Thursday, 29 June 2017
Tuesday, 20 June 2017
Monday, 19 June 2017
தென்னன் தமிழை பார்!
என் பேத்தி - மகிழினி
வண்ண மகளே வா
வடி வழகே வா
உண்ண உணவு பார்
உறங்கத் தொட்டில் பார்
கண்ணின் மணியே வா
காதல் மொழியே வா
கலைகள் பலவும் பார்
கருத்தில் இனிக்கும் பார்
மண்ணின் மலரே வா
மழலை ஞிமிரே வா
மழையின் துளியை பார்
மரத்தின் தளிரை பார்
மரத்தின் தளிரை பார்
விண்ணின் மதியே வா
வெற்றித் திருவே வா
விண்ணின் ஒளியை பார்
விளையும் பயிரை பார்
தண்ணென் முகிலே வா
தாவி யணைக்க வா
தென்னன் தமிழை பார்
தெளிந்த சுவையை பார்
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
ஞிமிறு - தேனி
குறிப்பு:
என் பேத்தி மகிழினிக்கு பாடியது.
04/06/2017
Wednesday, 14 June 2017
மும்மூர்த்திகளுக்கும் கற்றாழம் பூவே கறி!
காளமேகப் புலவர் ‘மும்மூர்த்திகளுக்கும் கற்றாழம் பூவே கறி’ என்று கூறியிருக்கிறார். ஏன்? எதற்கு? அப்படிக் கூறினார் பார்ப்போமே?
காளமேகப் புலவரைப் பார்த்த வேறொரு புலவர் “மும்மூர்த்தி என்று சொல்கின்ற வேதன், அரன், மால் மூவரின் பெயர்களும் வர அவர்கள் சாப்பிடும் கறி, உண்ணும் உணவு, வைத்திருக்கும் ஆயுதம், அணியும் அணிகள், ஏறித்திரியும் ஊர்திகள், வாழும் இடங்கள் யாவும் வர ஒரு வெண்பா பாடச் சொல்லிக் கேட்டார்.
அதற்குக் காளமேகப் புலவரும்
“சிறுவ நளைபயறு நெந்னெற் கடுகுபூ
மறிதிகிரி தண்டு மணி நூல் - பொறியரவம்
வெற்றேறு புள்ளன்னம் வேதனரன் மாலுக்குக்
கற்றாழம் பூவே கறி”
- (காளமேகம் தனிப்பாடல்: 36)
என்ற வெண்பாவைப் பாடினார். அந்தப் புலவரும் காளமேகத்தின் வென்பாவைத் தனிச் சொற்களாகப் பிரித்து
“சிறுவன் அளை பயறு செந்நெல் கடுகுபூ
மறி திகிரி தண்டு மணி நூல் - பொறியரவம்
வெள்ஏறு புள் அன்னம் வேதன் அரன் மாலுக்குக்
கற்றாழம் பூவே கறி”
என்று படித்தார். படித்தவர் திகைத்து ‘மும்மூர்த்திகளுக்கும் கற்றாழம் பூவா கறி!’ என்று கேட்டார்.
காளமேகப் புலவரும் சிரித்துக் கொண்டே ‘பிரமா பயற்றையும், சிவன் பிள்ளைக் கறியையும், திருமால் வெண்ணெயையும் கறியாக தின்றனர். மூவருக்கும் முறையே செந்நெல், நஞ்சு[ஆலகால விடம்], மண் உணவாகும். தண்டம், மறி, சக்கரம் ஆயுதமாகும். பூணூல், புள்ளியுள்ள பாம்பு, கௌத்துவமணி அணியாகும். அன்னம், வெள்ளை ஏறு, கழுகு வாகனமாகும். தாமரைபூ, கைலைமலை, பாற்கடல் வாழும் இடமாகும்’ என்று சொன்னார். அதனைக் கேட்ட புலவரும் மகிழ்ச்சியடைந்தார்.
பிரமா[வேதன்] | சிவன்[அரன்] | திருமால்[மால்] | |
கறி | பயறு | பிள்ளை[சிறுவன்] | வெண்ணெய்[அளை] |
உணவு | செந்நெல் | நஞ்சு[கடு] | பூமி[கு] |
ஆயுதம் | தண்டம்[தண்டு] | மான்மறி[பூமறி] | சக்கரம்[திகிரி] |
அணி | பூணூல்[நூல்] | பாம்பு[பொறியரவம்] | கௌத்துவமணி[மணி] |
ஊர்தி | அன்னம் | வெள்ளைஏறு[வெற்றேறு] | கழுகு[புள்] |
வாழுமிடம் | தமரைப்பூ[பூ] | கைலைமலை[கல்] | பாற்கடல்[தாழம்-தாழி] |
இனிதே,
தமிழரசி.
தமிழரசி.
Sunday, 11 June 2017
உழைப்பே தலை!
ஒருவனைப் பார்த்து அவன் பெரிய உழைப்பாளி என்று பெருமையாகப் பேசுகிறோம். அதுபோல் இன்னொருவனை ஒரு உழைப்பும் இல்லாமல் துன்பப்படுகிறான் என்றும் சொல்கிறோம். உழைப்பு என்றாலே துன்பப்படுதல் அல்லது வருந்துதல் என்ற கருத்தைத்தான் தரும். எந்த வேலையும் துன்பம் தரும் தானே.
அவன் பெரிய உழைப்பாளி என்னும் பொழுதும் அவன் பெரிதாகத் துன்பப்படுகிறான் என்றே சொல்கிறோம். அவன் படுந்துன்பம் அவனுக்குப் பொருளைப் பணத்தைத் தருகிறது. அதனால் அவனை மதிக்கிறோம். உழைப்பு இல்லாமல் இருப்பவன் உண்மையில் துன்பப்படவில்லை. பொருள் இல்லாமையே அவன் படுந்துயரமாகும். ஆதலால் துன்பப்படுவதே தலைசிறந்தது என்பது நம்மவர் கண்ட முடிவாகும். துன்பப்படுவதை பார்த்து மகிழ்வது வியப்பைத் தரவில்லையா? மனிதமனம் இத்தகைய ஒரு புதுமையான கலவையாக இருப்பது அற்புதமே!
'உழைப்பு' என்னும் சொல் 'உழப்பு' என்னும் சொல்லில் இருந்து பிறந்த சொல்லாகும். தொல்காப்பியத்தில் உழப்பு என்ற சொல் இருக்கிறது. நாம் வெளிநாட்டிற்கு வந்து துன்பப்படுவது போல இரண்டாயிரத்தி ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டிற்கு பொருள் தேடிச்சென்றவன் தான் சென்ற நாட்டில் பட்ட துன்பத்தை மிகவும் விளக்கமாகக் கூறுவதை தொல்காப்பியர்
“சென்ற தேஎத்து உழப்பு நனிவிளக்கி”
- (தொல்: பொ:144: 51)
என்கிறார். ஆனால் தற்காலத் தமிழராகிய நாம் வெளிநாட்டில் பொருள் தேட எவ்வளவு உழைக்கிறோம்[துன்பப்படுகிறோம்] என்பதை நம் ஊர்களில் இருப்போருக்கு விளக்கிச் சொல்வதில்லை. அது அங்கே பலரை சோம்பி இருக்க வைக்கிறது.
தாயுமான சுவாமிகள் ‘என் உள்ளத்தை அறிவாய்! படுந்துன்பத்தை அறிவாய்! நான் ஏழை, தள்ளிவிடுவீராயின் தவித்துப்போவேன்’ என இறைவனிடம் கூறியதை
“உள்ளம் அறிவாய் உழப்பு அறிவாய் நான்ஏழை
தள்ளிவிடின் மெத்தத் தவிப்பேன் பராபரமே”
தள்ளிவிடின் மெத்தத் தவிப்பேன் பராபரமே”
- (பராபரக் கண்ணி: 33)
என பராபரக் கண்ணி சொல்கிறது. இதில் துன்பப்படுவதை அறிவாய் என்பதை உழப்பு அறிவாய் என்கிறார்.
பட்டினத்தார் துன்பத்தால் வரும் உயர்வையும் துன்பப்படாது சோம்பி இருப்பதால் வரும் இழிவையும் திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் மிக அழகாக எடுத்துக் கூறியுள்ளார்.
“உழப்பின் வாரா உறுதிகள் உளவோ
கழப்பின் வாராக் கையுற வுளவோ”
துன்பப்பட்டு முயல்வதால் கிடைக்காத உறுதிப்பாடுகளும் இருக்கின்றனவா? சோம்பலால் [கழப்பு] கிடைக்காத துன்பங்களும் [கையுறவு] இருக்கின்றனவா? இல்லையே! எனவே உழப்பே தலை! உழைப்பே தலை!!
இனிதே,
தமிழரசி.
தமிழரசி.
Saturday, 10 June 2017
புங்கைநகர் வாழும் எங்கள் புனிதம்மா!
புங்கைநகர் வாழும் எங்கள் புனிதம்மா
பொற்கரந்தனைப் பிடித்தோம் அருளம்மா
தங்கைவருந்தி யுழைப் போரைப் பாரம்மா
தண்ணீர்க்கு வழியுமில்லை ஏனம்மா
செங்கயல் பாயும் செழுங்கழு நீரும்
செந்நெலும் பொலிந்திடச் செய்திடம்மா
நங்கையர் வாழ்வு நாளும் நலியுதம்மா
நம்மின முய்ய நயந்திடம்மா
நம்மின முய்ய நயந்திடம்மா
இனிதே,
தமிழரசி.
தமிழரசி.
Friday, 9 June 2017
பஞ்ச வண்ண அணிலே!
பஞ்சு போன்ற மயிரும் - நல்
பவள மூக்கு முடைய
பஞ்ச வண்ண அணிலே - உன்
பழமை என்ன சொல்வாயா
பஞ்சிக் கால் தன்னிலே - தீம்
பழம் பிடித்து உண்ணும்
பிஞ்சு விரலின் கீறல் - ஏன்
படுவ தில்லை சொல்வாயா
அஞ்சி ஓடும் போதும் - நின்
அழகு கொஞ்சம் கூடும்
எஞ்சி விட்ட பழத்தின் - ருசி
ஏறுவ தேன் சொல்வாயா
குஞ்சம் போல் வாலும் - கருங்
கண்ணு முள்ள அணிலே
கெஞ்சி மெல்ல கேட்கிறேன் - உன்
கொஞ்சு மொழியிற் சொல்வாயா
கொஞ்சு மொழியிற் சொல்வாயா
- சிட்டு எழுதும் சீட்டு 141
இனிதே,
தமிழரசி.
இனிதே,
தமிழரசி.
Subscribe to:
Posts (Atom)