சிவநேயச் செல்வனான இராவணனைக் கொன்றபாவம் ஶ்ரீராமரை விட்டபாடில்லை. முனீஸ்வரம் முதற்கொண்டு அயோத்திவரை சிவலிங்கங்களை வைத்து வணங்கியும் பிரமகத்தி தோசம் நீங்கவில்லையோ என்ற பயம் வசிட்டருக்கு. அவர் அதற்கு என்ன செய்யலாம் என சிந்தித்தார்.
சிந்தனையின் பயனாக அயோத்தி எங்கும் முரசு ஒலிக்கின்றது. “இராமன் முடி சூடும் போது சொர்ணம் தானமாக (பொன் தானம்) வழங்கப்படும். சொர்ணத்தைப் பெற எள்ளுத்தானத்தை வாங்கவாரீர்.” இந்த முரசொலி சொர்ணவல்லியின் காதில் விழுகின்றது. பெயரில் சொர்ணம் இருந்ததே ஒழிய வாழ்நாளில் அவள் சொர்ணத்தைக் கண்டதில்லை.
எப்படிக் காண்பாள் அவள்? முனிவரின் மனைவியல்லவா? ஆனால் இப்போதோ சொர்ணவிக்கிரகம் போல் அவள் மகள் திருமணத்திற்காகக் காத்திருக்கின்றாள். பொன் இல்லாத திருமணமா? முரசொலி தந்த தைரியத்தில் சிருங்கார முனிவரிடம் தன் எண்ணத்தைச் சொல்கிறாள்.
சிருங்கார முனிவனும் “பொன்னாசையை வென்ற எனக்கும் பெண்ணின் திருமணத்திற்காக பொன் வேண்டுமா?” என மனைவியைப் பார்த்து சிரித்து, “சொர்ணவல்லி! போயும் போயும் பொன்னுக்காக,
செய்த பாவங்கள் போகக் கொடுக்கும் எள்ளுத்தானத்தையா நான் வாங்குவது? இத்தனை காலமும் நான் செய்த தவம் எல்லாம் அவமானமாகப் போகாதா? என்ன நினைத்து இதனைச் செய்யச் சொன்னாய்?” எனச் சினந்தான்.
“முனிசிரேஷ்டரே! இராமன் பரமாத்மாவின் வடிவம் என்பது உண்மையானால் எள்ளுத்தானத்தை நீங்கள் பெறுவதால் இழக்கும் உங்கள் அறிவொளியும் (தேயசும்), தவவலிமையும் இராமனின் நயன தீட்சையால் மீண்டும் வரத்தானே வேண்டும்” என்றாள்.
சிருங்கார முனிவரும் மனைவியின் விருப்பப்படி மகளின் திருமணத்திற்காக எள்ளுத்தானம் வாங்க உடன்பட்டார். சிருங்காரமுனிவர் எள்தானம் வாங்கவருகிறார் என்ற செய்தி வசிட்டருக்கு எட்டியது. சிருங்கார முனிவர் எள்தானம் வாங்குவதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்பதை வசிட்டர் உணர்ந்து கொண்டார். சிருங்காரரின் மனைவி சொர்ணவல்லி மிகுந்த அறிவுள்ளவள் என்பது அவருக்குத் தெரியும். அவள் அவரிடம் கல்வி பயின்றவள் தானே! குருவை மிஞ்சிய சிஷ்யையா?........ ......
பொன் நாணயங்களுடன் எள்ளுத்தானத்தை வாங்கிய சிருங்கார முனிவர் தலை நிமிர்ந்து இராமரைப் பார்த்தார். அங்கே முகத்திரை தான் தென்பட்டது. அவர் எதிர்பார்த்து வந்தது நடக்கவில்லை. நமட்டுச் சிரிப்புடன் வசிட்டர் ஓரக்கண்ணால் பார்ப்பதையும் பார்த்தார். தன் தவம், அறிவொளி யாவும் போய்விட்டது என்பதை உணர்ந்த சிருங்கார முனிவர் மயங்கிச் சாய்ந்தார்.
இந்தச் செய்தி கேட்டு ஓடிவந்த சொர்ணவல்லி முனிவருக்கு மயக்கம் தெளிவித்தாள். இதற்குக் காரணம் வசிட்டரே என்பதை முனிவர் சொல்லக்கேட்டு, ‘வசிட்டரே! குருவை மிஞ்சிய சீடரும் உண்டு என்பதை இன்றே உமக்கு உணரவைப்பேன்’ என முணுமுணுத்தாள்.
‘அது எப்படி?’ என பார்வையால் வினாவினார் சிருங்காரர்.
“முனிவர்களில் சிறந்தவரே! நீங்கள் இழந்த தவவலிமை, அறிவொளி யாவும் திரும்பப் பெற வழி இருக்கிறது. என்னுடன் வாருங்கள். வசிட்டரின் எண்ணம் நடக்காது. நடக்கவும் விடமாட்டேன். பெண்புத்தி கேட்ட பேதை என உங்களை உலகம் இகழவும் விடமாட்டேன். வாருங்கள் என்றாள். சிருங்காரரும் அவளுடன் சென்றார். மங்கல முரசொலிக்க வரிசங்கம் நின்றூத பட்டாபிஷேக ராமன் தேரில் பவனி வந்துகொண்டிருந்தான். அந்தக் காட்சியை சொர்ணவல்லி காட்ட, சிருங்கார முனிவர் கண்டார். இராமனும் பரந்தாமன் எனும் நிலையில் நின்று கருணை வழிந்தோட சிருங்கார முனிவரைப் பார்த்தான். இழந்தவை மட்டுமா? வேண்டியவை யாவும் பெற்றார், சிருங்கார முனிவர்.
இராமனின் அருகே இருந்த வசிட்டர் சொர்ணவல்லியை நோக்கி முறுவலித்தார்.
‘குருவை மிஞ்சும் சீடரும் உண்டு’ என அவள் வாய் மீண்டும் முணுமுணுத்தது.
‘இல்லை மகளே! மனைவியெனும் அருளமுதம் கிடைத்ததால் சிருங்காரன் வாழ்ந்தான்’ என்றார்.
No comments:
Post a Comment