Wednesday, 3 April 2013

இனிமேல் ஒன்றும் வேண்டிலனே!

பக்திச்சிமிழ் - 51

மலைகள் வெடித்து கல்லாக, அக்கல்லில் இருந்து சிதறிய துகள்களே மண்ணாகும். பச்சை மண்ணைக் குழைத்து சட்டி செய்து, அதனைச் சுட்டு எடுக்கிறோம். ‘அப்படி சுட்டு எடுத்த சட்டியில் சமைக்கும் கறியின் சுவையை அந்த சட்டியும், அகப்பையும் [சட்டுவம்] அறியுமா? அறியாது. 

அத்தகைய மண்ணை உருவாக்கும் கல்லை நட்டு, அதனைச்சுற்றி வந்து, நாலு மலர்களைத் தூவி மொண மொண என்று சொல்லும் மந்திரத்தால் நாம் அடையும் பயன் என்ன? நட்டகல் பேசுமா? அதற்கு உணர்ச்சி இருக்கிறதா? இல்லையே. அன்பை, காதலை, பக்தியை, பரவசநிலையை எமது உணர்வே எமக்கு உணர்த்துகிறது. உணர்வே இல்லா சடப்பொருளான கல்லால் இறைவனை உணரமுடியுமா? கறிச்சுவையை சுவைத்து உணர்வது போல பக்திச்சுவையாய் எமக்குள் இருக்கும்  இறவைனை நாமே உணர்ந்து சுவைக்க வேண்டும்’ என்கிறார் சிவவாக்கியர். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் சிவவாக்கியரின் இப்பாடல் மிகமிக ஆழமான கருத்துக்களை தந்து, எம் சிந்தையை மெருகூட்டும்.

"நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலுபுட்பம் சாத்தியே
மொண மொணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா!
நட்ட கல்லும் பேசுமோ! நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!"
                                            - (சிவவாக்கியர்) 
உளிகொண்டு செதுக்கி கற்சிலையாய் இருக்கும் கடவுளையோ [உளியிட்ட கல்], சாந்து பூசிய கடவுளையோ [ஒப்பிட்ட சாந்து], ஊத்தையில்லாமல் புளிபோட்டு தேய்க்கும் செப்புச்சிலையான தெய்வங்களையோ [புளியிட்ட செம்பு]; தான் போற்றி வணங்குதில்லை என பட்டினத்தார் கூறுகிறார். அவர் தனக்குள் இருந்த இறவனை, தானே சுவைத்து சுவைத்து மகிழ்ந்தார் [இருந்து உவத்தள்]. அந்தப் பக்திச்சுவையின் இனிமையால் இறைவனை தனக்குளே அடைத்து வைத்தாராம். அப்படி இறைவனை தனக்குள் தானே அடைத்துவைத்திருப்பதால் இனிமேல் தனக்கு எதுவும் தேவை இல்லை என மார்தட்டிக் கூறுகிறார்.

"உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையறப்
புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன் உயர் பொன்னெனவே
ஒளியிட்ட தாள் இரண்டுள்ளே இருத்துவத்துள் இன்மையென்று 
வெளியிட்டு அடைத்து வைத்தேன் இனிமேல் ஒன்றும் வேண்டிலனே                                                                (ட்டினத்தார். பா: 61)
அருளாளர்கள் எல்லோரும் இப்படிக் கருத்துக்கூற நாம் மட்டும்  ஏன் எம்முள் இருக்கும் இறைவனை சிலைகளிலும் சுவாமிமார் கால்களிலும்  தேடுகிறோம்?
இனிதே, 
தமிழரசி.

No comments:

Post a Comment