மனித மனங்களை தன்பால் ஈர்த்துக்கொள்ளும் தன்மை அழகுக்கு உண்டு. அத்தகைய அழகின் மொத்த வடிவமே மன்மதன் என்பார்கள். அவனை சங்க இலக்கியங்க்அள் காமன், வில்லவன், ஐங்கணைக்கிழவன், கரும்பு வில்லி எனப்பல பெயர்களால் அழைக்க எமது சைவசமய நாயன்மார் ஐங்கணையோன் என்றும் அழைக்கின்றனர். ஏன் மன்மதனுக்கு ஐங்கணையோன் என்று பெயர்? மன்மதனே காதலுக்கு கடவுள். அவன் தாமரை, மாம்பூ, அசோகம், முல்லை, குவளை ஆகிய ஐந்து விதமான மலர் அம்புகளை வைத்திருக்கின்றான். அவற்றை கரும்பு வில்லில் பூட்டி எய்தே காதலை தூண்டுவான் என்பர்.
தேவர்கள் மன்மதனை வேண்டிக்கேட்டதால் தவத்தில் இருந்த சிவனுக்கு பார்வதி மேல் காதலை உண்டாக்க அம்பெய்தான். அதனால் கோபம் அடைந்த சிவன் தனது நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்து நீறாக்கினார் என்று சமயநூல்கள் சொல்கின்றன. சிவன் மன்மதனை எரித்த நிகழ்வை திருநாவுக்கரசு நாயனார்
“கண்ணெரியால் ஐங்களையோன் உடல்
காய்ந்தான் காண்” - (பன்.திருமுறை: 6: 24: 8)
என ஆறாம்திருமுறைத் தேவாரத்தில் சொல்கிறார்.
இந்த மன்மதன் யார்? அவன் திருமாலின் மகன். அதுவும் திருமாலின் காதல் மைந்தன். திருமால் எடுத்த பத்து அவதாரங்களில் ஒன்று கண்ணன் அவதாரம். திருமால், கண்ணன் அவதாரத்தில் கொட்டும் மழையில் இருந்து மக்களைக் காக்க, கோவர்த்தன கிரியை (மலையை) குடையாகத் தூக்கிப் பிடித்தார். அப்படி மலையை குடையாக எடுத்த வீரம் மிக்க திருமாலின் கண்ணைக் கவர்கின்ற காதல் மகனான ஐங்கணையோனின் உடலை தீப்பொறியால் எரித்தவர் சிவன்.
“கறிவளர் குன்றம் எடுதவன் காதல்
கண்கவர் ஐங்கணையோன் உடலம்
பொறிவளர் ஆர் அழல் உண்ணப்
பொங்கிய பூதபுராணர்” - (பன்.திருமுறை: 1: 39: 6)
என்று திருஞானசம்பந்தர் முதலாம் திருமுறையில் கூறுகிறார். மேலே கிளி வாகனத்தில் இருக்கும் மன்மதனின் சிற்பம் குடுமியாமலையில் உள்ளது.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment