Thursday, 30 January 2014

அடிசில் 77

பாதாம் பால்
- நீரா -

தேவையான பொருட்கள்:
பால்  - 3 கப்
பாதாம் பருப்பு - ½ கப்
பிஸ்தா பருப்பு - ¼ கப்
சீனி - ½ கப்
ஏலக்காய்  - 2
குங்குமப் பூ - 1 சிட்டிகை

செய்முறை: 
1. இரண்டு மூன்று பாதாம் பருப்பையும் பிஸ்தாப் பருப்பையும் வேறையாக எடுத்து வைக்கவும்.
2. மிகிதியாக உள்ள பாதாம் பருப்பு, பிஸ்தாப் பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவிட்டு தோலை உரித்து எடுக்கவும்.
3. தோலுரித்து எடுத்த பருப்போடு பாலைச் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
4. ஒரு பத்திரத்தை அடுப்பில் வைத்து அதனுள் அரைத்த பால் கலவையை விட்டு, சீனி சேர்த்து, அடிப்பிடியாதிருக்க இடைஇடையே கலக்கி இளஞ்சூட்டில் ஐந்து நிமிடம் சூடாக்கவும்.
5. பால் கொதிக்கும் போது ஏலக்காய்த்தூளையும் குங்குமப்பூவையும் போட்டுக் காச்சி எடுக்கவும்.

6. சூடாகவோ அல்லது ஆறிய பின்னர் குளிரவைத்தோ குடிக்கலாம்.

Tuesday, 28 January 2014

பிறவாமை காக்கும் பிரான்

[காரைக்கால் அம்மையார், Banteay Srei Sivan Temple - Cambodia] 
19.11.2012 அன்று அங்கு [Banteay Srei] சென்ற பொழுது 

ஒளியும் இருளும், பகலும் இரவும் போன்றதே பிறப்பும் இறப்பும். இரவும் பகலும் எப்படி மீண்டும் மீண்டும் வருகின்றதோ அப்படி இறப்பும் பிறப்பும் சுழலும் சக்கரம் போல் மீண்டும் மீண்டும் வரும் என்பது நம் முன்னோர் கண்ட முடிவாகும். பிறக்கும் போது நாம் எதனையும் கொண்டு வந்ததும் இல்லை, இறக்கும் போது எதனையும் எடுத்துச் செல்வதும் இல்லை. இருப்பினும் 
“பிறக்கும் பொழுது கொடு வந்ததில்லை பிறந்து மண்மேல்
இறக்கும் பொழுது கொடு போவதில்லை இடைநடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்கும் குலாருக்கு என் சொல்லுவேன் கச்சிஏகம்பனே”         
                                                        - (பட்டினத்தார் பாடல்)
எனப் பட்டினத்தார் சொன்னது போல் எம்மிடம் இருப்பதை யாருக்கும் கொடுக்காது பொருளுக்கும் பகட்டுக்கும் மயங்கிப் பேயாய் அலைகின்றோம். 

அப்படி மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும் களைத்த ஆன்மா [உயிர்], மீண்டும் பிறவா நிலையைத் தேடும். மீண்டும் பிறவாத நிலையை பிறவாமை என்பர். பக்தி எனும் பரவச நிலையை உலகிற்குத் தெள்ளு தமிழில் முதன்முதல் எடுத்துச் சொன்னவர் காரைக்கால் அம்மையாரே ஆவார். அவரின் புகழைக் கூறவந்த சேக்கிழாரும் 
“இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும் போது உன்னடியின் கீழ் இருக்க என்றார்”            
                                                         - (பெரியபுராணம்: 24: 60)
என்று பெரிய புராணத்தில் பாடியுள்ளார். இறப்பு என்பது இன்பம். அது துன்பத்தை தருவதில்லை. அதனாலேயே பிறவாமை வேண்டும் என்று கேட்கிறார். இறவாமையைக் [இறக்காது வாழ்தல்] கேட்கவில்லை. ஏனெனில் பிறவாமையே பேரின்பம் ஆகிய பெரும் பேற்றை நல்கும்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? பிறப்பே பெரும் துன்பம். மனிதப் பிறப்பெடுத்து வாழும் வாழ்க்கையில் அன்பு, பாசம், ஆசை, பேராசை இவற்றுள் மூழ்கி அல்லற்படுவதற்கு [துன்பம்] எது காரணம்? எம் மனமே காரணம். அதாவது எமது எண்ணமே காரணமாகும். 

மனித மனம் ஒரு தோணி போன்றது. அந்தத்தோணியிலே நாம் எமது பொறாமை, வஞ்சனை, கோபம், ஆணவம் போன்ற பல மூட்டைகளைக் கட்டி அடிக்கி வைத்திருக்கிறோம். வாழ்க்கையாகிய கடலில் மனம் என்ற தோணியை நம் அறிவாகிய துடுப்பால் செலுத்திச் செல்லும் போது மதன் என்று சொல்லப்படும்  செருக்கு, அறியாமை, அழகு, காமம் ஆகிய பாறைகள் தாக்கி, இறக்கும் போது என்ன நடக்கும் என்பதை அறிய முடியாது தடுமாறுகிறோம். எனவே இறக்கும் சமயத்திலாவது யாராலும் அறியமுடியாத இறைவனாகிய உனை நினைக்கின்ற உணர்வை ஆயினும் எனக்குத் தந்தருள்வாய். 
மனம் எனும் தோணிபற்றி
          மதிஎனும் கோலை ஊன்றிச்
சினமெனும் சரக்கை ஏற்றிச்
          செறிகடல் ஓடும் போது
மதனெனும் பாறை தாக்கி
           மறியும்போது அறிய வொண்ணா
உனைஎனும் உணர்வை நல்காய்
           ஒற்றியூர் உடைய கோவே”            
                                                         - (ப.திருமுறை: 4: 46: 2)
வாழும் போது வாழ்க்கையின்பத்துள் மூழ்கி இறை உணர்வை மறந்தாலும் இறக்கும் போதாவது உன் நினைவைத் தா அது பேரின்பத்திற்கான வழியை காட்டும்.

‘பிறவாமை வேண்டும்’ என்று காரைக்கால் அம்மையார் கேட்டதாக சேக்கிழார் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார் அல்லவா? அதனை காரைக்கால் அம்மையார் தாம்பாடிய திருஇரட்டைமணிமாலையில்
“ஈசன் அவன் அல்லாலில்லை யென நினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத்து என்றும்
பிறவாமை காக்கும் பிரான்                            
                                                      - (திருஇரட்டைமணிமாலை: 25)
என அவரே கூறியுள்ளார்.

காரைக்கால் அம்மையார் இப்பாடலில் ‘ஈசனை அல்லாமல் வேறு ஒன்றும் இல்லை என்று நினைத்து, நம் சிறுமைகளை எண்ணி மனம் கூசிக் குறுகி நின்று, மனமாகிய வீட்டில் ஈசனை வைத்து இறைவனின் பெருமைகளைப் பேசி மறவாது வாழ்வோரை மீண்டும் பிறவாமல் காக்கும் பெருமான்’ என்கிறார். அம்மையாரின் புகழ் கம்போடியாவுக்கும் பரவி 
‘......................................................நான் மகிழ்ந்து பாடி 
அறவா நீ ஆடும் போது உன்னடியின் கீழ் இருக்க என்றார்’ 
என சேக்கிழார் பாடியதற்கு அமைய, கம்போடியாவில்  அந்நாளில் பண்டைச்சேரி [Banteay Srei] என அழைக்கப்பட்ட இடத்தில் உள்ள கோயிற் கோபுரத்தில் இறைவன் ஆடுவதையும், காரைக்கால் அம்மையார் பாடுவதையும் புடைப்புச்சிலையாய் வடித்து வைத்துள்ளனர். அதனை மேலே உள்ள படத்தில் காண்க. 

பிறவாமை வேண்டுமாயின் ஈசனை என்றும் மறவாதிருக்க வேண்டும்.
இனிதே,
தமிழரசி.

Monday, 27 January 2014

உவந்திட அருள்வாய்!


முன்னையே முயன்று தவம் செய்யா
          மூர்க்கத்தால் பிறந்துழன்று
அன்னையே என்றரற்றி அனுதினம்
          அன்பிலூறி நைந்துருகி
நின்னையே நாளும் நினைந்தறியா
          நோயினேனை நோய்நீக்கி
உன்னையே எண்ணி என்றென்றும்
          உவந்திட அருள்வாய்!

Saturday, 25 January 2014

முதுமை என்பதோர் புதுமை


















முதுமை என்பதோர் புதுமை - அதை
          முழுதும் உணர்ந்தோர் யாரிங்கு?
முதுமை தருவது அறிவாகும் - அதில்
          முழுமை பெறுவோர் சிலராவர் 
முதுமை என்பது எதுவரை - அதன்
          முடிவைச் சொல்பவர் யாருளர்?
முதுமை தருவது நோயென்று - தினம் 
          முடங்கிக் கிடத்தல் தகுமோ?
இனிதே,
தமிழரசி.

Friday, 24 January 2014

தத்தரே பித்தரே!

கந்தளாய்க் குளம்

கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன் திரிகோணமலையின் கந்தளாய்க் குளத்தில் மீன்பிடிக்கச் சில மீனவர்கள் சிறுதோணியில் சென்றனர். மீன் பிடிக்கச் செல்வோர் தமது உடல் அலுப்புத் தெரியாது இருக்க மெட்டுக் கட்டிப் பாடிச் செல்வது வழக்கம்.  சிறுதோணியில் சென்ற மீனவர்களூம்
‘ஏலேலோ ஏலேலோ ஏலேலங்கடி ஏலேலோஒ’ என மெட்டுக் கட்டிப் பாடிப்பாடி குளத்தில் வலைவீசி மீன்பிடித்தனர். வலையில் ஆமை, மீன், நண்டு, தவளை எல்லாம் அகப்பட்டுக் கொண்டது. 

அந்த வலையில் அகப்பட்ட ஒரு தவளை, வலையில் அகப்பட்டதை நினைத்துப் பெரிதாகச் சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தது. வலைக்குள் இருந்த உயிரினங்களைப் பார்த்து இந்த வலையிலிருந்து நாம் தப்பிச்செல்ல வழி தேடவேண்டும் என்று சொன்னது. அதற்கு ஆமை “உனக்கு என்ன பித்தா பிடித்திருக்கு, எனக்கு ஆயிரம் புத்தி இருக்கிறது அதைக் கொண்டு தப்பிக்கொள்வேன்” என்றது. மீனும் “எனக்கு நூறு புத்தி இருக்கிறது நானும் தப்பிக் கொள்வேன்” என்றது. நண்டும் தனக்கு பத்துப்புத்தி இருக்கிறது அதைப்பயன்படுத்தித் தப்பிக்கொள்வேன் என்றது. 

அவற்றைக் கேட்ட தவளை, ‘அடக்கடவுளே! ஆயிரம் புத்தியுள்ள ஆமை, நூறு புத்தியுடைய மீன், பத்துப்புத்தி கொண்ட நண்டு எல்லாவற்றையும் படைத்த நீ என்னை மட்டும் ஏன் ஒரு புத்தியுடன் படைத்தாய்’ என்று அழுதது. அழுகொண்டே தப்புவதற்கு ஏதும் வழி கிடைக்காதா என்று வலையின் இடுக்கில் தலையையும் கால்களையும் நுழைத்துப் பார்த்தது. அதன் முன்னங்கால் ஒன்றும் பின்னங்கால்களும் வலையில்  சிக்கிக் கொண்டதே அல்லாமல் தப்பிச் செல்ல வழி கிடைக்கவில்லை.

வலையை வீசியவர்கள் வலையை இழுத்து தோணிக்குள் போட்டார்கள். வலைக்குள்  பிடிபட்டிருந்த ஆமையைத் தூக்கி மல்லாத்தி வைத்து, அது ஓடாதிருக்க ஒரு கல்லை அதன் நெஞ்சில் பாரமாக வைத்தனர். மீனைப் பிடித்து ஈர்க்கினால் அதன் கண்ணுக்குள் குத்திக் கோர்த்தனர். நண்டை எடுத்து தோணிக்குள் விட்டனர். அது தோணிக்குள் நடக்கும் போது 'கடக்கட முடக்கர' என்ற சத்தம் கேட்டது. வலையில் சிக்கி இருந்த தவளையை விடுவித்து, ‘தத்திப் போ பித்தரே [அறியாமையுடையது]!’ எனவிட்டனர். அப்போது ஆமையையும், மீனையும், நண்டையும் பார்த்து அந்தத் தவளை

“ஆயிரம் புத்தரே மல்லாத்தரே கல்லேத்தரே
           நூறு புத்தரே கண்ணுக்கக் கோர்த்தரே
பத்துப் புத்தரே கடக்கட முடக்கரே
          ஒரு புத்தரே தத்தரே பித்தரே!
                                                              -நாட்டுப்பாடல் (கந்தளாய் - திரிகோணமலை)
                                                              -(பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
எனப் பாடியபடி குளத்தினுள் தத்திச்சென்றதாக, அந்நாளில் கந்தளாயில் வாழ்ந்த மீனவர்கள் பாடிய நாட்டுப் பாடல் இது.

திரிகோணமலையில் பிறந்த தருமு சிவராம் என்பவர் [பிரமிள்] இந்த நாட்டுப் பாடலின் மூன்றாவது வரியைத் தவிர்த்து, மற்ற மூன்று வரிகளையும் தனது கவிதையில் சேர்த்திருக்கிறார். அவர் திரிகோணமலையைப் பிறப்பிடமாகாக் கொண்டவர் ஆதலால் அவருக்கு இந்த ஈழத்து நாட்டுப்பாடல் தெரிந்திருந்ததால் அதனைச் சேர்த்துக் கவிதை புனைந்திருக்கிறார். பிரமிள் சிறந்த எழுத்தாளராக தமிழ்நாட்டினரால் பாராட்டுப் பெற்றவர். உங்களுக்காக அவரது அந்தத் தவளைக் கவிதை இதோ:
‘தனக்குப் புத்தி நூறு என்றது மீன் -
பிடித்துக் கோர்த்தேன் ஈர்க்கில்
தனக்குப் புத்தி ஆயிரம் என்றது ஆமை -
மல்லாத்தி ஏற்றினேன் கல்லை
‘எனக்கு புத்தி ஒன்றே’ என்றது தவளை
எட்டிப் பிடித்தேன் -
பிடிக்குத் தப்பித் தத்தித் தப்பிப்
போகுது தவளைக் கவிதை -
நூறு புத்தரே! கோர்த்தரே!
ஆயிரம் புத்தரே! மல்லாத்தரே! கல்லேத்தரே!
ஒரு புத்தரே! தத்தரே! பித்தரே!
இனிதே,
தமிழரசி.

Thursday, 23 January 2014

குறள் அமுது - (86)


குறள்:
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகுதலின் குன்றல் இனிது                      - 811
                                     
பொருள்:
எம்மை அள்ளிக் குடிப்பவர் போலப் பழகினாலும் பண்பில்லாதவர்களது நட்பை வளரச் செய்வதைவிடக் குறைத்துக் கொள்வது இனிமயானதாகும்.

விளக்கம்:
இத்திருக்குறள் தீநட்பு என்னும் அதிகாரத்தில் முதலாவது குறளாக இருக்கிறது. அன்பே உண்மையான நட்புக்கு ஆதாரமாகும். நம்மோடு பழகுவோரது நட்பெல்லாம் உண்மையான நட்பு என நினைந்து, எம்மை நாமே அழித்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகத் ‘தீநட்பு’ என்று ஓர் அதிகாரத்தை திருவள்ளுவர் தந்திருக்கிறார். தீ [நெருப்பு] எப்படிக் கனன்று மெல்லப் பற்றிப் பிடித்து, அருகேயுள்ள பொருட்களை அழிக்குமோ, அப்படித் தீநட்பும் நம்மை எரித்துச் சாம்பலாக்கிவிடும்.

அதனை
சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றதாய்
மாரிபோல் மாண்ட பயத்ததாம் - மாரி
வறந்தக்காற் போலுமே வாலருவி நாட
சிறந்தக்காற் சீரிலார் நட்பு
                                                         - நாலடியார்: 232
நல்லோரின் நட்பு மாரி மழைபோல் பெரும் பயன் தரும். மழை இல்லாது போனால் வளம் குன்றுவதோடு வெய்யிலும் சேர்ந்து வாட்டி வதைப்பது போல தீயோரின் நட்பு பயன் ஏதுமின்றி மேலும் துன்பத்தைத் தரும் என விளங்கவைக்கிறது நாலடியார்.

நெடுநேரம் காட்டிலும் மேட்டிலும் தண்ணீரும் குடிக்காது அலைந்து திரிந்து களைத்து தண்ணீரைக் கண்டவுடன் விடாய்தீர ஆசையுடன் அள்ளிக் குடிப்போம் அல்லவா? அது போல் வேட்கையுடன் குடித்தலே பருகுதலாகும். கேண்மை என்பது நட்பு. 

மனித குலத்துக்கு என்றே சில அரிய பண்புகள் இருக்கின்றன. நாம் மனித குலத்தில் பிறந்தோம் என்ற மாண்பை அன்பு, பாசம், இரக்கம், நேர்மை, ஈகை, தன்னைப் போல் மற்ற உயிர்களையும் மதித்தல், பகிர்ந்து உண்ணுதல், எல்லோருடனும் முகம் மலர்ந்து பேசுதல் போன்ற பண்புகள் எடுத்துக் காட்டும். இந்த அடிப்படைப் பண்புகள் அற்றோர் பண்பிலார் ஆவர். 

உள்ளன்பு இல்லாமல் பகட்டுக்காகவும் பணத்துக்காகவும் தமது தேவைக்காக ஒட்டி உறவாடுபவரது நட்பை வளரவிடாது காத்துக் கொள்ளவேண்டும். தமது தேவைக்காக ஒட்டி உறவாடுவதும் பண்பிலாத் தன்மையே. பண்பிலாதோரில் சிலர் அன்பில் உருகி அப்படியே அள்ளிப் பருகுவது போல் அன்பைப் பொழிவர். அத்தகையோரின் நட்பு பெருகி வளர்வதைவிட குறுகி இல்லாது போதல் இன்பத்தைத் தரும். அதைவிட இனிமை வேறு ஏது வேண்டும்?

Monday, 20 January 2014

அடித்தாமரை என்னை ஆண்டனவே!

பிறப்பறுத்து ஆளவல்லான்
இராவணன் சடாயுவுடன் போர்புரியும் காட்சி.
அன்புக்கு ஏங்குதலே மனித இனத்தின் பொதுவான பண்புபாகும். அந்த அன்பின் முதிர்ச்சியே பக்தியாகும். பக்தியாய் பாடினார் எல்லோரும் பரசிவத்தை அடைவதில்லை. எமக்கு முன் பிறந்த எம் முன்னோரில் யார் பரசிவமானார் என்ற பட்டியலில் முதன்மையானவனாக எமது சைவசமயச் சான்றோர்களால் போற்றப்படுபவன் இராவணனே.

சைவசமயச் சான்றோரான திருநாவுக்கரசு நாயனார் சூலை நோயால் துன்பப்பட்டு, அதனை போக்குதற்காகக் 
“கூற்றாயின வாறு விலக்ககலீர்
           கொடுமை பல செய்தன நான் அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்
           பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதுஎன் வயிற்றின் அகம்படியே
          குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்”                                          
                                                          - (ப.திருமுறை: 4: 1: 1)
எனக் கதறிய பதிகத்தின் முதல் தேவாரம் இது. இதுவே திருநாவுக்கரசு நாயனார் பாடிய முதல் தேவாரமும் ஆகும். இத்தேவாரத்தை நாம் அறிவோம். 

ஆனால் இப்பதிகத்தின் கடைசித் தேவாரம் நம்மில் எத்தனை பேர் அறிவோம்? அத்தேவாரத்தில் சிவனிடம் ‘அரக்கனான இராவணனை கயிலை மலையின் கீழ் நெரித்து, பின்னர் அருள் செய்ததை கருத்தில் கொண்டாயானால், சூலை நோயால் வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தும் துன்பப்படும் என் வேதனையை நீக்கி அருள் செய்வாய்! எனச் சொல்கிறார்.
ஆர்த்தான் அரக்கன்றனை மால்வைக்கீழ்
           அடர்த்திட்டு அருள் செய்த அது கருதாய்
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தும்
           என் வேதனை யான விலக்கிடாய்”              
                                                           - (ப.திருமுறை: 4: 1: 10)

இவ்வாறு உருண்டு, புரண்டு, கத்திக் குழறி சிவனைப் பார்க்கும் திருநாவுக்கரசரின் கண்முன்னே
“ஓராழித் தேருடைய இலங்கை வேந்தன்
           உடல்துணித்த இடர்பாவம் கெடுப்பித் தன்று
போராழி முன்ஈந்த பொற்புத் தோன்றும்”                  
                                                          - (ப.திருமுறை: 6: 18: 6)
இலங்கையின் வேந்தனான இராவணன் ஒரு சில்லுடைய [ஓராழி]  புட்பகவிமானத்தை வைத்திருந்ததும், சிவன் அவனது உடலைக் கூறு செய்த ஆணவமலத்தைப் [இடர்பாவம்] போக்கி [கெடுப்பித்து], அவனுக்கு போர் செய்யும் ஆயுதத்தை[போராழி] முன்னர் கொடுத்த [முன் ஈந்த] சிறப்பும் [பொற்பு] தெரிகிறது. எம்வாழ்வில் ஆணவமலம் எம்மை எப்போதும் இடரச்செய்யும் என்பதை திருநாவுக்கரசு நாயனார் தம்வாழ்வில் அறிந்தவர். ஆதலால் ஆணவமலத்திற்கு தமிழில் அழகிய பெயர் சூட்டி 'இடர்பாவம்' என அழைத்துள்ளார்.

அந்த சிறப்பைப் பார்த்தவருக்கு பெருமகிழ்ச்சி, அந்த மகிழ்ச்சிப் பெருக்கில்
தருக்கினவாள் அரக்கன் முடி
           பத்திறப் பாதந்தன்னால்
ஒருக்கின் வாறு அடியேனைப்
          பிறப்பறுத்து ஆளவல்லான்”          (ப.திருமுறை: 4: 86: 11)

‘எழுச்சிமிக்க வாளை [தருக்கினவாள்] வைத்திருந்த இலங்கை வேந்தனின் முடிபத்தும் வீழ பாதத்தால் ஊன்றி, ஆணவமலத்தைப் போக்கி அருள் செய்தது போல அடியவனான எனது பிறப்பை நீக்கி ஆட்கொள்ள வல்லவன் சிவன்’ எனக் கூச்சல் இடுகிறார்.

அந்தக் கூச்சலுடன் திருநாவுக்கரசு நாயனார் நிற்கவில்லை. ஒரு தலை உடைய எமக்கு இரு தோள் உண்டு. பத்து தலை உடையவனுக்கு இருபது தோள் இருக்கத்தானே வேண்டும். 

‘இராவணன் கயிலை மலையை இருபது தோள் கொண்டு உந்தியே தூக்கினான். அப்போது இரத்த வெள்ளம் பாய விரலால் [அங்குலி] ஊன்றியவனின் திருவடியே என்னை ஆட்கொண்டது’ என்று சிவன் தன்னை ஆட்கொண்ட திறத்தைச் சொல்லி ஆனந்தக் கூத்தாடுகிறார்
           “………………….. இருபது தோள்
அங்குலம் வைத்தவன் செங்குருதிப்
           புனலோட அஞ்ஞான்று
அங்குலி வைத்தான் அடித்தாமரை
          என்னை ஆண்டனவே”                      (ப.திருமுறை: 4: 102: 7)

பாருங்கள் தமது முன்னோனான இராவணனைச் சிவன் எப்படி ஆட்கொண்டானோ அப்படித் தன்னையும் ஆள்வான் என முழுமனதுடன் நம்பி ‘அதில் வெற்றியும் பெற்றேன்’ என்று திருநாவுக்கரசர் கூறியும் நாம் இராவணனைக் கண்டு கொள்ளாது இருப்பது ஏனோ!  திருநாவுக்கரசு நாயனார் மீண்டும் மீண்டும் இராவணனைப் பற்றிக்கூறிய கருத்துக்களை உளவியல் சார்ந்து அவரது நிலையில் நின்று  நாம் சிந்திக்க வேண்டும்.
இனிதே,
தமிழரசி.