உலகெங்கும் வாழும் தமிழர்களாகிய நாம் தைமாதத்தின் முதல் நாளை பொங்கல் திருநாளாகக் கொண்டாடுகிறோம். இந்த நாளில் வேறு வேறு பெயர்களில் இத்திருநாளைக் கொண்டாடும் மற்றைய இனத்தோரும் பண்டையதமிழ் இனத்தில் இருந்து முகிழ்ந்தோரே. தைப்பொங்கல் உழவர் திருநாள் என்று கூறப்பட்டாலும் தமிழர் திருநாள் என்றே இனங்காணப்படுவது அவ்வுண்மையை எடுத்துச் சொல்கிறது.
உலகில் எத்தனையோ தொழில்கள் இருக்க ‘பண்டைய தமிழர்கள் ஏன் உழவுத்தொழிலுக்கும் உழவர்களுக்கும் முதன்மை கொடுத்தார்கள்?’ என்பதை நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். இருபத்தி ஓராம் நூற்றாண்டில் கணணிகளுடன் வாழும் மனிதர்களாகிய நாம் உழவுத்தொழிலுக்கு கொடுக்காத முதன்மையை நம் முன்னோர் ஏன் கொடுத்தனர்? நாம் தொலைத்தொடர்பு சாதனங்களை விரும்பும் அளவிற்கு உழவுத் தொழிலை விரும்பாதது ஏன்? இந்நாளில் உழவுத்தொழிலுக்கென மிக நுட்பமான இயந்திரங்கள் இருப்பினும் உடல் உழைப்பால் வியர்வை சிந்திச் செய்யப்படும் தொழில் உழவாதலால் எம்மால் உழவுத் தொழில் புறக்கணிக்கப்படுகிறது.
இன்றைய உலகில் வாழும் தமிழர் மட்டுமல்ல, மனிதர் யாவருமே சும்மா இருந்து சுகம் காணவிழைகிறோம். காடுகள், கழனிகள், மலைகள், நதிகள் யாவற்றையும் அழித்து அணு உலைகளாயும், விமான ஓடுதளங்களாயும், வீதிகளாயும், வானுயர் கோபுரங்களாயும், நாடுகளாய், நகரங்களாய் கட்டி மகிழ்ந்து உல்லாசம் காண்கிறோம். அதே நேரத்தில் அவற்றையும் போர்களால் தகர்த்து எறிந்து மண்ணோடு மண்ணாக்குகிறோம். உலகநாடுகளின் வல்லரசுகள் தமது அரசியல் சூதாட்டங்களுக்காக பணவீக்கத்தை ஏற்படுத்தி எம்மை சுகம் காண வைக்கின்றன. இந்த அரசியல் சூதாட்டங்கள் உண்மையான மனிதவாழ்வுக்கு ஏற்றவை தானா? என்பதை பிற்காலத்தோருக்கு சொல்வதே தைப்பொங்கலான உழவர் திருநாளின் நோக்கமாகும்.

இன்றைய சிங்காரச் சென்னையிலே பெருங்களத்தூர் என்று பண்டைய தமிழரின் உழவுத்தொழிலின் பெருமை கூறும் ஓர் ஊர் இருக்கிறது. அக்காலத்தில் குளங்களூடன் இருந்த அப்பெருங்களத்திலே செந்நெல்லும் வெண்ணெல்லும் மலை மலையாக குவிந்து கிடந்தன. ஆனால் இன்று அந்தப் பெருங்களம் யாவும் Real estate, என்ற பெயரில் கட்டிடக் காடாக அகன்ற வீதிகளூடன் காட்சி அளிக்கின்றது. அங்கு இப்போ சின்னஞ்சிறிய நெற்களத்தை கூடக் காணமுடியாது. ஊரின் பெயர்மட்டும் பண்டைய தன் பெருமையை பறை சாற்றிய படி பெருங்களத்தூராக நிற்கிறது. அதுவும் இன்னும் எவ்வளவு காலத்திற்கோ?
சினிமாக்காரர்களையும் விளையாட்டு வல்லுனர்களையும் அரசியல்வாதிகளையும் பெரிதாக மதித்து கொட்டிக்கொடுத்து, ஒட்டி உறவாடும் நாம் உழவர்களை ஏன் கண்டு கொள்வதில்லை. அவர்கள் யாவரும் தம் உடல் உழைப்பைவிட எத்தனை மடங்கு பணத்தை சம்பளமாகப் பெறுகிறார்கள்? அவர்களா நாம் உயிர் வாழ உணவு தருகிறார்கள்? எமக்கு உணவைத் தர உடல் வருந்தி உழைக்கும் உழவர்கள் ஒரு நேர உணவுக்காக பல காலம் தவிக்கிறார்களே. இயற்கையும் அவர்களோடு விளயாடுகிறது. உணவைத் தருபவன் உணவுக்கு ஏங்குவதை வேடிக்கை பார்க்கிறோம். ஏன் நாம் இவற்றை சிந்திப்பதில்லை? நம் முன்னோரிடம் இருந்த சிந்தனைத் தெளிவு நம்மிடம் இல்லையா?
பாருங்கள்! 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் அரசனின் பிறந்தநாள் அன்று அரசனை “வரப்புயர” என்று வாழ்த்தினார். வாழ்த்தின் பொருள் விளங்காத அரசனும் அவையோரும் ‘வரப்புயர’ என்றால் என்ன? என கேட்டனர். அதற்கு ஔவையார்
“வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயர குடியுயரும்
குடியுயர கோன் உயருவான்”
என்றார்.
‘வயலின் வரம்பு உயர்ந்தால் அதில் தேங்கி நிற்கும் நீரின் உயரம் கூடும். நீரின் வளம் பெருகினால் நெல்லின் விளைச்சல் கூடும். நெல் கூடுதலாக விளைந்தால் பொருளாதாரம் பெருகி, மக்களின் வாழ்க்கை உயரும். நாட்டில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர உயர நாட்டை அரசாட்சி செய்யும் அரசனும் புகழால் உயர்வடைவான்’ என்பதே ‘வரப்புயர’ என்னும் ஒரேயொரு சொல்லால் ஔவை வாழ்த்தியதன் கருத்தாகும். ஒரு நாடு வளமாக இருக்கவேண்டுமானால் உணவில் தன்னிறைவு அடைந்திருக்க வேண்டும். உழவர், கமக்காரர், விவசாயி என எந்தப்பெயரில் அழைத்தாலும் அவர்களின் உயர்ச்சியே நாட்டின் உயர்ச்சி என்ற சிந்தனைத் தெளிவு 13ம் நூற்றாண்டுத் தமிழரிடம் இருந்ததை ஔவையாரின் இப்பாடல் காட்டுகிறது.
இந்த ஔவையாரின் காலத்திலேயே கம்பரும் வாழ்ந்தார். கம்பர் இராமாயனம் மட்டும் எழுதவில்லை இன்னும் சில நூல்கள் எழுதி இருக்கிறார். அதில் ஒன்று ஏர் எழுபது. ஏர் என்பது உழவு, உழும்மாடு, கலப்பை என்ற கருத்துக்களைத் தரும். இங்கு உழவுத்தொழிலைக் குறிக்கிறது. உழவுத்தொழிலின் மேன்மையைச் சொல்லும் எழுபது பாட்டுக்களால் ஆனதே ஏர் எழுபது. அதில் உழவர் பெருமையைக் காட்டுவதற்காக மறையோதும் ஞானியரையும் ஏன் சிவனைக்கூட கம்பர் வம்புக்கு இழுக்கிறார்.
“ஞானமறையவர் வேள்வி நலம் பெறுவது எவராலே?”
என்று கேள்வி கேட்டு அவர்களை வம்புக்கு இழுத்து அதற்கு விடையாக “
எருதின் வலிமையாலே” என பதிலும் தந்துள்ளார்.
இதற்கு அடுத்த பாடலில் சிவனின் கழுத்தில் உள்ள கறைக்கும், வயல் உழும் போது நுகத்தடியைத் தாங்கித் தாங்கி எருதின் பிடரியில் உள்ள கறைக்கும் முடிச்சுப் போடுகிறார். விண்ணில் வாழும் தேவர்களுக்கு அமுதை உண்ணக் கொடுத்து, சிவன் கழுத்தில் கறை இருக்கிறது. மண்ணில் வாழும் மக்களுக்கு உணவாகிய அமுதத்தை உண்ணக்கொடுத்து எருதுதின் கழுத்திலும் கறை இருக்கிறது என கம்பர் கூறியுள்ளார். இவற்றைப் பார்த்தே கம்பன் ஒரு வம்பன் என்று சொன்னார்கள் போலும்.
கண்ணுதலோன் தனது திருக்கண்டத்திற் படிந்த கறை
விண்ணவரை அமுதூட்டி விளங்குகின்ற கறையென்பார்
மண்ணவரை அமுதூட்டி வானுலகம் காப்பதுவும்
எண்ணருஞ்சீர் பெருக்காளர் எருது சுவல் இடுகறையே” - (ஏர் எழுபது: 25)
எவனொருவன் பிறர் வாழ உழைகின்றானோ அவன் துன்பங்களை தாங்க வேண்டியவனாகவே இருக்கின்றான். கடவுளாக இருந்தால் என்ன மாடாக இருந்தால் என்ன அதில் வேற்றுமை இல்லை. அதன் உண்மையை அறிந்தே பண்டைய தமிழர் மாட்டை தம் செல்வமாகப் போற்றி வணங்கினர். தாம் பொங்கலிட்டு மகிழ்ந்தது போல் தமக்கு உணவைக் கொடுக்க உழைக்கும் மாட்டுக்கும் பொங்கல் இட்டனர். என்னே! அவர்கள் மிருக நேயம்!!
பொங்கல் திருநாள் உழவுத் தொழிலின் பெருமையைப் பறைசாற்றுகிறது. உழவுத்தொழிலோ தமிழர் பண்பாட்டின் மேன்மையை எடுத்துச் சொல்கிறது. உழவுத் தொழில் இல்லையேல் தமிழர் பண்பாடு என்று சொல்வதற்கு ஏதும் இல்லாது இருந்திருக்கும். தமிழர் பண்பாட்டில் தலைசிறந்த பண்பாடு விருந்தோம்பல் ஆகும். அதனாலேயே திருவள்ளுவரும்
“செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத்தவற்கு”
- (திருக்குறள்: 86)
என்றார்.
புதிதாக வந்த விருந்தினருக்கு உணவு கொடுத்து அனுப்பிய பின்னும் விருந்தினர் வரவைப் பார்த்திருப்பதற்கு வீட்டில் உணவுப்பொருட்கள் நிறைந்திருக்க வேண்டாமா? உழவர்களின் உழைப்பு இருந்திராவிட்டால் இத்தைகைய விருந்தோம்பும் பண்பு வளர்ந்திருக்குமா? எனவே வந்தாரை வாழவைக்கும் மனிதநேயப் பண்பாட்டை தமிழர் நெஞ்சில் விதைத்தது உழவுத் தொழிலே. தமிழர் கலைகளின் ஆணிவேரும் உழவுத் தொழிலே. உழவு உழும் பொழுது பாடல், நெல் விதைகப் பாடல், களைபிடுங்க, நீர் இறைக்க, அரிவு வெட்ட, சூடு வைக்க, சூடு மிதிக்க, நெல் தூற்ற, நெல் குற்ற என்ற வந்த நாட்டுப்பாடல்களும் ஆடல்களும் உழவர் தந்தவை தாமே.
அவற்றை மட்டுமா உழவர் தந்தனர் நோய் நீக்கும் மருந்துகளுக்கு வேண்டிய மூலிகைகளை தந்து மருத்துவத் தொழிலையும், மனிதர் ஆடை அணிய பஞ்சையும் பட்டையும் தந்து நெசவுத்தொழிலையும் வளர்த்து வருவது உழவர்கள் அல்லவா? உழவர்கள் அவற்றைத் தராதிருந்தால் நாம் இன்றும் ஆடை இன்றி நோய்களோடு அலைந்திருபோம்.
ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த தொல்காப்பியர் நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐம்பெரும் பிரிவுகளாகப் பிரித்துக் காட்டுகிறார். மலை, காடு, வயல், கடல், பாலை என நிலத்தை பிரித்து, ஒவ்வொரு நிலத்துக்கும் தெய்வம், புள் (பறவை), விலங்கு, நீர், ஊர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் என்று வகைபடுத்த உழவுத் தொழிலே அவர்களுக்கு கைகொடுத்தது.
உலகத் தொழில்களுக்கும், கலைகளுக்கும் ஆதிமூலம் உழவுத்தொழிலே ஆதலால்
“உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லைக்
கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு” - (நல்வழி: 12: 3-4)
என நல்வழி சொன்னது போல் உழவரின் பெருமையைப் போற்ற உழவர் திருநாளைக் கொண்டாடுகிறோம்.
இனிதே,
தமிழரசி.