Friday, 19 April 2013

பெண்ணிற் பெருந்தக்கயாவுள?


-

பெண்மை என்றால் என்ன? அடக்கம், தியாகம், பொறுமை, இரக்கம், அன்பு, அழகு, ஆற்றல் தொண்டு, ஒப்புரவு முதலிய இயல்புகள் சேர்ந்த கலவையே பெண்மை எனப்படும். பெண்மையின் இந்த இயல்புகள் இன்பத்தை தரவல்லன. யாரும் இன்பத்தை இழிவு படுத்துவதில்லை. இதனால் இன்பத்தைத்தரும் பெண்மை பெருமை அடைகிறது.

அரும் பெரும் தத்துவ முத்துக்களை உலகிற்கு தந்த வள்ளுவரே ‘பெண்ணிற் பெருந்தக்கது யாவுள?’ என வியக்கின்றார். உலகில் பெண்ணைவிடப் பெருமை பெற்றவை வேறு எவை இருக்கின்றன? எனத் தன்னையே கேள்வி கேட்டு வியந்தவர், கற்பே அதன் பெருமைக்கு காரணம் என்றும் கூறுகிறார்.
நீதிசாஸ்த்திரம் எழுதிய மனு - ‘எங்கு பெண்களை வணங்குகிறார்களோ அங்கு தேவதைகளின் ஆலயங்கள் தானாக உண்டாகின்றன என்றும் தந்தையாயினும் சரி, கணவன் என்றாலும் சரி, சகோதரன் என்றாலும் சரி பெண்களுக்குத் தகுந்த மரியாதை கொடுக்க வேண்டும் என்று நீதி கூறியவர், ஒரு குலம் உயர்வடையவும், மற்றோரால் அறியப்படவும் பெண்ணே காரணமாக விளங்குகிறாள்’ என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

மனு மட்டும் பெண்ணின் பெருமையைப் போற்றவில்லை. இவற்றிற்கு ஒருபடி மேலே சென்று வேதகாலத்தில் வேதநூல் வல்லவர்கள் பலர் பெண்ணின் பெருமைக்கு தலைவணங்கி இருக்கிறார்கள். வேதகால மாமேதையான ‘யாக்ஞவல்லர்’ என்பவரிடம் ‘வாசக்னவி கார்கி’ என்பவள் 'பிரம விடயம்' [இன்றைய பௌதிகவிஞ்ஞானம்] கூறும் சக்திகளின் இரகசியம் (energy) பற்றி தர்க்கம் செய்து தர்க்க அரசி எனப்பட்டம் பெற்றாள்.

கார்கியின் அண்ணன் மகளான மைத்திரேயி உலகத்திலேயே மிகவும் அத்தியாவசியமான சக்தி, பெண்சக்தி என்றும் அது பெண்களிடமே உண்டு எனவும் நிலைநாட்டினாள். அவளின் ஆற்றலுக்கும், பெருமைக்கும் தலைவணங்கிய யாக்ஞ்வல்லர் அவளை திருமணம் செய்து மகிழ்ந்தார். வேதகால பெண்களின் முதன்மை இத்தனை சிறப்புடையதாக இருப்பதால் அதற்கு முன்பும் பெண் பெருமை மிக்கவளாகவே இருந்திருப்பாள். 

திருமூலரும் உலகின் சக்தி பெண் என்பதை மிக அழகு தமிழில்
பெண்கொடியாக நடந்தது உலகே"            - (திருமந்திரம்: 1143)
என திருமந்திரம் செய்திருக்கிறார். 

உலகமே கொடிபோன்ற பெண்ணாலே இயங்கிச் செல்கிறது என்பது அவர் கருத்து. ஆணுலகம், பெண்ணுலகம் என்ற பாகுபாடு இன்றி உலக இயக்கம் பெண்மையிலேயே தங்கி இருக்கிறது. இதைவிடப் பெண்ணின் பெருமைக்கும் முதன்மைக்கும் சான்று வேண்டுமா? 

உலக ஆக்கத்திற்கு உரிய தாய்மை பெண்ணிடமே உண்டு. அது அவளது தொண்டின் சிறப்பை எடுத்துக்காட்டும். பயன் கருதாது செய்யப்படும் பணியே தொண்டாகும். தாய் எதனையும் பயன் கருதிச் செய்வதில்லை.

“ஈன்றாளின் என்ன கடவுளும் இல்”             - (நான்மணிக்கடிகை: 55)
என்கிறது நான்மணிக்கடிகை.

தான் பெற்ற குழந்தை சான்றோனாய், கல்வியாளனாய், வல்லவனாய், நல்லவனாய், அன்பானவனாய் உலகில் வாழவேண்டும் என நினைப்பவள் தாய். பெண்மையின் மலர்ச்சியே தாய்மையாகும். இதனாலேயே பெண் இல்லாள் இல்லத்தரசி எனப் போற்றப்பட்டாள். இல்லத்துடன் அவளின் பெருமை நின்றுவிடவில்லை. தாய்மொழி, தாய்நாடு, தாய்க்கண்டம் என்று உலகளவில் பெண்ணின் பெருமை பரந்து விரிகின்றது.

“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்”                                 - (திருக்குறள்: 505)
என்பது திருக்குறள். அவரவர் செய்யும் செயலே அவர்களது பெருமைக்கும் சிறுமைக்கும் காரணமாகும். தன்னலம் கருதாமல் தொண்டாற்றுபவள் பெண். அதனால் வள்ளுவர் கூற்றுப்படி பெண்ணின் செயலே பெண்ணின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறது. 

பெருமைக்குணம் எப்படி இருக்கும் என்பதையும் திருவள்ளுவர்
“பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்”                              - (திருக்குறள்: 979)
என்ற குறளில் தெளிவாகச் சொல்கிறார்.

புகழில், பணத்தில் மிக்க உயர்வாக வாழ்ந்தாலும் செருக்கடையாது வாழ்வதே பெருமையாகும். சிறப்பே இல்லாத வாழ்விலும் செருக்கின் உச்சியில் வாழ்வது சிறுமையாகும் என்கின்றது இக்குறள். ஆதலால் எல்லாச் சிறப்புக்கள் இருந்தும் அதை இயல்பெனக் கொண்டு வாழ்வதே பெருமையாகும்.

ஞாலம் சொற்கேட்க வேண்டுமானால் - உலகம் ஒருவனின் சொல்லைக்கேட்டு அவன் பின்னே செல்ல வேண்டுமானால் அவனிடம் பெண்தன்மை இருக்க வேண்டும். அறிஞர்களை, மெய்ஞானியர்களை, பாவலர்களை பார்த்தாலே இது புரியும். புத்தன், ஜேசு, ஆதிசங்கரர் போன்ற பெரியோர்களிடம் ஆண்மையைவிடப் பெண்மைக் குணங்களே ஓங்கி இருந்தன. அதனாலே உலகம் அவர்கள் சொற்கேட்டு அவர்கள் பின் சென்றது. இரக்கமும் கருணையும் எவனிடம் இருக்கிறதோ அவனிடம் பெண்மைக் குணம் முன்னிற்கும்.

இறைமையிலும் இயற்கையிலும் முதன்மை பெற்றுள்ள பெண்ணிற்கு பெருமையை எவரும் வழங்க வேண்டியதில்லை. அப்பெருமை இயல்பாகவே பெண்ணிடம் அமைந்திருக்கிறது. பெண்ணின் பெருமை காக்கவே ஆண்மகன் பிறக்கின்றான். பெண்ணில்லையேல் அன்பேது? இன்பமேது? உயிரேது? உலகேது? உலகிற்கு வேண்டிய மெஞ்ஞானியரை, விஞ்ஞானியரை, தத்துவஞானியரை எல்லாம் உருவாக்கி உவந்து அளிப்பவள் பெண். இதனாலேயே பெண் ‘சக்தி’ என்ப்போற்றப்பட்டாள்.

அவளது சக்தி இல்லாவிட்டால் உலக இயக்கம் ஏது? உலகில் உள்ள அனைத்துச் சக்தியினதும் பிறப்பிடம் பெண்ணே. பெண்ணின் பெருமை அறிந்தே, பெண்ணைச் சிறுமை செய்தோர் வாழ்ந்த காலத்தில் தோன்றிய பாரதி, “பெண்மை வாழ்க என்றும் வெல்க என்றும் கூத்திடுவோமெடா!” எனப்பாடி ஆனந்தக் கூத்தாடினார்.

உலகின் அதிஉன்னத சக்தியான கடவுளையே திருஞானசம்பந்தர்
“பெண்ணார் திருமேனிப் பெருமான்” என்றும்
“பெண்ணியலுருவினர்” எனவும் போற்றி வணங்குகிறார்.

“உலகு என்பது உயர்ந்தோர் மாட்டே” என்பது தொல்காப்பியரின் வாய் மொழியாகும். ஆதலால் உயர்ந்த அறிஞர்கள் உள்ள உலகு வாழும் வரை பெண்ணின் பெருமை பேசப்படும்.

இனிதே,
தமிழரசி. 
(1998 - 'கலசம்' இதழிற்கு சாலினி என்ற பெயரில் எழுதியது.)

No comments:

Post a Comment