Wednesday, 15 January 2020
Sunday, 5 January 2020
Friday, 3 January 2020
Tuesday, 31 December 2019
வாராய்! புத்தாண்டே! வாராய்!!
கீற்றென மின்னல் மின்னிட
கொட்டியே மேகம் முழங்கிட
ஆற்றினில் அருவி பாய்ந்திட
ஆனந்த வெள்ளம் தவழ்ந்திட
காற்றினில் கீதம் பரவிட
கானகம் மெல்ல விழித்திட
போற்றியே உயிர்கள் களித்திட
பொன்னும் மணியும் பொலிந்திட
நாற்றிசை எங்கும் புகழ்ந்திட
நன்றாய் நம்மவர் வாழ்ந்திட
வெற்றியே என்றும் சூழ்ந்திட
வாராய்! புத்தாண்டே! வாராய்!
இனிதே!
தமிழரசி.
Thursday, 12 December 2019
Sunday, 1 December 2019
Saturday, 16 November 2019
கறிவேப்பிலையா? வேப்பிலையா?
என்ன இலை? கண்டுபிடி!
பன்னெடுங்காலமாகப் பயன்படும் உண்மையான கறிவேப்பிலை
பன்னெடுங்காலமாகப் பயன்படும் உண்மையான கறிவேப்பிலை
உலக இயற்கையானது உயிர்கள் யாவும் வாழத்தேவையான உணவைத் தன்னகத்தே கொண்டுள்ளது. உயிர்கள் எவையும் உணவின்றி உயிர் வாழா. உயிர்களின் உடம்பானது உணவை முதலாகக் கொண்டு வாழ்வதை புறநானூற்றில் குடபுலவியனார் எனும் புலவர்,
"உண்டி முதற்றே உணவின் பிண்டம்"
- (புறம்: 18: 20)
என அழகாகக் கூறிச்சென்றுள்ளார்.
மனிதனின் பகுத்தறிவு உலக உயிர்களில் இருந்து அவனை வேறுபடுத்தி வைத்துள்ளது. பண்டைய மனிதன் தனக்கு வேண்டிய உணவு வகைகளில் எவை நல்லவை எவை கெட்டவை என்பதைப் பகுத்து அறிந்து கொண்டான். மனித இனங்கள் பகுத்தறிவின் வளர்ச்சிக்குத் தகுந்தபடியும் சுற்றுச்சூழலின் இசைவாக்கத்துக்கு ஏற்றவாறும் தத்தமது உணவு முறைகளை வகுத்துக் கொண்டன.
தமிழினமும் உலகத்தில் வாழும் மனிதர் யாவரும் நோயற்று நீண்டகாலம் வாழத் தேவையான நல்ல உணவுகளைக் கண்டறிந்து கொடுத்ததில் பெரும்பங்கு ஆற்றியுள்ளது. அதனை 2400 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட தொல்காப்பியம்
"மெய்தெரி வகையின் எண்வகை உணவின்
செய்தியும் வரையார்"
- (தொல்: மமரபியல்: 79)
எனக் கூறுவதால் அறியலாம். அது மட்டுமல்ல குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலத்திற்கும் உரிய உணவுகளை வகைப்படுத்தி வைத்திருந்தனர். ஒன்றுக்கொன்று மாறுபாடு இல்லாத உணவை உண்பதால் எமது உயிருக்கு கேடு வராது என்பதையும் நம்முன்னோர் அறிந்திருந்தனர். திருவள்ளுவர் தமது திருக்குறளில்
"மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு"
- (குறள்: 945)
என அதைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
திப்பிலி, இஞ்சி, மஞ்சள், மிளகு, கறுவா, ஏலம், கராம்பு, மா, பலா, வாழை எனத் தமிழினம் உலகிற்கு வழங்கிய உணவுவகைகளைப் பெரும் பட்டியல் இடலாம். சங்க காலத்திற்கு முன்பே பண்டைத் தமிழர் மிளகைக் 'கறி' என அழைத்தனர். கறியை [மிளகை] உலகநாடுகளுக்குப் பண்டைத் தமிழர் ஏற்றுமதி செய்தனர். கறி[மிளகு] போட்டு சமைத்ததால் கறி ஆயிற்று. கறி எனும் சொல் உலகமொழிகளிலெல்லாம் வழங்கி வருவது தமிழன் உலகிற்குக் கொடுத்த உணவுக் கொடையின் உச்சம் எனலாம். அக்காலம் தொடக்கம் தமிழரின் உணவில் கறி இருக்கிறது. கறி சமைக்கும் போது தாளித்துப் போடுவோம். கறிவேப்பிலை இல்லாமல் ஒரு தாளிதமா?
சங்க காலத்தில் புதிதாகத் திருமணம் முடித்த இளம்பெண் தன் கணவனுக்கு சமைத்துப் பரிமாறியதை குறுந்தொகையில் கூடலூர் கிழார் எனும் புலவர்
"முளிதயிர் பிசைந்த காந்தண் மென்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
தான்துழந் திட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே"
- (குறுந்தொகை:167)
புளித்த தயிரைப் பிசைந்த கையைக் கழுவாது பட்டுச்சேலையில் துடைத்து, சேலையை [இடுப்பில்] செருகிக் கொண்டு தாளிதப்புகை கண்ணில் மணக்கத் தான் துழாவிச் சமைத்த புளிக்குழம்பை 'இனிது' என்று கூறி கணவன் உண்ண அவளது முகத்தில் மெல்லிய மகிழ்ச்சி இழையோடியதை படம்பிடித்து வைத்திருக்கிறார். இதில் வரும் குய்ப்புகை என்பது தாளிதப்புகையாகும்.
கஞ்சகம் என்பது கறிவேப்பிலை. கறிவேப்பிலை போட்டதை
"கஞ்சக நறுமுறி அளைஇ"
- (பெரும்பாணாற்றுப்படை:328)
எனப் பெரும்பாணாற்றுப்படை சொல்கிறது.
தமிழர் 2400 வருடங்களுக்கு மேலாக கறிவேப்பிலைக்யைப் போட்டுத் தாளித்து சமைக்கின்றனர். இவ்வளவு நீண்ட வரலாற்றைக் கொண்ட கறிவேப்பிலை எங்கே போயிற்று? உலக சந்தையில் எப்போது போலிக் கறிவேப்பிலை வந்தேறியது? யாருக்காவது தெரியுமா? கொஞ்சக்காலமாக எமக்கு உண்மையான கறிவேப்பிலை கிடைப்பதில்லை. இன்று சமையலில் தாளிப்பதற்காக கறிவேப்பிலையைப் போட்டேன். எனக்கு வேப்பிலை மாதிரித் தெரிந்தது.
தாளிதத்துள் போட்ட போலிக் கறிவேப்பிலை
கறிவேப்பிலை என விற்கப்படுவது
இப்படங்களில் இருப்பவை கறிவேப்பிலையா? வேப்பிலையா? என்ன இலை? தற்போது உலகெங்கும் நம்மவர்கள் சந்தைப்படுத்தி விற்கும் இலை; வேப்பிலையும் இல்லை கறிவேப்பிலையும் இல்லை. இதனை மானுடநேயம் கருதி எழுதுகிறேன். கறிவேப்பிலையின் இலையில் என்றுமே நெளிவுகள் இருந்ததில்லை. மிக மிக நுட்பமாக மெல்ல மெல்ல, கொஞ்சம் கொஞ்சமாக கறிவேப்பிலையுடன் கலந்து சந்தைப்படுத்தி இப்போது அதனையே கறிவேப்பிலை எனக்கூறி விற்பனை செய்கின்றனர். இதனால் எமக்கு வரப்போகும் பக்க விளைவுகள் என்ன? சிந்திக்கவேண்டிய நிலையில் நுகர்வோர் ஆகிய நாம் இருக்கின்றோம். இந்தச் சந்தைப் படுத்தலை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மனிதநேயம் உள்ளோர் யாவருக்கும் இருக்கின்றது என நம்புகிறேன்.
Googleலார் கூட போலிக் கறிவேப்பிலையை கறிவேப்பிலையாகக் காட்டத் தொடங்கிவிட்டார். Amazonனார் இரண்டையும் விற்பனை செய்கிறார். சிலர் தெரிந்தும் பலர் தெரியாமலும் செய்வதை googleலாரும் Amazonனாரும் அறிவார்களா? Wikiளும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்களும் தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார்கள். கறிவேப்பிலை, போலிக் கறிவேப்பிலை இரண்டையும் ஒன்றென எண்ணிப் போடுகின்றனர். நாம் கடைகளில் வாங்கும் மிளகாய்த் தூளில் கூட போலிக்கறிவேப்பிலை காட்சி தருகிறது. கறிவேப்பிலை எது என்னும் உண்மையை அறியாது போட்டுள்ளனர் என நினைக்கிறேன். அவர்களும் அதனைத் தவிர்ப்பது நன்று.
நம்முன்னோர் கண்பார்வைக் கோளாறுகள் ஏற்படாது 90, 98 வயது வரையும் வாழ்ந்ததற்கு கறிவேப்பிலையும் ஒரு காரணமாகும். தலைமயிர் கருமையாக நன்கு வளர கறிவேப்பிலை எண்ணெயைப் பயன்படுத்தினர். வயிற்றுளைவு, வாந்திபேதி, சிறுநீரகக் கோளாறு, பித்தப்பைக் கோளாறு, நீரழிவு, மூலநோய், போன்றவற்றிற்கு மற்ற மருந்துப்பொருட்களுடன் சேர்த்து கறிவேப்பிலைச் சூரணம் செய்து கொடுத்தனர். கறிவேப்பிலை மரம் மண்ணில் உள்ள கனிமங்களில் தங்கக் கனிமத்தை எடுத்து வைத்திருப்பதால் கறிவேப்பிலை வேரை நாட்டு வைத்தியத்தில் பயன்படுத்தினர். அதனால் கறிவேப்பிலை மரத்தின் இலை, பட்டை, வேர் என யாவுமே மருந்தாகப் பயன்பட்டன.
தமிழர்களால் பல ஆயிரவருடங்களாக உணவாகவும் மருந்தாகவும் பயன்பட்ட கறிவேப்பிலை எப்படி இருக்கும் என்பதை தெரியாது வாழ்கிறோமா? ஏன் இந்த நிலை? கொஞ்சம் சிந்தித்து செயற்படுவோம். எம் இளம் தலைமுறையினருக்கு உண்மையான கறிவேப்பிலையை பாதுகாத்துக் கொடுப்போமா? பணத்துக்காக போலி கறிவேப்பிலை விற்பவர்கள் தயவு செய்து கறிவேப்பிலை என்று கருவேம்பை சந்தைப்படுத்தாதீர்கள். வேம்பும் கருவேம்பும் வேறுவேறானவை. கறிவேப்பிலை வேறு கருவேப்பமிலை வேறு. கருவேப்பமிலையை உணவில் சேர்க்கும் போது வயிற்றுப் பொருமல் ஏற்படும். கறிவேப்பிலை அதனைத் தடுக்கும். கருவேம்பு உணவுப்பொருட்களுடன் மாறுபாடு அடைவதால் வயிற்றுப் பொருமல் ஏற்படுகிறது.
"மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு"
என திருவள்ளுவர் சொன்னது போல போலி கருவேப்பிலையை மறுத்து உண்போமா! உயிர்க்கு ஒரு கேடும் வராது. இன்னும் என்ன என்ன இலைகள் சந்தைக்கு வருமோ! விழிப்போடு இருப்போம்.
இனிதே,
தமிழரசி.
Subscribe to:
Posts (Atom)