Monday, 11 January 2016

குறள் அமுது - (109)


குறள்:
“பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதம்கொண்டு
ஊதியம் போக விடல்”                                               - 831

பொருள்:
பேதைமை என்பது என்னவென்றால் தீமைகளை எடுத்துக் கொண்டு நன்மைகளைப் போகவிடுதலாகும்.

விளக்கம்: 
திருவள்ளுவர் பேதைமை என்றும் ஓர் அதிகாரம் எழுதியிருக்கிறார். அவ்வதிகாரத்தின் முதலாவது குறள் இது. இதில் பேதைமை என்றால் என்ன என்று அவர் கூறியுள்ளார். பலரும் அறியாமையே பேதைமை என நினைக்கிறார்கள். அறியாமை வேறு. பேதைமை வேறு. அறியாமை உடையவர் ஒன்றை அறிந்து கொள்ளும் பொழுது அதைப்பற்றிய அவரது அறியாமை நீங்கிப்போகும். எவ்வளவுக்கு எவ்வளவு ஆழமாக நூல்களைக் கற்கிறோமோ அவ்ளவுக்கு அவ்வளவு எமது அறியாமை நீங்கி அறிஞர்களாவோம்.

ஆனால் பேதைமை அப்படி ஆனதல்ல. பேதலித்த தன்மையை இருவகையாகச் சொல்லலாம் ஒன்று மனம் பேதலித்தல் மற்றது அறிவு பேதலித்தல். இதிலே மனம் பேதலித்த தன்மையை பேதைமை என்கிறார். பேதைமை உடையோரின் மனவிகாரம் ஆளுக்காள் வேறுபடலாம். பேதைமை உடையாயோரை ‘பேதை’ என்று சொல்வர். 

ஊதியம் என்ற சொல் - வேலை செய்பவர்க்கு கிடைக்கும் சம்பளம் என்ற கருத்தில் வரவில்லை. நன்மை, பெரும்பயன், ஆக்கம், இலாபம் என்ற கருத்தையே தருகின்றது. ஏனெனில்
ஊதியம் என்பது ஒருவர்க்கு பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்”

என்று ஊதியம் என்பதை திருவள்ளுவர் ‘நட்பாராய்தல்’ என்னும் அதிகாரத்தில் சொல்கிறார். அதாவது பேதைமை உடையோரின் [பேதையார்] நட்பை நீக்கிவிடுவதே[ஒரீஇ] ஒருவருக்குப் பெரும்பபயனைத் தரும் என்கிறார். பேதைமை உடையவரின் நட்பை நாம் விட்டுவிடுவதற்கு சம்பளம் கிடக்குமா? பெரும்பயன் கிடைக்கும்.

ஏதம் என்பது கேடுகளை உண்டாக்கக்கூடிய குடி, களவு, சூது, கொலை, சண்டை போன்றவற்றைச் செய்து நோயை, பகைமையை, துன்பத்தை, வறுமையை, வளர்த்துக் கொள்ளலாகும். பேதையார் தமது பேதைமையால் ஏதத்தைக் கைக்கொண்டு - உடல் நலன், நட்பு, புகழ், செல்வம் போன்ற பெரும்பயன்களை [ஊதியங்களை] கைநழுவிப் போகவிடுவர்.

No comments:

Post a Comment