தமிழ்மொழிக்கு பலவகைச் சிறப்புக்கள் இருக்கின்றன. இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழால் இலங்குவது அதன் தனிப் பெரும் சிறப்பாகும். பிறமொழி பேசிய அறிஞர்கள் சிலர் வடமொழியாகிய சமஸ்கிருதமே தமிழுக்கு மூலமென தமது கருத்துக்களை வெளிப்படுத்தினர். அவற்றை நம்பி அக்கருத்துக்களை மீண்டும் மீண்டும் சொல்வோர் யாவரும் வடமொழி இலக்கண நூலை படித்தே தொல்காப்பியர் தமிழுக்கு இலக்கணம் செய்தார் என உழுதசால் வழியே உழுகின்றனர்.
தொல்காப்பியர் கூறும் செய்யுள் இயலில் வரும் பா வகைகளிலே கலிப்பா, வெண்பா போன்ற செய்யுள் வகைகளை வடமொழி அறியாது. அவை தமிழுக்கே உரித்தான தனித்துவத்தைப் பேணும் செய்யுள் வகையாகும். திருக்குறள் அத்தகைய தனிச்சிறப்புப் பொருந்திய ஈரடி வெண்பாவால் ஆனது. எனவே பழந்தமிழ் நூல்களைக் கொள்ளை அடித்தோரால் திருக்குறளை கொள்ளை அடித்து மாற்றுடை உடுத்தி மீண்டும் எம்முன் நடை பயிலவிட முடியவில்லை.
அதனாலேயே
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” - (பாரதியார் பாடல்)
எனப்பாடி தனக்குத்தானே மணிமகுடம் சூட்டிக்கொள்ள பாரதியாரால் முடிந்தது. நம்மை நாமே ‘வான்மறையாம் உலகப்பொதுமறையை உலகுக்கு அளித்து வான்புகழ் கண்ட உலகத் தமிழினம்’ எனக் கூறமுடிகின்றது.
“தோன்றில் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலில் தோன்றாமை நன்று” - (குறள்: 236)
என்ற தனது கொள்கைக்கு தானே இலக்கணமாக நிற்பவர் திருவள்ளுவர்.
ஒருவர் எதைச் செய்தாலும் புகழ் உண்டாகும் படி, தம் புகழ் விளங்கச் செய்யவேண்டும். அப்படிச் செய்யமுடியாதவர் அதனைச் செய்வதைவிட செய்யாதிருத்தல் நன்று என்பதே இக்குறளின் கருத்தாகும்.
தன்புகழை இந்த உலகில் என்றும் நிலைத்திருக்கச் செய்யவே திருக்குறளை திருவள்ளுவர் இயற்றி இருக்கிறார் என்பதை
“ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதுஒன்று இல்” - (குறள்: 233)
என்ற குறள் காட்டுகிறது.
என்ற குறள் காட்டுகிறது.
“எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு” - (குறள்: 355)
அல்லவா? பசி எடுத்தால் நாம் உணவு தேடுவோம். இந்தத் தேடுதலில் முதலில் எழுவது ‘எதை உண்பது?’ என்ற கேள்வி. அடுத்து விரும்பியதை சமைத்து அல்லது உணவகத்தில் சென்று சாப்பிட்டபின்னர் அது எப்படி இருந்தது என்பதை விமர்சிப்போம். உப்பு, காரம் கூடவா? குறைவா? வெந்ததா, வேகவில்லையா என்ற கருத்துக்கணிப்பு. மூன்றாவதாக உணவு நன்றாக இருந்தால் மீண்டும் அதை உண்ணவேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு பாவனை இருக்கும்.

இந்த மூன்று நிலையும் இருந்தால் தான் நாம் மெய்ப்பொருளைக் காணலாம். அதாவது ஒரு பொருளின் உண்மைத்தன்மையை அறிய கேள்வி எழுப்பப்பட வேண்டும். எமக்கு எழும் கேள்வியைப் பொறுத்தே அப்பொருளைப் பற்றிய கருத்துக் கணிப்பை நாம் பெறுவோம். அக்கருத்தே அப்பொருள் என்ன என்ற முடிவைத்தரும். நீரை தேன் என்றும், தேனை நீர் என்றும் நாம் மயங்குவதில்லை. தன்மையான நீரைத் தண்ணீர் என்றும் வெம்மையான நீரை வெந்நீர் என்றும் பாவிக்கிறோம்.
திருவள்ளுவருக்கும் தேடல்கள் இருந்திருந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று அமிழ்தம் என்று சொல்கிறார்களே அது என்ன? அது எப்படி இருக்கும்? உலக இயக்கத்திற்கு காரணமான அமிழ்தம் எது? என்ற தேடல். அந்த தேடலின் பயனாகக் கிடைத்த விடையை திருக்குறளின் இரண்டாவது அதிகாரத்தின் முதற்குறளில் தருகிறார்.
“வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று” - (குறள்: 11)
வான் இங்கு மழையைக் குறிக்கின்றது. ‘மழை பெய்வதால் உலகம் இயங்குகின்றது. ஆதலால் மழையே அமிழ்தம் என்று உணர்க’ என்கின்றார்.
வான் இங்கு மழையைக் குறிக்கின்றது. ‘மழை பெய்வதால் உலகம் இயங்குகின்றது. ஆதலால் மழையே அமிழ்தம் என்று உணர்க’ என்கின்றார்.
இது போன்ற தேடல்களால் கிடைத்த 1330 முத்துக்களை கொண்டதே திருக்குறள். அதனை நாம் வான்மறை என்றும் உலகப்பொதுமறை என்றும் போற்றுகிறோம். மறை என்றால் வேதம். திருக்குறள் என்ன நால்வேதமா? இருக்கு யசூர் சாம அதர்வண வேதங்களையா திருவள்ளுவர் சொன்னார்? நாம் ஏன் திருக்குறளை மறை என்கின்றோம்? தமிழர்களாகிய நாம் மறைகளை அதாவது வேதங்களை இறைவன் அருளிச் செய்தார் என்கிறோம்.
அதனை சங்ககால இலக்கியமான புறநானுறும் சொல்கிறது.
“நன்றாய்ந்த நீள்நிமிர்சடை
முதுமுதல்வன் வாய் போகாது
ஒன்று புரிந்த ஈரிரண்டின்
ஆறுணர்ந்த ஒரு முதுநூல்” - (புறம்: 166)
இறைவனை நீள்நிமிர்சடை முதுமுதல்வன் எனக்கூறி, பழமையானவன் என்று சுட்டுகிறது. புறநானூறு பண்டைத்தமிழரின் மறையை, இறைவனின் வாயிலிருந்து நீங்காத[போகாது], நான்கு [ஈரிரண்டு] வழிகளை அறியத்தரும்[ஆறுணர்ந்த] ஒரு பழையநூல்[ஒரு முதுநூல்] என்கிறது. ஆதலால் இறைவனால் அருளப்பட்ட தமிழரின் வேதம் ஒரே ஒரு நூலே. இருக்கு, யசுர், சாம, அதர்வணம் என நான்கு வேதங்கள் இல்லை என்பது தெளிவாகின்றது.
எனவே இருக்கு, யசூர், சாம, அதர்வண வேதங்கள் இறைவனால் அருளிச் செய்யப்பட்டவை அல்ல. அவற்றில் இறைவன் வேதங்களைச் சொன்னார் என்று எந்தவிதக் குறிப்பும் இல்லை. பல ரிஷிகளும் முனிவர்களும் எழுதிய பாடல்களின் தொகுப்பே அவை. தமிழரின் கடவுள் கொள்கைக்கு இருக்கு, யசுர், சாம, அதர்வண வேதங்கள் முரணானவையே. அப்படியானால் தமிழரின் வேதம் எது? தொடர்ந்து காண்போம்.

இனிதே
தமிழரசி.
No comments:
Post a Comment