நான் இலங்கை சென்றிருந்த போது என் நெஞ்சைக் கலங்க அடித்து, என்னைச் சிந்திக்க வைத்த இரு விதவைகள் பற்றிப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். எம்மவர் சிலரிடம் விதவைகள்! என்றாலே பாவிகள், மங்கல நிகழ்வுகளுக்கு வரக்கூடாதவர்கள் தீண்டத் தகாதவர்கள் என்ற நிலைப்பாடு இன்றும் இருக்கிறது. அதுபோல் அந்தப் விதவைப் பெண்களின் வயதென்ன? எதனால்? ஏன்? எதற்கு? எப்படி? எப்போ? விதவையாய்ப் போனார்கள் என்று எண்ணிப்பாராது அவர்களது மனதை நோகச் செய்வதில் வல்லவராயும் நாம் இருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.
அதிலும் மிக இளமையில் ஓர் அழகான பெண் விதவையானால் ஆண்களின் கழுகுப் பார்வைக்கு - காமப் பார்வைக்கு அவள் தப்பமுடியாது என்பது உலக நிலைப்பாடு. அதற்கு நம் நாடும் என்ன விதிவிலக்கா?
நம் நாட்டில் இந்தியப்படை நிலைகொண்டிருந்த காலத்தில் விதவை ஆக்கப்பட்ட ஒரு விதவையவள். மலைநாட்டைச் சேர்ந்த வசதியான குடும்பத்தில் பிறந்தவள். பருவவயதில் யாழ்ப்பாணப் பையன் ஒருவனைக் காதலித்து திருமணம் செய்தாள். அவளது புகுந்த வீடும் பிறந்த வீடும் அவர்களுக்கு எதிரி ஆனார்கள். அதனால் மலையகத்திலும் யாழ்பாணத்திலும் வாழமுடியாது, வன்னியில் சென்று வாழ்ந்தனர். காதல் வாழ்வின் இனிமையை இளமைக் கனவுகளோடு சுவைத்து மகிழ்ந்தனர். காதலின் சுவையில் கிடைத்ததோ இரு குழந்தைகள்.
அவள் இரண்டாவது குந்தையை வயிற்றில் சுமந்த காலத்தில் தொடர்ந்து அவசரகாலச்சட்டம் இருந்தது. ஒரு நாள் மூத்த குழந்தை பாலுக்கு அழ, அக்குழந்தைக்கு பால்மா வாங்கி வருவதாய்க் கூறிக் கணவன் சென்றான். கணவன் சென்ற சிறிது நேரத்தில் விமானம் குண்டுமழை பொழியத் தொடங்கியது. அதைக் கண்டு பயந்த அவளுக்கு பிரசவவேதனை தொடங்கியது. அடுத்த குடிசையில் இருந்த கிழவனும் கிழவியும் அவளுக்கு உதவினர். அந்த ஊரே குண்டுகளால் சிதறுண்டு ஓடியது.
கணவனுக்கு என்ன நடந்தது என்பதையும் அறியாது, அக்கணம் பிறந்த குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு, குழந்தைகளைக் காப்பதற்காக அந்த முதியோருடன் போனாள். போகும் வழியில் கணவன் குண்டடிபட்டு இறந்து கிடப்பதைப் பார்த்தாள். ஊரே மரணவீடாய் இருந்தது. முதியவர் சொன்னபடி அருகே இருந்த மரவள்ளி தோட்டத்தில் கணவனின் உடலைப் போட்டு, மண்ணால் மூடிச் சென்றாள். ‘அன்று வற்றிய கண்ணீர் இன்னும் வரவில்லை’ என்று கூறி விரக்தியாய்ச் சிரித்தாள்.
வன்னியில் நடந்த ஒரு மரணவீட்டின் ஆடம்பரத்தைக் கேட்டே அவள் எனக்குத் தன் கதையைக் கூறினாள். "நாம வளக்கும் ஆடு மாடு செத்தாக்கூட அன்பா புதைப்பம். என்னக் காதலிச்சி எனக்கா வாண்டவனை, குழிதோண்டி புதைக்காம, இரண்டு கையாலும் மண்ணைக் கிளறி போட்டு, மூடி எதுக்கு ஓடினேன்? என் உயிர் மேல் இருந்த ஆசையா? நான் பெற்றெடுத்த குழந்தைகள் மேல் இருந்த பாசமா??" என்றாள்.
இறந்த கணவனின் வயது இருபத்திமூன்று, அவளுக்குகோ இருபது வயதுகூட ஆகவில்லை. இரு குழந்தைகளுக்குத் தாயாய், பெற்றாரும் உற்றாரும் இன்றி தனிமரமாக நின்றாள். என்ன வேலையெல்லாம் செய்து, எப்படிக் குழந்தைகளைக் காப்பாற்றினாள் என்பதை அவளின் தமிழில் சொல்வதே மிகவும் நல்லது என நினைக்கிறேன்.
"என் முன் வீட்டு கிழடு இரண்டும் இல்லயென்னா நானும் பிள்ளைகளும் அண்டைக்கே செத்திருப்பம். அந்தக் கிழடு இரண்டும் தான் என் பிள்ளைகளைப் பாத்துது. நான் அதுகளப் பாத்தன். அஞ்சி சீவன்களின் வையித்த கழுவ நான் வன்னியில் நடக்காத இடமில்ல. மூனு மூனரைக்கு எழும்பி நடக்கத்துவங்கினா மாங்குளம், ஒட்டுசுட்டான், துணுக்காய், பாண்டியன்குளம், பூவரசங்குளம், வவுனிக்குளம் பூனரி, பெரிய முருகண்டி, குங்சுப்பரந்தன், முள்ளியவள எங்காச்சும் நாத்து நட, களபிடுங்க வேல கிடைக்கும். அந்த நேரம் தான் இராணுவமும் கொஞ்சம் அடங்கி இருக்கும். அரைத் தூக்கத்தில இருப்பானுக. நம்ம சனங்களவிட இந்திய ராணுவம் நல்லவனுக. தாலி கட்டினவங்கள, காலைமூடி உடுப்பு போடுற பெண்ணுகள அவனுக தூக்கயில்ல. முழகா[ல்] வரை உடுப்பு போடுறவள தூக்கினாங்க".
"அவனுகளுக்கு நான் பொண்ணு என தெரியாம இருக்க தலப்பாகட்டி, சேட்டு போட்டு கிழடுகட்டையோடு போய்வருவன். இப்படி வேலைக்கு போய்வரச் சொல்லி கிழவி புத்திசொல்லி தந்திச்சி. வேல செஞ்சி களச்சி வீட்டவர எட்டு, ஒம்பது மணியாயிடும். கூழோ, கஞ்சியோ; உப்பு இருக்கோ இல்லையோ அஞ்சி பேரும் சேந்து குடிச்சிட்டு படுப்பம்."
"இப்படி வன்னி எங்கும் வேலைக்கு அலைந்தால் கால் கை வலிக்காதா?" என்று கேட்டேன்.
அதற்கும் ஒரு சிரிப்பு. மனசும் உணர்ச்சியும் மரத்த கட்டைக்கு கால், கை ஏதாவது இருந்திச்சா? இல்ல எனக்கும் கொஞ்சம் உணர்ச்சி இருக்கு எண்டத நான் சொல்லப் போற ரெண்ணு வெசயம் எனக்கு சொல்லி தந்திச்சி. எப்பவும் களத்து வேல இருக்காது! வேற வேலை தேடி ஆகனுமே. உப்பளத்தில வேல இருக்கு எண்டானுக. அது இரவில உப்பள்ளுற வேல. பகலில பிள்ளைகளோடு இருக்கலாமே. உப்புத்தானே அள்ளீரலாம் என்னு அந்த வேலைக்கு போனன். ஒரு மூட்டை உப்பு வெட்டி அள்ளினா பத்து ரூபா தருவானுக.
பனங்கருக்கு மட்டை தெரியுங்களா? கருக்குமட்ட பனமரத்தை, இரண்டு கையாலும் கட்டிப்பிடிக்கிறமாதிரி பிடிச்சிருக்குமே, அந்தக் கருக்குமட்டையை எடுத்து அது கட்டிப்பிடிச்சிருக்கும் கைப்பிடிக்கு நடுவால பிளக்கோணும். இரண்டு கருக்கு பக்கம் உள்ளுக்கு வர கத்திரிக்கோல் போல வைச்சி கைப்பிடியில பிடிக்கணும். உப்பளத்தில உக்காந்து கொண்டு பளிங்குமாதிரி இருக்கிற உப்பை கருக்குக் கத்திரிக்கோலிட கருக்கால கை இரண்டையும் உள்ளேயும் வெளியேயும் ஆட்டி ஆட்டி வெட்டி எடுக்கனும். காலையில மூனுமணிக்கு லோறிவர முந்தி பத்து மூட்டை உப்பு கட்டினா நூறு ரூபா கிடைக்கும்.
உப்பு மேல இருந்து வேல செஞ்சபோ, தெரிஞ்சிச்சி எனக்கும் மலவாசல் சலவாசல் இருக்கு என்னு. நீங்க பொண்ணு தானே! உங்களுக்கு தெரியும் பிள்ளை பெத்தா, மல சல வாசல் வேதன எப்பிடி இருக்குமென்னு. அந்த நோ எல்லாம் கால் தூசு. மலசலவாசல் எரியிர எரிவில மலமும் போகாது. சலமும் போகாது. அந்த வேதனையைச் சொல்ல முடியாது. அநுபவிச்சா தெரியும்."
அவள்பட்ட வேதனை அவளின் சொல்லிலும் உடலின் நடுக்கத்திலும் தெரிந்தது. ‘அந்த வேலைக்கு போகாது நின்றிருக்கலாமே’ என்றேன்.
"நான் வேலைக்கு போகாட்டி, என்னை வேலைக்கு கொண்டுபோன உப்பள குத்தகைக்காரனுக்கு யார் காசு கொடுப்பா? அவன் என்ன சும்மாவிடுவானா? அவனுக்கு நான் காசு கொடுக்கனுமே. எங்க வயித்தை கழுவனுமே. அப்ப வேற வேலயும் கிடைக்கல்ல".
"ஒவ்வொரு வீடு வீடாப் போய் வேலகிடைக்குமா என்னு கேட்டு, மாவிடிக்கிறத்தில இருந்து கொடுக்கிற எந்த வேலயையும் செஞ்சி என் குழந்தைகள வளத்தன். சில வீட்டுக் காரங்க வேல இல்ல என்று சொல்லாம நாய உசுப்பேத்தி கடிக்கவிடுவானுக. சில பேரு களவெடுக்க வந்ததா அடிக்க வருவானுக. ஒரு மகராசி ‘மாஇடிக்க வா’ என்னா. பத்து கிலோ அரிசி ஊறப்போட்டு இருந்தா. அத மாவா இடிச்சி, வறுத்துக் கொண்டிருந்தன். அந்த மகராசி கிணத்தடிக்கு குளிக்க போனா. அப்ப வந்தானே பாரு அந்த மகராசி புருசன் - சண்டாளன். அவன் நின்ன நிலையை எப்படி சொல்ல. எனக்கும் உணர்ச்சி இருக்கு என்னு காட்டித்தந்தான். அவனோட மல்லுக்கட்டி, சுடச்சுட வறுத்த மாவ அவனுட கண்ணுல கொட்டிட்டு ஓடி வந்தவ. இப்பிடிச் சொல்ல எத்தனயோ இருக்கு’ என்றாள்.
இன்னொருத்தியின் கணவன் என்னிடம் கணிதம் படித்தவன். 2002ல் இலங்கை போனபோது மனைவியை எனக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தான். 2009ல் அவன் இறந்தது எனக்குத் தெரியாது. என்னை கடைத்தெருவில் கண்டவளிடம் அவனைப்பற்றி கேட்டேன். "அவர் என் கண்முன்னால் செல்லடிபட்டு சிதறிப் போனார். நானும் பிள்ளைகளும் இருக்கிறோம். வவுனியா முள் வேலிக்குள் இருந்ததை விட, வீட்டிற்கு வந்து பின்பே, நரக வேதனையை அநுபவிக்கத் தொடங்கினேன். பல பேரிடம் பிடுங்குப்பட்டு, என் குழந்தைகளின் முன்னிலையில் நான் நாளுக்கு நாள் சீரழிவதைவிட வயதான கிழமோ, கூனோ, குருடோ, முடமோ ஆண் என்று ஒருவன் என் வீட்டில் கிடந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்தேன். அவரின் உறவுகளும், எனது உறவுகளும் உலக நாடுகளில் இருந்து பணத்தைத் தரலாமே தவிர, சதைப்பிண்டத்திற்காக அலையும் நரிக்கூட்டத்திடம் இருந்து என்னையும் என் பெண் பிள்ளைகளையும் காப்பாற்ற முடியுமா? அதனால் என் தந்தையை விட மூத்தவனை வீட்டோடு வைத்திருக்கிறேன்" என்றாள்.
இப்படி ஈழத்துப் போர் உருவாக்கிய விதவைகளின் துயரங்கள் பெண்ணினத்தின் மென்மையை, நாணத்தை படுகுழி தோண்டிப் புதைத்துவிட்டது. அன்பில்லாது வற்றல் மரமாய் மரத்துப் போன மனதோடு, ‘பிள்ளைகளுக்காக வாழ்கிறோம்’ என்ற ஒரே எண்ணத்தில் காலத்தை கடத்த நினைக்கிறார்கள். விடியல் விடியாத விதவைகளாய் வாழும் விதவைகளின் இந்த நிலைப்பாடு வளரும் தமிழ் இனத்துக்கு நல்லதல்ல.
இனிதே,
தமிழரசி.
இனிதே,
தமிழரசி.
ReplyDelete"அன்பில்லாது வற்றல் மரமாய் மரத்துப் போன மனதோடு, ‘பிள்ளைகளுக்காக வாழ்கிறோம்’ என்ற ஒரே எண்ணத்தில் காலத்தை கடத்த நினைக்கிறார்கள்." என அழகாக நம்மவர் துயரைப் பதிவு செய்துள்ளீர்கள்.
யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)
http://www.ypvnpubs.com/2016/01/01.html
அதுவே உண்மை.
Delete