Wednesday, 20 February 2013

மனைவி என்னும் அருளமுதம் - 1



இன்றைய கர்நாடக சங்கீத இசைமேதைகளால் ‘சங்கீத பிதாமகர்’ [கர்நாடக இசையின் தந்தை]  எனப் புகழப்படுபவர் புரந்தரதாசர்.  இவர் 15ம் நூற்றாண்டில் இந்தியாவின் கன்னட மாநிலத்தில் இருந்த புரந்தடகட எனும் ஊரில் வாழ்ந்தவர். இவரது தந்தை ஒரு வைரவியாபாரி. தந்தையின் தொழிலையே இவர் தொடர்ந்து நடாத்தி வந்தார். புரந்தரதாசர் செல்வத்தை மேலும் மேலும் சேர்த்ததால் ‘நவகோடி நாராயணன்’ என்ற பெயரும் பெற்றார். அவர் கோடீஸ்வரராய் இருந்தும் நகையடகு வியாபாரத்தில் சிறிதும் இரக்கம் இன்றி அதிகவட்டி வசூலித்து வந்தார். மகாகஞ்சன். 
இவரின் இக்குணக்கேடுகளைக் கண்ட அவரது மனைவி சரஸ்வதிபாய் மனம் நொந்து அழுதாள். சொல்லியும் பார்த்தாள். அவர் திருந்தவே இல்லை. பணம் பண்ணுவதே அவரின் குறிக்கோளாக இருந்தது. இதனால் அவள் அவ்வூர்க் கோயிலில் இருக்கும் பண்டரிநாதரே சரண் என வணங்கி வந்தாள். 

பிராமணர் ஒருவர் புரந்தரதாசரின் நகைக்கடைக்கு வந்து, மகனின் உபநயனத்திற்குக் காசு கேட்டார். அப்பிராமணரை “நாளைக்கு வா காசு தாரன்” எனக்கூறி பல நாட்கள் ஏமாற்றிவந்தார். அந்தப் பிராமணர் கடைசியில் புரந்தரதாசர் வீட்டிற்குச் சென்று அவரது மனைவி சரஸ்வதிபாயிடம் காசு கேட்டார். அவள் தன் மூக்குத்தியைக் கழற்றிக் கொடுத்தாள். அப்பிராமணர் அவ்வைரமூக்குத்தியை விற்பதற்கு புரந்தரதாசரிடமே சென்றார். அம்மூக்குத்தியை அடையாளம் கண்ட புரந்தரதாசர், பிராமணரை ஓர் அறையில் வைத்து பூட்டிவிட்டு தன் வீட்டிற்குச் சென்று மனைவியிடம் “மூக்குத்தி எங்கே?” எனக்கேட்டார்.

அவர் கோபத்துடன் நிற்கும் நிலையைக் கண்டு பயந்த சரஸ்வதிபாய், விசத்தை எடுத்துக் குடிக்கப்போனாள். விசக்கோப்பையுள் மூக்குத்தி பளிச்சிட்டது. அவள் அம்மூக்குத்தியை எடுத்து புரந்தரதாசரிடம் கொடுத்தாள். அவர் திகைத்தார். “எப்படி இது வந்தது?” என்றார். “பண்டரிமநாதர் அருள்” என்றாள் அந்த அருள்மாது. சிறிது நேரத்தில் அம்மூக்குத்தியும் மறைந்தது. பூட்டிவைத்திருந்த பிராமணரைச் சென்று பார்த்தார். அப்பிராமணரும் மறைந்தார்.

இதனால் ‘பணம் பெருக்குவது வாழ்க்கை இல்லை’ என்னும் அறிவுத்தெளிவு பெற்ற புரந்தரதாசர், தன் மனைவி ஓர் அருளமுதம் என்பதை நன்கு உணர்ந்தார். மனைவியின் எண்ணப்படி தனது செல்வத்தை எல்லாம் எழை எளியவர்க்கு கொடுத்து மகிழ்ந்தார். அவர் நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட கன்னட மொழிப்பாடல்களை இயற்றியுளார். அவர் இயற்றிய இராகமாலிகையில் அமைந்த ‘அனுகாலவு சிந்தெ’ என்னும் பாடலின் முதலாவது சரணத்தில்

“ஸதி இத்தகு சிந்தெ ஸதி யில்லது சிந்தெ
மதிஹீன ஸதியாதரு சிந்தெயு
பிருதிவி யொளகெ ஸ்திகடு செல்வெ யாதரெ
மதிமேரெ இல்லித மோஹத சிந்தெ”   

என ‘மனைவி இருந்தாலும் யோசனை. இல்லாவிடினும் யோசனை. மனைவி புத்தி ஈனமானவளானாலும் யோசனை. மனைவி உலகின் மிகப்பெரிய அழகியாக இருந்தாலும் அளவில்லாத யோசனை, எனக்கூறி எப்பொழுதும் மனிதனுக்கு யோசனை தான். ஶ்ரீரங்கநாதருடன் சேரும்வரையும் யோசனை தான். என்று மிக அழகாக மனித வாழ்க்கையை சித்தரிக்கிறார்.

ஒரு மாபெரும் இசைக்கலைஞரை - இன்றைய இசைஉலகின் தந்தையை உலகுக்கு உவந்தளித்த பெருமை புரந்தரதாசரின் ‘மனையெனும் அருளமுதமாம்’ சரஸ்வதிபாயையே சாரும்.

No comments:

Post a Comment