Wednesday, 9 January 2013

செங்கடகல, கண்டி என்பன தமிழ்ப்பெயர்களே!

கண்டி மலர்[உத்திராட்சைப்பூ]

செங்கடம்பு மலை என்ற கருத்தில் செங்கடங்கல் என்று எம் முன்னோர்களால் அழைக்கப்பட்ட இடம் இன்று ஏன் கண்டி என்று அழைக்ப்படுகிறது? அதன் காரணத்தை புங்குடுத்திவில் கோட்டைகட்டி வாழ்ந்த இளவரசி வீரமாதேவி  தன் சுயசரிதையில் தந்துள்ளாள். அவள் என்ன சொன்னாள் என்பதைப் பார்க்க முன்னர் கண்டி என்றால் என்ன? இலங்கையின் மலைநாட்டில் உள்ள ஓர் ஊர் மட்டுமா? வேறு எவற்றை ஏனும் அது குறிக்கிறதா? 

கண்டி’ என்றால் ‘அக்குமணி'. பெரும்பாலும் பண்டையதமிழ்ச் சொற்கள் காரணப்பெயருடன் இருக்கும். அக்கு என்றால் முள். அக்கு + மணி = அக்குமணி. அதாவது முள்மணி (முண்மணி) என்ற காரணப்பெயரைத் தாங்கி நிற்கிறது. அக்கு என்னும் சொல் ஈழத்து வன்னிமக்கள் பன்னெடுங்காலமாக பயன்படுத்தி வரும் பழந்தமிழ் சொல்லாகும். வன்னி மண்ணில் செந்நெல்லும் காய்கனியும் விளைந்தன. காட்டு வாழ் விலங்குகளும் அவற்றை உண்டு பசியாற அங்கே படை எடுக்கும். அவற்றில் பன்றியும் யானையும் செய்த, செய்கின்ற அட்டூழியம் சொல்லமுடியாது. 

கொடிய காட்டுவிலங்குகளிடம் இருந்து தம்மையும் தமது பயிர்களையும் காக்க வேண்டிய நிலையில் பண்டைய தமிழர் இருந்தனர். பனங்கூடலையும், வடலிகளையும், பெரிய முள் மரங்களையும் ஊடறுத்து யானை போன்ற விலங்குகள் வருவதில்லை. வடலியின் கருக்கும், முள் மரங்களின் முட்களும் விலங்குகளின் உடலை பதம் பார்த்தன என்பதை அவர்கள் தமது அனுபவத்தால் அறிந்தனர். ஊரைச் சுற்றியும், காட்டு ஓரக்காணிகளின் வேலியிலும் பனங்கொட்டைகளைப் போட்டு வளர்த்தனர். 


பனங்கொட்டை வளர்ந்து வடலியாக எத்தனை வருடமாகும்? அதுவரை பயிர் செய்ய வேண்டாமா? எனவே தாம் பயிரிடும் காணிகளின் வேலிகளைச் சூழ முள்மரங்களை வெட்டி போட்டு வேலி அடைத்தனர். அந்த முள்மர வேலிகள் ‘அக்குவேலிகள்’ என அழைக்கப்பட்டன. அக்குவேலிகள் நாலு ஐந்து அடி அகலமாகவும், மிக உயரமாகவும் அரண்போல இருக்கும். விலங்குகளைப் பிடிக்க இடையிடையே இடைவெளிவிட்டு பொறிகளும் வைத்திருப்பர். பண்டைத்தமிழர் காலந்தொட்டு தமிழரையும் அவர்களது பயிர்களையும் விலங்குகளிடம் இருந்து அக்குவேலிகள் காத்துவந்திருக்கின்றன. அவர்கள் இன்றைய மனிதர் போல் வேலிகளில் மின்சாரத்தைப் பாச்சி மிருகங்களையும் பறவைகளையும் கொல்லவில்லை. முள்ளை அக்கு என்பார்கள் என்பதற்கு ஈழத்து வன்னி மக்கள் இன்றும் போடும் அக்குவேலிகளே சாட்சி.

“கொக்கிறகர் குளிர்மதிச் சென்னியர்
மிக்க ரக்கர் புரமெரி செய்தவர்
அக்கரையினர் அன்பிலாத்துறை
நக்குருவம் நம்மை அறிவரே”          - (பன்.திருமுறை: 5:  : :5)
என்பது திருநாவுக்கரசர் தேவாரம். இத்தேவாரம் சிவன், மிக்கரக்கர் - கொடிய அரக்கரது முப்புரங்களை எரித்தவர், அக்கரையினர் - அக்கு ஆகிய முள்மணியை அரையில் அணிந்தவர் என்கிறது. மணி என்றால் கரடுமுரடு இல்லாது வழுவழுப்பாக இருக்கவேண்டும். ஆனால் இதுவோ அக்குமணி. அதுவே உத்திராட்சை. 

சிவவாக்கியரும் சிவனை 
அக்கு அணிந்து கொன்றைசூடி அம்பலத்தில் ஆடுவார்”
என்றார்.

தமிழராகிய நாம் ஆங்கிலேயர் ஆட்சியால் தமிழை மறந்து ஆங்கில சொற்களுக்கு அடிமையானது போல வடமொழியாளர் ஆட்சியின் போது அக்குமணிக்கு பண்டைத்தமிழர் சொன்ன கண்மணி, கண்டம், கண்டி, கண்டிகை போன்ற பல தமிழ்ப் பெயர்களை மறந்து வடமொழிச் சொல்லாகிய உத்திராட்சை என்ற சொல்லுக்கு அடிமையாய் உள்ளோம். 

இளங்கோ அடிகளும் சிலப்பதிகரத்தின் கடலாடுகாதையில்
“காமர் கண்டிகை தன்னோடு பின்னிய
தூமணி தோள்வளை தோளுக்கு அணிந்து”
என முள்மணியாகிய கண்டிகையை மற்றைய மணிகளோடு சேர்த்து பின்னிச் தோள்வளையாகச் செய்து தோளுக்கு அணிந்ததை கூறியுள்ளார். 

இன்று போல உத்திராட்சங்காய்க்கு தெய்வீகத் தன்மை அன்று கொடுக்கப்படவில்லை என்பதை இந்தவரிகள் எடுத்துக் காட்டுகின்றன. அன்றைய தமிழ்ப் பெண்கள் மணிகளோடு மணிகளாகக் கோர்க்கும் காயாகவே உத்திராட்சை இருந்திருக்கிறது. உத்திராட்சை தமிழகத்திலும் இலங்கையிலும் இன்றும் வளர்கிறது. அந்த உண்மை நம்மில் பலருக்கு தெரியாது. 


 “வண்டு வளாய வளர்வாசிகை சூட்டிக்
கண்டி கழுத்திற் கவின் சேர்த்தி”               
                               - (திருக்கைலாய ஞான உலா)
என சிவனின் கழுத்திற்கு கண்டி அழகு சேர்க்கிறது என திருக்கைலாய ஞான உலாசொல்கிறது.

ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த திருநாவுக்கரசரும் நான்காம் திருமுறையில் சிவனின் கழுத்தில் கண்டி (முள்மணி) இருப்பதை
கண்டியிற் பட்ட கழுத்துடையீர்”   - (பன்.திருமுறை: 4: 95: 6)
என்கிறார்.

இளங்கோவடிகள், சேரமான் பெருமாள் நாயனார், திருநாவுக்கரசு நாயனார் காலத்தில் மட்டுமல்ல 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் காலத்திலும் உருத்திராட்சை என்ற சொல் தமிழரிடம்  பெரும் செல்வாக்கை பெறவில்லை. ஏனெனில் வடமொழிச் சொற்களை தனது திருப்புகழில் அள்ளி இறைத்த அருணகிரிநாதரே உத்திராட்சை என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.
“தலை எலும்பு அப்பு கொக்கின் இறகு அக்கம்”            
                                                              - (திருப்புகழ் - 475)

"கிரண குறைப்பிறை அறுகு அக்கு இதழ்மலர் கொக்கிறகோடே
படர்சடையில் புனை நடனப்பரமர் தமக்கு ஒரு பாலா”   
                                                              - (திருப்புகழ் - 172) 
என அக்குமணியை அக்கம், அக்கு என்றே சொல்கிறார்.

அவரே இன்னொரு திருப்புகழில் 
கண்டியூர் வருசாமி கடம்பணி மணிமார்பா!”              
                                                               -(திருப்புகழ் - 1002)
என்று கண்டியையும் கடம்பையும் ஒன்றாகத் தந்துள்ளார்.

கண்டியூர், கண்டியன்காடு, கண்டியன்பட்டு, கண்டியனூர்பட்டி என்பன பண்டைநாள் தொட்டு இன்றுவரை தமிழகத்தில் இருக்கும் ஊர்களாகும். அகழ்வு ஆய்வின் போது செம்பியன் கண்டியூரில் பண்டைய எழுத்துப் பொறித்த கற்கோடாலி ஒன்று கிடைத்திருக்கிறது. அந்தக் கற்கோடாலி பாவித்த காலத்தில் கூட, தமிழன் எழுத்தறிவுடன் வாழ்ந்ததை அது சொல்கிறது. கண்டியூர் என்ற பெயர் பின்னர் வந்திருக்கும். ஆனால் பண்டைய தமிழன் வாழ்ந்த இடம் அது என்பதை அக்கற்கோடாலி காட்டுகிறது அல்லவா!

                                                             அக்குமணி[உத்திராட்சை]

மூன்று வயதாகியும் பேச்சு தடுமாறும் குழந்தைகளுக்கு அக்குமணிப் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) உண்ணக் கொடுக்க, பேச்சுவரும் என்கிறது சித்தமருத்துவம். தமிழர் மூலிகைப் பொருளாக அக்குமணியை பாவித்தனர் என்பதை சித்தமருத்துவ நூல்கள் காட்டுகின்றன. இசையோடு இசைந்து வாழ்ந்த தமிழர் அணிகலனுக்கும், மருத்துவத்துக்கும் மட்டுமல்ல இசைக் கருவியை இசைக்கவும் கண்டியை பயன்படுத்தி இருக்கிறார்கள். சங்கப் புலவர்களில் வரலாற்று ஆசிரியர்கள் போல தமிழர் வரலாற்றை தரும் பரணர் 
“மன்றம் படர்ந்து மறுகு சிறைப் புக்குக்
கண்டி நுண்கோல் கொண்டு களம் வாழ்தும் 
அகவலன் பெறுக மாவே”                                   
                                                     - (பதிற்றுப்பத்து: 43: 26 - 28)
என பதிற்றுப்பத்தில் தந்துள்ளார். 

‘ஊரின் மன்றத்துக்குப் போய், பாடுதற்குரிய  பெருமைகளை உடையவர் யார் யார் என்பதை அறிந்து, தெருத்தெருவாகச் சென்று, கண்டி நுண்கோல் கொண்டு பறை அறைந்து, களத்தில் நடப்பதை வாழ்த்திப்பாடும் அகவலன் குதிரைகளைப் பெறட்டும்‘ என்று செங்குட்டுவன் கொடுப்பதாகக் பரணர் கூறியுள்ளார். அகவல் பாடல்களைப் பாடுபவன் அகவலன். குறுந்தொகையில் 

“அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே!
இன்னும் பாடுக பாட்டே!
அவர் நன்னெடுங்குன்றம் பாடிய பாட்டே!”          
                                                          - (குறுந்தொகை: 23)
என ஔவையாரும் அகவன் மகளைப் பாட்டுப் பாடும் படி கேட்பதால், அகவலன் பாடுபவனே என்பது பெறப்படும்.

பரணர் சொல்லும்  கண்டி நுண்கோல்என்பது என்ன? மிக மெல்லிய உறுதியான தடியே நுண்கோல். கண்டியை (உருத்திராட்சங்காய்) நுண்கோலுடன் பொருத்தி பறை அறையப் பயன்படுத்தியுள்ளனர். இந்த நுண்கோல் பார்ப்பதற்கு எப்படி இருக்குமென்பதை கோவூர்க்கிழார் என்னும் புலவர் 
“கயத்துவாழ் யாமை காழ் கோத்தன்ன
நுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணை”       
                                                          - (புறம்: 70: 2 - 3)
என்று கூறி, குளத்தில் வாழும் ஆமையை அம்பில் குத்தியது போல் நுண்கோல் இருந்தது எனக் காட்டுகிறார். 


Photo: source: esseymusical.co.uk      (கண்டி நுண்கோல்)










கண்டி நுண்கோல் கொண்டு களம் வாழ்த்தி பாடியும் ஆடியும் திரிந்தோரே கண்டியர். களம் வாழ்த்துவது என்பது போர்க்களத்தின் பெருமையை, வீரத்தை வாழ்த்திப் பாடுதலாகும். வீரமாதேவி தன் கணவன் நரசிம்மன் [1311 ஆம் ஆண்டு] கண்டியரை அதாவது சிங்களக் கூத்தரை மல்லத்திலிருந்து செங்கடங்கல்லுக்கு கொண்டு வந்து அங்கு குடிவைத்தான் என்கின்றாள். அக்காலத்தில் தமிழகத்தில் இருந்த மல்லம் இப்போது ஆந்திராவுக்குள் இருக்கிறது. இந்த நரசிம்மனே புங்குடுத்தீவில் வாழ்ந்த சாக்கைக்கூத்தரை கம்போடியாவுக்கு கொண்டு சென்றவன். செங்கடங்கல், கண்டி என்பன தமிழ்ப்பெயர்களே.

பண்டைத் தமிழரின் ஆடற்கூத்துகளில் சாந்திக்கூத்து என்பது ஒருவகை. அது சொக்கம், மெய், அவிநயம், நாடகம் என நான்கு பிரிவாகும். அதனை
“சாந்திக் கூத்தே தலைவனின் இன்பம்
ஏந்தி நின்றாடிய ஈரிரு நடமவை
சொக்கம் மெய்யே அவிநய நாடகம்
என்றிப் பாற்படூஉம் என்மனார் புலவர்”
என்று தனிப்பாடல் ஒன்று சொல்கிறது. சாந்திக்கூத்தின் ஒரு பிரிவான மெய்க்கூத்து தேசி, வடுகு, சிங்களம் என மூன்று வகையாகும். இந்த மெய்க்கூத்துப்பற்றிக் கூறும் அறிவனார் எழுதிய ‘பஞ்ச மரபு’ என்னும் நூல் தேசி, வடுகு, சிங்களம் ஆகிய மூன்று மெய்க்கூத்துக்களின் கால் தொழில் பற்றியும் சொல்கிறது. 

மேற்குலக நாடுகளின் இராணுவத்தில் வாசிக்கப்படும் Bass Drums, கண்டி நுண்கோல் போன்ற drums stick பாவித்தே வாசிக்கப்படுகிறது. அதுவும் நாம் கொடுத்த கொடையாக இருக்கலாம். கிணை, முழவு போன்ற வாத்தியங்கள் கண்டி நுண்கோலால் வாசிக்கப்பட்டன. 

இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment