்திற்கு எல்லோரும் வரவேண்டும் என நினைத்து சனி, ஞாயிறு வேலை இல்லாததால் அந்நாட்களில் திருமணத்தை செய்து வைக்கிறோம். ஆனால் அது சாத்திரத்திற்கு முரணானது. நல்ல மணமங்கல நாளில் நடைபெறும் திருமணத்தைப் பார்த்து என்ன தவம் செய்தோம் எனப் பெருமிதம் கொள்வோம்.
இனிதே, 
தமிழரசி.

3 comments:

  1. அருமையான இலக்கியப் பதிவு
    பயனுள்ள பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete