Thursday, 19 December 2013

அடிசில் 73

சீனிப்பாணிக் கேக்
- நீரா -

தேவையான பொருட்கள்:
ரவை - 2 ½ கப்
கட்டித்தயிர் - 1 கப்
உருக்கிய பட்டர் - 2 மேசைக்கரண்டி
அப்பச்சோடா - ½ தேக்கரண்டி 
சீனி -  ½ கப் 
முத்திரிப்பருப்பு - 20
எண்ணெய் - 1 தேக்கரண்டி

சீனிப்பாணிக்கு தேவையானவை:
சீனி - 1கப்
தண்ணீர் - ½ கப்
வனிலா அல்லது ரோஸ்வட்டர் - 1 தேக்கரண்டி

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் ரவையுடன் அப்பச்சோடாவைக் கலந்து வைக்கவும்.
2. இன்னொருபாத்திரத்தில் சீனி, உருக்கிய பட்டர், தயிர் மூன்றையும் போட்டு சீனி கரையும் வரை அடிக்கவும்
3. அதனுள் அப்பச்சோடா கலந்த ரவையைப் இட்டு நன்றாகக கலந்து பதினைந்து நிமிடம் ஊறவிடவும்.
4. கேக் வேகவைக்கும் பாத்திரத்தில் [Non Stick Baking Tray] இட்டு சமப்படுத்தவும்.
5. முந்திரிப்பருப்பை மேலே அழுத்திவைத்து, 180°C சூடாக்கிய அவணில் 30 நிமிடம் வேகவைத்து எடுத்து ஆறவிடவும்.
6. அவணில் கேக்வேகும் போது சீனிப் பாணிக்குத் தேவையானவற்றை ஒருபாத்திரத்தில் இட்டு சூடாக்கி கையில் ஒட்டும் பதத்தில் இறக்கி ஆறவிடவும்.
7. இந்தச் சீனிப்பாணியின் அரைவாசியை கேக்கின் மேற்பரப்பில் ஊற்றி பத்து நிமிடம் கழித்து மிகுதியையும் ஊற்றி ஐந்து நிமிடம் சென்றதும் வெட்டிப் பரிமாறலாம்.

Wednesday, 18 December 2013

தானடங்காப் பேதையர்



நம்மிடையே வாழும் ஒருசில அறிவாளிகள் ‘தாம் அதிகம் படித்திருக்கிறோம்’ என்று எண்ணியோ அன்றேல் ‘மற்றவர்களுக்கு ஏதும் தெரியாது’ என்று எண்ணியோ இறுமாப்புடன் இருக்கின்றனர். இப்படிப்பட்டோர் இன்று நேற்று அல்ல திருவள்ளுவர் காலத்திலும் வாழ்ந்திருக்கின்றனர். அதனாலேயே திருவள்ளுவரும் அத்தகைய அறிவாளிகளை ‘தானடங்காப் பேதையர்’ என அழைத்தார் போலும்.

ஒருவருக்கு தான் கற்ற கல்வியால் வந்த அறிவு, தான் பிறந்த குலத்தால் வந்த உயர்வு, இயற்கையாகவே உள்ள கருணை உள்ளம், உலகெலாம் போற்றும் புகழ், அளவிடமுடியாத செல்வம், கைம்மாறு கருதாமல் தன்னிடம் உள்ளதை அள்ளி வழங்கும் கொடைத்தன்மை, நற்பண்பு, நல்லொழுக்கம், அரிய தவத்தால் வந்த மனத்தூய்மை, நெருங்கி நட்புக்கொள்ளும் தன்மை, இன்னொருவருடன் ஒப்பிட்டு சொல்லமுடியாத வலிமை, எப்போதும் உண்மை பேசுதல், மிகவும் தூய்மையாக இருத்தல், பேரழகு ஆகிய பதின்நான்கு நலன்களும் இருப்பினும் அவரிடம் அடக்கம் இல்லாத இறுமாப்பு இருக்குமானால் அந்த நற்பண்புகள் யாவும் அழிந்து போகும் என்கிறது பிரபோத சந்திரோதயப் பாடல்.
கற்றறிவு குலமேன்மை கருணைபெரும்
          புகழ்செல்வம் கைமா றெண்ணாது
உற்றதுதவும் கொடைசீர்மை ஒழுக்கம்அருந்
          தவநியமம் உறவின் கேண்மை
மற்றெதிரிலாத் திண்மை வாய்மைமிகுந்  
          தூய்மைகுணம் வனப்பு யாவும்
பெற்றிடினும் அடக்கமிலாப்  பெருமிதத்தால் 
          அத்தனைக்கும் பிழையுண்டாமால்

                                          - (பிரபோத சந்திரோதயம்: 33)

நாம் நம்மிடம் இருக்கும் நற்பண்புகளில் பிழைவராமல் வாழவேண்டுமானால் அடங்கி நடத்தல் நன்று. இதனை உணர்ந்தே நம் முன்னோர் தமது அநுபவுண்மையை ‘கற்றவர்க்கு அழகு கற்றுணர்ந்தடங்கல்’ என்று சொல்லிச் சென்றனர் போலும்.
“ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப்
பேதையிற் பேதையர் இல்”                                                       
                                            - (குறள்: 834)

அடக்கம் இல்லாத ஒருவரிடம் எத்தனைவகையான நற்குண இயல்புகள் இருந்தாலும் பட்டம் பதவி, செல்வம் இருப்பினும் அவையாவும் பண்பான நெஞ்சுள்ளோர் கண்ணுக்குத் தெரிவதில்லை. கல்விகற்றுத் தெளிந்த அறிஞராய் பிறருக்குப் புத்திமதி கூறுபவராய் இருந்தும் அடக்கம் இல்லாதோரை திருவள்ளுவர் 'தானடங்காப் பேதையர்' என்று மட்டும் சொல்லாது அதற்கு மேலே சென்று 'பேதையிற் பேதையர்' என ஏன்சொன்னார் என்பது புரிகிறதா?
இனிதே,
தமிழரசி. 

Monday, 16 December 2013

செயமோங்கு கந்தவேளே!

கிளிநொச்சி கந்தவேள் வணக்கப் பாமலர்
-இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் -

செல்வகுஞ்சரி பாக நல்ல திருவேரக
     சீர்ப்பழனி வாசவென்றுன்
திருவடி பிடிபோர்க் கெழுபிறவி யுந்தொடர்
   செல்வமே எனையாதரி!
தொல்லுல கெலாமான நல்லிறை மகிழ்ந்திடத் 
          திருத்தணியிற் குருவாகியே
சோர நிட்டூர நயவஞ்ச கரழிந்திடத்
          தொடுவேல் தரித்த அரசே!
நல்லகதிர் காமவளர் மாணிக்க நதியாடி
        நயந்து பூசித்து வைகும்
நலமருவு முத்துலிங் கர்பெற்ற நல்லருள் 
              நாயினேற்கும் வாய்க்குமோ!
செல்வமலி கிளிநொச்சி சேர்கந்த கோட்டத்
          திகழவரு மெழுகோபுரம்
திக்கெங்கு மொளிரவே ஒளிவீச அருளுவாய்
      செயமோங்கு கந்தவேளே! 

Sunday, 15 December 2013

செம்மையைப் போற்றுமினே!















மானுடர் தம்மின் முந்தைய ரெனும்
          மமதை எமக்கீங்கில்லை
ஊனுடல் பேண ஒரு பொழுதேனும்
          ஊனினை உண்டதில்லை
வானுயர் மரத்தின் காய்கனி உண்ணும்
          வழமையை இழந்ததில்லை
நீருயர் குளத்தில் பனி நீர் ஆடும்
          நியதியை விட்டதில்லை
ஆருயிர் போமுன் அனுதினம் நாமும்
          அமைதியை மறந்ததில்லை
சீருயர் செல்வம் சிறந்திங்கு வாழினும்
          செம்மையைப் போற்றுமினே! 
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
மானுடர் - மனிதர்கள்
முந்தையர் - முன்னோர்
மமதை - இறுமாப்பு
ஊனுடல் - தசையால் ஆன உடல்
ஊன் - இறைச்சி
நியதி - வழமை
ஆருயிர் - அரிய உயிர்
போமுன் - போகமுன்
அனுதினம் - ஒவ்வொரு நாளும்
சீருயர் - புகழ்,அழகு, கல்வி, செல்வம் யாவற்றிலும் உயர்ந்து
சிறந்திங்கு - மிகச்சிறப்பாக இங்கே[பூமியில்]
செம்மை - அழுக்காறு இல்லாத தன்மை/மாண்பு

Saturday, 14 December 2013

நினைக்கமனம் எரியுதடா!



அந்நாளில் புங்குடுதீவில் வாழ்ந்த சிறுவனும் சிறுமியும் ஆசையுடன் அன்பைப் பரிமாறி கதை பேசித்திரிந்தனர். பருவவயது அடைந்ததும் அந்த ஆசையும் அன்பும் இருவரது மனநிலையையும் எப்படி மாற்றியது என்பதை இந்த நாட்டுப்பாடல் எடுத்துக்காட்டுகிறது. 

சிறுவயதினராக இருந்த பொழுது அவள், அவனுக்கு தன்வீட்டிலிருந்து கட்டுச்சோறும் பச்சையரிசியில் செய்த பலகாரங்களும் கொணர்ந்து கொடுத்து கதைத்து விளையாடுவது வழக்கம். அவர்கள் வளர்ந்து குமரன் குமரியான பின்னர் அவள் அவனுடன் கதைப்பதில்லை. 

ஒரு நாள் அவன் அவளைக் கண்டதும் ‘முன்னர் என்னுடன் இருந்து கதையளந்தாயே! இப்போ திருமணம் செய்வோம் என்றாலும் மறுக்கிறாயே! ஆசையோடு கிட்டவந்தாலும் தடுத்துக்கொண்டு ஓடுகிறாயே!’ என்று சொன்னான். அதற்கு அவள் ‘நீ கட்டுவதோ கதர்வேட்டி, கையில் போட்டிருப்பதோ பெரிய கடகக்காப்பு. அவற்றுக்கும் மேலாக [ஆலடிச் சந்தியில] "தெருவோரம் நின்று, குடத்தில தண்ணி கொண்டுவரும் கன்னிப் பெண்களைப் பார்ப்பதே பொழுது போக்காக வைத்திருக்கிறாய். உன்னையா நான் காதலித்தேன்?, என நினைக்க என் மனம் தீப்பிடித்து எரியுதடா! நான் சின்னவளாய் விளையாடிய காலத்தில் இருந்தவன் போல் உன்னை மாற்றிக்கொள்" என்கிறாள் போல் தெரிகிறது. ஏனெனில் அவன் செய்கைகளால் அவள் நெஞ்சிலும் வேதனை இருப்பதைப் பாடல் சொல்கிறது.

காதலன்:  கட்டுச்சோறு கட்டிவந்து
                           கதையளந்தாய் பலகாலம்
                 கட்டிக்கோ என்னுசொன்னா
                           வெட்டிக்கிட்டு போறியே!

காதலன்: பச்சரிசி பலகாரம்
                          பகிர்ந்துதந்தாய் பலகாலம்
                இச்சையோடு கிட்டவந்தா
                           இடரிக்கிட்டு ஓடிறியே!

காதலி: கட்டுறதோ கதர்வேட்டி
                         கையிலோ  பெருங்கடகம்
             நிக்கிறதோ தெருவோரம்
                         நினைக்கமனம் எரியுதடா!
                                                                                         - நாட்டுப்பாடல் (புங்குடுதீவு)
                                                                           (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
இனிதே,
தமிழரசி.

Thursday, 12 December 2013

குறள் அமுது - (82)

குறள்:
“இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் 
துன்பம் துடைத்தூன்றும் தூண்”                                      - 615

பொருள்:
உலக இன்பங்களை விரும்பாது தான் எடுத்த செயலைச் செய்து முடிக்க விரும்புகின்றவனே தனது சுற்றத்தாரின் துன்பத்தை நீக்கி, தாங்கும் தூணாக நிற்பான்.

விளக்கம்:
தான் செய்ய நினைத்த செயலை செய்துமுடிக்க வேண்டும் என்னும் திடமான எண்ணம் உள்ளவனுக்கு உலக இன்பங்கள் எதுவும் பெரிதாகத் தெரிவதில்லை. ஏனெனில் அவனது எண்ணம் முழுவதும் தான் செய்து முடிக்க நினைத்த செயலிலே இருப்பதால் உலக இன்பங்கள் நினைவில் வருவதில்லை. அதிலும் தன்னலம் அற்றவனுக்கு எவ்வகையான இன்பங்களும் பெரிதாகத் தெரியாது. தனது சுற்றத்தாரின் துன்பமே மிகப்பெரிதாகத் தெரியும். 

ஆதலால் அப்படிப்பட்டோர்
“மெய்வருத்தம் பாரார் பசினோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்”
என தாம் செய்யும் செயலிலேயே கண்ணாக இருப்பர்.

தனது சுற்றத்தின், தனது இனத்தின் துன்பத்தை தான் சுமப்பதே அவனுக்கு மிகப்பெரிய இன்பத்தைக் கொடுக்கும். அத்தகையோனின் கொள்கைப்பிடிப்பும், பிறரின் மேல் இருக்கும் பற்றுதலும் அவனது விடாமுயற்சிக்கு தூண்டு கோலாக இருக்கும். செய்து முடிக்க நினைத்த செயலை மனவுறுதியுடன் செய்து முடித்து தான் பிறந்த இனத்தின் துன்பத்தை, வறுமையைப் போக்கி அவர்களின் பாரத்தைத் தாங்கும் தூணாக நின்று இன்பம் காண்பான்.

Wednesday, 11 December 2013

அடிசில் 72

கறிமிளகாய் சலட்
                             - நீரா -

















தேவையான பொருட்கள்:
கறிமிளகாய் [Capsicum Chillies] - 5
தக்காளிப்பழம் - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
வினாக்கிரி [Vinegar] - 2 மேசைக்கரண்டி 
ஒலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி
மிளகுதூள் - ½ தேக்கரண்டி
கடுகு தூள் - 1 தேக்கரண்டி
சீனி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
1. கறிமிளகாய், தக்களிப்பழம், வெங்காயம், பச்சைமிளகாய் நான்கையும் மிகமெல்லிய துண்டுகளாக வெட்டி ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டுக் கலந்து கொள்ளவும்.
2. இன்னொரு பாத்திரத்தில் வினாகிரி, ஒலிவ் எண்ணெய், மிளகுதூள், கடுகுதூள், சீனி, உப்பு இவற்றை இட்டு நன்றாக அடித்துக் கொள்க.
3. கறிமிளகாய்க் கலவையினுள் அடித்தவினாக்கிரி கரைசலைவிட்டு கலந்து அரைமணி நேரமாவது  மூடிவைத்துப் பாவிக்கவும்.