Friday, 11 October 2013

குறள் அமுது - (77)


குறள்:
 உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்                                                                     - 885
                                    
பொருள்:
 உறவு கொண்டு நெருங்கி வாழ்பவர்களிடையே உட்பகை தோன்றினால் அது இறந்து போகும் நிலையை உண்டாக்கும் தீமை பலவற்றைத் தரும்.

விளக்கம்:
மாற்றார் பகைவரானால் நாம் அதற்குப் பயப்படத் தேவையில்லை.  எனெனில் அவர்களுக்கு எமது பலம், பலயீனம் பற்றி ஏதும் தெரியாது. அவர்கள் எமது எதிரிகள், பகைவர்கள் என அறிந்து கொள்வதால் அவர்களிடம் நாம் விளிப்பாய் இருப்போம். ஆனால் எம்மொடு நன்கு பழகுவோரிடம் என்றும் நாம் விளிப்பாய் இருப்பதில்லை.

எம்முடன் சேர்ந்து வாழ்வோருக்கும் எமக்குமிடையே ஏதோ ஓர் காரணத்தால் உட்பகை தோன்றினால் எம்மொடிருந்தே எம்மை அடியோடு அழிக்க வழிதேடுவர். உட்பகை கொண்டோருக்கு எம்மையும் எமது பொருள்களையும் அழித்தால் மட்டும் போதாது. எம் குழந்தைகளை சந்ததியினரை அழித்தே இன்பம் காண்பர். அதனாலேயே வள்ளுவர் இறன்முறையான் ஏதம் பலவும் தரும் என்று வேதனைப்பட்டுள்ளார். இறன்முறை என்று வரிசையாக அடுத்தடுத்து வரும் இறப்புக்களைக் காட்டுகிறார். அடுத்தடுத்து வரும் இறப்புக்களும் ஒன்று இரண்டல்ல பலவாகவரும் என்பதை ஏதம் பலவும் தரும் என்று சுட்டுகிறார். 

நம்மோடு வாழ்ந்து நம்மை ஆட்சிசெய்தோரே கல்விகற்கச் சென்ற நம் பிள்ளைகளின் மேல், விமானத்தில் வந்து கொண்டுகள் பொழிந்தனர். அக்குண்டுகள் நம் பிள்ளைகளின் பலரது உடலை அடையாளம் காணமுடியாது சிதறடித்ததே! குற்றுயிரும் குலை உயிருமாக, செஞ்சோலை என்ற பெயருக்கேற்ப அந்த இடமும் நமது குழந்தைகளின் குருதியால் செஞ்சோலையானது. தாய்மையின் தலைவாசலில் நின்று வருங்காலத்தில் எம் இனத்தை தாங்கவேண்டிய பெண்ணினம் பிஞ்சுகளாய் அழிக்கப்பட்டனர்.

ஒன்றாக வாழ்வோரிடையே உட்பகை தோன்றினால் பல இறப்புக்களை பார்க்க நேரிடும் எனக்கூறும் இக்குறளுக்கு நாம் நம் நெஞ்சில் சுமக்கும் செஞ்சோலை மலர்களே சாட்சி.

Thursday, 10 October 2013

சிலேடை பாடிய [நயினை] நாகமணிப்புலவர்

எழுதியவர் - பண்டிதர் மு ஆறுமுகன்
[தினகரன் ஞாயிறுவாரமலர், கொழும்பு; 14/01/1951]

காளமேகப் புலவர் பல சிலேடைச் செய்யுட்கள் பாடியிருக்கிறார். அவர் சிலேடை பாடக்காரணமாக இருந்தவர்கள் அதிமதுரகவிராசரும், அவருடன் சேர்ந்த தண்டிகைப் புலவர்களுமாவர். தண்டிகைப் புலவர்களுள் ஒருவர் “எள்ளுக்கும் பாம்புக்கும்” சிலேடை பாடும்படி கேட்டார். காளமேகம் அப்பொழுது பாடிய செய்யுள் இது:
ஆடிக்குடத்தடையும் ஆடும்போதே இரையும்
மூடித்திறக்கின் முகங்காட்டும் - ஓடிமண்டை
பற்றின் பரபரென்னும் பாரிற் பிண்ணாக்குமுண்டாம்
உற்றிடு பாம்பெள்ளெனவே ஓது”

பாம்பு: (குறவன் ஆட்ட) ஆடிமுடிந்தபின் தான் வழக்கமாக உறையும் கூடையைச் சேரும். (படம்விரித்து) ஆடும் பொழுது இரைச்சலிடும். மூடிவைத்தபின் (மூடியைத்) திறந்தால் தனது முகத்தை வெளியே காட்டும். அது கடித்தால் (பற்றின்) விஷம் தலைக்கேறி அதிர்ச்சியைக் கொடுக்கும். உலகில் பாம்புக்கு பிளவுபட்ட நாக்கு உண்டு. 

எள்ளு: (செக்கிலிட்டு ஆட்ட) ஆடி எண்ணெய் குடத்தைச் சேரும். (செக்கில் எள்) ஆடும் பொழுது இரையும். மூடியைத் திறந்து எண்ணெய்யைப் பார்த்தால் (பார்ப்பவர் தம்) முகத்தைக் காணும்படி (மாசின்றித்தெளிந்து) காட்டும். எண்ணெய் தலையிற் பொருந்தினால் ஓடிப்பரபரெனச் சுவறும். உலகிற்கு பிண்ணாக்கும் கிடைக்கும். கட்செவியாக - கண்ணே செவியாக) நுணுக்கியுணரும் பாம்பை எள்ளெனச் சொல்லுக, என்கிறார்.

“வசைபாடக் காளமேகம்” எனப்புலவர்களால் பாராட்டப் பெற்ற பெரும் புலவரின் செய்யுளையும் அதன் சிலேடைப் பொருளையும் பார்த்தோம். இனி நாகமணிப்புலவர் பாடிய ஒரு சிலேடைச் செய்யுளைப் பார்ப்போம்.

அந்தச் செய்யுள் கொழும்பு மாநகரில் பாடப்பட்டது. புலவர் அப்பொழுதும் புலவராகவே இருந்தார். ஆனால் கொழும்பில் ஒரு செட்டியார் வீட்டுக்குப் பெரிய கணக்கப்பிள்ளையாக வேலை செய்து கொண்டிருந்தார். விவேகானந்த சபையில் ஒரு பிரசங்கம் நடக்கவிருந்தது. புலவரும் அறிந்து அந்த சபைக்குப் போயிருந்தார். பிரசாரகர் கூலிக்குப் பிரசங்கன்ஜ் செய்ய வந்தவர் என்றும் ஏதோ ஒரு வாரிதி அவருடைய நாமம் என்றும் அறிந்தார். பிரசங்கம் நடந்தது. சபையோர் பேசாமல் சில நிமிடம் இருந்தார்கள். பின்னர் ஒருவரோடு ஒருவர் “இதென்ன பழைய பல்லவி!,” “வெள்ளவத்தையிலும் இப்படிப் பேசினாரே!” “ஏன்! கதிரேசன் கோயிலிலும் இதைத்தானே பேசினார்!” “அநியாயக் காசு!” என்று கதைத்தார்கள்.

தமிழர்களின் - அறிஞர்களின் - தலைவர்களால் நடாத்தப்படும் சபையிலும் கூலிக்குப் பேச அந்த வாரிதி போயிருந்தமை புலவருக்குப் பிடிக்கவில்லை. எத்தனையோ பண்டித மணிகள், வித்துவ ரத்தினங்கள் சமூக உயர்வுக்காக உழைக்கத் தம்மையே தியாகஞ் செய்திருப்ப, பெரும் பொருள் கொடுத்து அந்தப் பிரசாரகரை ஒழுங்கு செய்த சபையாரின் பணப்பெருக்கை வியந்து கொண்டு புலவர் போய்விட்டார்.

போனாலும் “துருத்திச் சுடர்” போலப் பிரசங்கியாரில் புலவருக்குக் கோபம் கிடந்தது. அடுத்த நாட்காலை செட்டித்தெருவில் உள்ள கடைக்குப் போனார் புலவர். கடை முதலாளி எழுந்து, தான் இருந்த ஆசனத்தில் அவரை இருக்கச் செய்து பக்கத்தில் நின்றார். முதல் நாட் பிரசங்கியாரும் அப்பொழுது கடைக்கு வந்தார். வந்தவர் இருந்தவரைப் பார்த்து “ஒரு கட்டு வி. எஸ். ஏ சுருட்டுத்தாரும்” என்று கேட்டார். வியெஸ்சே என்ற ஓசை அடித்தாற் போல “வேசை” என்றே இருந்தவருக்குக் கேட்டது. அவர் சிரித்துக் கொண்டு “வேசைச் சுருட்டா வேண்டும்” என்று கேட்டார்.

சுருட்டை எப்படி வேசி என்பீர் என்ரு அந்தப் பிரசாரகர் கேட்டார். புலவர் அவருக்கு எழுதிக் கொடுத்த மறுமொழிகள் ஒரு சிலேடை வெண்பா ஆனது.
“எட்டிப்பிடித்தலால் ஏந்திமுத்தம் இடுதலால்
கட்டையறுத்து இதழ்வாயிற் கவ்வுதலால் - மட்டற்ற
ஆசைத்தீ மூளுதலால் ஆனபுகைச் சுருட்டை
வேசைப்பெண் என்றேன் விரைந்து”
 பிரசாரகர் பார்த்துவிட்டு சுருட்டும் ஒரு கட்டு வாங்கிக் கொண்டு போனவர்தான். போகட்டும்! நமக்கு ஏன்! தமிழன்னைக்கு! ஒர் அருமையான கவிதாமலர் கிடைத்துவிட்டது. இந்தச் செய்யுளில் உள்ள சிலேடைப் பொருளைச் சிறிது ஆராய்வாம்.

சுருட்டு: சுருட்டை வாங்குபவர் எட்டிப்பிடித்தலாலும் (அதன் குணமறியும் பொருட்டு) உயர்த்தி மோர்ந்து பார்த்தலாலும் பத்தாகச் சேர்த்து கட்டியுள்ள நூலை அறுத்து, தமது வாயிதழ்களாற் சுருட்டைக் கவ்வுதலினாலும், அளவு கடந்த ஆசையோடு நெருப்பை அதில் மூளச் செய்தலாலும் புகையினை உண்டாக்கும் சுருட்டு என்க.

வேசை: விலைமகளாதல் அறிந்தும் பொறுமையழிந்து அன்பின்றிப் பிடித்தலாலும், தாங்கி முத்தமிடுதலாலும் (வேசிக மனஞ்செய்யலாகாது என ஆன்றோர் கட்டிவைத்த) வரம்பை மீறி முருக்கிதழ் போன்ற அதரவாயிற் கவ்வுதலாலும், முறையற்ற ஆசை நெருப்பு மூளுவதாலும் தமது கல்வி, செல்வம், புகழ், ஆவி என்பன ‘புகை’யக்காரணமான வேசை என்க.

சுருட்டு தீதாதல்:
கண்புகையும் நெஞ்சுலரும் கைகால் அயர்ந்துவிடும்
வெண்புகையால் மேனி வெளுத்துவிடும் - திண்புகையால்
ஈரற்கருகிவிடும் இந்திரியம் நட்டமாம்
பாழும் புகையிலையின் பண்பு”
என்னும் செய்யுள் மூலமும்

வேசை தீதாதல்:
“பொருட் பெண்டிர் பொய்மை முயக்கம்
இருட்டறையில் ஏதில்பிணந்தழீ யற்று”
என வள்ளுவ தேவரும்
“சேலை கொடுத்ததற்குச் சீமாட்டி என்கொடுத்தாள்
சூலை கொடுத்தாள் துயர்கொடுத்தாள் - மூலயரையாப்பு
கொடுத்தாள் இன்னுமின்னு மெத்தனையோ காப்புக்
கொடுத்தாள் கடிகொடுத் தாள்”
எனச் சுப்பிரதீபக் கவிராசரும் கூறியருளிய செய்யுட்கள் மூலம் உணரக்கிடக்கும் பொதுத் தன்மைகளை சிலேடைப்பாவிற் திரட்டி
“மட்டற்ற ஆசைத்தீ மூளுதலால் ஆன புகைச்சுருட்டை வேசைப் பெண்” என்றமையும் நோக்கி மகிழற்குரியன.

Wednesday, 9 October 2013

அடிசில் 67

குரக்கன்மாப் பூரிகை
                                                 - நீரா -
                           























தேவையான பொருட்கள்:
குரக்கன்மா - ½ கப்
கோதுமைமா - 1½ கப்
எள்ளு - 1 தே.கரண்டி
சீரகம் - ½ தே.கரண்டி
நெய் - ½ மே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:
1. குரக்கன்மா, கோதுமைமா இரண்டையும் நன்றாகக் கலந்து, எள்ளு, சீரகம், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு இறுக்கமாக அழுத்திப் பிசைந்து கொள்ளவும்.
2. பிசைந்த மாவில் நெய் சேர்த்து மீண்டும் நன்றாக பிசைந்து ஒரு மணி நேரம் மூடிவைக்கவும்.
3. அந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக்கி, மாத்தூவிய பலகையில் வைத்து உருளையினால் மூன்று அங்குலமான மெல்லிய ரொட்டிகளாக செய்யவும்.
4. வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய்யைவிட்டு சூடானதும் தட்டிய ரொட்டியைப் போடவும்.
5. அது எண்ணெயின் அடியில் சிறிது நேரம் இருந்து பூரிகையாக மேலே எழுந்து மிதக்கும்.
6. கீழ்ப்பக்கம் பொரிந்ததும் மேல்பக்கத்தைத் திருப்பிப் போட்டு, பொரியவிட்டு எடுக்கவும். 
7. எல்லாவற்றையும் இப்படிப் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:
பண்டைய தமிழர்களால் பூரிகை என அழைக்கப்பட்ட உணவையே நாம் பூரி என்கின்றோம். பண்டைய தமிழர் பூரிகையை வரகு, குரக்கன், தினை, கொள்ளு, ஒடியல், பெருக்கு, பலாக்காய், வாழைக்காய் போன்ற பலவைகையான மாக்களில் செய்து உண்டிருக்கிறார்கள்.

Tuesday, 8 October 2013

பக்திச்சிமிழ் - 67

வாழ்வை உகந்து நெஞ்சே!
- சாலினி -

Photo: source tamil Daily News

சுந்தரமூர்த்தி நாயனார் அழகனாய் பிறந்து, அரச போகத்தில் வளர்ந்து, ஆடம்பரமான வாழ்வையே விரும்பி வாழ்ந்தவர். அவரது திருமணத்தன்று இறைவன் அவரைத் தனது அடிமையென வழக்காடி வென்று அடிமையாகக் கொண்டார். இந்நாளைப் போல் அல்லாமல் அந்நாளில் வழக்கு தொடுத்த அன்றே தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். அடிமையாக இருந்தும் ஒன்றுக்கு இரண்டு பெண்களை மணந்து, தனக்கு தேவையான பொருட்களை இறைவனிடம் கேட்டுப் பெற்று வாழ்க்கையின் இன்பத்தை நன்கு சுவைத்தவர் அவர்.

ஆசைகளை அறுக்க முடியவில்லை. அதனால் உண்டாகும் கோவத்தினால் எல்லோரையும் பகைத்துக் கொள்கிறேன். பொய்யே பேசுகிறேன் என்றாலும் புகழையும், பொருளையும் பெரிதும் விரும்புகிறேன். பிறரை வருத்துவதும், பிரித்து வைப்பதும் என் வேலை. துன்பப்பட்டவர்களுக்கு உதவி செய்து அறியேன். உறவினர்க்கும் துணைபுரிய மாட்டேன். எந்த ஒரு நல்ல குணமும் என்னிடமில்லை. எனச் சுந்தரமூர்த்தி நாயனார் தன்னைப்பற்றிக் கூறி, ‘திருவாரூர் இறைவன் தன்னை ஆள்வாரோ கேளீர்!’ என்று ஏழாம் திருமுறையின் எழுபத்தி மூன்றாம் பதிகத்தில் சொல்கிறார். அப்பதிகத்தின் ஒருபாடலைப் பாருங்கள்.

“அருத்தம் பெரிதும் உகப்பன்
          அலவலையேன் அலந்தார்கள்
ஒருத்தர்க்கு உதவியேன் அல்லேன்
          உற்றவர்க்குத் துணையல்லேன்
பொருத்தமேல் ஒன்றும் இலாதேன்”            - (ப.திருமுறை: 7: 73: 6)
என்றெல்லாம் தன்னைப்பற்றி இழிவாகச் சொன்னவர், நூறாவது பதிகத்தில்

வாழ்வை உகந்து நெஞ்சே
          மடவார் தங்கள் வல்வினைப்பட்டு
ஆழ முகந்த என்னை
          அது மாற்றி அமரர் எலாம்     
சூழ அருள் புரிந்து”                                      - (ப.திருமுறை: 7: 100: 4)

 என்று பாடி இறைவன் தன்னை ஆட்கொண்டு அருள் செய்த திறத்தை வியக்கிறார். எனவே சுந்தரரின் வாழ்வை, அவரின் தேவாரத்தின் துணை கொண்டு பார்ப்போர் இறைவன் தருவானா மாட்டானா என்ற பயம் இல்லாது, தாம் நினைத்ததை எல்லாம் இறைவனிடம் கேட்டுப் பெற்று வாழ்வை உகந்த நெஞ்சுக்கு இன்பத்தை கொடுக்கலாம்.         

Sunday, 6 October 2013

தேவிநீ பாட்டெழுது!


தேவிநீ பாட்டெழுது
          தேவையென்ன கேட்டெழுது
மேவிவரும் புகழெல்லாம்
          மேன்மையுறும் நின்னிடத்து
ஆவியுயிர் போகுமுன்னம்
          அரைநிமிடம் காட்சிதந்து
பாவியெனைக் காத்தருளு
          பக்திவைத்தேன் உன்னிடத்து
இனிதே, 
தமிழரசி.

Saturday, 5 October 2013

மனதைக் கொஞ்சம் திறப்பீரோ!























குரங்கும் பூனையும் சண்டையென
சொன்னவர் யார் சொல்வீரோ?
மரத்தில் வாழும் குரங்கெனினும்
குட்டிப் பூனைதனை அணைத்து
குலவும் இன்பந்தனை உணர்ந்தே  
மன்னுயிர் ஒன்றென எண்ணிடுதே!
மமதையுள்ள மானிடரே உங்கள்
மனதைக் கொஞ்சம் திறப்பீரோ!
                                                                - சிட்டு எழுதும் சீட்டு 73

Friday, 4 October 2013

ஐந்துவிதமான பூ என்ன பூ?



நாட்டுப்பாடல்களே தமிழ் இலக்கிய வளத்துக்கு பெரிதும் துணை புரிந்திருக்கின்றன. நாட்டுப்பாடல் வகைகளில் ஒன்றே விடுகதையாகும். விடுகதையை நொடி என்றும் புதிர் போடுதல் என்றும் சொல்வர். எல்லோரும் அறிந்த ஒன்றை, சுற்றி வளைத்து மறைத்துக் கூறி விடை காண வைத்தலே விடுகதைகளின் நோக்கமாகும். மனித சிந்தனைத் திறனை வளர்க்கும் நோக்கத்திலேயே விடுகதைகள் தமிழில் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. அனேகமாக தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு விடுகதைகளைக் கூறி, அவற்றுக்கு விடைகான வைத்து அறிவை வளர்த்திருக்கிறார்கள். பின்னாளில் அதனையும் இலக்கியம் உள்வாங்கிக் கொண்டது.

ஈழத்து வன்னி நிலத்தில் வாழ்ந்த ஒருதாய் மகனைப் பார்த்து
தாய்: எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுத்து
                    வட்டக்குடை பிடித்து வாராராம் 
          வன்னியனார், அவர் யார்?
எனக் கேட்கிறாள். தாயின் கேள்விக்கு பதில் சொல்ல மகன் சிந்திக்க வேண்டும். எட்டுக்காலை நிலத்தில் ஊன்றியும் இரண்டுகாலை தூக்கிக் கொண்டும் நடப்பது எது? வன்னியில் வாழ்வது எது? தேளா? நண்டா? வட்டக் குடை பிடித்து வருவதால் அது நண்டு என்பதை அவனது சிந்தனை அவனுக்கு காட்டிக் கொடுக்கும். வன்னி நிலப்பரப்பு நீர்வளமுள்ளதால் அங்குள்ள ஆறு, குளம், வயல் எங்கும் நண்டுகள் உலாவரும். பிள்ளைகள் அடிக்கடி நண்டைப் பார்ப்பதால் உடனே பதில் சொல்வர். தெரிந்த விடையங்களைப் புரியாத புதிராகக் கேட்டு, விடைகான வைத்து தமது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தமிழ் இலக்கியத்திற்கும் பெண்கள் வளம் சேர்த்தனர். அதனால் நொடி போடுவதிலும் அதனை அவிழ்ப்பதிலும் பெண்கள் சிறந்து விளங்கினர். வன்னியை ஆண்ட அரசன் ஒருவன் போட்ட நொடியை அவிழ்த்த எண்ணெய் வாணிவப் பெண்ணைப் பார்ப்போம்.  
        
மாந்தை மாநகரம் அந்நாளில் செல்வச்செழிப்புடன் இருந்த நகரமாகும்.  அந்த நகரத்திற்கு அருகே விடத்தல் தீவும் இருந்தது. அதிகாலை நேரத்தில் விடத்தத்தீவு வீதியில் ஓர் இளம் பெண் ‘எண்ணெய் வாங்கலையா! எண்ணெய்!’ எனக் கூவிக் கூவி எண்ணெய் விற்றுவந்தாள். அவளும் எண்ணெய்யைப் போல தளதள என மின்னும் அழகுடன் இருந்தாள். அவளின் நடையும் இடையும் பார்ப்போரை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்தது. அந்த வீதியால் வந்த மாந்தை அரசன் அவளைப் பார்த்தான். அவளின் அழகு அவனைப் பேசவைத்தது. அவளைப் பார்த்து
அரசன்: எள்ளிலே பிறந்து எள்ளிலே வளர்ந்த
                        எண்ணெய் வாணிவப் பெண்ணே!
              எள்ளிலும் சிறிய இலை என்ன இலை?
என்று நொடி போட்டான்.

அரசனின் நொடியைக் கேட்ட எண்ணெய் வாணிவப் பெண்ணும்
பெண்: பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்து
                      பூலோகம் ஆளும் இராசாவே!
            பூவில் ஐந்து விதமான பூ என்ன பூ?
என்று அரசனின் கேள்விக்கு பதிலாக அவளும் நொடி போட்டாள்.
                                    - நாட்டுப்பாடல் (விடத்தல் தீவு)
                                           - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

அரசன் ‘எள்ளிலும் சிறிய இலை என்ன இலை?’ என்று நேரடியாகக் கேள்வி கேட்டிருக்கலாம். ஆனால் அவனோ, எள்ளுக் குவியலுக்கிடையே பிறந்து வளர்ந்த எண்ணெய் வாணிவப் பெண்ணே! எள்ளைப் பற்றிய பொது அறிவு உனக்கு இருக்கா! என்பது போல புதிர் போட்டான்.

அவளும் அதற்கு நேரடியாக விடை சொல்லி இருக்கலாம். ஆனால் அவளோ, தானும்  அரசனுக்குச்  சளைத்தவள் அல்ல என்பதைக் காட்ட, பூக்களுக்கிடையே பூப்போன்ற மெத்தையில் பிறந்து, வளர்ந்து இந்த பூவுலகை ஆளும் அரசனே! ஐந்து விதமாகக் காட்சிதரும் பூ என்ன பூ? என அரசனின் கேள்விக்கு மீண்டும் புதிர் போட்டாள். 

இப்புதிர்களின் விடை விடத்தல் தீவில் வாழ்ந்த அவளுக்கும், மாந்தையை ஆண்ட அரசனுக்கும் தெரிந்து தானே இருந்திருக்கும்? இப்புதிர்களின் விடை உங்களுக்கு தெரியுமா? கீழேயுள்ள படத்தைப் பார்த்து பதில் சொல்லுங்களேன்.


எள்ளிலும் சிறிய இலை விடத்தல் மர இலையேயாகும். விடத்தல் பூ முதலில் பச்சையாய் அரும்பி, பச்சையும் மஞ்சளுமாய் நிறம் மாறி, பின் பச்சை, மஞ்சள், குங்கும நிறமாய் இருந்து குங்கும நிறம் வெளிர் குங்குமமாய் மாறி, வெள்ளையாகும். ஆக பச்சை, மஞ்சள், குங்குமம், வெளிர் குங்குமம், வெள்ளை என ஐந்து நிறத்தில், ஐந்துவிதமாகக் காட்சி தருவது விடத்தல் பூவே. அரசனின் புதிருக்கும் எண்ணெய் வாணிவப் பெண்ணின் புதிருக்கும் விடை ஒன்றே. புதிர்களின் விடை 'விடத்தல்'
இனிதே,
தமிழரசி.