Wednesday, 10 July 2013

குறள் அமுது - (70)


குறள்:
“உயர்வுஅகலம் திண்மை அருமை இந்நான்கின்
அமைவுஅரண் என்றுஉரைக்கும் நூல்”                    - 743

பொருள்:
உயரம், அகலம், வலிமை, எளிதில் கைப்பற்ற முடியாத தன்மை ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரண் என்று நூல் கூறும்.

விளக்கம்:
சங்ககாலத்தில் நாட்டைப் பாதுகாக்கக் கட்டப்பட்ட செயற்கை அரண் எப்படி இருந்தது  என்பதை இக்குறள் கூறுகிறது. பண்டைய தமிழ் அரசர்கள் பலவகையான மதில்களால் தமது காவல் அரண்களைக் கட்டினர். நால்வகை மதிலரண்களில் உயரம் மட்டும்  உடையது ‘மதில்’ எனவும், உயரமும் அகலமும் உள்ளது ‘எயில்’ எனவும், உயரமும் அகலமும் திண்மையும் சேர்ந்தது ‘இஞ்சி’ என்றும், உயரம், அகலம், திண்மை மூன்றுடன் பிறரால் எளிதில் கைப்பற்ற முடியாத அருமையும் உடையது ‘சோ’ எனவும் அழைக்கப்பட்டது.

தானே இயங்கி அம்பு எய்யும் வில்லும், படைவீரர்களாகிய எயினரும் இருக்கக்கூடியதாக எயில் அகலமாகக் கட்டப்பட்டது. அம்மதிலில் இருந்து அம்பு எய்யும் தொழில் நடந்ததால் அதற்கு எயில் என்று பெயர். கருங்கற்களின் மேல் செம்பை உருக்கி வார்த்துக் கட்டப்பட்டதால் இஞ்சி அரண் இறுகி உறுதியுடையதாக இருந்தது. இஞ்சல் என்றால் இறுகல் என்ற கருத்தைத் தரும். அதனாலேயே அவ்வரண் இஞ்சி எனப் பெயர் பெற்றது.

இலங்கையில் இருந்த இஞ்சி அரணை கம்பர் 
“ செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்”    - (கும்பகர்ணன் வதைப்படலம்: 159)
என்கிறார். அதுமட்டுமல்ல அரண்களிலே மிகச்சிறந்த அரணான ‘சோ’ அரண் கூட இலங்கையில் இருந்ததை இலக்கியங்கள் சொல்கின்றன. 

இளங்கோவடிகளும் 
“சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த”
என்று திருமாலின் பெருமையை சிலப்பதிகாரத்தில் கூறியுள்ளார். ‘சோ’ அரண் மற்றைய மூன்று அரண்களின் தன்மையும் கொண்டதால் அவற்றின் பெயர்களாலும் அவ்வரண் சுட்டப்பட்டது. 

ஒரு நாட்டின் அரண் எப்படி இருக்கவேண்டும் என்பதைக் கூறுகின்ற நூல் தமிழ்மொழியில் இருந்ததை '... இந்நான்கின் அமைவு அரண் என்று உரைக்கும் நூல்' எனத் தெளிவாகத் திருவள்ளுவர் இக்குறளால் எமக்கு அறியத்தந்துள்ளார். அரண் என்றால் உயரமும் அகலமும் உறுதியும் அருமையும் உடையதாக இருக்க வேண்டும் என்று பண்டைய தமிழ் நூல் கூறும் என இக்குறள் சொல்கிறது. ஆதலால் சோ அரணே உண்மையான அரணாகும்.

சங்ககால இலங்கையில் சமையல் நூல்


சங்க காலத்தில் இலங்கையை ஆண்ட தமிழ் அரசர்கள் பலர் மாந்தையைத் தலைநகராகக் கொண்டு அரசாட்சி செய்ததற்கு சங்க இலக்கியங்கள் சாட்சி பகர்கின்றன. அவை மாந்தையை மாந்தை என்றும் பெருந்தோட்டம் என்றும் குறிப்பிடுகின்றன. சங்ககால மக்கள் பெருந்தோட்டம் என்று அழைத்த இடத்தை நாம் இன்று மாதோட்டம் என்று அழைக்கின்றோம். 

“இலங்கு நீர்ப்பரப்பின் மாந்தையோர் பொருந”       
                                                            - (பதிற்று: 10: 28)
என்று பதிற்றுப்பத்தும்

“பெருந்தோட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்
குட்டுவன் மாந்தை அன்ன”                                      
                                                           - (குறுந்: 34: 5 - 6)
எனக் குறுந்தொகையும், சேரர்கள் ஈழத்தின் மாந்தையில் இருந்து அரசாட்சி செய்ததைக் காட்டும். சேரர்கள் மட்டுமல்ல ஓவியனான மயனின் வழிவந்த அரசர்களும்  ஈழத்தின் மாந்தையை ஆண்டார்கள். 

நல்லியக்கோடன் என்ற பெயருடைய அரசன் இலங்கையின் மாந்தையை அரசாட்சி செய்தான் என்பதை புறநானூற்றில் 
“பெருமா இலங்கைத் தலைவன் சீறியாழ்
இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனை     
                                                            - (புறம்: 179: 6 - 7)
என புறத்திணை நன்னாகனார் குறிப்பிட்டுள்ளார். 

அவன் ஓவியர் வழி வந்தவன் என்பதை
“தொன்மா இலங்கை கருவொடு பெயரிய
நன்மா இலங்கை மன்னர் உள்ளும்
மறுவின்றி விளங்கிய வடு இல் வாய்வாள்
உருப்புலித் துப்பின் ஓவியர் பெருமகன்
....................புரவலன் பேரிசை
நல்லியக் கோடனை”                                    
                                                            - (சிறுபாணா: 119 - 126)
என மிக விரிவாக சிறுபாணாற்றுப்படை சொல்கிறது.

சிறுபாணாற்றுப்படையின் இப்பாடல் வரிகளுக்கு கருத்து எழுதுவோர் பிழையாக எழுதுகின்றனர். அவர்களது கருத்துப் பிழையால் இலங்கைத் தமிழர் இன்று நாடற்று அகதிகளாக வாழ்கின்ற நிலைக்கு வந்தனர் என்றும் சொல்லலாம். காலங்காலமாக இலங்கைத் தமிழர் இலங்கையில் தொடர்ந்து வாழ்ந்து வருவதற்கு சங்க இலக்கியங்கள் சான்றாக இருக்கின்றன. அந்தச் சான்றுகளை இருட்டடிப்புச் செய்து, பிழையாகப் பொருள் கொள்வதால் இலங்கைத் தமிழர் நாடற்று வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என்று சொல்வதில் தப்புண்டா?

ஓர் ஆய்வுக்காக சிறுபாணாற்றுப்படையின் 
“..............................போக்கறு மரபின்
தொன்மா இலங்கை கருவொடு பெயரிய
நன்மா இலங்கை மன்னர் உள்ளும்”
என்ற  வரிகளை எடுத்துக் கொள்வோம். 



இதனை எழுதிய சிறுபாணாற்றுப்படை ஆசிரியர் நல்லூர் நத்தத்தனார் என்ன கருத்தில் கூறியிருப்பார் என்பதைப் பார்ப்போம்.
“..............................போக்கறு மரபின் [அழிவற்ற மரபு]
தொன்மா [பழைமையான பெரிய] இலங்கை கருவொடு [பெருமையோடு] பெயரிய [பெயர்/புகழ் பெற்ற]
நன்மா [நல்ல செல்வம்] இலங்கை மன்னர் உள்ளும்”
‘தொடர்ந்து வரும் மரபுவழி, பழமையான பெரிய இலங்கையின் பெருமையோடு புகழ்பெற்ற, நல்ல செல்வமுடைய இலங்கை மன்னருள்’ என்பதே இதன் கருத்தாகும். அழிவற்ற மரபு என்றால் அது தொடர்ந்து வரும் மரபு தானே? இன்றைய இலங்கையை [Sri Lanka], சங்ககாலத்தில் ஆண்ட நல்லியக்கோடன் பற்றியே பாடல் சொல்கிறது. பாருங்கள் நல்லூர் நத்தத்தனார் போக்கறு மரபு என்று பரம்பரை பரம்பரையாக தொல்லிலங்கையில் வாழ்ந்த மன்னர்கள் என்று குறித்தும் நம்மவர்கள் அதனைக் கண்டு கொள்ளவில்லை. அது ஏன்?? புரியவில்லை.

ஆனால் ‘கருவொடு பெயரிய’ என்பதற்கு தாயின் கருவில் இருக்கும் பொழுது எனப்பொருள் கொண்டு   இதற்கு கருத்து எழுதுகின்றனர். தாய் கருவுற்ற போது இலங்கையில் இருந்தது பெயர்ந்து சென்று தமிழகத்து மாவிலங்கையை ஆண்ட மன்னருள்ளும் நல்லியக்கோடடன் சிறப்புப் பெற்றவன் என்றும் எழுதுகின்றனர். தமிழகத்து மாவிலங்கையை ஆண்ட மன்னர்களின் தாய்மார்கள் எல்லோருமே தொல்லிலங்கையில் கருவுற்றனரா! என்ற கேள்வி எழாதா? வேறு சிலரோ அதே கருத்தை சிறிது மாற்றி ‘அழிதற்கரிய முறைமையினையுடைய பழையதாகிய பெருமை மிக்க இலங்கையினது பெயரை, கருப்பதித்த முழுத்தத்திலேயே தனக்கும் பெயராகவுடைய நன்றாகிய பெருமையை உடைய மாஇலங்கையை ஆண்ட மன்னருள்ளும்’ என்று எழுதுகின்றனர். சிறுபாணாற்றுப்படைப் பாடல்களை படித்த பின்னர் சாவகச்சேரி - தனக்கிளப்பு - பூநகரி வழியாக மாந்தைவரை சென்று பாருங்கள், நத்தத்தனார் சொன்ன உண்மை விளங்கும்.


இலங்கையின் மாந்தையை சங்ககாலத்தில் ஆண்ட அரசனான அந்த நல்லியக்கோடனிடம் பாடிப் பொருள் பெறச் சென்ற பாணனின் அழுக்கடைந்த ஆடையைக் களைந்து, புத்தம்புது ஆடை அணிவித்து, பொன்னால் செய்த தட்டில் [பொற்கலத்தில்] உணவு கொடுத்தானாம். அந்த நல்லியக்கோடன் கொடுத்த பொற்கலமோ ஒளிபொருந்திய ஆகாயத்தில் கிரகங்கள் சூழ்ந்த சூரியனை பழித்துக்கூறும் படி ஒளியுள்ளதாக இருந்ததாம். அந்தப் பொற்றட்டில் வகை வகையாக உணவுகளைப் பறிமாறினார்கள். 

அந்த உணவுகள் இமயமலை போன்ற அகன்ற மார்பையுடயவன் எழுதிய நுணுக்கமான பொருள் விளக்கும் மடைநூலில் [சமையல் நூலில்] சொல்லப்பட்டதற்கு மாறாமல் இருந்ததாம். அந்த மடைநூல் அருச்சுனனின் அண்ணனான வீமன் எழுதியது என்று உரையாசிரியர் கருதுகிறார். யார் அந்நூலை எழுதியது என்பதை சிறுபானாற்றுப்படையைப் பாடிய நத்தத்தனார் குறிப்பிடவில்லை. எனினும் அவர் இரண்டாயிர வருடத்துக்கு முன்பே ஈழத்து மாந்தையில் மடைநூல் அதாவது சமையல் புத்தகம் பாவித்து அதன்படி சமைத்தார்கள் என்பதை ஒரு வரலாற்றுப் பதிவாகத் தந்திருக்கிறார்.
“பனிவரை மார்பன் பயந்த நுண் பொருள்
பனுவலின் வழாஅப் பல்வேறு அடிசில்
வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த
இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி
ஆனா விரும்பின் தான் நின்று ஊட்டி"                  
                                            - (சிறுபாணா: 240 - 245)

நத்தத்தனார் மடைநூலை [சமையல்நூலை] வரலாறாகத் தந்ததோடு, சங்ககாலத் தமிழர் சூரியனைச் சூழ்ந்து கிரகங்கள் [கோள்மீன்] இருந்ததை அறிந்திருந்தனர் என்பதையும் வரலாறாகப் பதிவு செய்திருக்கிறார். 
இனிதே, 
தமிழரசி.

Tuesday, 9 July 2013

அடிசில் 60

இராசவள்ளிக்கிழங்குக் கேக்
                                                                                   - நீரா -




















தேவையான பொருட்கள்:
இராசவள்ளிக்கிழங்கு - 1 கப்
முட்டை - 7
பால் - ½  கப் 
எண்ணெய் - ½ கப் 
கேக் மா - 2 கப்
சீனி - 1½ கப்
cream of tartar - ½ தே.கரண்டி
வனிலா - 1 தே.கரண்டி 
அப்பச்சோடா (Baking Powder) - 2½ தே.கரண்டி
உப்பு - ½ தே.கரண்டி

செய்முறை:
1. அவணை 1700 Cல் சூடாக்கிக் கொள்க. 9” விட்டமுள்ள, வட்டமான கேக் செய்யும் பாத்திரத்தின் அடியில் எண்ணெய்த்தாள் [baking paper] போட்டு வைக்கவும்.
2. முட்டைகளை உடைத்து மஞ்சள் கருவையும் வெள்ளைக் கருவையும் வெவ்வேறாகப் பிரித்துக் கொள்க.
3. சிறிய இராசவள்ளிக் கிழங்கை தோல் சீவிக் கழுவி, துருவிக்கொள்க.
4. அரைப்பங்கு [¾ கப்] சீனியுடன் கேக் மா, அப்பச்சோடா, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
5. துருவிய இராசவள்ளிக் கிழங்குடன், முட்டை மஞ்சட்கரு, பால், எண்ணெய், வனிலா சேர்த்து நன்றாக மிக்சியில் அடித்து, மாக்கலவையையும் அதனுடன் சேர்த்து அடிக்கவும்.
6. இன்னொரு பாத்திரதில் முட்டை வெள்ளைக்கருவைத் தனியே நன்றாக அடித்து, cream of tartar சேர்த்து நுரைவர அடித்து, அதற்குள் மிகுதியாக இருக்கும் சீனியையும் இட்டு அடிக்கவும்.
7. அதனை, அடித்த மாக்கலவையுள் சிறிது சிறிதாகச் சேர்த்து இரண்டயும் ஒன்றாகக் கலக்கவும்.
8. கேக் செய்யும் பாத்திரத்தினுள் கேக்கலவையை இட்டு சமமாகப் பரப்பி, நடுவே சிறிது பள்ளமாக விடவும்.
9. சூடாக்கிய அவணில் 45 நிமிடநேரம் வேகவைத்து, வெந்ததும் எடுக்கவும்.

Monday, 8 July 2013

எல்லையில்லாப் பெருவளங்கள்!

கலநீடு மனை
ஒரு நாடு வளமுள்ளதாக இருக்கவேண்டுமானால் அந்த நாட்டில் இயற்கை வளம் கொட்டிக்கிடக்க வேண்டும். இயற்கை வளம் நிறைந்த நாட்டிலுள்ள ஊர்கள் வளமுள்ளதாக இருக்கும். ஊர்கள் வளமுள்ளதாக இருந்தால் அங்கு இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் வளம் கொழிக்கும். அத்தகைய கரை காண முடியாத பெருவளங்கள் உள்ள ஒரு நாட்டைச் சேக்கிழார் நாயனார் பெரிய புராணத்தில்  திருநாவுக்கரசர் வரலாற்றைக் கூறும் இடத்தில் படம்பிடித்துக் காட்டுகிறார். 

அது நீர்வளம் நிறைந்த நாடு.  ஆதலால் அந்த நாட்டின் ஊர்களில் இருந்த வயல்களிலே நீலோற்பலம் என்று சொல்லப்படும் கருங்குளை மலர்கள் பூத்திருக்கும். நீலோற்பல மலர்களின் நீலநிறத்தை அங்குள்ள வயல்கள் காட்டும்.  இரவுநேர இருளின் நீலத்தை கருநீலநிற வானித்தில் இருக்கும் நிலவு காட்டும். அங்கு வாழும் மக்களின் மகிழ்ச்சிப் பெருக்கத்தைக் காட்டும் தெருக்கள், அழகான ஊஞ்சல்களையும் காட்டும். பொழுது புலரும் போதிருக்கும் நீலநிறத்தை விலகிச் செல்லும் இருள் காட்டும். உழவுக்குச் செல்லும் உழவர்களின் ஒலி சூரியன் உதிப்பதைக் காட்டும். ஒற்றுமையின் உயர்வை அவ்வூரிலுள்ள மனைகள் காட்டும். 

மலர்நீலம்

“மலர்நீலம் வயல்காட்டும் மைஞ்ஞீலம் மதிகாட்டும்
அலர்நீடு மறுகாட்டும் அணியூசல் பலகாட்டும்
புலர்நீலம் இருள்காட்டும் பொழுதுழவர் ஒலிகாட்டும்
கலநீடு மனைகாட்டும் கரைகாட்டாப் பெருவளங்கள்    
                                      - (திருநாவுக்கரசர் புராணம்: 14)
அந்த நாட்டில் எல்லையில்லாப் பெருவளங்கள் நிறைந்துள்ளது என்பதைச் சேக்கிழாரும் கரைகாட்டாப் பெருவளங்கள் எனக்கூறி மகிழ்கிறார். [கடலின் எல்லை கடற்கரை. ஆற்றின் எல்லை ஆற்றங்கரை. எனவே கரை என்பது எல்லையைக் குறிக்கும்.]

சொல் விளக்கம்:
மலர்நீலம் - நீலோற்பல மலரின் நீலநிறம்
மைஞ்ஞீலம் - மைபோன்ற கருநீலநிறம்
அலர்நீடு - மகிழ்ச்சிப் பெருக்கம்
மறு - தெரு
அணியூசல் - அழகிய ஊஞ்சல்
புலர்நீலம் - பொழுது புலரும் நீலநிறம்
பொழுது - அதிகாலைப் பொழுது
கலநீடு - ஒற்றுமையின் உயர்வு [கல - கலத்தல்]
மனை - வீடு 
கரைகாட்டா - கரையில்லா/ எல்லையில்லா

இனிதே,
தமிழரசி.

Sunday, 7 July 2013

பக்திச்சிமிழ் - 59

உறுபொருள் காண்கிலீர்
- சாலினி -

கடவுள் என்னும் உண்மை பல வேளைகளில் கேள்விக்குறி ஆகிறது. அதற்குக் காரணம் நாம் கடவுளின் உண்மையை உணராமையே ஆகும். அன்பு என்று சொல்லப்படுகின்ற உணர்வு ஒருவரிடம் இருக்கிறதா இல்லையா என்பதை உணர்ந்து அறியலாமே அல்லாமல் இட்டும், தொட்டும் காட்டமுடியாது. அது போன்றதே கடவுளின் உண்மையும்.

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார் 
அன்பு சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே                 - (திருமந்திரம்: 270)

அதனாலேயே திமூலரும் அன்பை வேறாகவும் சிவனை வேறாகவும் பிரித்துச் சொல்வோரை அன்றேல் பிரித்துப் பார்ப்போரை அறிவில்லாத மூடர் என்றார். ஏனெனில் உண்மையான பரிவு, பாசம், பற்று, அன்பு போன்றவற்றை யாரும் காசு கொடுத்து வாங்க முடியாது. 

அன்பு உலக உயிர்கள் யாவற்றுக்கும் பொதுவானது. அது தானாகச் சுரப்பது. அதற்கு அளவுகோல் கிடையாது. ஒன்றை எதிர்பார்த்தே, அன்பு செலுத்தப்படுவதாக சிலர் நினைக்கலாம். இந்தப்பரந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் எத்தனையோ இடத்தில் தத்தமக்கு அறிமுகமில்லாத உயிர்களுக்கு  வேறு உயிர்கள் உதவிக்கொண்டே இருக்கின்றன. அவை எதை எதிர்பார்த்து உதவுகின்றன? நெஞ்சில் உண்மையான அன்பென்னும் ஈரம் இருக்கும் எந்த உயிரும் எதையும் எதிர்பார்த்து அன்பு செலுத்தாது.

மலரில் எப்படி நறுமணம் வீசுமோ அதுபோல் எமது உயிரினில் சிவம் எனும் அன்புமணம் வீசும். அதை நாம் உணர்ந்து அறியவேண்டும்.

பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது                  - (திருமந்திரம்: 1459)

அந்த சிவமணத்தை உணர்ந்து அறியாமல் நான் கோயிலில் சுவாமிக்கு தேரிழுத்தேன். ஆதலால் நான் பிறவிப்பயனை அடைந்து விட்டேன். கோயில் கட்டினேன். திருவிழாச்செய்தேன். அந்த சுவாமியார் என்வீட்டில் நின்றார். நான் புனிதம் அடைந்தேன், என்று சொல்வதெல்லோம் உண்மைப் பொருளை அறியாதார் செய்யும் செயல் என்று திருமூலர் சொல்கிறார். 

“உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
சிந்தை யுறவே தெளிந்திருள் நீங்கினால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே”                  (திருமந்திரம்: 2622)

ஆதலால் எமது சிந்தையில் சிவனை இருத்தி, மனத்திலுள்ள இருளை நீக்கினால் அதுவே எமது பிறவிப்பிணியைப் போகும் மூலகாரணமாய் விளங்கும். [வித்து - காரணம்]

Saturday, 6 July 2013

இரங்கியருள் கந்தவேளே!

கிளிநொச்சி கந்தவேள் வணக்கப் பாமலர்
                                      - இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன்


 


ஒருமுருக மந்திர முச்சரித் தனுதினம்
          உள்ளன்போ டோதிவந்தால்
ஊன்கண் திறந்துநல் லொளிவருங் கண்ணிலே
          உண்மைநிலை நெஞ்சமுணரும்
திருநடஞ் செய்திளமை சேர்கல்வி சேரும்
          செல்வச்செகம் மதிக்கும்
தீராதவினை தீரும் மருத்தீடு பேய்பில்லி
          தீர்ந்துடல் பொன்னாகுமாம்
மருளகன்றே நல்ல மனிதநிலை தந்திடும்
          மனைமக் களுஞ்சிறக்கும்
மாபுகழினோ டிந்த மண்ணாளலாங் காண்
          மதிப்பவர் மனத்திருந்து
இருளகன்றிடநல் லொளிவீசு வேலனே
          எழைகட் கருளுகந்தா
இலங்கு கிளிநொச்சிநக ரெங்குமும் மாரிபெய
          இரங்கியருள் கந்தவேளே!

Friday, 5 July 2013

நானும் நகைத்திட்டேன்















கஞ்சிக்காக அலைந்து அலைந்து
          கால்கள் ஓய்ந்து துவண்டாலும்                    
கொஞ்சும் மழலைச் சிரிப்பாலே
          கொடுக்கா மனதைத் திறந்திடுவோம்          
பஞ்சம் எமக்கு ஈங்கில்லை
          பாறை மனத்தோர் உமக்கென்றே
அஞ்சி மெல்லக் கண்மூடி
          அவனியைக் காண மனமின்றி
பிஞ்சிக் கையால் வாய்பொத்தி
          பெரிதாய் நானும் நகைத்திட்டேன்.
                                                                                               சிட்டு எழுதும் சீட்டு 67