Sunday, 28 May 2017

புங்கை ஊரின் மக்கள் கேளும்!

சேவற் பண்ணை

மண்ணை மதித்து வாழ்ந்த காலம்
மகிழ்ந்து நன்றாய் உண்ட மாந்தர்
பண்ணை என்று என்னைச் சொன்னார்
பாரில் எங்கும் பரவி நின்றேன்!

உண்ண நீரும் உணவும் நல்கி
பண்ணை போலக் கூடி நன்கு
பண்ணை ஆக வாழ்தல் கண்டு
பண்ணை என்றார் பரிந்து நின்றேன்!

பண்ணைப் பாலம் தன்னில் போகும்
புங்கை யூரின் மக்கள் கேளும்!
பண்ணை என்னை மறந்து நீரும்
பாங்காய் செல்லல் கண்டு நின்றேன்!

இண்டை நாளில் எனை மறந்தே
இரவு பகலாய் ஆய்ந்து நன்றாய்
பெண்ணை பண்ணை ஆச்சு தென்று
பேரறிஞர் சொல்ல நாணி நின்றேன்!


பண்ணை

பெண்ணை பண்ணை ஆன தென்றால்
பனையின் பேரை என்ன சொல்வீர்!
பெண்ணை என்பது பனையே ஆகும்
பண்ணை யானோ செடியாய் நின்றேன்!

விண்ணைத் தொட்ட புகழை நண்ணி
வைத்திய ஏடு தோறும் செங்கண்
பண்ணை சேவற் பண்ணை என்றே
பண்ணை பலதாய் பேச நின்றேன்!

பண்ணை என்றன் பூவைக் கொண்டு
பேரை இட்டார் பண்டை சேவற்
பண்ணை யானேன் கோழிக் கொண்டை
பூவே யென்ன கேட்டு நின்றேன்!

வெண்ணெய் கையிலி ருக்க நோய்க்கு
வையம் முழுதும் தேடி ஓடி
எண்ணெய்க் கலையும் மக்கள் நீரோ!
எந்தன் பண்பு சொல்ல நின்றேன்!

கண்புரை [Cataracts]

மண்ணில் பிறந்த உயிர்கள் வாழ
மருந்தாய் தருவேன் எந்தன் உயிரை
கண்ணில் படரும் புரையை நீக்கி
காணும் காட்சி காட்டி நின்றேன்!

பெண்ணின் கருவறை நோயும் குருதிப்
பெருக்கும் போக்கி பெண்மை பேணி
மண்ணில் மைந்தர் பிறக்க வைத்து
மனிதர் போற்ற மகிழ்ந்து நின்றேன்!

பண்ணை என்றன் மேன்மை கண்டே
பண்ணை பண்ணை யாய் உலகோர்
பண்ணை வளர்த்து கோடி கோடி
பணம் பண்ணல் பார்த்து நின்றேன்!

பண்ணை பெற்ற மக்கள் நீங்கள்
பழமை மறந்து நடத்தல் நன்றோ!
பண்ணை விதைகள் தேடி வித்தி
பண்ணை வைத்து வாழ்த்த நிற்பேன்!                                       
இனிதே,
தமிழரசி.


குறிப்பு:
எப்படி யாழ்ப்பாணத்திலுள்ள பண்ணை என்ற இடத்திற்கு ‘பண்ணை’ என்ற பெயர் வந்தது? ஒருகாலத்தில் எம் யாழ்ப்பாணப் பண்ணைப்பகுதி பண்ணைச்செடிகளால் சூழ்ந்து இருந்ததால் அவ்விடத்தை பண்ணை என அழைத்தனர். பண்ணைக்கீரைச்செடி மூலிகைச் செடியில் ஒன்றாகும். அது சிறுபண்ணை, செம்பண்ணை, புற்பண்ணை, சேவற்பண்ணை எனப்பல வகையில் காணக் கிடைக்கிறது. மானாவாரி [மழையை நம்பி பயிர் செய்யும் நிலங்கள்] நிலங்களில் மழைக்காலத்திற்குப் பின்னர் முளைக்கும் செடிவகைகளில் பண்ணைக் கீரைச்செடியும் [Celosia Argentea] ஒன்று. அதனால் நம்முன்னோர் அதனைப் பயிரிட்டனர். பண்ணைச்செடி நம் எல்லோருக்கும் தெரிந்த செடியே. வைத்திய வாகடங்கள் ‘பண்ணை’ என்று கூறும் செடிவகையில் ஒன்று சேவற்பண்ணைச் செடியாகும். அதனை இக்காலத்தில் ‘கோழிக் கொண்டைச் செடி’[CockComb] என்று அழைக்கிறோம். 

நம் முன்னோர் கண், இரத்தம், சிறுநீர் தொடர்புடைய நோய்களுக்கு மருந்தாகப் பண்ணைச்செடியைப் பயன்படுத்தினர். இதன் கீரையை உண்டுவந்தால் மலட்டுத் தன்மை நீங்கும் என்பர். அக்காலத்தில் யாழ்ப்பாணத் தமிழர் வீடுகளில் எல்லாம் இச்செடி நின்றது. இப்போது மருந்துக்கும் கிடைப்பது அரிது. எத்தகைய வரட்சியையும் தாங்கி நிற்கும் தன்மையுடையது.  பல உலகநாடுகள் மருந்துக்காக இச்செடியை வளர்த்து பணம் பண்ணுகின்றன. நாமும் பண்ணையின் பெயரைச் சொல்லி வளர்த்தால் என்ன? பலவகையான பண்ணை விதைகளை  இணையத்தளத்தில் வங்கலாம்.

Thursday, 25 May 2017

எல்லை இல்லை ஐயையோ!


இல்லை இல்லை என்போர்க்கு - ஓர்
எல்லை இல்லை ஐயையோ
எல்லை இல்லா வளம் - உல
கெங்கனும் நிறைந் திருக்க
தொல்லை வாழ்வி தென்று - துடி
துடித்து ஏங்கித் தினம்
பல்லைக் காட்டித் தெரு - ஓர
பிச்சைக் கலை மாதர்
பிள்ளை செய் பிழை - ஏது
பெம்மானே நீ கூறு!
இனிதே,
தமிழரசி.

Wednesday, 24 May 2017

குறள் அமுது - (135)


குறள்:
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்                                     - 420

பொருள்:
செவியில் சுவையை உணராது வாயில் சுவையை உணரும் மனிதர் இறந்தாலும் வாழ்ந்தாலும் என்ன?

விளக்கம்:
இத்திருக்குறள் கேள்வி எனும் அதிகாரத்தின் பத்தாவது குறளாகும். நாம் பிறரிடம் கேட்கும் கேள்விகளைப் பற்றி வள்ளுவர் கூறவில்லை. காதால் கேட்டு அறியும் கேள்வி ஞானத்தையே வள்ளுவர் கேள்வி என்கிறார். 

அவர் இத்திருக்குறளில் மனிதர் சுவைத்து உணரும் இருவேறுவகை சுவைகளைப்பற்றிச் சொல்கிறார். ஒன்று செவிச்சுவை. மற்றது வாய்ச்சுவை. வாய் இனிப்பு, புளிப்பு, உறைப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு ஆகிய அறுசுவையையும் சுவைக்கும்.  செவியால் அப்படிச் சுவைக்க முடியுமா என்றொரு கேள்வி இங்கு எழுகின்றது. மகிழ்வான சொல்லைக் கேட்டு  மகிழ்வதும் கெட்ட சொற்களைக் கேட்கும் போது அருவெறுப்பதும் அதட்டினால் கோபப்படுவதும் திட்டினால் அழுவதும் மானம் இழக்க நேரிடும்போது எரிமலையாய் வெடிப்பதும் எப்படி நிகழ்கின்றன? நாம் கேட்பவனவற்றை செவி சுவைக்க நம் மனநிலை வேறுபடுகின்றது.

வாயின் சுவையை நாக்கு எப்படி சுவைக்கிறதோ அப்படி காதின் சுவையை மனம் சுவைக்கிறது. செவிச்சுவை எமக்கு அறிவை வளர்க்கிறது. வாயின் சுவை உடலை வளர்க்கிறது. மனித வாழ்வுக்கு இவ்விருசுவையும் தேவையே. 

ஆனால் திருவள்ளுவரோ இக்குறளில் சுவையை செவியால் உணராது வாயால் உணர்வோரை ‘மாக்கள்’ என அழைத்து செவிச்சுவைக்கு முதன்மை கொடுத்துள்ளார். அது ஏன்? தாய் தந்தையரோ, நண்பர்களோ, ஆசிரியர்களோ, பிறரோ, எமக்குத் தெரியாதவற்றைச் சொல்வதைக் கேட்கக் கேட்க - செவியால் சுவைக்கச் சுவைக்க எமது அறிவு வளரும். அறிவு வளர வளர சரி பிழை தெரிந்து வாழ்க்கையை நன்கு சுவைத்து வளமாக்கலாம். அதுபோல் அன்பாக அவர்கள் தருவதை உண்ண உண்ண - வாயால் சுவைக்க சுவைக்க  உடல் பெருக்கும். உடல் பெருக்கப் பெருக்க பலவகை நோய்கள் வந்து  ஆட்கொள்ளும். இருந்த இடத்திலேயே இருக்க வேண்டிய நிலை வரலாம்.

அதனால் வாய்சுவைக்கு முதன்மை கொடுப்போரை மாக்கள் என்றார். பகுத்தறிவில்லா மனிதர்களையும் விலங்குகளையும் மாக்கள் என்பர். விலங்குகள் போல உணவை மட்டும் சுவைத்து உண்டு வாழ்வதால் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் வேறுபாடு இருக்காது என்ற கருத்திலேயே மாக்கள் என்று அழைத்துள்ளார். மனிதனாய்ப் பிறந்து விலங்கைப்போல் உண்டு வாழ்வோர் இறப்பினும் வாழினும் என்னாகும்? எதுவித வேறுபாடும் இருக்காது.

விலங்குகிலிருந்து மனிதநிலைக்கு உயரவேண்டுமானால் சுவையைச் செவியால் உணருங்கள் என்கிறார்.

Tuesday, 23 May 2017

அடிசில் 110

கற்றாழைப்பூத் துவையல்
- நீரா - 

தேவையான பொருட்கள்: 
மகரந்தம் நீக்கிய கற்றாழைப்பூ இதழ்கள் - ½ கப்
தேங்காய்ப்பூ  - 1 கப்
செத்தல் மிளகாய்  -  5
தோல் நீக்கிய சின்ன வெங்காயம்  - 5
எண்ணெய் -  2 தேக்கரண்டி
எலுமிச்சம் சாறு - தேவையான அளவு
உப்பு  -  தேவையான அளவு

செய்முறை:

 1. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் கற்றாழை இதழ்களை இட்டு இளம் சூட்டில் பூவின் நிறம் மாறாது வதக்கிக் கொள்க.
2. வதக்கிய இதழ்களுடன் தேங்காய்ப்பூ, செத்தல் மிளகாய், சின்ன வெங்காயம், உப்பு  சேர்த்து  அரைத்துக் கொள்க.

3. அரைத்த துவையலுக்கு எலுமிச்சம் சாறு விட்டு பிசைந்து எடுக்கவும்.

Sunday, 21 May 2017

ஆவாரஞ் செடிக்குள்ளே திருமாலா?


பார்க்கும் இடம் எங்கும் ஆவாரஞ்செடி மஞ்சள் பூசி முகம் மினுக்கி பூத்துக் குலுங்கி நின்றது. அந்த இடத்திற்கு காளமேகப் புலவர் வந்தார். புலவரைக் கண்ட அந்த ஆவாரம் தோட்டத்து சொந்தக்காரன் ‘பொன்னாவரை இலை காய் பூ’ இவற்றை வைத்து ஒரு வெண்பா பாடும்படி கேட்டான். காளமேகப்புலவரும் உடனே ஏட்டையும் எழுத்தாணியையும் எடுத்து

“உடுத்ததுவு மேய்த்ததுவு மும்பர்கோன் றன்னால்
எடுத்ததுவும் பள்ளிக் கியையப் - படுத்ததுவும்
அந்நா ளெறிந்ததுவு மன்பி னிரந்ததுவும்
பொன்னா வரையிலைகாய் பூ” 
                                                - (காளமேகம் தனிப்படல்: 31)
என எழுதிக் கொடுத்தார். வெண்பாவை வாசித்தவனுக்கு எதுவும் விளங்கவில்ல. அவர் மீண்டும் பாடலை பிரித்து எழுதிக் கொடுத்தார். ‘இப்போது படித்துப்பார் புரியும்’ என்றார்.

“உடுத்ததுவும் மேய்த்ததுவும் உம்பர்கோன் தன்னால்
எடுத்ததுவும் பள்ளிக்கு இயையப் - படுத்ததுவும்
அந்நாள் எறிந்ததுவும் அன்பின் இரந்ததுவும்
பொன் ஆ வரை இலை காய் பூ”
படித்துப் பார்த்தான் புரியவில்லை. ‘என்னங்க புலவரே! நான் சொன்ன சொற்களுக்கும் உடுத்ததுவுக்கும் மேய்த்ததுவுக்கும் என்ன தொடர்பு? யார் உடுத்தா? யார் மேய்த்தா? நீங்க எழுதிய வெண்பாவின் கருத்தை சொல்லுங்க’ என்றபடி தன் தலையைச் சொறிந்தான்.

உடுத்தது - பொன்
மேய்த்தது - [பசு]
உம்பர்கோன் தன்னால் எடுத்தது - வரை [மலை]
பள்ளிக்கு இயையப் படுத்தது - இலை
அந்நாள் எறிந்தது - காய்
அன்பின் இரந்தது - பூ

திருமால், பொன்னாலான பீதாம்பரம் என்னும் பட்டை உடுத்தவன். கிருஷ்ண அவதாரத்தில் - பசுக்களை மேய்த்தவன். தேவர்களின் அரசனான இந்திரன் மழையைப் பொழிவித்த போது உயிர்களைக் காக்க வரையை - கோவர்த்தனமலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்தவன். பிரளயத்தின் போது ஆல் இலையில் பள்ளி கொண்டவன். கன்றை சிறு தடிபோல[குணில்] எறிந்து விளாங்காய் பறித்தவன். வாமன அவதாரத்தில் தானே விரும்பிச் சென்று மாபலியிடம் பூவுலகை இரந்து பெற்றவன்.

காளமேகம் சொன்னதைக் கேட்டதும் ‘இவ்வளவும் திருமாலானவர் செய்தாரா! நான் வளர்க்கும் இந்த ஆவாரஞ்செடி பற்றி தெரிந்து கொள்ள நினைத்தேன். ஆவாரஞ் செடியுக்குள்ள திருமாலையே வைத்துவிட்டீங்க’ என்றான். 

ஆவாரஞ் செடி என்று பொன்னாவரையைச் சொல்வர். 
இனிதே,
தமிழரசி.

Thursday, 18 May 2017

முள்ளி வாய்க்கால் எங்குமே!


முள்ளி வாய்க்கால் எங்குமே
          மோனநிலை கலையுதே
அள்ளி வீசும் காற்றுமே
          அனலையள்ளி வீசுதே

வெந்த நெஞ்சம் யாவுமே
          வேதனையில் மாளுதே
பந்த பாசம் யாவுமே
          பாறிமெல்லப் போனதே

கிள்ளிப் போட்ட குண்டுமே
          கொத்துக்குண்டாய் ஆனதே
கொள்ளித் தீயாய்ச் சிதறியே
          கொழுந்துவிட்டு எரிந்ததே

வெள்ளி முளைக்கும்  நேரமே
          விண்ணதிரப் பாய்ந்துமே
பள்ளி கொண்ட பாலரை
          பதைபதைக்க கொன்றதே

துள்ளி வந்த எரியுமே
          துடிதுடிக்க மாய்த்ததே
தள்ளி நின்ற பனையுமே
          தன்கதையைச் செப்புதே

செத்த உடல் மீதமே
          செய்திபல சொல்லுதே
கத்து கடல் ஓதமே
          தத்திநின்று கதறுதே

முள்ளி வாய்க்கால் எங்குமே
          முழங்குதே வாய்மையே
அள்ளி வீசும் காற்றுமே
          அன்பைக்கொஞ்சம் காட்டுமா!
                                        
இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
முள்ளிவாய்க்காலுக்கு 2015ல் சென்ற பொழுது எழுதியது.

Monday, 15 May 2017

தோழமை ஒன்றே தோள் கொடுக்கும்

மூண்டெழு துன்பங்கள் முழுமையும் நீக்கும்
          முழுமுதலாம் எந்தை முக்கண்ணன் மகனை
நீண்டெழு பிறப்பறுக்க நித்தமும் தொழுவோர்க்கு
          நற்கருணை அருள் நயன ஒளிதன்னால்
மீண்டெழு பிறவிதனை பிறவாதே காத்து
          மிண்டு மனத்தோர் முண்டு அகற்றி
தீண்டெழு சுடராய்த் தோன்றும் அவன்
          தோழமை ஒன்றே தோள் கொடுக்கும்
இனிதே,
தமிழரசி.