நெல்லைக் காந்திமதியம்மன்
பல்லவி
ஆடினையே தாயே! காந்திமதி நீயே!
அஞ்சனமைவிழி அருளினைச் சொரிய
அஞ்சனமைவிழி அருளினைச் சொரிய
அனுபல்லவி
அனலாடி புனலாடி அரங்காடும்
கூத்தாடியைக் கூடி குவலயம் வாழ
சரணம்
சரணம்
பொன்னி புரண்டோடப் பொன்னம்பலத்தில்
மன்னு சிவகாம வல்லியாய்
கிண் கிண் என கீத கிண்கிணி பாட
மகிழ்ந்தாடும் சபாபதியுடன்
மன்னு சிவகாம வல்லியாய்
கிண் கிண் என கீத கிண்கிணி பாட
மகிழ்ந்தாடும் சபாபதியுடன்
- ஆடினையே தாயே!
குற்றால அருவி குதித்தோட சித்திரசபையில்
குழல்வாய் மொழியாய்
தித் தித் தித்தி என கொம்பதிர
குதித்தாடுங் குறும்பலா ஈசருடன்
- ஆடினையே தாயே!
மடமஞ்ஞை மருண்டாட மணியம்பலத்தில்
உடன்று வண்டார்குழலியாய்
டமடட் டிகுடிட் என உடுக்கை ஆர்ப்ப
உழன்றடும் ஊர்த்துவதாண்டவரோடு
- ஆடினையே தாயே!
வைகை வழிந்தோட வெள்ளியம்பலத்தில்
வையம் புகழ் மீனாட்சியாய்
திமிதித் திமி திமி என முரசொலிக்க
விரைந்தாடும் சுந்தரேசருடன்
ஆடினையே தாயே!
தாமிராபரணி தவழ்ந்தோட தாமிரசபையில்
தாயாம் காந்திமதியாய்
தகுதி திந்திகு திந்ததோ தாளஜதிக்கு
நெகிழ்ந்தாடும் நெல்லையப்பருடன்
- ஆடினையே தாயே!
இனிதே,
தமிழரசி
சிவன் ஆடிய ஐந்து அரங்கம்
பொன்னம்பலம் - சிதம்பரம்
சித்திரசபை - குற்றாலம்
மணியம்பலம் [இரத்தினசபை] - திருவாலங்காடு
வெள்ளியம்பலம் - மதுரை
தாமிரசபை - திருநெல்வேலி [தமிழ்நாடு]
1996 ம் ஆண்டு ஆடிப்பூரம் அன்று நெல்லையப்பர் கோயில் காந்திமதி அம்மன் சந்நிதியில் எழுதியது.
No comments:
Post a Comment