Thursday, 20 September 2012

வளைத்தெடுக்க மாட்டேனா!

ஆசைக்கவிதைகள் - 43

ஓர் ஊரின், அல்லது ஒரு நாட்டின் எல்லையில் உள்ள காட்டை கண்டங்காடு என்று அழைப்பர். கண்டம் என்பது எல்லை, முடிவு என்ற கருத்தையும் தரும். அதனை காவற்காடு என்றும் கூறுவர். காவற்காடு அந்த ஊரின் அரணாக இருக்கும். அரசர்கள் ஆண்ட காலத்தில் பகைவரும், காட்டு விலங்குகளும் ஊருக்குள் நுழைந்து தீங்கு செய்யாதிருக்க, கண்டங்காட்டை பலம்பொருந்திய வீரர்கள் காவல் செய்வர். 

அப்படிப்பட்ட பெருவீரன் ஒருவன் கண்டங்காட்டை காவல் செய்தான். அவனைத் திருமணம் செய்ய இருக்கும் கன்னிப்பெண், அவன் மேலாடை இன்றி காவல் செய்வதைக்கண்டாள். அவனது கட்டான உடலை மற்றவர் பார்த்து, கண்பட்டு அவனுக்கு ஏதாவது நடந்திடக்கூடாது என்ற காரணத்தால் மேலாடையால் உடலை மூடச்சொல்கிறாள். தான் திருமணம் செய்ய இருப்பவளின் முன்னே மேலாடை இன்றி நிற்கக் கூச்சப்பட்டு, அவளைக் கடைக்கண்ணால் பார்க்கிறான். 

இரண்டு நாளில் தன்னைத் திருமணம் செய்ய இருக்கும் பெருவீரனான அவனின் கூச்சமும், நடுக்கமும்  கடைக்கண் பார்வையும் கண்டு, 'சன்னிக்காச்சல் வந்த காகம்போல' அவனுடல் நடுங்குவதாகக் கூறி அவள் நகைக்கின்றாள். அவனே அவளின் நெஞ்சம் எல்லாம் சூரிய ஒளிபோல நிறைந்திருக்கிறான் என்பதையும் அவனின் நடுக்கம் போக்க வன்னிமரக் காட்டில் தழுவுவாள் என்பதையும் நாட்டுப் பாடலாகச் சொல்கிறாள். 

இந்த நாட்டுப்பாடல் அந்நாளில் ஈழத்தமிழரின் திருமணத்தின் போது ஆணும் பெண்ணும் பூவளையல் போட்டுக் கொள்ளும் வழக்கத்தை சொல்கிறது.

பெண்: கண்டங்காட்டு மூலயில
                       காவலுக்கு நிற்பவரே!
            கண்ணுபடப் போகுதையா
                       கட்டுடல மூடுமையா!
            
            கன்னிஎன் நெஞ்சமெலாம்
                       கதிராக நீர்இருக்க
            கலங்கித் தவிப்பதென்ன
                        கடயோரம் பாப்பதென்ன!

             எண்ணிரெண்டு நாள்போக
                       என்மடியில் நீர்தூங்க
             பெண்மனதை நீர்அறிய
                       பூவளையல் போட்டிடுவார்.

             சன்னிகண்ட காகம்போல
                       சதிராடும் உம்முடல
             வன்னிமரக் காட்டிடையே
                       வளைத்தெடுக்க மாட்டேனா! 
                                             -  நாட்டுப்பாடல் (வன்னிவிளாங்குளம்)
                                                 (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

No comments:

Post a Comment