குறள்:
“புரந்தார் கண்ணீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து” - 780
பொருள்:
தம்மைக் பாதுகாத்தவர் கண்ணீர் சிந்த சாகும் சாவு, பிச்சையாக இரந்து கேட்டுப் பெற்றுக் கொள்ளக்கூடிய பெருமையுடையது.
விளக்கம்:
எம்மை பாதுகாப்பவரே புரந்தவர் ஆவர். சாக்காடு என்றால் சாவு. தன்னைப் பாதுகாத்து வளர்த்த பெற்றார், உற்றார், ஊரார், ஆட்சியாளர் கண்ணீர் சிந்த இறக்கக் கூடிய அரியவாய்ப்பு எமக்குக் கிடைத்தால் அச்சாவை நாம் பிச்சையாகக் கேட்டுப் பெற்றுக் கொள்ளவேண்டும். ஏனெனில் அது அவ்வளவு சிறப்புடையது. அந்தச் சிறப்புக்குக் காரணம் என்ன? உலக உயிர்கள் யாவும் உயிர் வாழ்ந்து இன்பம் காண்பதற்காகவே வாழ்க்கையோடு போராடிப் போராடி வாழ்கின்றன. அப்படியிருக்க பிறர் வாழ தனதுயிரை கொடுத்தவனின் செயலைப் பார்த்து கல்நெஞ்சரும் கலங்குவர் அல்லவா?
ஈழத்தமிழர் வரலாற்றிலே அன்று புரந்தார் கண்ணீர் மல்க இறந்தவராக எதிரியாலே போற்றப்பட்டவர் எள்ளாள மாமன்னனே. எழுபத்திரண்டு வயதிலும் தன் தாய் மண்ணுக்காக - தமிழுக்காக தன் இன்னுயிரை ஈந்தவர் அவர்.
ஈழத்தமிழரின் இன்றைய சுதந்திர வேட்கையை மூண்டெழச்செய்தவன் திலீபன். அவன் 1987ம் ஆண்டு செப்டம்பர் 15ம் திகதி தன் உயிரீகை விளக்கை ஏற்றி வைத்தான். தொடர்ந்து தனது ஆருயிரை பன்னிரண்டு நாட்களுக்கு நெய்யாகச் சொரிந்தவன். இருபத்தி மூன்று வயது இளைஞன் தன் இன்பங்களைத் துறந்து பொதுநல வாதியாய் ஈழத்தமிழ் இனத்துக்காக அணு அணுவாகக் கொடுத்த அந்த மரணக் கொடை புரந்தாரை கண்ணீர் மல்க வைக்கவில்லையா?
வள்ளுவர் சொன்னது போல் தம் சாவை வரமாக வேண்டி வந்து ஈழமண்ணின் விடிவுக்காக தம் உயிரை கொடையாகக் கொடுத்து, புரந்தாரைக் கண்ணீர் மல்கவைத்து மாவீரர் ஆனோர் எத்தனை எத்தனை ஆயிரம் பேர்?
ஆதலால் எம்மைப் போற்றிப் பாதுகாத்தவர் அழ, வீட்டிற்காகவோ நாட்டிற்காகவோ அருஞ்செயல் செய்து இறக்கும் இறப்பு (சாவு) நாம் வரமாக பெறவேண்டிய பெருமையுடையதாகும்.
No comments:
Post a Comment