ஊன் உருகும் ஓசை கேட்குதா
உணர்வினில் ஒன்றியே நிதம்
வான் உருகி மழை வீழினும்
வன்னிலம் எங்கனும் வெய்ய
கான் உருகி கனல் காய்ந்தெரி
கானல் ஆவது காணலையா
மான் உருவ வள்ளி மணாளா
மாநிலம் காத்திட வாராய்!
இனிதே,
தமிழரசி.
ஊன் உருகும் ஓசை கேட்குதா
உணர்வினில் ஒன்றியே நிதம்
வான் உருகி மழை வீழினும்
வன்னிலம் எங்கனும் வெய்ய
கான் உருகி கனல் காய்ந்தெரி
கானல் ஆவது காணலையா
மான் உருவ வள்ளி மணாளா
மாநிலம் காத்திட வாராய்!
இனிதே,
தமிழரசி.
திருமணங்களில் மணமகனும் மணமகளும் மாலை மாற்றுவர். அவ்வாறு மாலைமாற்றும் பொழுது ஒருவரின் இடது தோளில் இருக்கும் மாலை மற்றவரின் வலது தோளுக்கும் வலது தோளில் இருப்பது இடது தோளுக்கும் வரும். மணிகளால் ஆன மாலைக்குள் ஏதாவது எழுதியிருப்பின் மாறிப்போட்டபின் அதனைப் படித்து அறிவது மிகக்கடினம். ஏனெனில் நாம் எதனையும் படிக்கும் பொழுதும் இடமிருந்து வலமாகப் படிப்போம். வலமிருந்து இடமாகப் படிப்பதில்லை.
தமிழில் உள்ள சில சொற்களை, சொற்றொடரை நாம் இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் படிக்கமுடியும். எடுத்துக் காட்டாக திகதி, விகடகவி, தோடு ஆடுதோ, மேள தாளமே, காவாயோவாகா போன்றவற்றைச் சொல்லலாம். எப்படிப் படித்தாலும் அதன் கருத்தைத் தருவதே மாலைமாற்று. ஒரு சித்திரத்தினுள் அச்சித்திரக்கவிதையின் இலக்கணத்துக்கு அமைய எழுதும் கவிதை சித்திரக்கவிதை ஆகும். சித்திரக் கவிதைகளுக்கு என இலக்கணம் இருக்கிறது. இலக்கணநூல்களும் இருக்கின்றன.
‘மாலைமாற்று’ சித்திரக் கவிதைகளுள் ஒன்றாகும். அதனை 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த செய்யுள் அணியிலக்கண நூலான ‘தடிண்யலங்காரம்’ சொல்கிறது.
ஆனால் ‘மாலைமாற்று’ கவிதைகளை ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானக்குழந்தையான திருஞானசம்பந்தர் தேவாரமாகப் பாடிப் பதிவு செய்துள்ளார். அவர் அவற்றை மாலைக்குள் எழுதினாரா என்பதை அறிய முடியவில்லை. எனினும் மாலைமாற்றுக் கவிதைகள் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றை உடையது என்பது தெளிவாகிறது.
திருஞானசம்பந்தர் பாடிய மாலைமாற்று தேவாரத்தில் ஒன்று.
“நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ”
- (ப.தி.முறை: 3: 375: 4)
தொடக்கத்தில் இருந்து கடைசிவரையும் கடைசியிலிருந்து தொடக்கம் வரையும் படித்துப் பாருங்கள். நாக்கு சுளுக்குதா? பெரும்பாலும் மாலைமாற்று கவிதைகள் படிக்கக் கடினமானவையே. ‘யாழை வாசிக்கும் உண்மைப் பொருளானவனே பிறவித்துன்பம் வராமல் காத்தருள்வாய். மேருவை வில்லாக்கி வானவரைக் காத்து ஆகாயவடிவாய் சீர்காழியில் இருப்பவனே விரைவாக வா’ என்கிறார்.
நான் எழுதிய ‘மாலைமாற்று கவிதை’ முத்து மாலையுள் மேலே படத்தில் இருக்கிறது. நான் எழுதிக் கீறிக்கொடுத்த முத்து மாலையை மிக அழகாக வடிவமைத்துத் தந்த சியாமளனுக்கு எனதன்பும் ஆசியும் என்றும் உரியன ஆகுக.
இன்றைய தமிழருக்காக கொஞ்சம் இலகு தமிழில் மாலைமாற்றுக் கவிதையை எழுதியுள்ளேன். முத்து மாலையுள் எழுதியிருக்கும் கவிதையை இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் படிக்கலாம்.
“தாயே மாயே தாவே தாளே நீதானே
தாநீளே தா வேதாயே மாயே தா”
இதன் பொருள்:
மாயே - மாயை வடிவானவளே
தாநீள் - முத்தி
வேதா - வேதமுதல்வி
மாயே - மாய்த்து
தா - துன்பம்/வருத்தம்
தாயே! மாயை வடிவானவளே! தாளினைத் தருவாய். வேதமுதல்வியே நீதானே துன்பம் அற மாய்த்து முத்தியைத் தரவேண்டும்.
இக்கவிதையை இடமிருந்தோ வலமிருந்தோ பெரிய முத்துவரை [‘னே’] படிக்கும் போது ஒன்றையே மீண்டும் எழுதியது போலிருக்கும்.
“தாயே மாயே தாவே தாளே நீதானே” என வரும். தொடர்ந்து படித்தால்
“தாநீளே தா வேதாயே மாயே தா” எனும் இரண்டாவது அடியை படிக்கலாம்.
இனிதே,
தமிழரசி.
தமிழ்த்தாய்
பண்ணே இசையே பைந்தமிழ் தேனே
எண்ணேன் உனையலால் எப்போதும் வேறே
உண்ணேன் உவப்பேன் உறுபொருள் நீயே
விண்ணே தரினும் விழையேன் யானே
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
உண்ணேன் - உணவு உண்ணேன்
உறுபொருள் - தானே வந்து சேர்ந்த பொருள்
உவப்பேன் - மகிழ்வேன்
விண்ணே - சுவர்க்கமே
விழையேன் - விரும்பமாட்டேன்
இதயம் கனக்கிறது என்பார்கள். அதன் உண்மையை இன்று உணர்ந்தேன். தாய் தந்தையர் என்னைவிட்டுப் போன போது உடல் கூடானதே அல்லாமல் என் இதயம் கனக்கவில்லை. இது ஆன்மாவின் பிணைப்பா? எனதன்புத் தங்கை சிவசக்தியே உமக்குக் கேட்குமா இதயவீணை!
இராமநாதன் கல்லூரி வாழ்க்கையில் ‘தமிழரசி அக்கா’ என அழைத்தபடி என்னைச் சுற்றி வந்த வட்டக்கருவிழியாளை நினைக்கிறேன். கண்ணீர் வரவில்லை. பூசைக்கு வந்த மலர்கள் மணம் பரப்பவே வருகின்றன. அதற்காக எந்த மலராவது கண்ணீர் உகுக்குமா? எத்தனை வருட ஆன்ம நேயம் இது? என் மனச்சுமையை எழுத்தில் வடிக்கப்பார்க்கிறேன்.
இராமநாதன் கல்லூரி மேடையில் சின்னஞ்சிறு சிறுமியாக வீணைவாசிக்க இருந்தாய். உன் முகத்தை வீணை மறைத்தது. பின்னர் Cushion போட்டு இருந்து பாடிப்பாடி வீணை வாசித்தாய். அந்த நிகழ்வு என் மனத்திரையில் நிழல் ஆடுகிறது. சிறுமியாய் பாடும்போதெல்லாம் வாயைக் கொஞ்சம் சுழித்து கழுத்தை ஒருபக்கம் நிமிர்த்திப் பாடுவாய். இலண்டனில் கச்சேரி செய்யும் பொழுதும் மற்றோர் அறியாத அந்தப் பாங்கை உம்மிடம் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.
அதற்கு முன்னர் தொடங்கியது எமது அக்கா தங்கை உறவு. கற்பகவல்லியின் பொற்பதங்களைப் பிடித்த இணுவில் வீரமணிஐயரிடம் இசையும் பரதமும் கற்றனை. அவரிடம் பரதம் கற்று அதனை அரங்கேற்றம் செய்த ஒரேயொரு மாணவி என்ற பெருமையும் பெற்றாய். அவ்வரங்கேற்றத்தை என் தந்தையுடன் வந்து பார்த்தேன். அன்று பார்த்த ஆண்டாளை மறக்குமா பார்த்தோர் இதயவீணை?
பிறக்கும் போதே ஒருசிலரே ஆசிரியராய்ப் பிறப்பதுண்டு. அத்தகைய ஓர் ஆசிரியையாய் வலம் வந்து உம்மிடம் கற்ற மாணவர்க்கு எல்லாம் இசையென்னும் அறிவுச்சுடரை ஏற்றி வைத்தாய். அந்தச் சுடர் அணையுமா? என் மகன் வாகீசன் ஏழுவயதுப் பையனாக உம்மிடம் வீணை கற்க வந்தான். கிழமைக்கு நான்கு நாட்கள் இலண்டன் பாரதிய வித்தியபவனில் கழியும். மகள் ஆரணிக்கு ஏடு தொடக்கி இசையும் வீணையும் கற்றுக் கொடுத்து இன்று அவள் இசைத்துறையில் ஈடுபட உமது அன்பும் அரவணைப்புமே காரணம். கேட்குமா ஆரணியின் இதயவீணை?
அன்று என்னுடன் பேசிய போது எனக்குச் சுகமில்லை என்றதும் உமது உடல் நிலையைக் கருத்தில் கொள்ளாது அத்தானைக் கூட்டிக்கொண்டு என்னைப் பார்க்க வருகிறேன் என்றாயே. கேட்குமா உம் அத்தான் சிவநேசனின் இதயவீணை?
உண்மையில் நாம் கொடுத்து வைத்தவர்கள். எமக்கு நல்ல பண்பான பெற்றோர். அன்பான உறவினர். அறிவும் ஆற்றலும் மிக்க ஆசிரியர்கள் கிடைத்தார்கள். அதைவிட மேலாக எமது ஆன்மீகத் தேடலுக்கும் கலைப் பசிக்கும் அள்ள அள்ளக் குறையாமல் உணவு ஊட்டியது நம் இராமநாதன் கல்லூரியே. மீண்டும் பிறப்புண்டேல் கலைப்பசியைத் தீர்த்து மகிழ்வோம். எப்போ எனக்கு அழைப்பு வருமோ அப்போது வருகிறேன்.
இனிதே,
தமிழரசி அக்கா.