ஆயிரம் சிவலிங்கமுள்ள சால்மலா ஆறு - கம்போடியா 2012
அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படி கண்டிலர் மீண்டும் பார்மிசைக் கூடி
அடி கண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடி கண்டேன் என்று அயன் பொய் மொழிந்தானே”
-(ப.திருமுறை: 10: 8: 2)
-(ப.திருமுறை: 10: 8: 2)
என்று இரத்தினச் சுருக்கமாக்கி மகாசிவராத்திரிக் கதையை திருமந்திரமாக திருமூலர் தருகிறார்.
“ஒரு காலத்தில் பிரம்மனும் திருமாலும் தங்களில் யார் பெரியவர் என்று வாக்குவாதம் செய்தனர். அது முற்றிப் போரில் முடிந்தது. இதைப் பார்த்த பரம்பொருள் அவர்கள் முன் ஓர் அனற்பிழம்பாய் [தீயாய்] காட்சி அளித்தது. ‘நானே கடவுள்’ ‘நானே கடவுள்’ என்று கூறி போர்புரிந்த பிரம்மனும் திருமாலும் அச்சோதிப்பிழம்பைப் பார்த்து முதலில் திகைத்தனர். தாம் இருவரும் அறியாத வேறு ஒரு பொருள் இருக்கிறதே என வியந்தனர். பின்னர் அவர்கள் இருவரில் அச்சோதிப்பிழம்பின் அடியையோ முடியையோ முதலில் காண்பவர் யாரோ அவரே அவர்களில் பெரியவர் என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
திருமால் பன்றி உருவெடுத்து நிலத்தைப் பிளந்து சென்று பாதாளத்தில் தேடியும் அந்த சோதிப் பிழம்பின் அடியைக் காணமுடியவில்லை. திருமால் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். பிரம்மனோ அன்னப்பறவை உருவெடுத்து, முடியைக் காணவேண்டும் என்ற ஒரே நோக்கில் பறந்துகொண்டே இருந்தார். எனினும் முடியைக் காணமுடியவில்லை. முடியைக் காணாதவர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கலாம். அதற்கு அவர் மனம் இடம்கொடுக்கவில்லை. திருமாலை வென்றுவிடவேண்டும் என்ற ஆசை அவரைப் பொய் பேசவைத்தது. தான் அத்தீப் பிழம்பின் முடியைக் கண்டதாக பிரம்மனே பொய்சொன்னார். தான் முடியைக் கண்டதற்கு தாழம்பூவைப் பொய்சாட்சி சொல்ல வைத்தார்.
தாழம்பூ
அவர்களின் செயலைப் பார்த்திருந்த பரம்பொருளாகிய சிவம் அத்தீயிலிருந்து வெளிப்பட்டு, பிரமாவுக்கு எங்கேயும் கோயிலில்லாது சபித்தும், பொய்சாட்சி சொன்ன தாழம்பூவை பூசைக்கு உதவாத மலராக்கினார். பிரம்மனும், திருமாலும் பதைபதைத்து அஞ்சி மன்னிப்புக் கேட்டனர். அடிமுடி இல்லாமல் சோதி வடிவாக நின்ற இறைவன், திருமாலதும் பிரம்மனதும் வேண்டுகோளுக்கு இரங்கி சோதிலிங்கம் ஆனார். இதுவே லிங்கத்தோற்றத்திற்கு மூலம் என்று லிங்கபுராணம் கூறுகிறது. [லிங்கபுராணம் தோன்ற முன்னரே பண்டைய தமிழரிடம் லிங்க வழிபாடு இருந்திருக்கிறது. அதுமட்டுமல்ல பூசைக்கு உதவாத மலர் என்று கூறப்படும் தாழம்பூவால் உத்தரகோசமங்கையில் உள்ள சிவனுக்கு இன்றும் பூசை செய்கிறார்கள்].
இலிங்கம் ஏன் நீள்ட்டவடிவமாக இருக்கிறது? நீள்வட்ட வடிவத்திற்கு தொடக்கமும் முடிவும் இல்லை. அடியும் முடியும் இல்லை. ஆதியில்லை. அந்தமில்லை. மற்றவைகளுக்கு உண்டு. ஆதியும் அந்தமும் இல்லாப் பரம்பொருள், சிவம் என்பதை சிவலிங்கம் காட்டுகிறது. சிவலிங்கம் சரியான வட்டமாக இல்லாது நீள்வட்டமாக இருக்கின்றது. பேரண்டமே நீள்வட்டமாகத்தான் இருக்கிறது. ஆதி அந்தம் இல்லா சிவலிங்கவடிவமும் அதனையே விளக்குகிறது. பேரண்டம் எங்கும் பரந்து நின்ற சோதிப்பிழ்ம்பாக பரம்பொருள் தோன்றி - சோதிலிங்கமாக காட்சியளித்த இரவே சிவராத்திரியாகும்.
“அரியோடயனும் அறியாவண்ணம்
அளவில் பெருமையோடு
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான்”
-(ப.திருமுறை: 1: 70:9)
-(ப.திருமுறை: 1: 70:9)
என்று திருஞானசம்பந்தரும்,
“அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ”
-(ப.திருமுறை: 8: 15:12)
-(ப.திருமுறை: 8: 15:12)
என்று மாணிக்கவாசகரும் பாடிப் பரவசப்பட தாயுமானவர்,
“அங்கு அங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய்
ஆனந்தப் பூர்த்தியாகி அருளொடு நிறைந்தது எது?”
என்று தம்மை நோக்கியே கேள்வி கேட்டு, சிவராத்திரி தத்துவ விளக்கத்தை ஆராய்கின்றார்.
இவர்களுக்கு எல்லாம் ஒருபடி மேலே சென்று திருநாவுக்கரசர்
“அயனொடு மாற்கு அறிவரிய அனலாய் நீண்ட
தேவாதி தேவன் சிவன் என் சிந்தை
சேர்ந்திருந்தான்”
- (ப.திருமுறை: 6: 98:10)
- (ப.திருமுறை: 6: 98:10)
என மார்தட்டிக்கூறியதோடு நில்லாது மாலும், அயனும் காணா இறையை தாம் எங்கே தேடிக் கண்டு கொண்டார் என்பதை வெற்றிப்பெருமிதத்தோடு கூறுவதைப் பாருங்கள்.
“தேடிக் கண்டுகொண்டேன்
திருமாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவணை என்னுளே
தேடிக் கண்டு கொண்டேன்”
-(ப.திருமுறை: 4: 9:12)
ஆகா! பரம்பொருளைத் தேட எவ்வளவு அற்புதமான வழி. பரம்பொருளைத் தேடித்தேடி எங்கும் திரியவேண்டாம். உங்களுக்குள்ளே தேடுங்கள் கிடைப்பார். திருநாவுக்கரசர் தனக்குள் தேடிக் கண்ட தேவாதி தேவனை நாமும் எம்முள்ளே தேடலாமே!
-(ப.திருமுறை: 4: 9:12)
ஆகா! பரம்பொருளைத் தேட எவ்வளவு அற்புதமான வழி. பரம்பொருளைத் தேடித்தேடி எங்கும் திரியவேண்டாம். உங்களுக்குள்ளே தேடுங்கள் கிடைப்பார். திருநாவுக்கரசர் தனக்குள் தேடிக் கண்ட தேவாதி தேவனை நாமும் எம்முள்ளே தேடலாமே!
எங்களுக்குள்ளே எப்படி தேவாதி தேவனைத் தேடுவது என்று திகைக்கிறீர்களா? அதற்கும் அவரே வழிகாட்டுகின்றார்.
"உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகழியாக
மடம்படும் உணர்நெய் அட்டி உயிரெனுந் திரிமயக்கி
இடம்படும் ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே"
-(ப.திருமுறை: 4: 75:4)
-(ப.திருமுறை: 4: 75:4)
“உடம்பெனும்[உடம்பாகிய] மனையகத்துள்[வீட்டினுள்] உள்ளமே[மனம்] தகழியாக[விளக்கில் எண்ணெய் ஊற்றும் இடம்]
மடம்படும்[அறியாமை என்னும்] உணர்நெய்[எண்ணெய்] அட்டி[விட்டு] உயிரெனுந்[உயிராகிய] திரிமயக்கி [திரியைத் திரித்து]
இடம்படும்[விரிந்த] ஞானத்தீயால் எரிகொள[திரியை கொழுத்தி] இருந்து நோக்கில்
கடம்பமர்[கடம்பு மாலை அணிந்த] காளை[முருகன்] தாதை[தந்தை] கழலடி காணலாமே"
‘எமது உடம்பாகிய வீட்டினுள் இருக்கும் மனத்தை விளக்கின் தகழியாக்கி, அறியாமை என்னும் எண்ணெய்யை ஊற்றி, உயிரைத் திரியாய் திரித்து எம்மொடு என்றும் பொருந்தியுள்ள ஞானம் என்னும் நெருப்பால் திரியைக் கொழுத்தி இருந்து பார்த்தால் கடம்ப மலர் மாலையை அணியும் முருகனின் தந்தையாகிய சிவனின் திருவடியைக் காணலாம்’ என்கிறார்.
கடம்ப மலர்
இந்த வழியை ஒருமனதோடு பின்பற்றினால் சிவராத்திரி என்ன எல்லா இராத்திரியிலும் பரம்பொருள் வெளிப்படுவான்.
இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
பலவருடங்களுக்கு முன் சாலினி என்ற புனைபெயரில் கலசத்திற்கு எழுதியது.
No comments:
Post a Comment