தேங்காய் தரு முத்து
முத்து என்றதும் எம் கண்ணில் நிழல் ஆடுவது முத்துச் சிப்பியே. முத்து எடுக்க முத்துக்குளிக்க வாரியளா? மூச்சை அடக்க வாரியளா? எந்தக் கடலினுள் முத்துக்குளிப்பது? நேரத்தைக் கழிப்பதற்காக பண்டைய உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தேன்.
பன்னெடுங்காலமாக ஆசியாவின் மேற்குக் கடற்கரை ஓரத்தில் முத்துக்குளிப்பு மூன்று இடங்களில் மட்டுமே நடைபெற்றதை அறிந்தேன். அது எனக்கு பெரிய வியப்பைத் தந்தது. செங்கடல், பாரசீகக் குடா, மன்னார் வளைகுடா ஆகிய மூன்றிலும் மன்னார் வளைகுடா முத்தே உலகப்புகழ் பெற்றதாக விளங்கியது. அதைப் படித்த போது நெஞ்சம் பெருமிதம் அடைந்தது. அது தமிழரின் முத்துக் குளிக்குங் கலையின் சிறப்பையும் காட்டுகிறதல்லவா! மன்னார் வளைகுடா என்றபோதிலும் இலங்கையில் எங்கெங்கொல்லாம் பவளப்பாறைகள் இருந்தனவோ அங்கெல்லாம் முத்துக்கள் கிடைத்தன. காரைநகர் முதற்கொண்டு புங்குடுதீவின் தென்மேற்கு, தெற்கு, தென்கிழக்கு கடலிலும் முத்துக்குளிப்பு நடைபெற்றுள்ளது.
அதனால் உலகில் உள்ள முத்துக்களைப் பற்றிக் கொஞ்சம் ஆய்வு செய்தேன். மூச்சை அடக்கி அல்லவா முத்துக்குளிக்க வேண்டும். அது எல்லோராலும் முடியுமா? முடியாதே! நீரில் மூழ்கி எடுக்கும் முத்தைவிட வேறு முத்துக்கள் உலகில் இல்லையா? நிறையவே இருக்கின்றன. எனவே முத்துக் குளிக்காமலே முத்தெடுபோம் வாருங்கள்.
முத்துக்கள் சிப்பியில் இருந்து மட்டும் பிறப்பதில்லை. அவை பிறக்கும் இடங்களைப் பொறுத்து அவற்றின் வடிவங்களும் நிறங்களும் மாறுபடுகின்றன. அந்த முத்துக்கள் எங்கெங்கே பிறக்கின்றன என்பதை தமிழ் இலக்கியங்கள் புராணங்கள் மட்டுமல்லாமல் சமஸ்கிருத நூல்களும் சொல்கின்றன. கி பி 300ம் ஆண்டுக்கு முன்னர் எழுதப்பட்ட கருடபுராணம் சிப்பிமுத்து, சங்குமுத்து, நாகமுத்து, பன்றிமுத்து, யானைமுத்து, மூங்கில்முத்து, திமிங்கலமுத்து, மீன்முத்து, மேகமுத்து என ஒன்பது வித முத்துக்களைப் பற்றிப் பேசுகிறது. இந்தியாவின் சிறந்த வானவியலாளரும் கணிதமேதையுமான வராகமிகிரர் [கி பி 505 - 587] தான் எழுதிய ‘பிருகத் சம்கிதம்’ [Brihat Samhita] என்னும் நூலில் கருடபுராணம் சொல்லும் ஒன்பது வகை முத்துக்களையே குறிப்பிடுகிறார்.
நம் தமிழ் இலக்கியங்கள் முத்துப்பிறக்கும் இடங்களாக இருபதிற்கும் மேற்பட்ட இடங்களைக் குறிப்பிடுகின்றன. திருவிளையாடற் புராணத்தை எழுதிய பரஞ்சோதி முனிவர் மாணிக்கம் விற்ற படலத்தில்
“ தக்க முத்து இரண்டுவேறு தலசமே சலசம் என்ன
இக்கதிர் முத்தம் தோன்றும் இடம் பதின்மூன்று சங்கம்
மைக் கருமுகில் வேய் பாம்பின்மத்தகம் பன்றிக்கோடு
மிக்க வெண்சாலி இப்பி மீன் தலை வேழக் கன்னல்”
- (திருவிளை.பு: மாணிக்கம்.வி.ப: 53)
கரிமருப்பு ஐவாய் மான்கை கற்புடை மடவார் கண்டம்
இருசிறை கொக்கின் கண்டம் எனக்கடை கிடந்த மூன்றும்
அரியன ஆதிப்பத்து நிறங்களும் அணங்கும் தங்கட்கு
உரியன நிறுத்தவாறே ஏனவும் உரைப்பக் கேண்மின்
- (திருவிளை.பு: மாணிக்கம்.வி.ப: 54)
என பதின்மூன்று இடங்களைக் கூறுகிறார். அவர் முதற் செய்யுளின் தொடர்ச்சியாய் இரண்டாவது செய்யுளைப் பாடியிருப்பதால் இரண்டு செய்யுள்களையும் ஒன்றாகச் சேர்த்துப் படித்தே அவற்றின் கருத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
அதாவது ‘சுத்தமான நல்ல [தக்க] முத்துக்கள் தலசம், சலசம் என இரண்டு வகைப்படும். {நிலத்தில் வாழும் உயிர்களிடம் இருந்து தோன்றும் முத்துக்கள் தலசம் எனவும் நீரில் வாழும் உயிர்களிடம் இருந்து தோன்றும் முத்துக்கள் சலசம் எனவும் அழைக்கப்படும்}. ஒளியுடைய[கதிர்] இத்தகைய முத்துக்கள்[முத்தம்] தோன்றும் இடம் பதின்மூன்றாகும். சங்கு [சங்கம்], கருமேகம் [முகில்], மூங்கில் [வேய்], பாம்பின்தலை [மத்தகம்], பன்றிக்கொம்பு [கோடு], வெள்ளைநெல் [வெண்சாலி], சிப்பி [இப்பி], மீன்தலை, பேய்க்கரும்பு [வேழக்கன்னல்], யானைத்தந்தம் [கரிமருப்பு], சிங்கத்தின் [ஐவாய்மான்] கை, கற்புடைய பெண்களின் [மடவார்] கழுத்து [கண்டம்], இரண்டு சிறகுகளையுடைய [சிறை] கொக்கின் கழுத்து என்று சொல்லப்படுவனவற்றுள் கடைசியாகவுள்ள [கடைகிடந்த] மூன்றும் அரிதாகவே [அரியன] கிடைக்கும். முதலில் [முதற்கண்] உள்ள பத்துவகை முத்துக்களின் நிறங்களும் அவற்றிற்கு [தங்கட்கு] உரியனவாகிய தெய்வங்களும் [அணங்கும்], அந்த முறைப்படி சொல்கிறேன் கேளுங்கள்’ என்கிறார்.
வயது முதிர்ந்த யானையின் தந்ததத்தின் உள் பகுதியில் இருந்து முத்து எடுத்தனர்
பரஞ்சோதி முனிவர் சொல்லும் முத்துக்களும் நிறங்களும்
[திருவிளையாடற்புராணம்: மாணிக்கம் விற்ற படலம்: 55 - 56]
எண் | முத்து பிறக்கும் இடங்கள் |
முத்தின் நிறங்கள்
|
1
|
சங்கு தரு முத்து | வெள்ளை நிறத்தது. |
2
|
மேகம் தரு முத்து | செந்நிறச் சூரியனின் ஒளி நிறத்தது. |
3
|
மூங்கில் தரு முத்து | ஆலங்கட்டி மழையின் நிறத்தது. |
4
|
பாம்பின் தலை தரு முத்து | நீல நிறத்தது. |
5
|
பன்றிக் கொம்பு தரு முத்து | குருதியின் நிறத்தது. |
6
|
வெள்ளை நெல் தரு முத்து | பச்சை நிறத்தது. |
7
|
சிப்பி தரு முத்து | வெள்ளை நிறத்தது. |
8
|
மீன் தலை தரு முத்து | பாதிரிப்பூப் போன்ற நிறத்தது. |
9
|
பேய்க்கரும்பு தரு முத்து | பொன் போன்ற நிறத்தது. |
10
|
யானைத் தந்தம் தரு முத்து | பொன் போன்ற நிறத்தது. |
11
|
சிங்கக் கை தரு முத்து | கிடைக்க அரியது |
12
|
மகளிர் கழுத்து தரு முத்து | கிடைக்க அரியது |
13
|
கொக்குக்கழுத்து தருமுத்து | கிடைக்க அரியது |
மேலே சொல்லபட்ட முத்துக்களில் கடைசியாக இருப்பவை மூன்றும் கிடைப்பது அரிது ஆதலால் அவற்றின் நிறங்களை அவர் குறிப்பிடவில்லை. எனவே மனைவியின் கழுத்தில் நீங்கள் வாங்கிக் கொடுத்த முத்தைத் தவிர வேறு முத்து இருக்கிறதா என அறிய முற்பட வேண்டாம். பேய்க்கரும்பு என்பது ஒருவகை நாணல் புல். பேய்க்கரும்புத் திடல் என்ற இடத்திலேயே அப்துல் கலாம் அவர்களின் இறுதிச்சடங்கு நடந்து ஞாபகம் இருக்கிறதா? அங்கு போனால் பேய்க்கரும்பைப் பார்க்கலாம்.
நாகம் தரு முத்து
‘மருதமலையாண்டவர் பிள்ளைத்தமிழ்’ என்ற நூல் முத்து பிறக்கும் இடங்களாக இருபது இடங்களைச் சொல்கிறது.
“ தந்தி வராக மருப்பு இப்பி பூகம் தனிக்கதலி
நந்து சலஞ்சலம் மீன்றலை கொக்கு நளின மின்னார்
கந்தரம் சாலி கழை கன்னல் ஆவின்பல் கட்செவி கார்
இந்து உடும்பு கரா முத்தமீனும் இருபதுமே”
இவை மட்டுமல்ல செந்நெல், வயல், மலை, உழும் கலப்பையின் கொழு நுனி, வாழை, தேங்காய் போன்றவற்றில் இருந்தும் முத்துப் பிறப்பதாக அபிதான சிந்தாமணி போன்ற நூல்களும் சொல்கின்றன. சங்கைப் போல் நத்தையும் முத்தைத் தருவதால் வயல் வெளியில், உழும் கலப்பையின் நுனியில் முத்துக் கிடைத்திருக்கக் கூடும். மூங்கிலின் கணுக்களுக்கு இடையில் உள்ள நீர் வற்றி மூங்கில் முத்து உருவாகும். மூங்கில் முத்து மருந்தாகப் பயன்படுகின்றது. சிவன் மூங்கிலின் முத்தாக இருந்தார் என்பதைப் பக்தி இலக்கியங்கள் சொல்வதால் அறியலாம். இந்நாளில் இம்முத்துக்களின் பெயர்களைச் சொல்லி செயற்கைக் கற்களை விற்கிறார்கள்.
கடலில் முத்துக் குளித்திருந்தால் சிப்பி ஈன்ற முத்தை மட்டுமே எடுத்திருப்பீர்கள். என்னுடன் முத்துக்குளிக்க வந்ததனால் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட முத்து வகைகளை எடுத்திருக்கின்றீர்கள். மகிழ்ச்சியா?
இனிதே,
தமிழரசி.
உங்கள் எண்ணம் பாராட்டுக்குரியதே. இத்தளத்தில் உள்ள பதிவுகள் மக்களைச் சென்றடையவே எழுதப்படுகின்றன. மின் நூலாக்கி பணம் உண்டாக்கும் நோக்கம் இல்லாது இருப்பின் இப்பதிவுகளில் மாற்றம் ஏதும் செய்யாமல் பயன்படுத்துங்கள்.
ReplyDeleteஅஅருமையான பகிர்வு
ReplyDeleteஅஅருமையான பகிர்வு
ReplyDeleteஅருமை நன்றி
ReplyDeleteஅருமை நன்றி
ReplyDeleteWow!Very interesting information Aunty. I finished Accredited Jewelry Provisional inculuding Gemology in GIA. But here what a knologe about just a pearl. I am getting more and more interesting about our ancient history. Thank you Aunty.
ReplyDeleteநன்றி,மகிழ்ச்சி,என்னிடம்நீங்கள்கூறியதுபோல,மேகமணிஉள்ளது! 7708808661
ReplyDeleteமகிழ்ச்சி.
Deleteநன்றி
ReplyDeleteசிறப்பு
ReplyDeleteமகிழ்ச்சி.
Delete