Wednesday, 29 February 2012

தாய்மொழி தமிழ் - பகுதி 2

செம்மொழியாகும் தகுதியை கிரேக்கமொழி, இலத்தின்மொழி, சீனமொழி, எபிரேயமொழி, சமஸ்கிருத மொழி, தமிழ்மொழி ஆகிய ஆறு மொழிகளே பெற்றிருக்கின்றன. இவற்றில் கிரேக்கமொழி, இலத்தின்மொழி,  சமஸ்கிருதமொழி ஆகிய மூன்றும் இறந்த மொழிகளாகும். 
  • எபிரேயம் - கி பி 2ம் நூற்றாண்டில் வழக்காறு ஒழிந்த மொழியாய் போனது. எனினும் கி பி 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த எலியேசர் பென் யெஃகுடா (Eliezer Ben-Yehuda) என்ற மொழியியல் அறிஞர் மீண்டும் உயிர்பெற வைத்துள்ளார். இது இன்றைய இஸ்ரேலின் ஆட்சி மொழியாக வாழ்கிறது.
பழைய சீன எழுத்து (மியூசியம் - ஜேர்மனி)

  • உலகின் செம்மொழிகளில் சீனமொழியும், தமிழ் மொழியுமே மனிதர்களால் இடைவிடாது தொடர்ந்து பேசப்பட்டும் எழுதப்பட்டும் வாழுகின்ற மொழிகளாகும். அதிலும் சீனமொழியின் எழுத்துவடிவம் இன்னும் படஎழுத்து நிலையிலேயே இருக்கின்றது. ஆனால் தமிழ்மொழி தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே எழுத்தின் படஎழுத்து (உருவெழுத்து), கருத்தெழுத்து, அசையெழுத்து ஆகிய மூன்றுபடி நிலைகளைக் கடந்து வரியெழுத்தாகிய நான்காம் நிலையையும் அடைந்துள்ளது. 
எமது தாய்மொழியாம் தமிழ்மொழி இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு மேலாக வாழ்கின்றது. பிற மொழியின் உதவி இன்றி பேசவும் எழுதவும் வல்லமொழி. தமிழுக்கே உரிய சங்க இலக்கிய வளத்தால் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என முழங்கியும் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனவும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும் உலகுக்கு வழி காட்டும் மொழியாய், உலக மொழிகள் பல பிறந்து வாழ வளர வழிவகுக்கும் தாய்மொழியாயும் நிற்கிறது. அத்துடன் உலக வளர்ச்சிகு எற்ப வளர்ந்து வரும் செம்மொழியாகவும் வாழ்ந்து வரும் செம்மொழியாகவும் இருக்கிறது. ஆதலால் உலகின் சிறந்த ஆறு செம்மொழிகள் உள்ளும் உயர்தனிச் செம்மொழி தமிழே ஆகும்.                                                                                                                                  
                                   தமிழ் எழுத்து (திரிகோணமலை)

















தமிழர் எப்போது எழுதத் தொடங்கினர்? தமிழரின் எழுத்து வடிவத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை? போன்ற கேள்விகளுக்கு விடைகாண முற்பட்ட போது நான் அறிந்தவற்றை இங்கு சொல்ல விரும்புகின்றேன். தென்கிழக்காசிய மொழிக் குடும்பங்களிடையே உள்ள தொடர்புகள் மிகத்தெளிவு இல்லாது இருக்கின்றன. இது உலகமொழிக் குடும்பங்கள் யாவற்றிற்கும் பொதுவானது என நினைக்கின்றேன். உலகத்தின் தாய்மொழி இதுதான் என இங்கு யாரும் வரையறுத்துக் கூறிவிட முடியாது. அதற்கான வரலாற்று ஆதாரங்களை எவரும் எழுதி வைத்துச் செல்லவில்லை. 
இன்றுள்ள உலகமொழிகள் பெரும்பாலும் படஎழுத்து நிலையில் இருந்து உண்டானவையே. பண்டைய மொழிகள் தொடர்ந்தும் படஎழுத்து வடிவில் எழுதப்பட்டன என்பதை உலக மொழி வரலாறு எமக்குக் காட்டுகிறது. அதற்கு சீனமொழி இன்றும் படஎழுத்து வடிவில் இருப்பதை உதாரணமாகக் காட்டலாம். ஆனால் தமிழ்மொழி என்றோ தன்னை வரியெழுத்து நிலைக்கு உயர்த்திக் கொண்டுவிட்டது. வரியெழுத்து வடிவில் எழுதிய தமிழ் மொழிக்கே தொல்காப்பியர் இலக்கணம் வகுத்தார் என்பதை தொல்காப்பியம் எமக்கு அறியத்தருகின்றது. 
தமிழும் படஎழுத்து நிலையில் இருந்து உண்டானது என்பதற்கு எழுத்து என்ற சொல்லே ஆதாரமாக இருக்கின்றது. சங்க இலக்கியங்கள் (கி மு 500 - கி மு 200) எழுத்து என்ற சொல்லை சித்திரம் ஓவியம் என்ற பொருளிலும் சொல்கின்றன. சங்கச் சான்றோரான பரணர் அருவி வீழும் கொல்லி மலையை மேலும் அழகு படுத்த கடவுள் வடிவம் கீறிய பாவை அமைத்ததை
“களிறுகெழு தானைப் பொறையன் கொல்லி
ஒளிறுநீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக்
கடவுள் எழுதிய பாவை                                 
                                                   - (அகம்: 62: 13 - 15) 
 என அகநானூற்றில் கூறியுள்ளார்.
சங்ககாலத்தில் திருப்பரங்குன்றத்திருந்த சித்திர மண்டபத்தில் கண்காட்சிக்கு வகை வகையாக வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு ஓவியங்களாகக் காட்டுமிடத்தில்
“இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம்
எனச் சங்ககால புலவரான நப்பண்ணனார் பரிபாடலில் சொல்கிறார். இது சங்ககாலத்தில் ஓவியத்தை எழுத்து என்று சொன்னதைக் காட்டுகிறது. 
எழுதெழில் அம்பலங் காமவேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர்”                                  
                                            - (பரி: 18: 28 - 29)
கோயிலில் வைத்திருந்த ஓவியத்தை எழுதெழில் எனக் குன்றம்பூதனாரும் பரிபாடலில் காட்டுகிறார்.
‘கடவுளின் உருவம் எழுத ஒரு கல் கொணர்வோம்’ என சேரன் செங்குட்டுவன் கூறியதை இளங்கோஅடிகளும்
கடவுள் எழுதவோர் கல்கொண்டல்லது”  
                                           - (சிலம்பு: கால்கோள்: 14) 
என சிலப்பதிகாரத்தில் சொல்கிறார். 
மணிமேகலையில் சீத்தலைச்சாத்தனாரும்
கந்துடை நெடுநிலை காரணம் காட்டிய
அந்தில் எழுதிய அற்புதப் பாவை”                        
                                           - (மணி: துயில்: 94 - 95)
என அற்புதமான ஓர் ஓவியப்பாவையை எழுதியது என்றே குறிப்பிடுகிறார்.
இவையாவும் தமிழ்மொழியும் தன் தொடக்க நிலையில் படஎழுத்தாக வரையப்பட்டது என்பதையே காட்டி நிற்கின்றன.
படஎழுத்து, கருத்தெழுது, அசையெழுத்து என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். மனிதன் தனது எண்ணங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த உருவங்களைப் படமாகக் கீறினான். உருவத்தால் ஆன அந்தப் படத்தை உருவஎழுத்து என்றும் படஎழுத்து என்றும் கூறுவர். படஎழுத்தில் உள்ள உருவம் அதன் பெயரைக் குறிக்காமல் ஒரு கருத்தைச் சொல்லுமானால் அது கருத்தெழுத்து எனப்படும். அதாவது ‘புகைத்தல் தடைசெய்யப்பட்டுள்ளது’ (No Smoking) என்பதற்கு நாம் பயன்படுத்தும் அடையாளத்தைப் போன்றதே கருத்தெழுத்து. அவ்வெழுத்துக்கு ஒலி இல்லை. 

அசையெழுத்து என்பது கூட்டெழுத்தாகும். க்+அ எனும் இரு எழுத்துக்களும் கூட்டாகச் சேர்ந்து ‘க’ எனும் எழுத்தை உருவாக்குவது [க்+அ=க] போன்றதே அசையெழுத்து. தமிழில் உள்ள உயிர்மெய் எழுத்துக்களை அசையெழுத்து என்றும் கூறலாம். 
தாய்மொழியாகிய தமிழில் உள்ள சொற்களில் எழுத்து என்னும் சொல் மிகவும் சுவையான கருத்தாழம் உள்ள சொல்லாகும். எழுத்து என்றால் என்ன? எழுப்பப்படுவதா? எழுதப்படுவதா? என்பதை தொடர்ந்து காண்போம்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment