குறள்:
“நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு” - 783
பொருள்:
நூல்களைக் கற்கக் கற்க அவை இன்பம் தருவது போல பண்புடையவர் நட்பும் பழகப் பழக இன்பம் தரும்.
விளக்கம்:
நட்பு எனும் அதிகாரத்தில் உள்ள மூன்றாவது திருக்குறள் இது. அவ்வதிகாரம் நட்பின் சிறப்பைப்பற்றிப் பேசுகிறது. பண்புள்ளவர்களின் நட்பு எப்படியானது என்பதை இக்குறள் சொல்கிறது. நல்ல நூல்கள் படிக்கப்படிக்க, புதுப்புதுக் கருத்துக்களைத் தந்து, நம் அறிவையும் மகிழ்வையும் பெருக்குவது போல பண்புள்ளவர்களின் நட்பும் அறிவையும் மகிழ்வையும் கொடுக்குமாம்.
நல்ல நூல்களைக் கற்கக்கற்க மனிதவாழ்வின் மயக்கங்களை அவை நீக்கும். நமது அறியாமை இருளைப் போக்கி அறிவொளியைத் தருவது நல்ல நூல்களே. சில நூல்களை ஒருமுறை கற்பதைவிட பலமுறை கற்றாலும் அப்போதுதான் கற்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தைத் தந்து எம்மை இன்னொரு கோணத்தில் சிந்திக்க வைக்கும். நாம் முன்னர் சிந்தித்துப் பார்க்காத புதுக்கருத்தை அவை தரும். அதற்குக் காரணம் எமக்கு ஏற்பட்ட அறிவுத் தெளிவே.
“பண்பெனப்படுவது பாடு அறிந்து ஒழுகல்”
பாடு என்பது உலக ஒழுக்கத்தைக் குறிக்கும். பண்பாடு என்பது பண்படுத்தப்பட்ட ஒழுக்கம் ஆகும். பண்பு என்று சொல்லப்படுவது, உலகஒழுக்கம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து அதன்படி நடத்தலாகும். உலக ஒழுக்கத்தின் படி நடப்பவரே பண்புடையவர். அப்படி உலக ஒழுக்கத்தை வாழ்ந்து காட்டுகின்ற அரிய மனிதரின் நட்பு எமக்குக் கிடைத்தால் நூல்களால் பெறும் அறிவுத்தெளிவு தரும் இன்பத்தைப் பெறுவோம்.
பண்புடையவர்களின் நட்பால் வரும் இன்பமானது உண்மையானதாகவும், அன்பானதாகவும், அறிவை வளர்ப்பதாகவும் இருக்கும். பண்பானவருடன் பழகப்பழக நாமும் பண்பட்டு பண்பாளர்களாக உயர்வோம். எனவே பண்பாளர்களின் நட்பை நாடித் தேடிக்கொள்ள வேண்டும். சிறந்த நூல்கள் படிக்கப்படிக்க இனிமை தருவது போல உலகத்தோடு சேர்ந்து ஒழுகும் பண்புடையவர் தொடர்பும் பழகப்பழக மகிழ்ச்சியைத் தரும்.
‘நவில் தொறும் நூல்நயம் போலும்‘ என்ற இந்த உவமையில் இலக்கியத்தின் சிறப்பை வள்ளுவர் கூறுவதால் அவர் ஓர் இலக்கிய ஆசிரியராக மட்டுமல்ல ஒரு சிறந்த மாணாக்கனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் பாங்கை காணமுடிகிறது.
No comments:
Post a Comment