Monday, 5 March 2012

காதலைக்காண யார் வல்லார்?

காரைக்கால் அம்மையார்


அன்பு அது ஓர் இன்ப ஊற்று. அது ஒரு புறம் காதலாகவும் மறு புறம் பக்தியாகவும் பல்கிப் பெருகிப் பாயும். ஆதலால் காதலும் பக்தியும் வேறுவேறானவை அல்ல.  அன்பின் வெவ்வேறு படி நிலைகளே அவை. சிலவேளைகளில் காதலின் முதிர் நிலையாக பக்தி மாறுவதுண்டு. காதல் - பக்திக்காதலாக கனியும் போது, காதலில் நாம் காணும் இன்ப அனுபவங்களையே பக்தர்களும் எடுத்துச் சொல்கின்றனர். 

பெரியபுராணம் காட்டும் நாயன்மரில் காதலில் - பக்திக்காதலில் திளைத்து தான் அறிந்த அநுபவங்களை, முதன்முதல் கொஞ்சு தமிழில் குழைத்து தந்தவர் காரைக்கால் அம்மையாரே.  

பிறந்து மொழிபயின்று பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே 
எஞ்ஞான்று தீர்ப்பது இடர்”                                  
                                        - (அற்புதத் திருவந்தாதி: 1)

என அம்மையார் தான் இறைவனின் காதலியாக - பக்திக்காதலில் திளைத்ததை அற்புதத் திருவந்தாதியின் முதலாவது பாடலில் பதிவு செய்துள்ளார். இறைவனுக்கு அல்லாமல் வேறு ஒருவருக்கும் ஆளாக மாட்டார் என்பதையும்  
அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும் 
அவர்க்கேநாம் அன்பாவ தன்றிப் - பவர்சடைமேல்
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்கு
ஆகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்”                             
                                      - (அற்புதத் திருவந்தாதி: 3)
என அறுதியிட்டுக் கூறியுள்ளார். 

தனக்கு இன்பந்தரும் பெருமானாகிய ஈசனை, தனது மனத்துக்கு இனிய பெருஞ்செல்வமாக பொதித்து வைத்தாவாம். தனக்கு உரியவனாகக் கொண்டாவாம். அப்படி இறைவனை தலைவனாகக் கொண்டதும் இன்பம் அடைந்தாவாம். அதுவே கிடைத்தற்கு அரியதொன்றாக அவவிடம் இருக்கிறதாம். 
எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரிய ஒன்று                                        
                                      - (அற்புதத் திருவந்தாதி: 10) 
எனக்கூறுகிறார். 

காதல் வசப்படுவோர் தம் காதலை பிறர் அறியாது மறைத்து வைப்பர். அப்படி அம்மையாரும் இறைவன் மேல் கொண்ட காதலை மற்றவர்க்கு தெரியாது எப்படி மறைத்து வைத்திருந்தார் என்பதையும் சொல்லியுள்ளார். 

நம் ஒவ்வொருவர் இடமும் தனிப்பட்ட விடயங்கள் இருக்கின்றன. அந்த விடயங்களை நம் நெஞ்சினுள்ளே தனிப்பட புதைத்து வைத்திருப்போம். தாயத்து கட்டி இருப்போரின் தாயத்தைப் பார்த்து அதனுள்ளே தொப்பூழ்கொடியா, தங்கமா, வெள்ளியா, செம்பா, வைரமா, நஞ்சா இருக்கின்றது என்பதை அறிய இயலாது. எனவே காரைக்கால் அம்மையார் தன் காதற் தலைவனாகிய அரனை (சிவனை) அன்பெனும் போர்வையால் போர்த்து, பெருமை மிக்க தாயத்தல் அவரது தனிநெஞ்சின் உள்ளே அடைத்து மாயமாக மறைத்து வைத்தாராம். ‘அவர் மறைத்து வைத்திருப்பதை காண வல்லவர் யார் இருக்கிறார்கள்?’ எனப் பெருமிதத்துடன் கேட்கிறார்.
ஆர்வல்லார் காண அரனவனை அன்பென்னும்
போர்வை அதனாலே  போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமும் தனிநெஞ்சின் உள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து                         
                                       - (அற்புதத் திருவந்தாதி: 96) 

இப்போது சொல்லுங்கள் மானுடக் காதலுக்கும் ஆன்மீகக் காதலுக்கும் வேறுபாடு என்ன? 
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment