பாவத்தால் பிறந் துழன்று
பழவினையைப் போக்குதற்கு
கூவத்தில் தனித் திருந்து
குரலெடுத்துக் கதறுக்கறேன்
கோவத்தைக் காட்ட மனக்
கந்தனையே தேடுகிறேன்
ஆபத்தில் கை கொடுக்கும்
அருளையெண்ணி போற்றுகிறேன்
இனிதே,
தமிழரசி.
இனிதே,
தமிழரசி.
உயிரே என்னுள் கரைகின்றாய்
உணர்வெனும் இசையை மீட்டுகிறாய்
பயிரே விளையாக் கானலிலும்
பழந்தமிழ்ப் பயிரைக் காட்டுகிறாய்
தயிரே கடைந்தெழு நெய்யேபோல்
தரணியெங்கும் நின்சுவடாய் எழில்
எயிரே இலங்க நகைத்திடுநல்
இளந்தமிழ்த் தாயாய் வாழ்ந்திடுவாய்
இனிதே,
தமிழரசி.
கந்தம் மேவு கந்தனே
காத் தருள்வாய் என்னையே
பந்தம் மேவு தன்மையால்
பரிதவித்து மாளவோ
பந்தம் மேவ வைத்தவன்
பார்த் திருத்தல் பண்பதோ
சிந்தை மேவு கந்தனே
சிரித்து மகிழல் அழகதோ!
இனிதே,
தமிழரசி.
குறள்: நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது. - 235
பொருள்: இருள் [நத்தம்] போன்றதே கேடும் இறப்பும். நாம் இறந்து போனாலும் உலகில் வாழலாம் [சாக்காடும் உளதாகும்] . அப்படி வாழவல்லவர்க்கு [வித்தகர்க்கு] அல்லாமல் மற்றவர்களுக்கு அச்செயல் அரிதாகும்.
விளக்கம்: இத்திருக்குறள் புகழ் எனும் அதிகாரத்தில் ஐந்தாவது குறளாக இருக்கிறது. ஒருவர் இறந்த பின்பும் எப்படி உயிர் வாழலாம்? என்னும் கேள்விக்கான விடையை இக்குறள் சொல்கிறது. இறந்த பின்பும் வாழமுடியுமா? இறந்த பின்பும் வாழும் வித்தையை அறிந்த வித்தகர்க்கு அது முடியும் என்கிறார் திருவள்ளுவர். அத்தகைய வித்தகர் யார்? அந்த வித்தை தான் என்ன?
நமது உடல்வாழ உயிர் வேண்டும். எம் உடலோடு சேர்ந்து வாழ்வதால் உயிருக்குப் பயன் ஏதும் உண்டா?
“ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு” - 231
என்று திருவள்ளுவரே புகழ் அதிகாரத்தின் முதலாவது குறளில் சொல்கிறார். அதாவது பிறருக்குக் கொடுத்து அடையும் புகழ் அல்லாமல் வேறு பயன் உயிருக்கு இல்லையாம்.
எவ்வளவுக்கு எவ்வளவு பிறருக்குக் கொடுக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு புகழ் பெறலாம். கொடை எனும் வித்தையை அறிந்தவரே புகழ் அடைவர். ஊன் உடம்பு அழியினும் புகழுடம்பு அழியாது நிலைத்து நிற்கிறது. புகழுடம்பை நிலைபெறச் செய்வோரே வித்தகராய் வாழ்வர்.
எடுத்துக்காட்டாக திருவள்ளுவர் தமிழருக்காக கொடுத்துச் சென்ற பெரும் கொடையாம் திருக்குறளைச் சொல்லலாம். இரண்டாயிர வருடங்கள் சென்றும் அவரின் பெயரும் புகழும் இவ்வுலகில் நிலைத்து நிற்பதற்கு திருக்குறளே காரணம். அதனால் இத்திருக்குறள் சொல்வதற்கு அமைய இறந்த பின்பும் வாழும் வித்தகராய் திருவள்ளுவரும் காட்சி தருகிறார்.
இல்லாதோர்க்கு பொருளைக் கொடுத்து, உணவைக் கொடுத்து, படிக்கும் மாணவர்க்கு நூல்களைக் கொடுத்து, படமெடுத்து முகநூலில் போடுவது கொடை ஆகுமா? அதனால் புகழ் வருமா? வந்தாலும் அது எவ்வளவு காலம் நிலைத்து நிற்கும்? என்பதை இன்றைய புலம்பெயர் தமிழராகிய நாம் சிந்திப்பது நன்மையைத் தரும்.
பொன்றாது அதாவது என்றும் அழியாது நிற்பது புகழாகும். அப்புகழை அடைய கொடையாளியாய் இருக்கவேண்டும். பொருளை, பணத்தை, உணவை கொடுப்பது மட்டும் கொடையல்ல. எவராயினும் தன்னலம் அற்றுப் பிறருக்கு தன்னிடமுள்ள அறிவை, ஆற்றலை, அன்பை, பண்பை, வீரத்தை, வித்தையை, கல்வியை, செல்வத்தை தேவையான நேரத்தில் கொடுப்பதே கொடையாகும். அதுவே ஈகை.
கற்பூர தீபங்களாய் உயிர்க்கொடை ஈந்த மாவீரர் யாவரும் இத்திருக்குறளுக்கு அமைய இறந்த பின்பும் புகழுடம்பில் வாழும் வித்தகர்களே.
இனிதே,
தமிழரசி.
காற்றே என்றன் கதைகேளு
கவிதையிற் சொல்வேன் உனக்காக
மாற்றாள் தாயின் மகனாக
மண்ணை நினைத்த மானிடரும்
ஊற்றாய் பாய்ந்து நிலந்னனைத்து
ஊருகள் யாவும் செழிப்புறவே
ஆற்றா தோடிக் களித்தநல்
ஆறுகள் யாவும் சிதைத்திட்டார்
ஆற்றின் அருகே நிழல்கவித்த
அழகு மரங்கள் அறுத்தெடுத்தார்
ஆற்றின் மருங்கே பாய்விரித்த
அருங்குரு மணலும் அரித்தெடுத்தார்
போற்றி இயற்கையைப் பேணாதே
பொழுதைக் கழித்து மகிழ்கின்றார்
காற்றில் உள்ள நீரினையும்
களவு கொண்டு களிக்கின்றார்
காற்றே உன்றன் தினமெனவே
காகிதத் தெழுதி வைத்தே
ஆற்றும் ஆய்வு அறிவாயோ
ஆறறி வுள்ள மானிடரே
காற்றே நின்றன் நீரினையும்
கறந் தெடுத்து குடித்திட்டு
காற்றாம் கனலிடை மாய்வாரோ
கதறும் எனதுளம் ஆற்றாயோ!
இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
ஜூன் மாதம் 15ம் திகதி உலகக் காற்றின் தினம். உலகின் எந்த நாட்டில் காற்று தூய்மையாக இருக்கிறது? காற்றில் இருக்கும் நீரையும் பிரித்து எடுத்து குடிக்கின்றனர். இன்னும் சில வருடங்களில் அது உலகெங்கும் நடைமுறைக்கு வரும். அப்போது அனற்காற்று வீசும். அனற்காற்றில் மரங்கள் எரிவது போல மானுடமும் மாயப்போகிறதா?
பண்டைத் தமிழர் பனிக்காலத்தில் [fog] பயணம் செய்யும் பொழுது செம்பு வலையை விரித்து வைத்து அதில்படியும் நீரை அருந்தியதாக நெடுந்தொகைப் பாடல் ஒன்று சொல்லும். அவர்கள் காற்றிலிருந்து பிரித்து எடுக்கவில்லை.