Monday, 9 May 2016

குறள் அமுது - (114)

குறள்:
“எல்லோருக்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் 
செல்வர்க்கே செல்வம் தகைத்து”                      - 125

பொருள்:
பணிவுடன் நடப்பது எல்லோருக்கும் நன்மையைக் கொடுக்கும். அவர்களுக்குள் பணம் உள்ளோருக்கே மேலும் செல்வம் வந்து சேர்ந்தது போல் மிகுந்த நன்மையைக் கொடுக்கும். 

விளக்கம்:
இத்திருக்குறள் ‘அடக்கம் உடைமை’ எனும் அதிகாரத்தில் இருக்கிறது. பணிவு என்றால் என்ன? அடக்கமா? அரசியல் தலைவர்களின் கால்களில் வீழ்ந்து எழுகிறார்களே அதுவா? வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிக்கு அருகே கைகட்டி நிற்பார்களே அதனையா? பணிவென்கிறோம்? தீமையைக் கண்டு அடக்கமாக இருக்கலாமா? அது பணிவாகுமா? தன்மானத்தை இழந்து காலில் வீழ்வது அடிமைத்தனம். வேலையில் கைகட்டி நிற்பதும் பணிவு அல்ல. நான் என்ற செருக்கு - தலைக்கனம் - தற்பெருமை அற்ற தன்மையே பணிவாகும்.

செருக்கு வேறு. பெருமிதம் வேறு. அழகு, அறிவு, கல்வி, செல்வம், வீரம், பதவி, அதிகாரம், முன்னோரின் பெருமை போன்றவற்றால் ஒருவருக்கு பெருமிதம் வரலாம். ஆனால் அது தற்பெருமையாகத் தலைக்கனமாக மாறக் கூடாது. அப்படி மாறும் போது பணிவற்ற நிலை தோன்றும். அத்துடன் கடுங்கோபம், பொறாமை உள்ளோரும் பணிவற்று நடப்பர். அது பிறரின் உணர்வை மதிக்காது பேசவைக்கும். கடுஞ்சொற்கள் பலரின் மனதை நோகச் செய்து பகைமையை உண்டாக்கும். பகைமை பல கேடுகளுக்கு வழிவகுத்து கடைசியில் குலத்திற்கே அழிவை உண்டாக்கும்..

அதனால் ஏழை, பணக்காரன், ஆண், பெண், இளைஞர், முதியோர், அங்கயீனர், சாதி, மதம் என்று சொல்லப்படுகின்ற எந்த வேறுபாடும் இன்றி எல்லா மனிதருக்கும் பணிவு நல்லது எனத் திருவள்ளுவர் கூறுகிறார். அப்படிப்பட்ட எல்லா மனிதருள்ளும் பொருள் படைத்தோர் பணிவாக இருந்தால் அது அவர்களுக்கு பெரும் செல்வம் சேர்ந்தது போல் இருக்கும் என்கிறார். தகைத்து என்பது மிகுதல் ஆகும். அழகு, அறிவு, கல்வி, வீரம் உள்ளோரை விட செல்வம் உள்ளோரை மட்டும் பணிவு எப்படி மிகுந்த செல்வந்தர் ஆக்கும்? 

மற்றோரை விட பொருள் படைத்த செல்வந்தர் தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் பொருளைக் காக்கவும் ஆள் அடிமை வைத்திருப்பர். அவர்கள் வைத்திருக்கும் வேலையாட்களிடம் அன்பாய் பணிவாக அரவணைத்து நடக்காவிட்டால் வேலை செய்வோர் எதிரியாவர். அன்றேல் எதிரிகளுக்கு இவர்களைக் காட்டிக் கொடுப்பர். அதனால் இருந்த செல்வமும் அழிந்து உயிரை இழக்கும் நிலையும் வரும். பணிவு உடைய செல்வந்தர்க்கு அழிவுகள் ஏற்படாது செல்வம் மேன்மேலும் வளரும். ஆதலால் மற்றோரைவிட செல்வந்தரை பணிவு மிக்க செல்வந்தர் ஆக்கும் என்றார்.

No comments:

Post a Comment