Saturday, 16 March 2013

சொல்லு மந்திரம் ஏதடா!

பக்திச்சிமிழ் - 49
இன்றைய தமிழர்களில் பெரும்பாலானோர் மந்திரம் என்பது வடமொழிச் சொல் என்றும், மந்திரதை பிராமணர்களே சொல்லவேண்டும் என்றும் நினைக்கின்றனர். நம்மவர்கள் அப்படிநினைக்கக் காரணம் என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. வடவர் இந்தியாவிற்குள் வருவதற்கு முன்பிருந்தே தமிழர் மந்திரம் என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கின்றனர். மந்திரத்தை பண்டைய தமிழர் மறைமொழி எனவும் அழைத்தனர். அதனை தொல்காப்பியம் எடுத்துக்காட்டுகிறது. 
“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப”                    -  (தொல்: 1484)
இதில் பாருங்கள் தொல்காப்பியர் ‘மறைமொழி தானே மந்திரம் என்ப’ என முடித்து மறைமொழியைத் தான் மந்திரம் என்று சொன்னார்கள் என்பதை ‘என்ப’ என்ற சொல்லால் சுட்டுகிறார். அதாவது அவருக்கு முன் வாழ்ந்த பண்டைய தமிழர்கள் மறைமொழியை மந்திரம் என்று சொன்னார்கள் என்கிறார். 

மறைமொழி என்றால் என்ன? இந்த மறைமொழிக்கும் வேதங்களுக்கும் அதாவது மறைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை மிகத்திருத்தமாக
“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டிவிடும்”                                - (குறள்: 28)
எனும் திருக்குறள் சொல்கிறது. மறைமொழிக்கு ஒரு சக்தி உண்டு. அந்தச்சக்தி, ஒரு விளைவை ஏற்படுத்தும் என்பதை இக்குறளின் ‘மறைமொழி காட்டிவிடும்’ எனும் தொடர் குறிக்கிறது. ஒரு விளைவை உண்டாக்கும் வாய்மொழியை, மறைமொழி என்றும் மந்திரம் என்றும் பண்டைத்தமிழர் அழைத்தனர் என்பதை நாம் அறியலாம்.

தொல்காப்பியரும் திருவள்ளுவரும் நிறைமொழி மாந்தர் என மனிதரில் சிலரைச் சொல்கிறார்களே அந்த நிறைமொழி மாந்தர் யாவர்? மனிதருக்கு நிறைவைத் தருவது எது? பொருளும் போகமும் கல்வியும் எப்போதும் மனிதனுக்கு நிறைவைத் தரமாட்டா. எந்த மனிதனுக்கும் நிறைவைத் தருவது மனநிறைவே ஆகும். மனநிறைவு உள்ளவரின் மனம் அழுக்கற்று சுத்தமாக இருக்கும். அத்தகையோரே  நிறைமொழி மாந்தராவர். அதனால்
“மனமது சுத்தமானால் மந்திரம் செய்யத் தேவையில்லை”
என்ற பழமொழியும் தமிழில் தோன்றியது. அப்படிபட்டோர் சொல்லும் சொல்லே மந்திரம் ஆக மாறிவிடும் என்றால் அவர்கள் ஏன் மந்திரம் சொல்லவேண்டும்? 

தமிழில் மந்திரம் என்ற சொல் மன் + திரம் = மந்திரம் எனப்புணரும். மன் என்பது மேன்மை, மிகுதி என்பவற்றையும் திரம் என்பது உரம், உறுதி, சக்தி என்பவற்றையும் குறிக்கும். ஆதலால் தமிழில் மந்திரம் - மிகுந்தசக்தி உடையது என்ற கருத்தில் சொல்லப்படுகின்றது. அதுவும் நிறைமொழி மாந்தர் ஒரு சொல் சொன்னால் மட்டுமல்ல நினைத்தாலும் கூட மந்திரம் அதன் விளைவை ஏற்படுத்தும். தமிழர் கூறிய மந்திரத்தில் ஆணை இடுபவருக்கு, மந்திரசக்தி கட்டுப்பட்டு நடக்கும். 

ஆனால் வடமொழி ‘மந்த்ரம்’ அப்படிப்பட்டது அல்ல. அது நினைப்பவனைக் காப்பது என்ற கருத்தில் வருவது. தண்ணீரை சூடாக்கி வெந்நீர் ஆக்குவது போல மந்த்ர ஒலிகளால் உருவேற்றுவது. அப்படி உருவேறிய மந்த்ரஒலி(அலை) சொல்வோரயும் கேட்போரையும் கட்டுப்படுத்தும். வெந்நீர் எம்மைச் சுடுவது போல, மின்சாரம் எம்மைத்தாக்குவது போல மந்திரஒலியலை எம்மைத்தாக்கும். சொல்லும் ஒலி வேறுபட்டால் கும்பகர்ணன் நித்தியவரம் வாங்கப்போய் நித்திராவரம் வாங்கிய கதையாயும் முடியும்.

அதனாலேயே பாரதியார் 
"மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை
          வரிசையாக அடுக்கி அதன்மேல்
சந்தனத்தை மலரை இடுவோர்
          சாத்திரம் இவள் பூசனை அன்றாம்"
எனப்பாடினார். மனச்சுத்தத்தோடு செய்யும் பூசையே சிறந்த பூசனையாகும். எனவே எந்த மந்திரம் எமக்குச் சிறந்தது என்பதை நாம் கொஞ்சம் சிந்தித்துப்பார்த்து, தமிழராய் எம்தமிழ் மூதாதையர் சொன்ன நிறைமொழி மாந்தராக வாழ முயற்சிப்பது நன்று.

நாம் செய்யும் பூசையையும், பிராமணரைக் கொண்டு நாம் செய்விக்கும் பூசையையும் பார்த்து “நம் மனதினுள் இருக்கும் நாதனை உணராமல் கல்லை நட்டு மந்திரம் சொல்வது,  சமைத்த கறிச்சுவையை சட்டியும் அகப்பையும் [சட்டுவம்] அறிந்து கொள்வைதைப் போன்றது என்பதை உணர்த்த, சித்தரான சிவவாக்கியர் எதிர்மறையாகக் கேள்வி எழுப்புகிறார்.
“நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பஞ் சாத்தியே
சுற்றி வந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா!

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!”
இனிதே,
தமிழரசி.
[1989ல் எழுதியது]

11 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Nirai mozhi maandhar means realized sages who speak from the deepest levels of awareness. This depth is achieved through tapasya / tavam. Sivavaakkiyar in his "nattakkallai naalu putpam saathiye..karicchuvai ariyumo?" Even if God stands in front of you if you lack awareness / consciousness (like the suttasatti sattuvam) you will not experience anything. This paadal of Sivavaakkiyar was meant to inspire people to cultivate inner awareness. Aryan invasion theory has been debunked. It was a British divide and rule scheme. Read the Mahabharata which mentions that the Chola and Pandya kings fought on the side of the Pandavas. Malayadhvaja Pandya The Father of Devi Meenaakshi fought for Pandavas at Kurukshetra. Meenakshi's marriage to Sundareshvarar was solemnized by Krishna. Maraimozhi refers to Paravani as described in the Bhartrihari of Vaakyapadiyam and many other works. Agatthiyar Himself the Guru of Tholkappiyar came down south of Kailasa which is in the north of Nepal. Thennadudaya Sivan is from the North. Please don't read a narrow Dravidian political narrative into Everything Tamizh.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி. நன்றாக எழுதி இருக்கிறீர்கள். மேலே எந்த ஒர் இடத்திலும் ஆரியர் என்றோ திராவிடர் என்றோ எழுதவில்லை என்பதை அறியத்தருகிறேன்.

      Delete
    2. Sivavakiyar him self do joke about aariyan everything is tamil how u said sivan from north in rig vetha said sivalingam is (sisunathevan)means dick in rig vedham they just disrespect sivan

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  3. வணங்குகிறேன். மேற்படி பதிவை முகநூலில் பகிர்வதற்குத் தங்களின் அனுமதியை நாடுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. நான் முன்னர் முகநூலில் பகிர்ந்திருக்கிறேன். பகிர்வதானால் மாற்றங்கள் ஏதும் செய்யாது பகிரவும்.

      Delete
  4. மிக்க நன்றி, மாற்றம் எதுவும் செய்யமாட்டேன் என உறுதியளிக்கிறேன். மேற்படி பதிவின் இணைய உரலியுடன்தான் பகிர்கிறேன். முகநூல் உரலி இருந்தால் தயவு செய்து பகிருங்கள். மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முகநூலில் உறவுகளுடன் பகிர்வது.

      Delete
    2. மாற்றங்கள் செய்யாது பகிரச்சொன்னதன் காரணத்தை
      https://inithal.blogspot.com/2019/01/blog-post_12.html
      பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

      Delete