Friday, 15 July 2016

பண்டைத் தமிழரின் அணுக்கொள்கை

மணிமேகலையில்…

எமது முன்னோர்களான பண்டைத்தமிழர் அறிவியலை அறிந்திருக்கவில்லை என நம்மில் பலர் நினைக்கிறோம். அதுமட்டுமல்லாமல்  சங்கஇலக்கியங்களையும்  காப்பிய இலக்கியங்களையும் படித்துப்பார்க்காமலே அவை காதலையும் வீரத்தையும் மட்டுமே சொல்வதாக எண்ணி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். அதற்கு நுனிப்புல் மேய்ந்த மேடைப் பேச்சாளர்களும் பட்டிமன்றங்களை நடத்துவோருமே காரணமாவர். பண்டைத் தமிழரின் அறிவியல் கொள்கையை - விஞ்ஞானக் கருத்தைப்பற்றி எத்தனை பட்டிமன்றங்கள் நடந்ததைப் பார்த்தீர்கள்? கேட்டீர்கள்?


இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தைப் படிக்கும் அளவுக்கு நம்மவர்கள் சீத்தலைச் சாத்தனார் எழுதிய மணிமேகலையைப் படிப்பதில்லை. ‘கணிகையான மாதவியின் மகள் மணிமேகலை’ என்ற காழ்ப்பு உணர்ச்சியே எம்மை மணிமேகலையைப் படிக்காது தடுக்கின்றது எனலாம். அதனால் மனித இனத்துக்குச் சாத்தனார் எடுத்துச் சொன்ன சமய தத்துவங்களையும் அறிவியற் கருத்துக்களையும் நாம் இழக்கின்றோம். அந்தக் காழ்ப்புணர்ச்சியைக் கழற்றிவிட்டு மணிமேகலையை எடுத்துப் படித்துப் பாருங்கள் அதன் அருமை புரியும். எமது கண்டுகொள்ளாத் தன்மையால் எவற்றை இழக்கிறோம் என்பதைக் காட்டவே சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையில் சொல்லிய அணுக்கொள்கையைப் பகிர்ந்து கொள்கிறேன்.
Democritus

அணுவைப்பற்றி கிரேக்கத்தில் கி மு 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த Democritus என்ற தத்துவஞானி சொன்னார். அவரது அணுக்கொள்கையானது தத்துவத்ததை விளக்கும் நியதிக்கொள்கையாகப் [Determinism] பயன்பட்டது. அணுவைப்பற்றிய அவரது கொள்கைக்கு  மாறுபட்ட கருத்தை அவருக்கு பின் வாழ்ந்த Aristotle கூறினார். எனினும் அவ்விருவரது கருத்துக்களும் கி பி19ம் நூற்றாண்டுவரை தூங்கியே கிடந்தன. இன்றைய அணுக்கொள்கையை 1803ம் ஆண்டு John Dalton என்பவரே  எடுத்துரைத்தார். நம் முன்னோர் சொன்னவற்றையும்  Dalton  கூறியிருப்பதில்  காணமுடிகிறது.
பண்டைத் தமிழரின் அணுக்கொள்கையும் கிரேக்கர்களின் கொள்கைபோல் எடுத்துப் பார்ப்பார் இன்றி ஆழ்ந்த தூக்கதில் கிடக்கிறது. நம் முன்னோர் சொன்ன அணுக்கொள்கையின் விரிவான விளக்கத்தை ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் காணலாம். எமது பண்டைத்தமிழ் முன்னோர் அணுக்கொள்கை மட்டும் உடையவர்களாக இருக்கவில்லை. அதற்கும் மேலாக அணுவைப்பற்றிய நூலும் வைத்திருந்தார்கள். அதனை ‘இறை நூல்’ என அழைத்தனர். அதில் அணுவைப்பற்றி இன்றைய ‘நனோ தொழில் நுட்பத்தையும்’ விட மிக நுணுக்கமாக எடுத்துச் சொல்லியிருக்கும் பாங்கு போற்றுதற்குரியது. பண்டைத் தமிழர்கள் ‘அணு’ என்றும் ‘பரமாவணு’ என்றும் சொன்னதை ‘இறை’ என்றும் அழைத்தனர். ‘இறை நூற்பொருள்’ என்றால் ‘அணு நூல் பொருள்’ ஆகும். அந்த இறை நூலில் - அணு நூலில் சொல்லப்பட்ட கருத்தையே சாத்தனார் மணிமேகலையில் கூறியுள்ளார். 
காற்று                                      தீ
நீர்                                           நிலம்
மணிமேகலையிலுள்ள சமயக்கணக்கர் தம்திறம் கேட்ட காதையில்
நால்வகை அணுக்களும் உயிரும்
“எல்லையில் பொருள்களில் எங்கும் எப்பொழுதும்
புல்லிக் கிடந்து புலப்படு கின்ற
வரம்பில் அறிவன் இறைநூற் பொருள்கள் ஐந்து
உரந்தரும் உயிரொடு ஒருநால்வகை அணு
அவ்வணு உற்றும் கண்டும் உணர்ந்திடப்
பெய்வகை கூடிப் பிரிவதும் செய்யும்
நில நீர் தீ காற்று எனநால் வகையின
மலை மரம் உடம்பு எனத் திரள்வதும் செய்யும்
வெவ்வேறாகி விரிவதும் செய்யும்
அவ்வகை அறிவது உயிர் எனப்படுமே”
                                            - [மணிமேகலை: 27: 110 - 119]
உலகில் உள்ள எல்லையில்லா பொருட்களில் எவ்விடத்திலும் எப்பொழுதும் சேர்ந்து [புல்லி] கிடந்து விளங்குகின்ற முடிவற்ற [வரம்பில்] அறிவனின் அணு நூற்பொருட்கள் [இறை நூல் பொருட்கள்] ஐந்தாகும். அவை வலிமையைக் கொடுக்கும் [உரந்தரும்] உயிரோடு நால்வகை அணுக்களுமாகும். அவ்வணுக்கள் தம்மைத் தாம் உற்றும் கண்டும் உணர்ந்திட ஒன்றோடு ஒன்று கூடியும் ஒன்றாகாவகையில் பிரியும். [ஓர் அணு மற்றோர் அணுவில் அடங்கும் ஆனால் ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஒன்றாகாது என்பதை ‘பெய்வகை’  எனும் சொல் காட்டுகிறது]. நில அணு, நீர் அணு, தீ அணு, காற்று அணு என நால் வகையினவாகிய அவை மலையாக, மரமாக, உடம்பாகத் திரண்டு உருவாகும். அவை வெவ்வேறாகப் பிரிந்து பலவாக விரிவதும் உண்டு. இவ்வாறு திரள்வதும் விரிவதுமாகிய கூறுபாடுகளை அறிவது உயிர் என்று சொல்லப்படும்.

இவைமட்டும் அல்ல அண்டவெளியில் ஏற்படும் தாக்கங்கள் அணுக்களைத் தாக்குமா? அணுக்கள் எப்படியானவை? அவற்றின் இயல்பு என்ன? என்றெல்லாம் ஆராய்ந்து கண்டறிந்திருந்ததைச் சொல்கிறார்.
நால்வகை அணுக்களின் இயல்புகள்
"வற்பம் ஆகி உறுநிலந் தாழ்ந்து
சொற்படு சீதத் தொடுசுவை உடைத்தாய்
இழின் என நிலன் சேர்ந்து ஆழ்வது நீர் தீத்
தெறுதலும் மேற் சேர் இயல்பும் உடைத்தாம்
காற்று விலங்கி அசைத்தல் கடன்”
                                           - [மணிமேகலை: 27: 120 - 124]
வன்மை[வற்பம்] உடையது நிலவணு. கீழே வீழ்ந்து[தாழ்ந்து] குளிர்மை [சீதம்] என்று சொல்லப்படும்[சொற்படு] தன்மையோடு சுவை உடையதாய் இழின் என்ற ஒலியோடு நிலத்தைச் சேர்ந்து நிலத்தினுள் ஆழ்ந்து போவது நீரணு. தீயணு எரிப்பதும்[தெறுதலும்] மேல் நோக்கி எழுகின்ற இயல்பும் உடையதாகும். காற்றணு குறுக்காக[விலங்கி] அசையும் முறைமையை[கடன்] உடையது.

பரமா அணுக்கள் எத்தகையன?
                           “……. இவை
“வேற்றியல் பெய்தும் விபரீ தத்தால்
ஆதி யில்லாப் பரமா அணுக்கள்
தீதுற்று யாவதும் சிதைவது செய்யாய்ப்
புதிதாய்ப் பிறந்து ஒன்று ஒன்றிற் புகுதா
முதுநீர் அணுநில அணுவாய்த் திரியா
ஒன்று இரண்டாகிப் பிளப்பதும் செய்யா
அன்றியும் அவல் போல் பரப்பதும் செய்யாந்து
உலாவும் தாழும் உயர்வதும் செய்யும்
குலாம் மலை பிறவாக் கூடும் பலவும்
பின்னையும் பிரிந்து தம் தன்மையவாகும்
மன்னிய வயிரமாய்ச் செறிந்து வற்பமும்ஆம்
வேயாய்த் துளைபடும் பொருளா முளைக்கும்
தேயா மதிபோல் செழுநில வரைப்புஆம்”
                                           - [மணிமேகலை: 27: 125 - 137]
அண்டவெளியில் வேற்று இயல்புகளால் ஏற்படும்[எய்தும்] மாறுபாட்டால்[விபரீதத்தால்] எப்போது உண்டானது என்று சொல்லமுடியாத[ஆதியில்லா] பரமா அணுக்கள் [நிலவணு, நீரணு, தீயணு, காற்றணு] கேடுற்று[தீதுற்று] சிறிதுமில்லாமல்[யாவதும்] அழிந்து[சிதைவது] போவதில்லை[செய்யா]. புதியதாய் ஓர் அணு தோன்றி [பிறந்து] இன்னொன்றில் புகுவதும் இல்லை[புகுதா]. பழமையான நீரணு[முதுநீரணு] நில அணுவாக மாறாது[திரியா]. தாமாக ஓர் அணு இரண்டாகப் பிளப்பதில்லை[பிளப்பதும் செய்யா]. அரிசி அவலாய்ப் பரந்து விரிவது போல அணு பரந்து விரியாது[பரப்பதும் செய்யா]. அணுக்கள் உலாவித் திரியும். தாழ்வதும் உயர்வதும் உண்டு [செய்யும்]. நிலவணுக்களால் பொருந்திய[குலாம்] மலை கல்லாக மண்ணாகக் மணலாகக்[பிறவாகக் கூடும்] கூடும். அப்படிப் பிரிந்த பலவும் பின்பும் பிரிந்து பிரிந்து மீண்டும் தனித்தனி அணுவாகும் [தம் தன்மையவாகும்]. மரமாய் பொருந்தியிருக்கும் [மன்னிய] அணுக்கள் வயிரமாய் செறிவுற்று வன்மையுள்ள மரமாகும். மூங்கிலாகத் துளைபட்டும் இருக்கும். வித்தாகி முளைக்கும். தேய்வடையாத சந்திரனைப் போல[மதிபோல] உருண்டையாய் செழுமையான நிலப் பரப்பாகும்[வரைப்பாம்]. 

இவ்வணுக்கள் பூதங்களாகும் போது அவற்றின் அளவும் பெயரும் தொழிலும்:
நிறைந்த இவ்வணுக்கள்பூதமாய் நிகழின்
குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின்
ஒன்று முக்கால் அரை காலாய் உறும்
துன்றும் மிக்கதனால் பெயர் சொல்லப்படுமே
இக்குணத்து அடைந்தால் அல்லது நிலனாய்ச்
சிக்கென்பதும் நீராய் இழிவதும்
தீயாய் சுடுவதும் காற்றாய் வீசலும்
ஆய தொழிலை அடைந்திட மாட்டா ”
                                           - [மணிமேகலை: 27: 125 - 145]

எல்லாப் பொருட்களிலும் நிறைந்து இருக்கும் இவ்வணுக்கள் பூதமாய் [ஐம்பூதமாய்] தொழிற்படும்போது[நிகழின்] ஒவ்வொரு பூதத்துக்கும் வேண்டிய அணுத்திரள் தத்தமக்கு உள்ள அளவில் குறைந்தும் சமமாகவும்[ஒத்தும்] சேராது[கூடாது]. நிலம், நீர், தீ, காற்று என்று சொல்லப்படுகின்ற வரிசையில் நிலவணு ஒன்று, நீரணு முக்கால், தீயணு அரை, காற்றணு கால் எனச்சேரும்[உறும்]. இப்படிப் பொருந்தும் [துன்றும்] அணுக்களுள் எந்தப் பூத அணுக்கள் கூடுதலாக இருக்கின்றனவோ அவற்றால் [மிக்கவற்றால்] பெயரிட்டு அழைக்கப்படும் [பெயர் சொல்லப்படும்]. இத்தன்மையை [இக்குணத்து] அடைந்தால் அல்லாமல் நிலமாய் வன்மையுடன் இருப்பதும் [சிக்கென்பதும்] நீராய் பள்ளம் நோக்கி ஓடுவதும் [இழிவதும்] தீயாய் சுடுவதும் காற்றாய் வீசுவதும் ஆகிய தொழில்களைச் செய்யா. [The four States of Matter].

நம் பண்டைத்தமிழ் முன்னோர்களின் அணுநூல் [இறைநூல்] சொன்னதையே சீத்தலைச்சாத்தனார் மணிமேகலையில் கூறினார் என்பதை “அவ்வகை அறிவது உயிர் எனப்படுமே என்று 119வது அடியில் “எனப்படுமே” என அழுத்திக் கூறியுள்ளதால் அறியலாம்.

என்னவே ஆயிரத்து எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த சீத்தலைச் சாத்தனார் காலத்துக்கு முன்பே அணுவையும் அணுவின் இயல்புகளையும் ஆராய்ந்து இவ்வளவு விரிவாக ‘அணு நூல்’ எழுதிய நம் முன்னோர்களின் ஆற்றலை என்னென்பது! நாமோ உள்ளங்கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அழைகிறோம். இன்றைய தமிழர்களாகிய நம் நிலைகண்டால் அவர்கள் நகைப்பார்களோ!
இனிதே,
தமிழரசி.

'பொருநை இலக்கிய வட்டம்' மலருக்காக 2002ல் எழுதியது.
இன்று அணுவைப்பற்றிய அறிவு பலமடங்காக வளர்ச்சி அடைந்திருப்பினும் இரண்டாயிர வருடங்களுக்கு முன் வாழ்ந்த தமிழரும் அணுவை ஆராய்ந்து அறிந்திருந்தனர் என்பதை இவை காட்டவில்லையா?

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அரிய செய்திகள் பலவற்றைத் தொகுத்துத் தந்து கொண்டிருக்கின்றீர்கள். பதிவுகள் எல்லாம் சிறப்பாக உள்ளன!
    இறை என்றால் இறைவனையும் குறிக்குமல்லவா? அது எவ்வாறு அணுவைக் குறிக்கப் பயன்பட்டது? 'உட்பொருள்' அ-து உள்ளிருக்கும் பொருள் என்ற கருத்தில் வந்திருக்குமோ? ('இறைச்சிப் பொருள்' எனபதுபோல)

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி. இறை என்பது இறைவனே. அணுவான அந்த இறையே பேரண்டாமாக விரிகிறது. பண்டைத்தமிழர் துகள், இறை, அணு என்ற பெயர்களில் அணுவை அழைத்திருக்கின்றனர். இறை என்பதற்கு 45 கருத்தைத்தரும் தமிழ்ச்சொல் அகராதிகூட முதலாவது கருத்தாக 'அணு' என்றே குறிக்கிறது. மணிமேகலையின் பாடலில் [112 அடியில்] வரும் இறைநூல் என்பதை அணுநூல் என்றே குறிப்பிடுகின்றனர். மாணிக்கவாசகரும் திருவண்டப்பகுதியில் "இல்நுழைக் கதிரின் துன் அணுப்புரைய சிறியவாகப் பெரியோன் தெரியின்" என்கின்றார். வீட்டுக் கூரையுடாக நுழையும் சூரியக் கதிரினுள்ள சிறு அணுவே பேரண்டமாய் இறைவனாய் காட்சி தருகிறான் என்கிறார். இன்றைய விஞ்ஞானிகளும் கடவுள்துகள்[God Particle] என்று சொல்வதையும் கருத்தில் கொள்ளலாம்.

      Delete