ஆசைக்கவிதைகள் - 32
பாலியாற்றங் கரையில் வாழ்ந்த இளைஞன் ஒருவன் ஒரு நங்கையைக் காதலித்தான். அவளின் குணநலன்கள் அவனுக்குப் பிடித்திருந்தது. அவன் நினைவுகளில் அவள் அவனுடன் வாழ்ந்தாள். அவள் குணமோ மல்லிகை, மருக்கொழுந்து, சண்பகம் போல் நன்றாக இருந்தது. இரவில் அல்லிபோலும் பகலில் தாமரைபோலும் அவன் பார்க்குக்கும் போதெல்லாம் அவள் அழகாகத் தெரிந்தாள். வாழைப்பழம் போன்ற நிறமுடையவள். வலது கையில் இருக்கும் சர்க்கரை போலும், உள்ளங்கையில் இருக்கும் தேன் போலும் இனிமையானவள். இருந்தும் அவனால் அவளை அடைய முடியவில்லை. அதனால் அவளை நினைந்து, நினைந்து உருகி, உருகி அலைந்தான். அவன் நிலையை அவனே நாட்டுப்பாடலாக வடித்து வைத்துள்ளான்.
ஆண்: மல்லி மருக்கொழுந்தே
மணமான சண்பகமே
அல்லியே தாமரையே
அலைகிறன்ரி உன்னால!
ஆண்: வாழைப்பழமே வலது
கையில் சக்கரையே
உள்ளங்கைத் தேனே
உருகிறன்ரி உன்னால!
- நாட்டுப்பாடல் (பாலியாறு)- (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
பாலியாற்றங்கரைக் காதலனைப் போலவே சங்க இலக்கிய காலத்திலும் காதலனொருவன் இருந்திருக்கிறான். காசு பொருள் ஏதும் இல்லாத ஒருவன் இன்பங்களுக்கு ஆசைப்படுவது போல அவனும் கிடைக்க முடியாத ஒன்றை விரும்பினானாம். அவனது காதலி நல்லவளாக இருப்பதை மட்டும் அவன் அறிந்திருந்தானாம். அதுபோல அவள் கிடைத்தற்கு அரியவள் என்பதை அவன் அறியவில்லையாம், என்று தன் நெஞ்சிற்கு சொல்வதாக பரணர் கூறியுள்ளார்.
“இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு
அரிது வேட்டனையால் நெஞ்சே! காதலி
நல்லள் ஆகுதள் அறிந்தாங்கு
அரியள் ஆகுதல் அறியாதோயே” - (குறுந்தொகை: 120)
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment