மடியிருத்தி காண்பதெப்போ!
இலங்கை வரலாற்றைப்பற்றி இருக்கு வேதத்திலும் பேசப்பட்ட ஓரிடம் புலத்தியநகர். அதனை நாம் இன்று பொலநறுவை என அழைக்கின்றோம். இருக்கு வேதகாலத்திற்கு முன்பே நாகரீகச் செழுமை உடையவர்களாக தமிழர் அங்கு வாழ்ந்ததை இருக்கு வேதம் எமக்கு அறியத்தருகின்றது. பன்னெடுங் காலமாக மனிதநாகரீகத்தில் பண்பட்ட இடத்தில் வாழ்ந்த ஒர் இளைஞன் தன் மச்சாளின் அழகைக் கூறி ஏங்கும் நாட்டுப்பாடலே இது.
ஆண்: முத்து முத்தாப் பல்லழகு
முல்லை போல சிரிக்கயில
சொக்கத் தங்க நிறத்தழகு
சொக்கி என்ன இழுக்குதல்லோ!
மை எழுது கண்ணழகு
மயக்கி என்ன அழைக்கயில
பையப் பைய நடையழகு
பாக்க மனம் ஏங்குதல்லோ!
கத்தும் குயில் குரலழகு
காதோரம் கேக்கயில
நித்திரையில் உன் அழகே
நினைவாக நீளுதல்லோ!
பூச்சூடும் பின்னல் ஆடயில
பின்னி மனம் கிரங்குதல்லோ
மச்சாளே! மயக்குமுன் அழகெலாம்
மடியிருத்தி காண்பதெப்போ!
- நாட்டுப்பாடல் (பொலனறுவை)
(பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
எஸ் ஏ ராஜ்குமார் இசையில் ஹரிஹரன் பாடிய கண்ணுபடப் போகுதையா படப்பாடலும் இந்நாட்டுப் பாடலைப் போல, காதலியின் அழகை எடுத்துக் கூறும். அப்பாடலில் இருந்து சில வரிகள்.
"மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பொட்டழகு
பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச நெல்லுமணிப் பல்லலகு
- மூக்குத்தி முத்தழகு
பத்துவிரல் பூவழகு பாதம் தங்கத் தேரழகு
வானம் விட்டு மண்ணில் வந்தாள் நிலவல்ல பெண்ணழகு
மருதாணிக் கொடிபோல மவுசாக அவ நெரமா
ஆஹா என்ன நடையோ ஆஹா அன்ன நடையோ
மழை பெஞ்ச தரை போல பதமாக நானிருப்பேன்
ஆஹா என்ன அழகோ ஆஹா வண்ண மயிலோ
வலை வீசும் கண்ணழகு வளைந்தாடும் இடையழகு
கருநாகக் குழல் அழகு கற்கண்டு குரல் அழகு ....
- மூக்குத்தி முத்தழகு "
No comments:
Post a Comment