Saturday, 25 October 2014

மனிதன் வாழ்வாங்கு வாழ

- எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன் -

மனிதன் வாழ்வாங்கு வாழ முதலில் தேவையானது அழகோ - பொருளோ - கல்வியோ அல்ல. நல்ல பண்பட்ட மனமும் நோய் இல்லா உடலுமேயாம். பண்பட்ட மனதை உருவாக்கும் வல்லமை அவரவர் கையிலேயே இருக்கின்றது. 

அதற்கு பெரியோர் நேயம் மிக மிக அவசியம். நிலத்தை உழுது மண் வளத்தை பண்படுத்தல் போல மனதை உழுது உளத்தை பண்படுத்த வேண்டும். மண்ணில் உள்ள கல் - முள் - வேண்டாத செடி, கொடி  போன்றவற்றை எடுத்து எறிந்து உழவர் பண்படுத்துவரே! அதே வேலையை நாம் நம் உளத்திற்கும் செய்ய வேண்டும். நம்மிடம் உள்ள இழிவான போட்டி - பொறாமை - வஞ்சனை - சூது - வாது - காமம் - கோபம் - மூர்க்கம் - பேராசை யாவற்றையும் தூக்கி குப்பையோடு குப்பையாகப் போட்டு எரித்துவிட வேண்டும். அப்படி பக்குவப் படுத்திய மனதில் அன்பை - கருணையை - பரிவை - காதலை - பக்தியை - அமைதியை - வீரத்தை - தீரத்தை வளர்த்துக் கொண்டால் உள்ளம் எங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பாய்ந்தோடும். அந்த வெள்ளத்தில் தழைத்த இன்ப மலர்கள் வாழ்க்கையின் வசந்தமாய் வீசும்.

“சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்” நன்கு சித்திரம் வரையும் எமக்கே சித்திரம் பற்றி சொல்வதாக எண்ணற்க. இப்பழமொழி சொல்வது வாழ்க்கைச் சித்திரம். நாம் வாழும் வாழ்வை ஒவ்வொரு கணமும் சித்திரமாக வரைந்தபடி இருக்கின்றோம். வாழ்வெனும் சித்திரத்தை மிக அழகாக வரைய உடல் தேவை. அதற்கு நோயற்ற  உடல் வேண்டும். அளவான நித்திரை - அளவான உணவு - அளவான உடலுழைப்பு இருக்க வேண்டும். எதுவும் அளவு மீறிப் போகக் கூடாது.
“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று”

வளி - காற்று. வளி முதலா எண்ணுதல்: வாதம் - பித்தம் - கபம் [சிலோத்துமம்] என கையின் நாடித்துடிப்பை எண்ணுதல். வாதம் அது வளி - வாயுவால் வருவது, பித்தம் அது அழல் - சூடு - சூட்டால் வருவது. கபம் அது சேடம் - நீர்த்தன்மையான தாதுக்களால் வருவது. இந்த மூன்று நாடிகளில் துடிப்பின் எண்ணிக்கை கூடினும் குறையினும் நோய் உண்டாகும். 

அத்துடன் வள்ளுவர்
“அற்றால் அளவறிந்து உண்க அஃதுஉடம்பு
பெற்றன் நெடிதுய்க்கும் ஆறு”
எனவும் “துய்க்க துவரப் பசித்து” எனவும் சொல்வர். உண்ட உணவு அற்றுப்போய் நன்றாகப் பசித்த பின்னர் உண்ண வேண்டுமாம். அதுவும் அளவோடு - உண்ணும் அளவை அறிந்து உண்ண வேண்டுமாம்.

படிப்படியாக ஏறி உயரவேண்டும். கல்வியோ, பொருளையோ தேடுதலில், தன்னைப் பேணிக் கொண்டு - தானாகிய முதலைப் பாதுகாத்துக் கொண்டு - நடக்கவேண்டும். நல்ல நண்பர்களையும் பெரியோர்களையும் தேடிக்கொள்ளலும் ஒரு பெரிய செல்வந்தான். மனிதரில் பதரில்லை. எவர்களையும் வெறுக்காது, பகையை வளராது, விரோதம் பாராட்டாது, ஒப்புரவொழுகிப் பழக வேண்டும். ஆபத்துக்கு உதவுவோரை நன்றிமறவாது நினைத்து வாழவேண்டும். என்ன இவை எல்லாம் எமக்குத் தெரியுந்தானே என்று நினைக்க வரும். என்றாலும் மீட்டுப்பார்பதும் நன்றல்லவா?

குறிப்பு:
நான் இங்கு வந்ததன் பின் எனக்கு என் தந்தை [பண்டிதர் மு ஆறுமுகன்] எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி.

Friday, 24 October 2014

அடிசில் 87

உழுத்தங்களி
- நீரா -      

தேவையான பொருட்கள்:
உழுத்தம் மா - ½ கப்
அரிசி மா -  ¾ கப்
தேங்காய்த் துருவல் - 1½ கப்
சர்க்கரை - ¾ கப்
நல்லெண்ணெய் - 1 மேசைக் கரண்டி
உப்பு - ½ சிட்டிகை

செய்முறை: 

  1. தேங்காய்த்துருவலை மிக்சியில் இட்டு அரைக்கப் தண்ணீர்விட்டு அரைத்து, முதற்பாலை வடித்து எடுத்துக்கொள்க. 
  2. பிழிந்த தேங்காய்த்துருவலுக்குள் நான்கு கப் தண்ணீர் விட்டு மீண்டும் அரைத்து பாலை வடித்து எடுக்கவும்.
  3. இந்தப்பாலை வாயகன்ற பாத்திரத்தில் விட்டு, உழுத்தம் மா, அரிசிமா, சர்க்கரை, உப்பு நான்கையும் சேர்த்துக் கரைத்து, முதற்பாலில் அரைவாசியையும் விட்டுக் கலக்கவும்.
  4. அப்பாத்திரத்தை அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து துளாவி அடிப்பிடியாது கிண்டவும்.
  5. மாக்கரைசல் இறுகி வரும்போது நல்லெண்ணெயைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிண்டி, களி முழுவதும் திரண்டு, கிண்டும் கரண்டியுடன்  வரும்பொழுது இறக்கவும்.
  6. மிகுதியாக இருக்கும் முதற்பாலில் களியைத் தொட்டு உண்ணலாம்.

Monday, 20 October 2014

ஏழையெனக்கு அருள்வதற்கே!



அன்னைமுன் அமர்ந்து நல்ல
அழகு தமிழ் பாடல் சூட
என்தமிழை உண்ணி மன
மெங்கும் தேடல் உற்றேன்
கன்னித்தமிழ் தாயவளும் இன்ப
கரும்பெனப் பாடல் தந்தாள்
என்னதவம் செய்திட்டேன் ஏழை
         எனக் கருள்வதற்கே
இனிதே,
தமிழரசி.

Sunday, 19 October 2014

வாழ்க்கையின் தத்துவம்!


வாழ்க்கையின் தத்துவம் சொல்ல வந்தேன்
வயதில்லை எனக்கென்று எண்ண வேண்டாம்
வாழ்க்கை தந்திடும் பாடங்கள் கோடி
வாடிய வயிற்றுடன் கஞ்சிக்கு ஓடி
வாழ்க்கையின் பாடங்கள் கற்றவர் கோடி
வறுமையின் பிடியினில் வாழ்க்கையைத் தேடி
வாழ்ந்திடக் கற்றவர் கோடானு கோடி
வறுமையைப் போக்க வளமதைத் தேடி
வாழ்ந்திட நினைக்கும் மானுடர் கேட்பீர்!
வறுமை என்பதை வளமது போக்கா
வாழ்வாங்கு வாழ்ந்திட வேண்டின் நிதம்
வறுமையில் செம்மையாய் வாழ்ந்திட வேண்டும்
வாழ்க்கையின் முடிவே பிடிசாம்பல் தானே
வாழ்க்கையின் தத்துவம் வேறென்ன கண்டீர்!
இனிதே,
தமிழரசி. 

Saturday, 18 October 2014

ஆசைக்கவிதைகள் - 97

குணமயிலே தூங்காதே!

ஆண்: சடசடென மழை பொழிய
         சரிசாம வேளையிலே
குடைபிடித்து நான் வருவேன்
         குணமயிலே தூங்காதே!
- நாட்டுப்பாடல் (மன்னார்)
                                                       (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

Thursday, 16 October 2014

குறள் அமுது - (97)

குறள்:
பகுத்துஉண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை                   - 322

பொருள்:
தம்மிடம் உள்ளவற்றை பிரித்து கொடுத்து உண்பதோடு பல உயிர்களையும் காப்பதே அறிஞர்கள் தொகுத்து தந்த அறங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்ததாகும்.

விளக்கம்:
உலகவாழ்க்கையின் இயல்பை நன்றாக ஆராய்ந்து கற்றுத் தெளிந்த அறிஞர்கள் மனிதர் எப்படி வாழ்ந்தால் இன்பமாக வாழலாம் என்பதை எமக்காகத் தொகுத்துத் தந்திருக்கிறார்கள். ‘ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்’ ‘நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை’ ‘மருந்தே ஆயினும் விருந்தோடு உண்’ ‘செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்’ ‘தன்னைப் போல பிறரையும் நேசி’ ‘உண்டிக்கழகு விருந்தோடு உண்ணல்’ ‘இரந்தோர்க்கு ஈவது உடையோர் கடனே’ என எத்தனையோ விதத்தில் பல நூல்களில் பல அறிஞர்கள் பகுத்து உண்டு வாழ்தல் சிறந்தது என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். 

உணவை உயிர்களுக்குப் பகுத்துக் கொடுத்து உண்ணவேண்டும் என்பதை எதற்காகத் திருவள்ளுவர் கொல்லாமை என்னும் அதிகாரத்தில் சொல்கிறார் என்பதை கொஞ்சம் சிந்திக்கவேண்டும். உயிர்களை அடித்துத் துன்புறுத்தி, வெட்டி, குத்தி, சுட்டுக் கொல்வதை மட்டுமே கொலையெனக் கருதுகிறோம். உயிர்களுக்கு உணவைக் கொடுக்காது பட்டினி போட்டும் கொல்ல முடியும். ஆதலால் உண்ண உணவும் நீரும் கொடுத்து உயிர்களைக் காத்தல் தலைசிறந்த செயலாகும். விலங்குகள், தாவரங்கள் யாவுமே உயிர்கள் தான். தாவரங்களுக்கு வேண்டிய நீரை எடுத்துக் கொள்வதால்  அவை நீரின்றி வாடி வதங்கி அழிவதால் நிலம் பாழாகிறது. அதனாலேயே திருவள்ளுவரும் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பு’ என்பதை கொல்லாமை அதிகரத்தில் சொல்லியிருக்கிறார்.

தான் சொன்னதை நாம் கேட்காவிட்டாலும் என்ற காரணத்தால் நூல்களை ஆராய்ந்து கற்ற அறிஞர்கள் தொகுத்துத் தந்தவற்றுள் பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல் தலை சிறந்தது என்று எடுத்துக் கூறியுள்ளார். தனக்கென வாழாது தன்னிடம் இருப்பவற்றை பிரித்துக் கொடுத்து உண்பதோடு உலக உயிர்களையும் தன்னைக் காப்பது போல பாதுகாத்து பிறர்க்கென வாழ்தலே தலைசிறந்தது என்பதை மனிதர் யாவரும் உணரும் போது இவ்வுலகம் இன்பமயமாகும். 

Wednesday, 15 October 2014

இரு மருந்து

- எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன் -
1945


மருந்து - நோய் தீக்க வல்லது. மருந்து செய்வோன் - மருத்துவன். இறைவனுக்கு 'பிறவிப்பிணி மருத்துவன்' என்று ஓர் அழகிய பெயர் உண்டல்லவா?
உலக உயிர்களுக்கு பிறவிப்பிணி இருப்பது போல் பசிப்பிணியும் இருக்கின்றது. பிணி - நோய். பிறவிப்பிணி - உயிர்களை மீண்டும் - மீண்டும், பிறந்து - பிறந்து, வாழ்ந்து - வாழ்ந்து  இறக்கத் தூண்டும் நோய். பசிப்பிணி - உயிர்கள் எவ்வளவுதான் ஆசையோடு உணவை தேடித் தேடி உண்ணினும் மீண்டும் - மீண்டும் பசியைத் தூண்டி உண் - உண் என உண்ணச் செய்யும் நோய். இவ்உலக உயிர்களின் வாழ்க்கைப் போராட்டத்திற்கு முதன்மைக் காரணியாய் இருப்பது பசிநோயே.

இயற்கையோடு உலகவுயிர்கள் ஒன்றும் வரை இவ்விருபிணிகளும் தொடரும். ஆனால் பிறவிப்பிணியை நீக்க தேவர்கள் கண்டுபிடித்து அருந்திய தனிமருந்தே அமிர்தம். தேவர்கள் அமிர்தத்தை உண்ண - அம்பலத்தே ஆடும் மருந்து நஞ்சை உண்ட கதை அறிவீர்கள். அதனால் அவன் பிறவிப்பிணி மருத்துவனானான்.

பசிப்பிணியைப் போக்க இதுவரை மருந்து காண்பாரில்லை. எனினும் நேரத்துக்கு நேரம் ஓரளவு உணவை உண்டு பசியைப் போக்கி, பசி நோயைக் கொஞ்சம் கட்டுக்குள் வைக்கலாம். உண்ணாமல் தின்னாமல் பொருள் - பொருள் என்று உழைத்து மாள வேண்டியதில்லை. முதலில் உண்டு, உடுத்து வாழவேண்டும்.

உயிர் வாழ்வதற்கு - பசிப்பிணியைப் போக்க உணவு மட்டும் போதுமா? இல்லை - தண்ணீரும் வேண்டும். உணவையும் நீரையும் தருவோர் யார்? உழவர் அல்லவா! ஆதலால் உழவரை பசிபிணி மருத்துவர் என்பர்.

“உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே”
நிலன் - நிலத்தில் விளையும் உணவுகள். நீரும் நிலனும் என்றாலும் நீரும் நெல்லும் என்றாலும் ஒக்கும்.

உயிர்களின் பசியை ஓரளவு போக்கவல்ல மருந்துகள் இரண்டு. அவ்விரு மருந்தையும் ‘நீரும் சோறும்’ - ‘நீரும் நிலனும்’ - ‘நீரும் நெல்லும்’ எனப் போற்றினர். நீரும் உணவும் என இரு மருந்துகள் பசியைத் தீர்ப்பதால் அவை இருமருந்தாயிற்று.

“இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்”
புறநானூறு, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை நீர் - உணவு ஆகிய இருமருந்து விளைவிக்கும் நல்ல நாட்டுத் தலைவன் என்று புகழ்கிறது. அவன் நீரையும் விளைவித்தான் - குளங்களைக் கட்டினான் - குளத்து முற்றத்திலே துஞ்சினான் - இறந்தான். ஆதலால் குளங்களில் நீரைத்தேக்கி நெல்லை விளைவித்து மனிதரின் பசிப்பிணியைத் தீர்ப்போம்.
இனிதே,
தமிழரசி.
குறிப்பு: இரண்டாம் உலகமகாயுத்தம் முடிந்த பின்னர் நாட்டில் பசியால் பலரும் இறந்த நேரம் என் தந்தையால் எழுதப்பட்டது.