ஈழத்தமிழ் இனத்தின் உரிமையை அழிக்கிறோம் அழிக்கிறோம் என கங்கணங் கட்டி அழிக்க முற்பட்டோர் பலராவர். அச்செயல் வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே நடைபெறுகிறது. ஈழத்தமிழினத்தை அழித்தோம் என்று இங்கு யாரும் மார்தட்ட முடியாது. அது வரலாறு காட்டும் உண்மையாகும். ஈழத்தமிழினம் கரப்பான் பூச்சி போன்ற ஓர் இனம் என்பதை உலகம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. கரப்பான் பூச்சி போல் காலத்தால் மூத்ததாயும் சூழ்நிலைக்காரணிகளுக்கு தகுந்தது போலவும் வாழ்கின்ற ஓர் அற்புதமான இனமாகும். அதனால் ஈழத்தமிழினம் என்றும் தன் தனித்தன்மைகளை இழந்ததில்லை. இழக்கப் போவதுமில்லை.
மானம்வரின் வாழா கவரிமான் போன்ற பலகோடித் தன்மானவீரர்களை உலகுக்கு ஈந்த தாய்மாரின் பண்பில் வளர்ந்த இனமானதால் தன் குலமானத்தை என்றும் எதற்காகவும் குழிதோண்டி புதைக்காது. என்று தணியும் எங்கள் இதயத்தின் தீ என்ற ஏக்கம் இருப்பினும் முள்ளிவாய்க்காலின் வடு சுமந்து இன்றுடன் ஏழு ஆண்டுகள் கடந்தாலும் நம் தன்மானம் அழியாது. முள்ளிவாய்க்கால் நம் இனத்தின் முடிவல்ல.
முள்ளிச்செடிக்குக்கூட ஈழத்தமிழரின் பண்புகள் இருக்கின்றன. வெளியே மற்றோரின் கயமை, கொடுமை, அதிகாரவெறி போன்ற எத்தனையோ முட்களால் குத்தப்பட்டு - சூழப்பட்டு முள்ளிச்செடி போல் இருப்பினும் அதிலிருந்து மணம் வீசும் தேன் தளும்புவது போல் அறிவும் ஆற்றலும் ஈழத்தமிழரிடம் நிறைந்தே தளும்புகிறது. அந்த ஆற்றலும் அறிவும் ஈழத்தமிழினத்தை தலைநிமிர்ந்து வாழவைக்கும். ஆற்றலும் அறிவும் மட்டும் இருந்தால் போதாது எம்மிடையே ஒற்றுமை வேண்டும்.
ஈழத்தமிழினத்துக்கு ஒற்றுமை வேண்டும் என்பதை அறுபது ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துச் சொன்னவர்களில் ஒருவர் பாவேந்தர் பாரதிதாசன். அவரின் அற்புதமான அந்தப் பாடலை நீங்களும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.
“இலங்கைத் தமிழர் துலங்க எண்ணினால்
அவர்கள் ஒற்றுமை அடைய வேண்டும்
வேற்றுமை விளைக்கும் ஆற்றல் எவற்றையும்
கான்றே உமிழ்தல் வேண்டும்; கழிவடைச்
சாதி சமயம் என்னும் எவற்றையும்
மதித்தல் கூடாது; மறப்பது நன்று
தமிழர் நலத்தைத் தாக்கும் கட்சிகள்
எவற்றினும் எவரும் சேர்தல் சரியன்று
தமிழர் அனைவரும் கூடித் தக்கதோர்
கொள்கையை வகுத்துக் கொள்ள வேண்டும்
தாய்மொழி யான தமிழ்மொழி வாழ்ந்தால்
தமிழர் வாழ்வர்; தாய்மொழி வீழ்ந்தால்
தமிழர் வீழ்வர்; தமிழ் தமிழர்க்குயிர்
தமிழன்னைக்கு ஒரு தாழ்வு நேர
விடுதலின் உயிரை விடுதல் தக்கது
சிங்களவர்க்கு உள்ள இலங்கையின் உரிமை
செந் தமிழர்க்கும் உண்டு; திருமிகு
சட்ட மன்றிலும் பைந் தமிழர்க்கு
நூற்றுக்கு ஐம்பது விழுக்காடு நோக்கிப்
படிமை ஒதுக்கப் படுதல் வேண்டும்
செந்தமிழ் மக்கள் சிறுபான்மை யோரெனச்
சிங்களவர் பெரும்பான்மை யோரெனச் செப்பித்
தமிழர் உரிமையைத் தலை கவிழ்க்க
எண்ணும் எண்ணம் இழைக்கும் தீமைகள்
எவற்றையும் தமிழர் எதிர்க்க வேண்டும்
மானங் காப்பதில் தமிழ் மக்கள்
சாதல் நேரினும் தாழக் கூடாது
இவைகள் இலங்கை தமிழர் கொள்கைகள்!
யாவர் இவற்றை எதிர்ப்பினும் விடற்க!
வெல்க இலங்கைத் தமிழர்!
வெல்க தமிழே! மேவுக புகழே! "
(இலங்கை ‘தினகரன்’ சனிக்கிழமை சிறப்பு மலரில் 7/11/1959 அன்று வெளிவந்தது)
இனிதே,
தமிழரசி
அருமையான பதிவு
ReplyDeleteபாரதிதாசனின் பாடலை மேற்கோள் காட்டி இலங்கைத் தமிழரின் ஒற்றுமையை வலியுறுத்தும் அருமையான பதிவு.
ReplyDeleteநன்றி
இருவருக்கும் எனது மகிழ்ச்சியை அறியத்தருகிறேன்.
Delete