இயற்கையின் படைப்பிலே பேரற்புதமாய் நிற்பதும் உலகில் வாழும் எல்லா உயிர்களிலும் பெற்றோருக்கும் பிள்ளைகட்கும் இணைப்புப்பாலமாய் இருப்பதும் பெண்மையே. அதாவது வரும் தலைமுறையை உருவாக்கி அதனைச் சென்ற தலைமுறையினருடன் இணைப்பவள் பெண். இரு தலைமுறையினரையும் ஒன்றாகக் கட்டுபவள் என்ற கருத்தில் தமிழில் பெண்ணை தையல் எனவும் பெண்களை தையலர் எனவும் அழைப்பர். தை என்றால் ஒன்றோடு ஒன்றை கட்டுதலாகும். தை என்ற சொல்லின் அடியாகப் பிறந்து கட்டுதல் எனும் கருத்தைத்தரும் சொற்களைப் பாருங்கள்.
தைஇய = கட்டின,
தைஇனர் = கட்டினார்,
தையின = கட்டப்பெற்றன,
தையுபு = கட்டி
எனவரும் பல சொற்களை சங்க இலக்கியத்தில் காணலாம். ஆங்கிலம் முதற்கொண்டு பல உலகமொழிகள் 'தை' என்ற சொல்லை தமிழில் இருந்து கடன் பெற்று கட்டுதல் [tie] என்ற கருத்திலேயே வைத்திருக்கின்றன.
ஒருதுணியை மற்றத்துணியுடன் பொருத்துதலே தைத்தல். துணிகளை ஒன்றோடொன்று பொருத்தி தைப்பவன் தையல்காரன். இவ்வாறு தை என்ற சொல்லின் அடியாகப் பிறந்த ஒரு நூறு சொற்களை தமிழில் பொறுக்கி எடுக்கலாம். ஆனால் தை என்றதும் எமக்கு ஞாபகம் வருவது தைமாதமே. தையும் மாசியும் முன்பனிக்காலம். உடல் குளிரால் நடுங்கும். அந்த நடுக்கம் எப்படி இருக்கும் என்பதை சத்திமுத்துப்புலவரின்
பனையின் கிழங்கு பிளந்தன்ன வாய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்து வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே”
என்ற பாடல் அழகாக எடுத்துக்காட்டுகின்றது. அதுவும் மதுரையில் இருந்த குளிரின் கொடுமையை அவர் காட்டும் பாங்கு எவரது நெஞ்சையும் கரைக்கும். சத்திமுத்துப் புலவரின் காலத்து மதுரையில் குளிரின் நிலை இப்படி இருந்திருந்தால், இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு இப்படி இருந்திருக்குமா? இல்லையே!
“எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்”
நிலையிலும் மோசமான நிலையிலையே இருந்திருக்கும். பண்டைத் தமிழ் நாட்டில் வெண்பனி பெய்ததையும் உறைபனி இருந்ததையும் சங்கநூல்கள் காட்டுகின்றன.
இமம் = உறை பனி ஆகும்.
உறைபனியைக் குறிக்கும் இமம் என்ற சொல்லடியாகப் பிறந்ததே இமயம். அதுபோல்
அம் = நீர்
அம்பா = வெண் பனி, சுத்தமான நீர்
அம்பு = உருகும் பனி நீர்
அம்புதம் = நீரைக்கொடுப்பது
அம்புதி = கடல்
அம்புநிதி = கடல்
இவ்வாறு 'அம்' அடியாகப் பிறந்து நீரையும் பனியையும் குறிக்கும் சொற்கள் பல தமிழில் இருக்கின்றன. ஆதலால்
“வெம்பாதாக வியனில வரைப்பென
அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்”
என பரிபாடல் கூறும். மார்கழி நோன்பின் போது கன்னிப் பெண்கள் ‘இவ்வுலகம் வெப்பத்தால் காயாது இருக்க வேண்டும்' எனக் ஆடிய 'அம்பாஆடல்' பனிநீராடலையே குறிக்கும்.
Siberian Tiger [ Amba the Russian Tiger]
பாரியின் பறம்பு மலையில் இருந்த பனிச்சுனையின் தெளிந்த நீரை தைமாதத்தில் குளிர்ச்சியாகாத் தந்தாலும் என்பதை குறுந்தொகை
“பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” - (குறுந்தொகை: 196: 3 - 4)
எனச் சொல்கிறது.
“அணங்குடைப் பனித்துறை கைதொழுது ஏத்தி
யாயும் ஆயமொடு அயரும்” - (அகம்: 240: 8 - 9)
எனக்கூறும் அகநானூறும் ‘தாயும் தன் தோழியருடன் சேர்ந்து அழகிய பனித்துறையில் தெய்வத்தை கைதொழுது போற்றுவாள்’ என்று பனித்துறையைத் காட்டுகிறது. இவை அக்காலத்தில் பெய்த பனியையும் தைமாதக் குளிரையும் எடுத்துக்காட்டுகின்றன.
அதனாலேயே ‘தையும் மாசியும் வை அகத்து உறங்கு’ என ஔவையாரும் கூறினார். வை என்றால் வைக்கோல். முன்பனிக் காலமான தை, மாசி மாதங்களில் வைக்கோலால் வேய்ந்த கூரையுள்ள வீட்டில் வாழும் படி குறியுள்ளார். குளிருள் கட்டுண்டு கிடந்த தமிழன் குளிரைப் போக்க வழிதேடினான். சுடான இடத்தில் குளிர் இருக்காததைக் காண்டான். நெருப்பில்லாமல் சூட்டைத் தரக்கூடிய பொருட்கள் எவை எவையென அவன் ஆராய்ந்து கண்டவற்றுள் வைக்கோலும் ஒன்று. ஆதலால் எந்தக் கூரையுள்ள வீடானாலும் தை, மாசி மாதங்களில் அதன் மேல் வைக்கோலால் மூடுவது அந்நாளைய வழக்கம்.
சத்திமுத்துப் புலவர் கூறியது போல் ஆடையின்றி இருந்த மனிதனை முன்பனிக் குளிர் வாட்டி வதைத்தது. அவன் கையது கொண்டு மெய்யது பொத்தி காலது கொண்டு மேலது தழீஇ இருந்த இடத்திலேயே கட்டுண்டு இருந்தான். அப்படி மனிதனை கட்டிப்போட்ட மாதத்தையும் அவன் தை என அழைத்தான். தனது ஆறிவாற்றலால் குளிரை மெல்ல வெற்றி கண்ட தமிழன், தன்னைக் கட்டிப் போட்ட தைமாதத்து உறைபனிக் குளிரை போக்க உதவிய இயற்கையின் சக்தியைப் போற்றினான். அந்தப் போற்றுதல் வழிபாடாயிற்று.
கடுங்குளிர் வாட்டினாலும் உலக உயிர்கள் நீர் இன்றி வாழமுடியாது என்பதையும் பண்டைய தமிழர் அறிந்திருந்தனர். அதனை வள்ளுவப்பெருந்தகையின்
‘நீரின்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு’
எனும் திருக்குறள் மிக நேர்த்தியாகக் கூறுகிறது.
இதே கருத்தை கொஞ்சம் விரித்து உயிர்களின் வாழ்வுக்கு நீர் தேவை. ஆதலால் நிலம் குழிந்த இடங்களில் நீர்நிலைகள் அமைக்குமாறு பாண்டியன் நெடுஞ்செழியனிடம் சங்ககாலப் புலவர் குடப்புலவியனார் கூறியதை புறநானூறு சொல்கிறது.
இதே கருத்தை கொஞ்சம் விரித்து உயிர்களின் வாழ்வுக்கு நீர் தேவை. ஆதலால் நிலம் குழிந்த இடங்களில் நீர்நிலைகள் அமைக்குமாறு பாண்டியன் நெடுஞ்செழியனிடம் சங்ககாலப் புலவர் குடப்புலவியனார் கூறியதை புறநானூறு சொல்கிறது.
“நல்இசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன்
தகுதி கேள்! இனி மிகுதியாள!
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம்,
உணவெனெப் படுவது நிலத்தோடு நீரே!
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே!
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே, அதனால்
அடுப்போர் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண் தட்டோரே,
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே". - (புறம்: 18: 16 - 30)
முல்லைப் பெரியாறு அணை
'இவ்வுலகில் புகழை நிலை நிறுத்த விரும்பபுவாயானால் அதற்கான தகுதியைக் கேள்! இனிய பெருமையனே! நீர் இல்லாது உடல் வாழாது. அந்த உடலுக்கு உணவு கொடுத்தவரே உயிர் கொடுத்தவர். உணவை முதன்மையாகக் கொண்டதே உடல். உணவு என்று சொல்லப்படுவது நிலமும் (நிலத்தில் உள்ள உணவுப் பொருட்களும்), நீருமே. இவ்வுலகில் நீரையும் நிலத்தையும் ஒன்றாகச் சேர்த்து வேளாண்மை செய்வோரே உடலையும் உயிரையும் படைத்தவராவர். விதைப்பதற்கு வானத்தை பார்த்திருந்து, மழை பெய்தால் மட்டும் விளையும் புன்செய்நிலம், பரந்து அகன்ற நிலமாய் இருந்தாலும் குடிமக்களைச் சேர்த்து ஆளும் அரசனின் முயற்ச்சிக்கு அது உதவாது. அதனால் செழியனே! நான் சொல்வதை இகழாது, விரைவாக நிலம் பள்ளமாக (நெளிந்து) இருக்கும் இடங்களில் நீர்நிலை [குளம்] பெருகச்செய்க. அப்படிச் செய்தோர் இவ்வுலகில் தம் புகழை நிறுத்துவர். அப்படிச் செய்யாதவர் புகழ் பெறார்,' என்கிறார்.
John Pennycuick
நாடாளும் அரசனைப் பார்த்தே, புன்செய் நிலங்களில் உள்ள பள்ளமான இடங்களில் குளங்களை வெட்டி நீர் நிலைகளைப் பெருக்கி பயிர்ச் செய்கையை மேம்படுத்தச் சொல்கிறார். உலக உயிர்கள் நீர் இல்லாது வாழாது என்பதை மட்டுமல்ல, குளம் வெட்டி வளம் பெருக்கச் சொன்ன சங்ககாலப் புலவரது ஆற்றல் போற்றப் படவேண்டியது.
இங்கிலாந்தில் பிறந்த பென்னி குயிக் (John Pennycuick) முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி ஒரு நூற்றாண்டு கடந்த பின்பு அவருக்கு தமிழகத்தில் மணிமண்டபம் கட்டுவது இப்புலவரின் கருத்தை அணிசெய்கின்றதல்லவா? தொடர்ந்து 'தைத்திருநாள் அது தையலர் நாள்' காணும் வரை.....
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment