மிருதங்கம் என்பது மராட்டிய மன்னர்களின் ஆட்சியின் போது தமிழகம் வந்தது என்பது இன்றைய கர்நாடக சங்கீத இசை ஆய்வாளர்களின் கருத்தாகும். அவர்களின் கருதுகோள் சரியா? மராட்டிய மன்னர்கள் வரமுன் (கி பி 1675க்கு முன்) தமிழரிடம் தாளஇசைக் கருவிகள் இருக்கவில்லையா? அவர்கள் வருவதற்கு முன்பே கட்டப்பட்ட கோயில் சிற்பங்களில் மிருதங்கம் போன்ற அமைப்புடைய தாளவாத்திய கருவிகள் இருக்கின்றனவே அவை என்ன?
சங்க இலக்கியங்கள் பல தாள இசைக்கருவிகளைக்கூறுகின்றன. அதில் ஒன்று முழவு. மராட்டியர் வருகைக்கு முன் வாழ்ந்த (12ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவராகாக் கருதப்படும்) சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் முப்பத்தொரு தோற்கருவிகளைக் குறிப்பிடுகிறார். அத்துடன் முழவு ஏழு வகையாக இருந்ததையும் தருகிறார். அவை முறையே அகமுழவு, அகப்புறமுழவு, புறமுழவு, புறப்புறமுழவு, பண்ணமைமுழவு, நாண்முழவு, காலைமுழவு என அழைக்கப்பட்டன. அவற்றை
முழவின் வகைகள்
|
அவற்றின் பெயர்கள்
|
|
1
|
அகமுழவு
|
மத்தளம், சல்லிகை, இடக்கை, கரடிகை, பேரிகை, படகம், குடமுழா
|
2
|
அகப்புறமுழவு
|
தண்ணுமை, தக்கை, தகுணிசம், தாவில்
|
3
|
புறமுழவு
|
கணப்பறை
|
4
|
புறப்புறமுழவு
|
நெய்தற்பறை
|
5
|
பண்ணமைமுழவு
|
முரசு, நிசாளம், துடுமை, திமிலை
|
6
|
நாண்முழவு [நாள்]
|
நாழிகைப்பறை (நேரம் அறிவிப்பது)
|
7
|
காலைமுழவு
|
துடி
|
இப்படி பிரித்து வைத்திருந்தனர் என்பதையும் காணமுடிகின்றது. முழவு என்ற பெயர் தாளஇசைக் கருவிகளுக்கு பொதுப்பெயர் என்பதும் முப்பதிற்கும் மேற்பட்ட தாளசைக்கருவிகளை முழவு என்ற பொதுப் பெயர் சுட்டியதையும் பண்டைத்தமிழ் இலக்கியங்கள் காட்டுகின்றன.
பண்டைய முழவே இன்றைய மிருதங்கம் என்பதற்கு சங்க இலக்கியங்களும் சான்று கூறுகின்றன. புறநானூற்றில் பெருந்தலைச் சாத்தனார் குமணனை வாழ்த்துமிடத்தில்
“பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
மண்ணார் முழவின் வயிரியர்
இன்மைதீர்க்கும் குடிப்பிறந்தோயே!” - (புறம்: 164: 11-13)
எனக்கூறுகிறார். குமணன் காலத்தை கி மு முதலாம் நூற்றாண்டு என்றும் அறிஞர் கூறுவர். இதில் வரும் மண்ணார் முழவு பரிபாடலிலும்
"ஒருதிறம் மண்ணார் முழவின் இசையெழ
ஒருதிறம் அண்ணல் நெடுவரை அருவிநீர் ததும்ப" - (பரிபாடல்:18: 13 - 14)
எனப் பேசப்படுகின்றது.
பொருநராற்றுப்படையும்
"மண்ணமை முழவின் பண்ணமை சீறியாழ்
ஒண்ணுதல் விறலியர் பாணி தூங்க” - (பொருநர்: 109 - 110)
எனச்சொல்கின்றது. "மண்ணமை முழவின் பண்ணமை சீறியாழ்" என்னும் பொழுது சுருதி கூட்டப்பட்ட மண் அமைந்த[சேர்தத] முழவு என்பது தெளிவாகிறது.
அடியார்க்கு நல்லார் கூறிய முப்பத்தொரு தாள இசைக்கருவிகளுள் இந்த மண்ணார் முழவு எது? என்ற கேள்விக்கு ஏற்ற விடையை புறநானூற்றில் பாண்டியன் பல்யாகசாலைப் பெருவழுதியைப் பாடிய நெட்டிமையார் தருகிறார்.
“............. ............. வார் உற்று
விசி பிணிக் கொண்ட மண்கனை முழவு” - (புறம்: 15: 22 - 24)
என்ற நெட்டிமையாரின் பாடல் வரிக்கு, ஔவை சு துரைச்சாமிப்பிள்ளை அவர்கள் ‘வார் பொருந்தி வலித்துகட்டுதலைப் பொருந்திய மார்ச்சனை செறிந்த தண்ணுமையுடைய’ என்று விளக்கம் தந்துள்ளார். அவரின் விளக்க உரையின் படி மண்ணார் முழவு, தண்ணுமை அழைக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. சிலப்பதிகாரமும் அரங்கேற்றுக் காதையில் தண்ணுமை ஆசிரியரின் குறிப்புகளை சிறப்பித்துக் கூறுவது இவரின் கருத்துக்கு வலுச்சேர்க்கிறது.
சிலப்பதிகாரத்தில் மாதவியின் அரங்கேற்றத்திற்கு இசைக்கருவிகள் ஒலித்த முறையை கூறும் இடத்தில்
“.................. தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே” - (சிலம்பு: 3: 140 -141)
என இளங்கோவடிகள் கூறுகிறார். முழவில் ஒருவகை தண்ணுமை என்கிறார்கள் உரையாசிரியர்கள். அப்படியிருக்க தண்ணுமையைவிட எப்படி முழவு பின்னிற்கும் என்ற கேள்வி நம் சிந்தையில் பிறப்பது நியாயமே.
‘நாம் செந்நெல் படையலிட்டு வேறு ஓர் அரிசியை சமைத்தோம்’ என்றால் செந்நெல் அரிசியை பொங்கிப்படைத்து, வேறு ஒருவகை அரிசியை சமைத்தோம் என்றுதானே பொருள் கொள்வோம். அரிசி வகையில் செந்நெல் இங்கு முதன்மை பெறுகிறது. அது போல் முழவு வகையில் இளங்கோ அடிகளின் கூற்றுப்படி தண்ணுமை முதன்மை பெறுகிறது எனக் கொள்ளலாம்.
திருஞானசம்பந்தர் முதலாந்திருமுறையில்
“எண்ணார் எயிலெய்தான் இறைவன் அனலேந்தி
மண்ணார் முழவதிர முதிரா மதிசூடி” - ( ப.தி.முறை: 1: 46: 4)
என இறைவன் மண்ணார் முழவுக்கு ஆடுகிறார் என்று கூறியவர் இரண்டாம் திருமுறையில்
“ மண்ணார்ந்த மணமுழவந் ததும்ப” - ( ப.தி.முறை: 2: 54: 6)
என மண்ணார் முழவை மணமுழவாகவும் கூறுகிறார். திருமணங்களின் போது வாசிக்கப்படும் மங்கலவாத்தியமாக - மணமுழவாக, மண்ணார் முழவைச் சொல்கிறார். ஆதலால் மண்ணார் முழவு மங்கல நிகழ்வுகளில் பயன்படுத்தப்பட்ட தாளஇசைக்கருவியாகும்.
“மண்ணார் முழவும் குழலும் இயம்ப” - ( ப.தி.முறை: 7: 42: 4)
என சுந்தரமூர்த்தி நாயனாரும் தமது தேவாரத்தில் மண்ணார் முழவை பதிவு செய்துள்ளார்.
இந்த மண்ணார் முழவே, மிருதங்கம் என மாறியதா?
பண்டைய தமிழரால் மண்ணார் முழவு என அழைக்கப்பட்ட முழவா, இன்று மிருதங்கம் என்ற மாற்றுடை உடுத்தி (பெயருடன்) உலாவருகின்றது எனக் கருதுவதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.
1. மிருதங்கம் என்ற சொல் ம்ருத் + அங்கம் எனப்பிரியும். [ம்ருத் + அங்கம் = மிருதங்கம்]. ம்ருத் என்றால் மண். அதாவது மண்ணைத் தனது அங்கமாகக் கொண்டது, மிருதங்கம். பண்டைத் தமிழர் பாவித்த மண்ணார் முழவு என்ற சொல் மண் + ஆர் + முழவு எனப்பிரியும். ஆர் என்பது கட்டு, கட்டிய, சேர்ந்த என்ற கருத்துக்களையும் தரும். [ஆர்க்கை - கட்டுகை; ஆர்த்தல் - கட்டுதல்]. மண்சேர்ந்த முழவு என்ற கருத்தையே மண்ணார்முழவு எனும் சொல் தருகிறது.
2. மிருதங்கம் விரல் கொண்டு கைகளால் வாசிக்கப்படும் ஒரு தாளஇசைக்கருவியாகும். மண்ணார் முழவை விரல் கொண்டு கைகளால் கொட்டி ஒலி எழுப்பியதை அகநானூற்றில் பாலைபாடிய பெருங்கடுங்கோ
“மண்ணார் முழவின் கண்ணகத்து அசைத்த
விரலூன்று வடுவில் தோன்றும்” - (அகம்: 155: 14 - 15)
எனக் கூறிய வரிகள் எடுத்துக் காட்டுகின்றன. முழவில் இடும் கருஞ்சாந்து (மார்ச்சனை) உள்ள கண்ணில் விரல் பதிந்த வடு இருந்ததை இப்பாடல் வரிகள் சொல்கின்றன.
3. மிருதங்கத்தின் வலக்கண் கரியமண் பூசப்பட்டு பலவிதமான நயவொலிகள் தோன்றும் இடமாகவும், இடக்கண் தொம் தொம் எனத் தட்டொலி கொடுக்கும் இடமாகவும் இருக்கிறது.
“புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின்
மண் ஆர் கண்ணின் அதிரும்” - (நற்றிணை: 100: 10 - 11)
என பரணர் நற்றிணையில் முழவில் மண் பூசப்பட்டு இருந்ததைக் காட்டுகிறார். நற்றிணையின் இப்பாடலுக்கு விளக்கம் தரும் நச்சினார்க்கினியார்
“இடக்கண் இளியாக வலக்கண் குரலாக
நடப்பது தோலியற் கருவியாகும்”
என்று ஒரு பாடலை எடுத்துக்காட்டாகத் தருகிறார். தமிழில் இளி என்பது பஞ்சமத்தையும் (ப), குரல் என்பது சட்சத்தையும் (ச) குறிக்கும். தோலாலான இசைக்கருவிகளின் இடப்பக்ககண் பஞ்சமசுருதி உடையதாகவும் வலக்கண் சட்சம சுருதி உடையதாகவும் இயங்க வேண்டும் என்கிறார். மண்ணார் முழவு அப்படி சுருதி சேர்க்கப்பட்டது என்பதை நச்சினார்க்கினியாரின் உரையால் உணரலாம். மிருதங்கமும் இப்படி சுருதி சேர்க்கப்பட்டதேயாகும். ஆனால் இன்று மிருதங்கங்களை செய்வோர் அவற்றை கருத்தில் கொள்ளாததால் இவ்வாறு அவை சுருதி சேர்க்கப்படுவதில்லை. இது மிருதங்கத்திற்கு மட்டுமல்ல எல்லா இசைக் கருவிகளுக்கும் பொருந்தும். உதாரணமாக வீணயின் மெட்டுக் கட்டுவோர் விடும் பிழையால் வீணையிலும் சுருதி சேர்ப்பது கடினமாகவே இருக்கிறது. எனவே நம்முன்னோர் ஆராய்ந்து கண்ட இசை நுணுக்கங்களையும் தொழிற்கல்வியில் ஒரு பாடமாக கற்பித்து, அப்படி கற்றவர்கள் இசைக் கருவிகளை செய்வார்களானால் இந்தக் குறை தீர வழி இருக்கிறது. அதுமட்டுமல்ல அவர்களுக்கு நல்ல செவிப்புலனும் இருக்க வேண்டும்.
4. மிருதங்கத்திற்கு கண்கள் உண்டு. அந்தக் கண்களிலே ஒரே மாதிரி சுருதி சேர்ந்தால் மட்டுமே கேட்க இனிமையாக இருக்கும். முழவில் கண்ணிருந்ததால் அது கண்ணார் முழவு என அழைக்கப்பட்டதை மாணிக்கவாசகரின் திருக்கோவையார் எமக்குச் சொல்கிறது.
“களிதரக் கார்மிடற்றோன் நடமாடக் கண்ணார் முழவம்
துளிதரல் காரென ஆர்த்தன” - (ப.தி.முறை: 8: கோவை: 324)
5. மிருதங்கத்தில் எட்டு சோடிக் கண்கள் உண்டு. இந்நாளில் மிருதங்கத்தின் தொப்பியையும் வலந்தலையையும் இணைக்க, எட்டுச் சோடிக் கண்களையும் ஒரு வார் கொண்டு கட்டுகிறார்கள். அந்நாளில் ஒருசோடிக்கு ஒருவடமாக முழவத்தின் எட்டுச்சோடி கண்களை எட்டு வடம் கொண்டு கட்டி இருக்கிறார்கள். சிவன், எட்டு வடம் கொண்டு கட்டப்பட்ட வட்டமுழவத்தை வாசிக்கும் வகையை நந்திக்குச் சொல்லிக் கொடுத்து, அதன் பலனாக(இட்டமிக) நடனமாடினாராம். அதனை
"கட்டுவடம் எட்டுஉறு வட்ட முழவத்தில்
"கட்டுவடம் எட்டுஉறு வட்ட முழவத்தில்
கொட்டு கரம்இட்டஒலி தட்டும்வகை நந்திக்கு
இட்டமிக நட்டமவை இட்டவர்”் - ( ப.தி.முறை: 2: 32: 3)
என திருஞானசம்பந்தர் தமது தேவாரத்தில் சொல்கிறார்.
6. மண்கனை முழவை, ஔவை சு துரைச்சாமிப்பிள்ளை அவர்கள் ‘வார் பொருந்தி வலித்துகட்டுதலைப் பொருந்திய மார்ச்சனை செறிந்த தண்ணுமையுடைய’ எனச்சொன்ன விளக்கம் மிருதங்கத்திற்கும் பொருந்துகிறதே.
7. தமிழகத்தில் உள்ள பல கோயிற் சிற்பங்களில் முழவு, தண்ணுமை, மத்தளம் என அழைக்கப்பட்ட எத்தனையோ தாளைஇசைக் கருவிகள் இருக்கின்றன. சில சிற்பங்களின் உதாரணங்களைப் பார்ப்போம்:
கழுகுமலை வெட்டுவான் கோயிலில் உள்ள தட்சணாமூர்த்தி கையில் இருப்பது மிருதங்கம் எனக்கருதி, இந்த தட்சணாமூர்த்தியை ‘மிருதங்க தட்சணாமூர்த்தி’ என்றே அழைக்கின்றனர். அதன் வலந்தலையும் தொப்பியும் குறுகியும், நடுப்பகுதி உப்பியும் மிருதங்கம் போல்தானே தெரிகிறது!
கழுகுமலை சிற்பங்களை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று சொல்கிறது. மராட்டியரின் வருகைக்கு பின் மிருதங்கம் வந்திருப்பின் வெட்டுவான் கோயில் மராட்டியர் கட்டியதாகுமா? அது சிரிப்புக்கு இடமாகாதா? எனவே, தட்சணாமூர்த்தி கையிலிருப்பது நந்திக்கு கற்றுக் கொடுத்த முழவா? என்ற கேள்வி எழுகின்றது.
Photo: source varalaaru.com
குடந்தை (கும்பகோணம்) சாரங்கபாணி கோயில் கோபுரவாசல் சிற்பத்திலுள்ள தாளஇசைக் கருவி வார்கொண்டு கட்டப்பட்டதாகக் காணப்படுகிறது. அதன் பெயர் என்ன? அது மண்ணார் முழவெனில், பண்டைய முழவின் வளர்ச்சி நிலையே இன்றைய மிருதங்கம் என்றால் என்ன? நம் மூதாதையரிடம் இருந்தவற்றை பிறர் தந்தார்கள் என்று சொல்வதில் நாம் ஏன் மகிழ்ச்சி அடைகிறோம்? மிருதங்கத்தை மராட்டியர் தந்தனர் என்பதற்கு கல்வெட்டு ஆதாரம் ஏதாவது இருக்கிறதா?
மண்ணார் முழவு, மிருதங்கம் ஆனதா? என்பதற்கு இங்கு சில ஆதாரங்களை முன்வைத்தேன். முதலாவது இரண்டின் பெயர்களுக்கும் மண் என்னும் சொல்லடியால் பிறந்துள்ளது. இரண்டாவது இரண்டும் விரல்கொண்டு கைகளால் வாசிக்கப்படுவது. மூன்றாவது இரண்டிலும் மார்ச்சனை உண்டு. நான்காவது இரண்டின் மார்ச்சனையும் மண்ணால் ஆனது. ஐந்தாவது இரண்டிலும் எட்டுச்சோடி கண்கள் உண்டு. ஆறாவது, சுருதி கூட்டும் பொழுது இரண்டும் இடப்பக்கம் பஞ்சம சுருதியிலும், வலப்பக்கம் சட்சம சுருதியிலும் இருக்கவேண்டும் என்பது பொது விதி. ஏழாவது இரண்டின் வலந்தலையையும் இடந்தலையையும் இணைக்க வார் கொண்டு கட்டுகிறார்கள்.
இவை யாவற்றுக்கும் மேலாக சங்ககாலத்தில் இருந்து மண்ணார் முழவு தமிழரின் இசைக்கருவியாக இருந்திருக்கிறது. அவை கூறும் செய்திகளுக்கும் மிருதங்கத்திற்கும் அதிக வேறுபாடு இல்லை. அதுபோல் மராட்டியர் வருகைக்கு முன் கட்டப்பட்ட கோயில் சிற்பங்கள் காட்டும் தாள இசைக் கருவிகள் மிருதங்கத்தைப் போல் இருப்பதும் மண்ணார் முழவே (தண்ணுமை), மிருதங்கம் எனக் காட்டவில்லையா? இல்லையாயின், மிருதங்கத்தின் உண்மையான வரலாற்றை எவராவது ஆதாரங்களுடன் தாருங்கள்.
இனிதே,
தமிழரசி.
porul serindha arivaarndha katturai.... mirudanga kalingargal arindhirukka vaaippugal kuraivu. mannal seidha ghatam patri aaraaya pugundha podhu, ikkatturai migundha bramippai koduththathu. iththunai aadharangal gadaththukku kidaikkaperuvadhillai.
ReplyDeletevaazhthukal
மகிழ்ச்சி.
Delete