புங்குடுதீவில் இருக்கும் கேரதீவில் வீற்றிருந்த அரிகரபுத்திரருக்கு 1870ல் வாழ்ந்த இராமலிங்கச் சட்டம்பியார் இயற்றிய பாடல்கள் இரண்டு இருக்கிறது. அதனை இப்பதிவில் தருகிறேன். அவர் இயற்றிய வேறு பாடல்களை அறிந்தவர்கள் தந்தால் நன்று. அவர் புங்குடுதீவில் வாழ்ந்த பரமானந்தர் என்பவரின் மகனாவார். அவர் சேதுநாதர் என்பவரிடம் படித்தார். அவர் கேரதீவை 1870திலேயே கேரநகர் எனக்கூறிப் பெருமைப்படுவதை அவரது பாடல்கள் காட்டுகின்றன. புங்குடுதீவில் பிறந்து வாழ்ந்து மறைந்த நம் முன்னோனின் ஆன்மீக தேடலையும் அவரின் பாடல் பெற்ற தலமாக 150 ஆண்டுகளாக கேரதீவு அரிகரபுத்திர கோவில் இருப்பதையும் நான் தேடி அளிக்கும் இப்பாடல் இரண்டும் வரலாறாக காட்டி நிற்கின்றது.
கேரநகர் அரிகரபுத்திரர் பதிகம்
தத்துபரி மீதேறி உற்றபடை சேனையுஞ்
சாலவே சூழ வரவுந்
தங்குசெய துங்கமுறு வீரமா காளனுஞ்
சாடிவல் சாரி வரவும்
பத்தியுடன் அண்டர்கள் பணிந்து துதிசெய்யவும்
பாவையர்கள் நடமாடவும்
பாவாண ரானவர்கள் தேவார மோதவும்
பரிவினொடு வீதி வருவாய்
கத்து செண்டாயுத கரத்தனே எனதுதுயர்
களையும் மெஞ்ஞான குருவே
கல்வியும் செல்வமும் கமலபொற் பாதமும்
காட்டிநீ கருணை புரிவாய்
அத்தனே அடியவர்கள் பத்தனே ஆலநிழல்
அமர்ந்திடுங் கேர நகரில்
அனுதினமும் அடியர்தொழ வடபுறம் அமர்கின்ற
அமல அரிகர குமரனே!
“மின்னைநிகர் மகுடமும் நுதலினிற் திலகமும்
மிகுகுழை யினொடு கவசமும்
மேலான புயகிரியும் வாகுவல யத்துடன்
மிக்ககர் மீது செண்டுந்
தன்மமுப் புரிநூற் பதக்கஞ் சரப்பளி
தயங்கு நற்திரு மார்பமுந்
தண்டை வீரக்கழல் சதங்கையொலி கலிரெனத்
தாளம் ஒத்திடு பாதமும்
கன்னியர்கள் புடைவர வெள்ளை வாரணமீது
காவலாய் வீதி வந்தே
காட்சிதந்து அடியர்துயர் தீர்ப்பதுனை யன்றியே
காசினியி லொருவ ருளரோ
நன்மையுற் றேசனம் இன்பமாய் வாழும்
நயப்புற்ற கேர நகரில்
நாளுமடியார் தொழுது வாழவட புறமமரும்
நாத அரிகர குமரனே”
No comments:
Post a Comment