எழுத்து என்றால் என்ன? எழுப்பப்படுவதா? எழுதப்படுவதா? நாம் ஆ, ஓ, என ஓசையை உண்டாக்கும் போது ஒலிவடிவமாக எழுப்பப்பட்ட ஒலிகளுக்கு கொடுக்கப்பட்ட வரிவடிமே எழுத்தகும். எழுத்தின் ஓசை எழுப்பப்படும் பொழுது ஒலிவடிவத்தையும் எழுதப்படும் பொழுது வரிவடிவத்தையும் பெறுகிறது. ஆதலால் எழுத்தானது நாம் உச்சரிக்கும் போது எழுப்பப்படுவதாகவும் அதை எழுதும் பொழுது எழுதப்படுவதாகவும் அமைந்துள்ளது. எனவே ஒலிவடிவம் வரிவடிவம் இரண்டையும் பெற்று விளங்குவதே எழுத்தாகும்.
தமிழ் எழுத்துக்கள் முப்பது என்பதை தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் தன்கூற்றாகச் சொல்லாது
“எழுத்தெனப் படுவ
அகர முதல் னகர இறுவாய் முப்பஃ தென்ப” - (தொல்: எழு: 1)
எனப் பிறர்கூற்றாய், எழுத்து எனச்சொல்லப்படுவன ‘அ’ கரம் முதல் ‘ன’ கரம் முடியவுள்ள முப்பது என்பர் என்கிறார். அப்படிக் கூறிய புலவர்கள் ஒவ்வொரு தமிழ் எழுத்தின் ஒலிக்கும் கால வரையறை செய்திருந்தனர். அதாவது இவ்வளவு நேரத்தில் குற்றெழுத்தைச் சொல்ல வேண்டும் இவ்வளவு நேரத்தில் நெட்டெழுத்தைக் கூறவேண்டும் என்று வரையறுத்திருந்தார்களாம்.
அ இ உ எ ஒ என்னும்
அப்பால் ஐந்தும்
ஓரளபு இசைக்கும் குற்றெழுத் தென்ப” - (தொல்: எழு: 3)
அ, இ, உ, எ, ஒ என்ற ஐந்தும் ஒரு மாத்திரை நேரம் ஒலிக்கும் குற்றெழுத்துக்கள் என்பர்.
“ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்னும்
அப்பால் ஏழும்
ஈரளபு இசைக்கும் நெட்டெழுத்தென்ப” - (தொல்: எழு: 4)
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்ற ஏழும் இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெட்டெழுத்து என்பர்.
“மூவளபு இசைத்தல் ஓரெழுத்தின்றே” - (தொல்: எழு: 5)
ஓர் எழுத்து மூன்று மாத்திரை நேரம் ஒலிக்கும் தன்மை தமிழ் எழுத்துக்களில் இல்லை. பிறமொழிகளில் எழுத்தின் ஓசைக்கு அதாவது உச்சரிப்புக்கு எடுக்கவேண்டிய நேரத்தை வரையறை செய்திருப்பதைக் காணமுடியாது. இது தமிழுக்கு மட்டும் உரிய சிறப்பாகும். தமிழில் ‘ஏஏய்’ எனக் கூப்பிடும் விளிச்சொற்களிலும் பாடல்களிலும் பொருள் விளங்க எவ்வளவு ஒலி வேண்டுமோ அவ்வளவுக்கு எழுதுக்களை கூட்டி எழுதலாம் எனவும் அத்தமிழ்ப் புலவர்கள் கூறியதை
“நீட்டம் வேண்டின் அவ்வளபுடைய
கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்” - (தொல்: எழு: 6)
என்று மிகத் தெளிவாகத் தொல்காப்பியர் கூறியுள்ளார்.
மாத்திரை என்பது கை நொடிக்கும் நேரம் அல்லது கண் இமைக்கும் நேரமாகும். இப்படி எழுத்துக்களின் கால அளவை மாத்திரை கொண்டு அளப்பதைக் கூட மிக நுட்பமான எழுத்து ஒலி இலக்கணத்தை உணர்ந்த புலவர்கள் ஆராய்ந்து கண்டதை
"கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே” - (தொல்: எழு: 7)
எனக் கூறுகிறார். புலவர்கள் தமிழ் எழுத்தின் ஒலிக்கு காலவரையறை கொடுத்ததற்கு காரணம் இருக்கின்றது. ஒருமுறை குற்றெழுத்தை இரண்டு மாத்திரை நேரமும் நெட்டெழுத்தை ஒரு மாத்திரை நேரமும் உச்சரித்துப் பாருங்கள். அது தமிழாய் ஒலிக்கிறதா? தமிழ் எழுத்திலுள்ள கால அளவு தமிழிற்கு இசையையும் அதற்கான தாளத்தையும் கொடுக்கின்றது.
“அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்”
- (தொல்: எழு: 33)
- (தொல்: எழு: 33)
அதாவது எழுத்துக்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட கால அளவைக் கடந்து ஒலித்தலும் ஒற்றெழுதுக்கள் மிக நீண்டு ஒலித்தலும் இசையோடு சேர்ந்த நரம்பு நூல்களில் (யாழ், வீணை) இருப்பதாக புலவர்கள் சொல்வர் என்கிறார். தொல்காப்பியரின் காலத்திற்கு முன்பே தமிழ் எழுத்துக்களும், அவற்றின் வரிவடிவங்களும், அவ்வெழுத்துக்களை உச்சரிக்க வேண்டிய கால அளவின் இலக்கணமும் யாழ், வீணை போன்ற நரம்பிசைக் கருவிகளுக்குரிய நரம்பிசை இலக்கண நூல்களும் தோன்றிவிட்டன என்பதை தொல்காப்பியரே குறிப்பிட்டுள்ளதைக் கண்டீர்கள்.
பண்டைய தமிழர் எழுதிய உருவங்களைக் கொண்டு அவற்றின் பண்பு கெடாது இடைச் சங்ககாலத்திற்கு முன்னர் வாழ்ந்த புலவர்கள் எழுத்தின் வரிவடிவங்களை உருவாக்கிவிட்டனர் என்பதை இவை காட்டுகின்றன. ஆகையால் தொல்காப்பியர் ஒருசில எழுத்துக்களுக்கு மட்டும் வரிவடிவம் கூறியுள்ளார். பண்டைக்காலப் புலவர்கள் இந்த ஒலிவடிவத்திற்கு இந்த வரிவடிவம் என அவ்வரிவடிங்களை வரையறுத்தனர். அதனால் அவ்வரிவடிவங்கள் ஒலிவடிவங்களையும் பெற்றிருந்தன. அதன் காரணமாக அந்த வரியெழுத்துக்களை நம் முன்னோர் ஒலியெழுத்துக்கள் என்றும் அழைத்தனர்.
அவ்வுண்மையை கி பி 13 நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்ட நன்னூல் காண்டிகை உரை எனும் தமிழ்மொழி இலக்கணநூல்
“மொழி முதற்காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து”
- (நன்னூல்: எழு: 1 - 3)
- (நன்னூல்: எழு: 1 - 3)
எனச்சொல்வதால் அறியலாம். இந்த நன்னூற்சூத்திரம் தமிழ் எழுத்துக்களின் பிறப்பிற்கு விஞ்ஞான முறையில் எமக்கு விளக்கம் தருகின்றது. தமிழ் எழுத்துக்களின் ஒலிவடிவம் உண்டாக அணுத்திரள்களின் ஒலியே முதற்காரணம் என்கின்றது. ‘தமிழருக்கு அறிவியல் தெரியுமா’? எனக்கேட்கும் தமிழர்கள் கொஞ்சம் நிதானமாக இச்சூத்திரத்தை படித்து அறிதல் நன்று. தமிழ்மொழி வரலாற்றுக்கு இதிலே வரும் ‘அணுத்திரள் ஒலி எழுத்து’ என்னும் சொற்றொடர் கிடைத்தற்கரிய ஒன்றாகும்.
கொட்டும் மழை, வீசும்காற்று, வீழும் அருவி, சீறும் பாம்பு, கூவும் குயில் என உலகில் வகைவகையாய் எத்தனையோ விதமான ஒலிகள் இருக்கின்றன. விஞ்ஞான முறையில் பார்ப்போம் எனின் எல்லாவித ஒலிகளையும் வேறுபடுத்திக் கேட்பதற்கு ஒலியின் அணுத்திரள்களே காரணமாகும். காற்றில் ஏற்படுத்தப்படும் அதிர்வின் போது காற்றிலுள்ள அணுத்திரள்களின் அசைவினால் ஒலியலைகள் தோன்றுகின்றன. அந்த ஒலியலைகளில் உருவாகும் மிகநுண்ணிய வித்தியாசங்களால் நாம் வெவ்வேறு வகையான ஒலிகளைக் கேட்கின்றோம். ஆதலால் மொழிகளிலுள்ள எழுத்துக்களின் ஒலிவேறுபாட்டிற்கு முக்கிய காரணமாய் இருப்பது அணுத்திரள்களேயாகும்.
மேலே சொன்ன வீசும்காற்று, சீறும் பாம்பு போன்ற இயற்கை ஒலிகளோ அன்றேல் பட்டாசு வெடித்தல், விமானம் பறத்தல் போன்ற செயற்கை ஒலிகளோ இன்றும் அறிவியல் மூலம் மொழியாக்கப்படவில்லை.
ஒரு மொழிக்கு காரணமாக இருப்பது எழுத்துக்களின் ஒலியே. அந்த எழுத்துக்களின் ஒலிக்குக் காரணம் அணுத்திரளே. அதாவது அணுக்கூட்டத்தின் சேர்க்கையால் எழுத்தின் ஒலி உண்டாகி அவற்றின் சேர்க்கையால் மொழி பிறக்கின்றது. ஆதலால் நன்னூல் சொல்வது போல் மொழிக்கு முதற்காரணமாக இருப்பது அணுத்திரள் ஒலி எழுத்தேயாகும். இந்த அறிவியல் கருத்தைச் சொல்லும் நன்னூலே இன்னொரு சூத்திரத்தில்
“தொல்லை வடிவின எல்லா எழுத்தும்”
- (நன்னூல்: எழு: 5 - 1)
- (நன்னூல்: எழு: 5 - 1)
என தமிழ் எழுத்துக்களின் வடிவம் பற்றிக்கூறுகின்றது. தொல்லை வடிவின - பண்டைக்கால வடிவத்துடனே எழுத்துக்கள் யாவும் இருந்தன எனச்சொல்வதால் தமிழ் எழுத்துகளுக்கு ஒலி வடிவத்தைக் கொடுத்த அணுத்திரள் ஒலி எழுத்தும் அதிலிருந்து உண்டான வரிஎழுத்தும் மிகப் பழமையானது என்பது பெறப்படும். எழுத்தின் வளர்ச்சியை தொடர்ந்து காண்போம்.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment