Tuesday, 28 February 2012

இரண்டு உருவமும் ஒன்றே


சங்கரநாராயணன்

இன்றைய தமிழர்களாகிய நம்மில் சிலர் திருமால் தமிழரின் கடவுள் இல்லை சிவனே தமிழரின் கடவுள் என்றும் வேறுசிலரோ சிவன் சைவசமயத்தவர் கடவுள் திருமால் வைணவசமயத்தவர் கடவுள் எனவும் சொல்கிறார்கள். ஆனால் நமது சைவசமய நாயன்மார்களும் வைணவசமய  ஆழ்வார்களும் இத்தகைய பிரிவினையைக் காட்டவில்லை. அதனை அவர்களது பக்திப் பனுவல்கள் மிகத்தெட்டத் தெளிவாகாக் காட்டுகின்றன.
திருநாவுக்கரசு நாயனார் தாம் பாடிய திருவலம்புரம் பதிகத் தேவாரத்தில் 

“தீக்கூர்ந்த திருமேனி ஒருபால் மற்றை ஒருபாலும் 
            அரி உருவம் திகழ்ந்த செல்வர்...”              (பன்.திருமுறை: 6: 58: 3)

என திருவலம்புரத்து இறைவனின் திருவுருவம் ஒருபகுதி தீயின் நிறமாக சிவனாகவும் மறுபகுதி திருமாலின் (அரி) உருவமாகவும் தெரிவதாகச் சொல்கிறார். பாதி சிவனாகவும் பாதி திருமால் ஆகவும் தெரியும் உருவையே சங்கரநாராயணன் என அழைக்கிறோம். இத்தேவாரத்தில் திருநாவுக்கரசர் யார் வலப்பக்கம் இருப்பார் யார் இடப்பக்கம் இருப்பார் என்பதைச் சொல்லவில்லை. 
ஆனால் அதனை சேரமான் பெருமாள் நாயனார் மிகவிரிவாக பொன்வண்ணத்து அந்தாதியில் தந்துள்ளார். சேரமான் பெருமாள் நாயனார் தில்லச் சிதம்பரத்திற்குச் சென்றார். தாம் பார்த்த  தில்லைக்கூத்தனின் பொன்வண்ணத்தை பொன்வண்ணத்து அந்தாதியாகப் பாடினார். அவருக்கு தில்லைக்கூத்தன் குடக்கூத்தனான திருமாலாகவும் தெரிந்தார். அதனை 

“இடமால் வலந்தான் இடப்பால்
          துழாய் வலப்பால் ஒண்கொன்றை
வடமால் இடந்துகில் தோல்வலம்
          ஆழி இடம் வலம் மான்
இடமால் கரிதால் வலஞ்சேது
          இவனுக்கு எழில்நலஞ்சேர்
குடமால் இடம்வலம் கொக்கரை
           யாம் எங்கள் கூத்தனுக்கே”                 - (பன்.திருமுறை: 11: 6: 6)

இடப்பக்கம் மால், வலப்பக்கம் சிவன்; இடப்பக்கம் துளசி மாலை, வலப்பக்கம் கொன்றை மாலை; இடப்பக்கம் பட்டாடை, வலப்பக்கம் தோலாடை; இடப்பக்கம் சக்கரம்; வலப்பக்கம் மான்; இடப்பக்கம் கருநிறம், வலப்பக்கம் செந்நிறம்; இடப்பக்கம் குடக்கூத்து, வலப்பக்கம் கொக்கரைக்கூத்து. இந்த உருவம்தான் எங்கள் கூத்தனுடையது என்கின்றார். 
இதே கருத்தை ஆழ்வார்களில் மூத்தவரான பொய்கையாழ்வார் தமது  முதல் திருவந்தாதியில் 

அரன்நாரணன் நாமம் ஆன்விடை புள்ளூர்தி
உரைநூல்மறை உறையும் கோயில் - வரை நீர்
கருமம் அழிப்புஅளிப்பு கையது வேல்நேமி
உருவம்எரி கார்மேனி ஒன்று”                              - (முதல் திருவந்தாதி: 1: 5)

அரன், நாரணன் எனும் பெயர்களை உடையவரது ஊர்தி எருதும்[ஆன்விடை], கழுகும்[புள்]. சொல்வது ஆகமமும்[உரை],  வேதமும்[மறை], இருப்பிடம் கைலாயமும்[வரை],  பாற்கடலும்[நீர்], செய்யும் தொழில் அழித்தலும்[அழிப்பு] காத்தலும்[அளிப்பு]. கையில் இருப்பது மூவிலைவேலாகிய சூலமும்[வேல்], சக்கரமும்[நேமி]. எரிபோன்ற செந்நிறமும் கார்போன்ற கருநிறமும் உடைய உருவத்தின் உடல் ஒன்றேதான் என்று கூறியுள்ளார்.
பேயாழ்வார் திருவேங்கடம் கோயிலுக்குப் போனார். அங்கே மூலமூர்த்தியைப் பார்க்கிறார். அவரோ வைணவ ஆழ்வார். அவர் கண்களுக்கோ அந்த மூலமூர்த்தி சடாமுடியும், கையில் மழுவும், கழுத்தில் பாம்பும் அணிந்த சிவனாகவும் அடுத்தகணம் நீண்டமுடியும் கையில் சக்கரமும் கழுத்தில் பொன்னாரமும் அணிந்த திருமாலாககவும் மாறி மாறித் தெரிகிறார். திருவேங்கடனை - திருவேங்கடேஸ்வரனாகத் தான் கண்டதை மிகத்தெளிவாக மூன்றாம் திருவந்தாதியில் சொல்கிறார்.

“தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழ்அரவும் பொன்நூலும் தோன்றுமால் - சூழும்
திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும்ஒன்றாய் இசைந்து”                      - (மூன்றாம் திருவந்தாதி: 1: 5)

அதனாலேயே திருப்பதியானுக்கு திருவேங்கடேஸ்வரன் என்று பெயர். தமிழராகிய நாம் போற்றும் அந்த அருளாளர்கட்கு எல்லாம் ஓர் உருவாக நின்ற இறை எமக்கு ஏன் வெவ்வேறு உருவாகக் காட்சி அளிக்கிறார்?
இனிதே,
தமிழரசி

No comments:

Post a Comment