Saturday, 14 November 2020

கனிவது காயா! பழமா!!


கனிவது காயா பழமா
            காய்வது நீரா நெருப்பா
தனிவது இயல்பா இறையா
            தேய்வது பிறையா ஒளியா
நனிவது வம்பா அன்பா
            நோய்வது உடலா உளமா
துனிவது இகழா அழகா
            தோய்வது இரவா பகலா
இனிதே,
தமிழரசி.

சொல் விளக்கம்:
தனிவது - ஒப்பில்லாதது
இயல்பு - இயற்கை
நனிவது - பெருகுவது
நோய்வது - வருந்துவது
துனிவது - கோபப்படுவது
தோய்வது - செறிவது

Monday, 9 November 2020

நேயத்தை உன்பால் வைத்தேன்!


நேயத்தை உன்பால் வைத்தேன்

நெஞ்சமே கோயிலாய் கொண்டாய்

காயத்தே நோய்கள் தீண்டி

கனலிடைக் கருகல் காணாய்

தேயத்தே வாழும் மாந்தர்

தொல்வினை தீர்த்து வைப்பாய்

மாயத்தை தொழிலாய்க் கொண்டாய்

மறந்திடல் அழகோ சொல்வாய்

இனிதே,

தமிழரசி.

கொஞ்சிக்கொஞ்சி மகிழநின்றேன்



கொட்டமிடும் கோகிலங்கள்

கூவையிலே எழுந்திருந்தேன் 

மொட்டவிழ்ந்து பூவிரிய 

மனங்களித்துப் பார்த்திருந்தேன்

நெட்டநெடு மரமீதில்

நாகணவாய் பேசக்கேட்டேன்

வட்டமிடும் தோகைமயில்

வண்ணநட மாடக்கண்டேன்

கிட்டவந்த பச்சைக்கிளி

கொஞ்சிக்கொஞ்சி மகிழநின்றேன்

இனிதே,

தமிழரசி.


Tuesday, 20 October 2020

எங்கெலாம் தேடுவன் எனைமறந்தே!


எங்கெலாம் தேடுவன் எனைமறந்தே
                ஏக்கம் தீரவே உனையே
கங்குல் பகலெலாம் அலைந்தே
                காடு மேடெலாம் விரைந்தே
தங்குமிடம் ஏதுமே இன்றீ
                தாயே யுனை நினைந்தே
பொங்குமின்ப ஆசையில் நனைந்தே
                பொற்பதம் காணுவன் அணைந்தே
இனிதே,
தமிழரசி.

Monday, 7 September 2020

முருகா என்று ஒருமுறை சொன்னேன்

 

முருகா என்று ஒருமுறை சொன்னேன்

            உருகிடும் உள்ளத் துணர்வுடன் ஒன்றி

பருகிடத் தந்தாய் பைந்தமிழ் இன்பம்

            பழமுதிர் சோலைக் காட்டகம் தன்னில்

திருநிறை முதுமையும் திகழொளிர் மேனியும்

            துலங்கிட வந்த பழமையை எண்ணி

வருவாய் என்றே வயலூர் வந்தேன்

            வந்தருள் தருவாய் வயலூர் மன்னி!

இனிதே,

தமிழரசி.

Sunday, 6 September 2020

நானிலம் எங்கும் நோயறவே!



பூமகள் தேவி பதந்தனைப் போற்றி

பண்ணினில் பாடல் பழகி வாரீர்

காமகள் காளி களத்திடை நின்று 

காட்டிய வீரம் கற்றிட வாரீர்

பாமகள் வாணி பயின்றநல் வீணை

பக்குவம் தன்னைப் படித்திட வாரீர்

நாமகள் தாளிணை நயந்திட வாரீர்

நானிலம் எங்கும் நோய் அறவே!

இனிதே,

தமிழரசி.

Tuesday, 28 July 2020

ஞானமா! அறிவா! எது சிறந்தது?


ஞானமும் அறிவும் வேறு வேறானவை. இயல்பாக ஒவ்வொரு உயிரிடமும் இருப்பது ஞானமாகும். அது பிறவி தோறும் வரும். அறிவு கற்பதாலும் கேட்பதாலும், காண்பதாலும், உணர்வதாலும் நீட்சியடையும். கற்காது பெற்ற அறிவை பட்டறிவு என்றும் சொல்வர். சிறுவயதில் கற்க முடியாது துன்பப்பட்டு, இடிபட்டு, அடிபட்டு, வறுமைப்பட்டு, நோய்வாய்ப்பட்டு, பெறுகின்ற அதாவது வாழ்க்கைப் போராட்டம் தருகின்ற அறிவு பட்டறி

மனிதனுக்கு மனிதன் ஞானம் வேறுபடும். ஒரு வகுப்பில் உள்ள எல்லா மாணவர்க்கும் ஆசிரியர் ஒன்றையே கற்பிப்பார். ஆனால் அதனை உள்வாங்கும் தன்மை மாணவர்க்கு மாணவர் மாறுபடுகின்றது. அதற்குக் காரணம் ஞானமே. சிலருக்கு இசை இயல்பாகவே வரும். அதனை இசைஞானம் என்பர். அதுபோல் ஆடல், பாடல், கணிதம், விஞ்ஞானம், விளையாட்டு என ஒவ்வொன்றையும்  நுண்ணிதின் உணரும் தன்மை வேறுபடுகின்றதல்லவா! அதுவே ஞானம்.

ஞானத்திற்கும் அறிவுக்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துக்காட்டவே ஞானப் பழத்தை பெற முருகன் உலகை வலம் வந்த கதையைக் கூறுவர்.

சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் நால்வரும் கைலாயமலையில் வாழ்ந்தனர்அங்கே நாரத முனிவர் வந்தார். அவர் ஒரு ஞானப்பழத்தைக் கொண்டுவந்தார். அப்பழத்தை சிவனிடம் கொடுத்துஇது ஒரு ஞனப்பழம். இதை உண்பவர் உலகிலே ஞானம் மிகுந்தவராக இருப்பார். எனவே இப்பழத்தை வெட்டாது முழுவதும் உண்ண வேண்டும்" என்றார். 

சிவன் பார்வதியிடம் பழத்தைக் கொடுத்தார். பழத்தைக் கண்ட முருகனும் பிள்ளையாரும்  பார்வதியிடம் ஓடிவந்து தங்களுக்கு தரும்படி அழுதனர். ‘இது ஞானப்பழம். இதனை ஒருவர் தான் உண்ண வேண்டும். எனவேஉங்கள் இருவரில் இவ்வுலகை சுற்றி முதலில் வருபவருக்கு இந்த ஞானப்பழம் கிடைக்கும்என்றார். உடனே முருகன் மகிழ்வுடன் தனது மயில் வாகனத்தில் ஏறி உலகைச் சுற்றிவரப் பறந்து சென்றார்.

பிள்ளையாரின் வாகனமான எலியில் ஏறி உலகைச் சுற்றி முதலில் வரமுடியுமா? என்ன செய்யலாம் என பிள்ளையார் சிந்தித்தார். தான் முதலில் கண்ட உலகம் தாய், தந்தையர் அல்லவா! என எண்ணி சிவனையும் பார்வதியையும் சுற்றி வந்து வணங்கி நின்றார். அவர்களும் பிள்ளையாரின் செயலைக் கண்டு மகிழ்ந்து அவருக்கு ஞானக்கனியைக் கொடுத்தனர். அவர் அக்கனியை உண்டதால் ஞானத்திற்கு தெய்வம் ஆனார்.

மயில் வாகனத்தில் ஏறி உலகை சுற்றி வந்த முருகன் பிள்ளையார் ஞானப்பழம் உண்பதைக் கண்டு மிகக்கோபம் கொண்டார். தனது உடைகளைக் கழற்றி எறிந்தார். ஒரு சிறு துண்டைக் கோவணமாகக் கட்டிக் கொண்டு மலையின் மேல் ஏறி ஆண்டியாக நின்றார். [உலக இன்பங்களை துறந்து பிச்சை எடுத்து உண்போரை ஆண்டி என்றும் கூறுவர்]. அதைக் கண்ட சிவனும் பார்வதியும் முருகனிடம் சென்றுஎங்கள் பழம்நீ அல்லவா!”, “தந்தைக்கு ஓம் என்ற மந்திரப் பொருளை உரைத்த ஞானப் பழம்நீ அல்லவா! உனக்கு எதற்கு ஞானப்பழம் எனக்கூறி முருகனின் கோபத்தை நீக்கினர். முருகனைப் பழம்நீ என்று அழைத்ததால் அந்த மலையை பழனிமலை என்கிறோம். 

முருகன் அறிவுள்ளவன். உலகத்தை படித்தவன். உலகத்தைப் படைத்தவன். உலகத்தை சுற்றிவர அவனால் முடிந்தது. பிள்ளையார் ஞானம் உடையவர். அவரால் தன் தாய் தந்தையரே உலகம் என்பதை நுண்ணிதின் உணர முடிந்தது. இதில் எது சிறந்தது? ஞானமா? அறிவா? அறிவு நீளும். ஞானம் நாம் கொண்டுவந்த அளவே இருக்கும். அதன் கொள்ளளவு ஆளுக்காள் வேறுபடும். நம் அறிவின் ஆற்றலையும் மாற்றும் ஆற்றல் ஞானத்திற்கு இருக்கிறது.

சிவனிடம் நாரதர் ஞானப்பழத்தைக் கொடுத்தார் என்பதே நம்பிக்கை. அந்தக் கதையை நாடகமாக நடித்தவர்கள் ஞானப்பழத்திற்கு எங்கே போவார்கள்? அப்படி ஒரு பழம் எங்கேயும் காய்க்கின்றதா? ஆதலால் நாடகங்களுளில் மாங்கனியைக் கொடுத்து நடித்தனர். சினிமாப்படம் எடுத்தோரும் நாரதர் மாம்பழத்தைக் கொடுப்பதாக படமெடுத்தனர். அதனால் ஞானப்பழமான பிள்ளையார் மாம்பழம் உண்டதாகக் கதை சொல்கிறோம். 

இனிதே,

தமிழரசி