Monday, 1 July 2024

உன்றன் அறிவு எனதாகுமா

மனமே உன்றன் மலர்க் கோயில்

            மனத்தே வைத்து மகிழ்ந் திருந்தே

சினமே கொள்ளா சிந்தைய ளாகி

            சித்தத்தே நின்னை சிறை வைத்தே

கனமே பண்ணி கை தொழுதே

            கழல் கண்டு கரைந்தே மா

உனமே யாய் உன்னை அறிவனோ

            உன்றன் அறிவு எனதாகுமா

இனிதே,

தமிழரசி.

சொல் விளக்கம்:

சினம் - கடுங்கோபம்

சிந்தை - எண்ணம்

சித்தம் - உள்ளம்

கனம்பண்ணுதல் - மதித்தல்

கழல் - திருவடி

கரைந்தே - உள்ளம் நெகிழ்ந்தே

உனம் - ஆழ்ந்து சிந்தித்தல்

மாஉனமேயாய் - மௌனமேயாய் [நீளநினைத்தலால் மௌனமாதல்]

உன்றன் அறிவு - பேரறிவு


Wednesday, 26 June 2024

உள்ளம் மாண்டதுவே

 

அவமே நாளைக் கழித்துகந்து
           ஆங்காரத்துள் ஒளித்திருந்தே
பவமே புணரும் காரணத்தால்
           பாவப்புணையுள் வீழ்ந்திருந்தேன்
தவமே அறியாத் தடுமாறி
           தானெனஎண்ணி மகிழ்ந்திருந்தே
சிவமே உணராச் சிந்தையதாய்
          சோர்ந்தெனதுள்ளம் மாண்டதுவே!
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
அவம் - வீணாக
கழித்து - போக்கி
உகந்து - மகிழ்ந்து
ஆங்காரத்துள் - செருக்கினுள்
ஒளித்திருந்தே - மறைந்திருந்தே
பவம் - பிறப்பு
புணர்தல் - பொருந்துதல்
பவமே புணரும் - பிறப்புகளுடன் சேரும்
பாவப்புணை - பாவமாகிய தெப்பத்துள்
மாண்டதுவே - இருண்டது/அழிந்தது

Saturday, 15 June 2024

கொஞ்சுதமிழ் சொல்லு கிஞ்சுகவாய் திறந்து!

ஞாலமெலாம் நீயாகி ஞானியருட் பொருளாகி

ஞெகிழும் அடியர் ஞெமர நினைவோர்

காலமெலாம் கைதொழ காட்சியருட் கந்தா

காதலால் கண்ணீர் கசிந்து வடியும்

கோலமெலாம் கண்டாலும் கொஞ்சம் இரங்காயோ

கொஞ்சுதமிழ் சொல்லு கிஞ்சுகவாய் திறந்து

சீலமெலாம் எமதாக்கி சீருடன் வாழ்வதற்கே

செந்தண்மை ஈந்து செம்மைசெய் செவ்வேளே

இனிதே,

தமிழரசி.


சொல்விளக்கம்

ஞாலம் - உலகம்

ஞானி - ஞானநிலை அடைந்தோர்

ஞெகிழும் - உருகும்

ஞெமர - நிறைய

கொஞ்சுதமிழ் - மழலைத்தமிழ்

கிஞ்சுகவாய் - சிவந்தவாய்

சீலம் - நல்லொழுக்கம்

சீருடன் - பெருந்தன்மையுடன்

செந்தண்மை - இரக்கமுள்ள தன்மை[கருணை]

செம்மைசெய் - தூய்மைசெய்

செவ்வேள் - முருகன்

Wednesday, 1 May 2024

மயன் மகள் - 1.12(சரித்திரத் தொடர்கதை)

நான் 'நச்செள்ளை' என்ற பெயரில் ஆம்பல் இதழில் 2009ல் எழுதியது 

சென்றது...........


நாகநாட்டு அரசனான விசுவகர்மாவின் மகன் மயன். அவனின் மனைவி இளமதி. அவளை அவன் காதலித்த காலத்தில் உலகநாடுகளை சுற்றிவரும் வழியில் அரசமாசுணத்தால் தாக்கப்பட்ட அவனது நண்பன் முகிலனைக் காப்பாற்ற மலைவாசி போல் சித்தன் என்ற பெயருடன்  நாககடம் சென்றான். அங்கிருந்து அறுவை மருத்துவத்தின் பின்னர் போடும் நுதிமயிர்த்துகில் குப்பாயம் தைக்கச் சென்ற கறமன் கற்காட்டில்.........


கடறு மணி


வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்

கட்சிக் காணாக் கடமா நல்லேறு

கடறு மணிகிளரச் சிதறுபொன் மிளிரக்

கடிய கதழு நெடுவரைப் படப்பை

                                                               கபிலர் [புறநானூறு]


ஒய்யாரமாக கறமன் கடறுக்குள் விரைந்த கரியநிறப்புரவிக்கு மேலிருந்த நத்தன் கடறுப்பகுதிக்குள் செல்வது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்தான். கடறுக்குள் போவது கண்ணாமூச்சி ஆட்டம் போல்  திக்குத் திசை தெரியாது இருந்தது. அதுமட்டுமல்ல ஓவியபுரியின் எல்லையைத் தாண்டியதும் கடறுப் பகுதி எங்கும் காவல்மறவர் ஆங்காங்கே நிற்கக் கண்டான். அவர்கள் புரவியை மறித்து, அவனிடம் எங்கே போகிறான் என்பதைக் கேட்டனர். அவனும் மருத்துவர் கொடுத்த காணத்தைக் காட்டி, அவருக்கு நுதிமயிர்த் துகில்குப்பாயம் வாங்கப் போவதாகக் கூறி, அங்கு போகும் குறுக்குவழியையும் கேட்டு அறிந்தான். அவர்கள் சொன்ன வழியே புரவியில் சென்றான்.


நுதிமயிர்க் குப்பாயம் தைக்கும் இடத்திற்கு இவ்வளவு காவல்மறவர் தேவையா? காவலுக்கு இந்தக் கடறுகளே போதாதா? இந்தக் கடறுப் பகுதிக்கு எவனாவது வருவானா? இப்போ நாகநாட்டு அரசின் பொருளாதாரம் நுதிமயிரில் தங்கியிருக்கிறதோ என நினைத்துச் சிரித்தான். மிக்க அமைதியாக இருந்த வெட்சிக்காடு சூழ்ந்த அந்தக் கடறுகளில் இருந்த வெண்குரங்குகள் கூச்சல் இட்டு கடறுக்குக் கடறு தாவின. அவனது புரவியும் முன்னே செல்லாது பின்னடித்தது. புரவி இலக்கணம் கற்றிருந்த அவனுக்கு அதன் காரணம் புரிந்தது. புரவியைக் கொல்லக்கூடிய ஏதோவொரு மிருகம் மிக அருகேயிருப்பதை உணர்ந்தான். குதிரை கனைக்கவுமில்லை. மருளவுமில்லை. ஆதலால் அந்தமிருகம் புரவியையோ தன்னையோ உடனே தாக்காது என்பதும் அவனுக்கு விளங்கியது. 


குரங்குகளின் கூச்சல் கேட்ட பக்கம் பார்த்தான். கடறு மலையுச்சியின் பக்கமாக இருந்த ஒரு கடறில்  யாளி ஒன்று மலையுச்சிக்கு பாய்வதற்காகப் பதுங்குவது தெரிந்தது. அது பதுங்கி இருந்த விதம் கீழே அவனை நோக்கியும் பாயலாம், மேலேயும் பாயலாம் என்பது போலிருந்தது. யாளி அவனையோ குதிரையையோ பார்க்கவில்லை. எனினும் தனது கீற்றுவாளை எடுத்தான். கடறு மலையுச்சிக்கு வாலகனும் அதன் மேல் மயனும் வருவதைக் கண்டான். யாளி மனிதரைக் கொல்வதில்லை. கோபம் வந்தால் அல்லது அதைத் தாக்கினால் அது மனிதரைத் தாக்கும். ஆனால் யானைகளைக் கண்டால் யாளிகளுக்குக் கொண்டாட்டம் தான். மயனை எச்சரிப்பதற்கும் யாளியைத் தன் பக்கம் திருப்பவும்சித்தா...!!!’ எனக் கத்தினான். கத்திக் கொண்டே யாளியின் துதிக்கைக்கு குறிவைத்து கீற்றுவாளை வீசினான். அது பறந்து சென்று துதிக்கையை வெட்டி வீழ்த்தி மீண்டும் அவனிடம் வந்தது.

 

அந்தக் காலத்தில் கரும்புச் சக்கரை ஆலைகளில் பல்லாயிரக் கணக்கான கரும்புகளைப் பிழிந்து கருப்பஞ்சாறு எடுக்கும் எந்திரங்கள் இயங்கும் போது ஏற்படும் ஒலி ஒரு பக்கம் கேட்கும். கருப்பஞ் சாற்றை சர்க்கரையாக ஆக்கும் எந்திரங்களின் ஒலி மறுபக்கம் கேட்கும். இவ்விரு எந்திர ஒலிகளும் ஒன்றாக மோதி, கரும்புச் சர்க்கரை ஆலைகளில் கேட்கும் பேரொலி போல, யானைகளும் யாளிகளும் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு மோதிக்கொள்ளும் கம்பலையும் கேட்கும்.


வாலகன் வந்து நின்ற கடறு மலையுச்சியில் யாளி இட்ட முழக்கமும் வாலகனின் பிளிரலும் அந்தக்  கம்பலை போலவேகேட்டது. அந்த ஒலியோடு சித்தா.......!!! என்ற கூக்குரலின் எதிரொலிகளும் கலந்து பேரெதிரொலியாய் கடறு எங்கும் மோதின. அதற்கு முன்பு வாலகன் உடலைச் சிலிர்த்து இடது முன்னங்காலால் உதைத்ததும் அந்த இடத்தில்தொட தொட, கொற கொறவெனபெரும்பாறை உடையும் ஒலி எழுந்தது. வாலகன் பக்கத்தே இருந்த கடறுக்கல்லை துதிக்கையால் பற்றி இழுத்ததும் அது நின்ற தாங்கு தளம் மெல்லச் சரிந்துகற கறவெனகீழே இறங்கிச் சென்ற ஒலி, அந்த ஒலிகளுக்கு எல்லாம் மேலும் வலிமை சேர்த்துக் கொண்டிருந்தது.


சித்தா!!! என்ற கூக்குரலைக் கேட்டு மயன் திரும்பிப்பார்த்த இடத்தில் ஒருவன் கரியநிறப் புரவியில் வீற்றிருந்தான். கண்ணிமைக்கும் நேரத்திலும் குறைந்த நேரத்திலேயே மயனால் அவனைப் பார்க்க முடிந்தது. எனினும் மயன் அப்புரவி வீரனை அடையாளம் கண்டுகொண்டான். அப்போது மயனது பார்வையின் எதிரே, எழுந்து யாளிதான் என்பதை மயன் புரிந்துகொள்ள முன்னர், பறந்து வந்த கீற்றுவாள் துதிக்கையை வெட்டி வீழ்த்தியது. வெட்டி வீழ்ந்த துதிக்கை, யாளியின் துதிக்கை என்பதை அதன் செங்கருநிறம் காட்டியது. அத்துதிக்கை வீழ்ந்து கிடந்து புழுப்போல் துடித்தது. துதிக்கை வெட்டி வீழ்த்தப்பட்டதும் யாளி, சினதுடன் பெரிதாக முழங்கிக் கொண்டு, திரும்பிச் செல்லும் கீற்றுவாளை துரத்தியபடி, புரவி வீரனை நோக்கித் தாவிப்பாய்ந்து சென்றது.


வாலகனோடு மயனைத் தாங்கிநின்ற தாங்குதளம் இறங்கிச் செல்லச் செல்ல மயனின் பார்வையை விட்டு யாளியோடு புரவிவீரனும் மறைந்தான். எங்கே போகிறான் என்பதை அறியாதவனாய் பேரிரைச்சல் காதை அடைக்க இருந்த மயனை, பாதாளக்குகைக்குள் இழுத்துச்சென்ற தாங்கு தளம்தடார்என்ற ஒலியோடு நின்றது. 


யாளிகள் குகைகளுக்குள் வருவதற்கு அஞ்சும். யாளிகளைக் கண்ட யானைகள் குகைகளுக்குள் சென்று முடங்கும். அதனால் வாலகனும் பாதாளக்குகைக்குள் செல்கிறது என்று மயன் நினைத்தான். அவனின் எண்ணம் பிழையானது என்பதை வாலகனின் அடுத்த செயல் உணர்த்திற்று. 


தாங்குதளம் நின்றதும், முன்னே இருந்த பாறையை தலையால் தள்ளிய வாலகன், அருகே இருந்த கற்றூணைப் பற்றி இழுத்தது. பேரிரைச்சலுடன் முன்னே இருந்த பாறை விலகிச் செல்ல எங்கும் காரிருள் சூழ்ந்தது. அச்சம் என்பதை அறியாத வாலகனும் பெரும் படையை நடைத்திச் செல்லும் படைத்தலைவன் போலத் துதிக்கையைத் தூக்கியபடி, காரிருள் சூழ்ந்த பிலத்துவாரத்தினூடாகச் சென்றது.


தன்னைச் சூழ நடப்பவற்றைக் கண்டும் செயலற்றிருந்த மயன், தன்னைப் பாதுகாக்க வாலகன் முயல்வதை உணர்ந்தான். வாலகன் கடறுமலை உச்சியில் இருந்து நிலவறைக்குள் செல்லும் இவ்வழியால் முன்பு சென்றிருக்கிறது. நிலவறைக்குள் செல்வதற்கு அமைக்கும் பெருங்கல் அடார் இருந்த இடத்தை அறிந்து, பெருங்கல் அடாரை இயக்கி, தன்னைச் சுமந்து செல்கின்ற வாலகனை வருடினான்.  அதுவும் தனது துதிக்கையால் அவனைத் தடவிக் கொடுத்தது. ஆகாயத்தில் பறக்கும் மயிற்பொறிகளையும், வானவூர்திகளையும் விட உயிருள்ள விலங்குகள் அறிவோடும் உணர்ச்சியோடும் நடந்து கொள்கின்றன என்பதைக் கண்டு தனக்குள்ளே சிரித்தான். 


வெள்ளை வெளேரென்ற வாலகன், பிலத்துவாரத்தினூடாக காரிருள் இடையே மின்னல் கீற்றென வேகமாகச் சென்றது. வாலகன் சென்ற வேகத்திலும் பார்க்க வேகமாக வந்த குளிர்காற்று மயனின் உடலைக்  குளிரவைத்தது. அப்பிலத்துவாரத்தின் முடிவில் பெரும் நீர்வீழ்ச்சி இருப்பதை அது காட்டியது. வாலகன் போகும் போக்கில் போகட்டும் என்று  விட்டுவிட்ட மயன் அதை உணரும் நிலையற்றவனாய் புரவி வீரனைப்பற்றிய நினைவில் மூழ்கினான்.


எப்போதும் மருந்தும், கவிதையும், ஏடும், நரயமும் கையுமாக திரியும் நத்தத்தனா? அவனா? கடறுமலை உச்சியில் நின்ற ஒர் யாளியின் துதிக்கையை வாள் எறிந்து வீழ்த்தினான்? மயனால் நம்பமுடியவில்லை. நம்பாமலும் இருக்கமுடியவில்லை. வாள் எறிந்த புரவிவீரன் நத்தத்தன் என்பதில் மயனுக்கு எதுவித சந்தேகமும் இல்லை. அதைத்தான் குடற்குணம் என்பார்களோ!! நத்தத்தனை அறியாமலே அவனைப் பத்து மாதம் சுமந்து பெற்ற நாகவள்ளித் தாயாரின் மாவீரம் இன்று புற்றில் இருந்து சீறி எழும்பாம்பு போல் வெளிப்பட்டிருக்கிறது. 


நாகநாட்டின் தானைகளுக்கு வேண்டிய புதுப்புதுக் கருவிகளும், கருவிகளால் துளைக்கமுடியாத கவசங்களும், தோல்களும் அவளது ஆலோசனைப்படியே வடிவமக்கப்படுகின்றன. அவளே நாகநாட்டின் வாள்நிலை கண்டவள். நாகநாட்டு அரசனான விசுவகர்மா கூட தனது தமக்கையின் வீரவாளுக்கு எதிர்வாள் தூக்கமாட்டார். அத்தகைய மாவீரை அவள். நாகவள்ளித்தாயார், மயன் சிறுவனாக இருந்த காலத்தில் ஒருநாள் நத்தத்தனுக்கும் மயனுக்கும் வாள் பயிற்சி பழகுவதற்கு முன்பு கற்பிக்கப்படும் மெய்ப்பயிற்று நிலைகளை கற்பித்தார். 


அப்போது, ‘முதலில் உங்கள் உடலை பாம்பு, பறவை, மீன், பூனை, குதிரை, சிங்கம், யானை, பன்றி போன்ற உயிரினங்களின் வடிவில் வளைத்து நிற்கப் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்என்று நாகவள்ளித்தாயார் சொன்னார்.


என்னம்மா! நாகநாட்டு இளவரசியின் மகனான நானுமா பாம்பு, பறவை, பன்றி போல என் உடலை பழக்கவேண்டும்?’ என்றான் நத்தத்தன்.


அப்படி வளைத்து பழக்கினால் தானே வாற்பயிற்சியின் போது பாம்புபோல் சீறிப்பாயவும், பறவைபோல்  பறந்து தாக்கவும் முடியும்என்றார் தாயார்.


தாயே! எனக்கு நீங்கள் குதிரை, யானை, சிங்கம் போல் எனது மெய்யைப் பயிற்றும் விதத்தைச் சொல்லுங்கள் நான் அதனைப் பயின்று கொள்கிறேன். ஆனால் மனுடனாக இருப்பதே நல்லதுஎன்றான்.


அதன் பின்னர் நாகவள்ளித் தாயார் அவனை வற்புறுத்தியதில்லை. அவனும் தன்விருப்பம் போலவே பயின்றான். அவன் சொன்னது போலவே இன்று மானுடவீரனாக ஓர் யாளியைத் தாக்கி, தன்னையும் வாலகனையும் காப்பாற்றி இருக்கிறான்.


அந்த பிலத்துவாரத்தினூடாக வந்த வாலகன் அடுத்தடுத்து இரண்டு பெருங்கல் அடார்களைக் கடந்து, முதலைகள் தினவெடுக்கும் ஓர் அகழியடிக்கு வந்தது. வீரமறவர்கள் கதையுடன் பாய்ந்து வந்தனர். வாலகன் அந்தக் கருங்கல் அகழியின் மேல்பகுதியில் தொங்கிய வடத்தை பிடித்து ஆட்டியது. மணி ஓசை கேட்டது. அகழியின் இரு கரையிலுமிருந்த ஆம்பிமனைகளில் இருந்தும் வீரமறவர்கள் வெளிப்பட்டனர். வாலகனைக் கண்டதும்எங்கே போகிறீர்என்று ஒருவன் சித்தனைப் பார்த்துக் கேட்டான். வாலகன் மேல் சித்தன் அமர்ந்திருந்ததால் மறவர்களுக்கு அவன் மேல் ஐயம் எழவில்லை.


சித்தனும் நுதிமயிர்துகிலை மறவர்களுக்குக் காட்டிகுப்பாயம் தைக்கும் இடத்திற்கு போகவேண்டும்என்றான்.


இங்கு யாரும் குப்பாயம் தைப்பதில்லையே! குப்பாயம் தைக்கும் இடத்திற்கா? அல்லது நுதிமயிர்த் துகில் குப்பாயம் தைக்கும் இடத்திற்கா?’ என்று கேட்ட மறவன், தொடர்ந்துஎல்லோரும் அணியும் குப்பாயம் போல நுதிமயிர்த் துகில் குப்பாயம் தைக்கப்படுவதில்லை. அதைத் தைப்பதற்கெனத்  தயாரிக்கப்பட்ட நூலால் நுதிமயிர்த் துகில் குப்பாயத்தைத் தைத்து, மருந்துப்புகையூட்டிக் கொடுப்பார்கள்என்றான்.


தன் தவறை உணர்ந்த சித்தன்நுதிமயிர்த் துகில் குப்பாயம் தைக்கும் இடத்திற்குப் போகவேண்டும்என்றான். 


அகழியைத்தாண்ட இப்போதே ஏற்பாடு செய்கிறேன். யாரங்கே! உருள் கற்பாலத்தை  இணையுங்கள்என்றான்.


அகழியின் இருகரையிலும் இருந்த வீரமறவர்கள் உருள் கற்பாலத்தின் எந்திரத்தை இயக்க, அகழியின் விளிம்பின் மேற்பகுதியில் இருகரையிலும் இருந்த பெரிய உருள் கற்கள் இரண்டும், இடமும் வலமுமாகச் சுழன்று ஒன்றோடொன்று பொருந்தி உருள் கற்பாலமானது.


சித்தனும் உருள் கற்பாலத்தின் மேல் வாலகனை நடத்திச் சென்றான். அகழியைத் தாண்டியதும் வாலகன் மீண்டும் ஒரு பிலத்துவாரத்தின் வழியாகச் சென்றது. அகலமாயிருந்த அப்பிலத்துவாரத்தை மூடிப் பெருங்கல் அடார் ஏதும் இருக்கவில்லை. காவல் மறவர்கள் ஆங்காங்கே காவலுக்கு நின்றனர்.  சிறிது தூரம் சென்றதும் பிலத்துவாரத்தினுள் காரிருளை நீக்கி ஒளி பரவியது. ஒளிபட்ட இடமெங்கும்  வைர, வைடூரிய, மாணிக்கக் கற்கள் காட்சியளித்தன. நாகநாட்டின் சிறப்புச் செல்வங்களான மலை பயந்த மணியும், கடறு பயந்த பொன்னும், கடல் பயந்த கதிர் முத்தும், பல்வேறு பட்ட உடையும், சேறுபட்ட தசும்பும் குவிந்து கிடந்தன.


நாகநாட்டின் நிலவறை நிதியம் இந்தக் கடறு பகுதியிலும் இருக்கிறதா? என்னை உலகநாடுகள் சென்று பார்த்து அநுபவப்பட்டு வரச் சொன்ன தந்தை ஏன் நாகநாட்டைப் பார்க்கச் சொல்லவில்லை. நான் நாகநாட்டில் அறியவேண்டியவை இன்னும் இருக்குமோ என மயன் எண்ணினான். நிலவறை நிதியம் இருக்கும் இடமனாதால் தான் இங்கு யாளியை உலாவரவிட்டிருக்கிறார்கள் என்பதும் அவனுக்கு புரிந்தது.


வாலகனும் நிலவறையினுள் புகுந்து செல்லாது வேறு வழியாகச் சென்று, கொட்டும் அருவியின் ஊடாச் சென்றது. அது அப்படிச் சென்றதால் மயனும் வாலகனும் அருவியில் நனைந்தனர். நல்ல நேரம் நுதிமயிர்த் துகிலை மரைத்தோலால் செய்த பையினுள் போட்டுக் கொடுத்ததால் நனையவில்லை. வாலகன் அருவி வீழும் தடாகத்தில் சென்று படுத்தது. கலையுள்ளங் கொண்ட மயன் எழில் கொஞ்சும் அருவித் தடாகத்தின் இயற்கையை இரசித்தான். தனது ஈர ஆடையைக் களைந்து காயவிட்டான். வாலகனைக் குளிப்பாட்டி தானும் தடாகத்தில் நீந்தினான். இரண்டு ஆண்டுகளின் பின்னர் நாகநாட்டு அருவியில் நனைந்தது தாயின் அரவணைப்பில் இருப்பதுபோல் இருந்தது. வாலகனும் தடாக நீரை எடுத்து மயனின் மேல் துதிக்கையால் சொரிந்து விளையாடியது.


கடறு எங்கும் பரந்து கிடக்கும் மணிகள் மேலே கிளம்பி மிளிர, கற்களிடையே கிடக்கும் பொன் சிதறி ஒளிர மிகவிரைவாக மூன்று புரவிகள் பாய்ந்து வந்தன. முன்னே வந்த கரியநிறப் புரவி இரத்தத்தில் தோய்ந்த நத்தனுடன் வந்தது.


ஒளிரும்......


இனிதே,

தமிழரசி.


சொல், சொற்றொடர் விளக்கம்:

வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்

கட்சிக் காணாக் கடமா நல்லேறு

கடறு மணிகிளரச் சிதறுபொன் மிளிரக்

கடிய கதழு நெடுவரைப் படப்பை- வெட்சிச்செடி நிறைந்த காட்டில் வேட்டுவர் துரத்த பதுங்குமிடம் காணாது காட்டு மான் ஏறு, கடறு எங்கும் சிதறிக்கிடக்கும் மாணிக்க மணிகள் கிளம்பி வரவும் கற்களிடையே சிதறிக் கிடக்கும் பொன் மிளிரவும் விரைவாக ஓடும் மிகநீண்ட மலைப்பக்கம்.

வெட்சி - வெட்சிச் செடி[Ixora coccinea]

கானத்து - காட்டில்

ஆட்ட - துரத்த

கட்சி - புகலிடம்/ பதுங்குமிடம்

கடமா நல்லேறு - காட்டு எருது

கடறு - கற்காடு

மணிகிளர - இரத்தின மணிகள் மேலே கிளம்பிவர

சிதறு பொன் மிளிர - சிதறும் பொன் ஒளிர

கடிய கதழும் - விரைவாக ஓடும்

நெடுவரை தொடர்ந்து செல்லும் மலை

படப்பை - பக்கம்

ஒய்யாரம் - கர்வம் 

காவல்மறவர் - காவல் காக்கும் வீரர்கள் [வெல்போர் ஆடவர் மறம்புரிந்து காக்கும்; பதிற்றுப்பத்து] 

காணம் - பொற்காசு

புரவி இலக்கணம் - குதிரைகள் எப்படிப்பட்டவை? அவை என்ன செய்யும்? என்பவற்றைக் கூறும் நூல். [‘நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி,’  புரவி நூல்கூறும் முறைப்படி காற்றுப்போல் செல்லும் குதிரை;  அகநானூறு: 314]

கீற்றுவாள் - சந்திரப்பிறையின் கீற்றுப்போல், கீற்றுவாள் 1200 வளைவுடைய வாளாகும்.

கம்பலை - ஆரவாரம்; [‘அணங்குடை யாளி தாக்களிற் பலவுடன் கணஞ்சால் வேழம் கதழ்வுற்று ஆங்கு எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை’ - பெரும்பாணாற்றுப்படை: 258 - 260] 

பிலத்துவாரம் - பாதளத்தினூடாகச் செல்லும் வழி.

பெருங்கல் அடார் - கற்பொறி. [இயக்கத் தெரியாது இயக்கினால் அப்பொறிக்குள் அகப்படுவர்.],[‘பொறியறிந்து மாட்டிய பெருங்கலடார்’ - புறம்: 19;

நரயம் - எழுத்தாணி [நர் + அயம் = நரயம்] [நர் - கூர்/நுண்மை; அயம் - வெந்த இரும்பு]

தானைகளுக்கு - படைகளுக்கு 

தோல்களும் - கேடகங்கள்

மாவீரை - மிகுந்த வீரம் உள்ள பெண் 

மெய்ப்பயிற்று - உடலைப் பழக்குதல். [இன்றைய களரியிலும் மெய்ப்பயிற்று நிலை தொடர்கிறது.]

ஆம்பிமனை - காளான் போன்ற வீடுகள் 

உருள் கற்பாலம் - உருளும் கல்லால் ஆன பாலம்

பயந்த - இருந்து பெற்ற

தசும்பு - செம்பு [சேறுபட்ட தசும்பு - புறம்: 377]