Saturday, 27 October 2012

அடிசில் 38


உருளைக்கிழங்கு ரொட்டி
                              - நீரா -

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு  -  2
வெட்டிய கீரை  -  ½  கப் 
வெட்டிய வெங்காயம்  -  1 
வெட்டிய பச்சைமிளகாய்  -  1
வெட்டிய கருவேப்பிலை   -  கொஞ்சம்
மிளகாய்ப் பொடி  -  ½ தேக்கரண்டி
மாங்காய்ப் பொடி  -  ½ தேக்கரண்டி
சீரகம்  -  1 தேக்கரண்டி
கடுகு  -  1 தேக்கரண்டி 
உப்பு  -  தேவையான அளவு
எண்ணெய்  -  ½ மேசைக்கரண்டி

ரொட்டிக்கு தேவையானவை: 
கோதுமை மா  -  1¼ கப்
தண்ணீர்  -  ½ கப்
உப்பு  -  1  சிட்டிகை

செய்முறை:
1.  உருளைக்கிழங்கை அவித்து,  உரித்து, உதிர்த்திக் கொள்க.
2.  பாத்திரத்தில் எண்ணெய்விட்டு கொதித்தடும் கடுகைத் தாளித்து, சீரகம், பச்சைமிளகாய், வெங்காயம், கருவேப்பிலை என்பவற்றை வதக்கி வெட்டிய கீரை, மிளகாய்ப் பொடி, மாங்காய்ப் பொடி, உப்புச் சேர்த்து கீரை வெந்ததும், உருளைக்கிழங்கை இட்டு கிளரவும்.
3.  யாவும் ஒன்றாகச் சேர்ந்து வரும் போது இறக்கி, ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக்கொள்க.
4.  வாயகன்ற பாத்திரத்தில்ரோட்டிக்கான மாவில் ஒருகப் மாவை இட்டு, உப்பும் சேர்த்து, தண்ணீர் விட்டு குழைத்து, அரை மணி நேரம் ஊறவிடவும்.
5.  ரோட்டி மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிரித்து, கிண்ணம் போல் செய்து அதற்குள் ஒவ்வொன்றுள்ளும் ஒவ்வொரு உருளைக்கிழங்கு உருண்டையை வைத்து மூடி தனித்தனி உருண்டைகளாகப் பிடித்துக் கொள்க. 
6.  மிகுதி மாவை ஒரு தட்டில் தூவி உருண்டைகளை வட்டமான ரொட்டியாகத் தட்டி வைக்கவும்.
7.  தட்டையான பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கி, தட்டிய ரொட்டியை இருபக்கமும் பொன்னிறமாகச் சுட்டு எடுக்கவும். 

   

Thursday, 25 October 2012

ஆசைக்கவிதைகள் - 46


மன்னி மன்னிப் போறவளே!


















அழகான பெண்களைக் கண்டால் அவர்களின் வயதைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாது ஆண்கள் கிண்டல் செய்வது வழக்கம். மார்பளவு தண்ணியில் நடந்து செல்லும் பெண்ணின் மார்பைப் பார்த்து ஆண் கிண்டல் செய்வதையும், அதற்கு அப்பெண் சொல்லும் பதிலையும் திருகோணமலையின் இந்த நாட்டுப்பாடல்கள் சொல்கின்றன. அவன் மாதளங்காய் என்று அவளது மார்பை சுட்டியதற்கு, அவள் தன் மார்பை மாம்பிஞ்சு என்றும், குழந்தையை பாலப்பிஞ்சு என்றும் கூறுவது நாட்டுப்புற வழக்கத்தை அழகாகச் சொல்கிறது. பெண் சொல்லும் பதிலின் முடிவு “பால் முலயடா பாதகா” என்று ஏசுவதாகவும், “பால் முலையடா பாரெடா” என்று கூறுவதாகவும் இருக்கின்றது. அது கூறும் பெண்ணின் இயல்பைப் பொறுத்தது.

ஆண்: மார்பளவு தண்ணியில
                     மன்னி மன்னி போறவளே!
            மாரிலே ஆடுமந்த
                     மாதளங்காய் என்ன விலை?

பெண்: மாதளங் காயும் அல்ல
                       மாவடு பிஞ்சும் அல்ல
             பாலப் பிஞ்சு குடிக்கும்
                       பால் முலயடா பாதகா!            
                             -  நாட்டுப்பாடல் (திருகோணமலை)
                                        பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

Wednesday, 24 October 2012

தருவாய் சிவகதி! தாயே சிவசக்தி!


  

                 பல்லவி
நடமிடும் பாதன் நாயகியே உன்றன்
நயனங்கள் திறந்தெனை ஆதரியே!
                                                    - நடமிடும் பாதன்
                  அனுபல்லவி
மடமையை நீக்கி மதியை வளர்த்திட
மானச குருவாய் வந்தமர்ந்தனையே!
                                                     - நடமிடும் பாதன்
                  சரணம்
பொங்கி வீழ் அருவியும் பூங்குயில் கீதமும்
சிங்கத்தின் சீற்றமும் சங்கத்தின் நாதமும்
துங்கமயில் ஆடலும் தங்கமான் துள்ளலும்
எங்கெங்கும் இசையென உள்ளத்து உள்ளவே
ஐங்கரனை முன்னமர்த்தி ஆர்வமுடன் எனைநோக்கி
பைங்கரம் தொட்டு பக்குவமாய் மடி இருத்தி
மங்கல வாழ்த்துரைத்து மகிழ்வோடு 
பைந்தமிழ் தானுரைத்தாய் பரிவோடு 
                                                      - நடமிடும் பாதன்

மீட்டிட்ட வீணையில் விரைந்தெழு நாதங்
கூட்டிட்ட இசையின் குழுமிய வேத
பாட்டிட்ட பரத நளின நவ
பாவ ராக தாளங்களும் பயில
மையிட்ட விழிகள் மருட்டிடவும்
மந்தாரப் புன்னகை மயக்கிடவும்
கையிட்ட வளைகள் குழுங்கிடவும்
கைத்தாளம் இடுவாய் கனியோடு
                                                      - நடமிடும் பாதன்

முருகாய் மலராய் மருவாய் மெருகாய்
அருவாய் உருவாய் அனைத்துமாய் நின்றாய்
கருவாய் உயிராய் கருத்தாய் கலந்தாய்
சீரும் கல்வியும் சிறந்தோங்கு செல்வமும்
பேரும் புகழும் பெருமையும் தரவே
குருவாய் வந்தாய் குறைகள் களைந்தாய்
திருவாய் திகழ்வாய் திருவருள் பொழிய
தருவாய் சிவகதி! தாயே சிவசக்தி!
                         சரணமம்மா...... அம்மா......

இனிதே,
தமிழரசி

[மகள்ஆரணியின் பரதநாட்டியத்திற்காக 2003ல் எழுதியது]

Tuesday, 23 October 2012

குறள் அமுது - (47)

குறள்:
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”                                       - 350

பொருள்:
பற்றேயில்லாத இறைவனின் பற்றைப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். பற்றுக்களை விட்டுவிடுவதற்காக  அப்பற்றைப் (இறைவனின் பற்றை) பற்றிக் கொள்ளுங்கள்.

விளக்கம்:
இத்திருக்குறள் துறவு என்னும் அதிகாரத்திலுள்ள கடைசிக்குறள். துறவு என்பது உலகத்தின் மேல் உள்ள பற்றுக்களைத் துறத்தல்[நீக்கிவிடுதல்]. இன்னொரு வகையில் சொல்வதானால் துறவென்பது ஆசைகளை களைந்து விடுதலாகும். எமது துன்பங்களுக்குக் காரணம் பற்றாகும். அதனாலேயே பெரியோர் ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றனர். 

துன்பத்தையோ இன்பத்தையோ அளக்க அளவுகோல் இல்லை. ஒருவருக்கு இன்பமாக இருப்பது மற்றவருக்குத் துன்பமாக இருக்கலாம். உயிர்களை வதைத்தும் கொன்றும் சிலர் இன்பம் அடைகின்றார்கள் அல்லவா? எனவே இன்பமும் துன்பமும் அவரவரின் மனப்பண்பைப் பொறுத்து இருக்கும்.

பற்று இருவகைப்படும். ஒன்று அகப்பற்று. மற்றது புறப்பற்று. நானே பெரியவன், நானே செய்வேன் என்ற எண்ணத்தால் வரும் தலைக்கனத்துக்கு அகப்பற்றே காரணம். இது எனது வீடு, இது எனது கார், நீ எனது வேலையாள் என்ற இறுமாப்புக்கு புறப்பற்றே காரணம். இவ்விரு பற்றுக்களையும் பற்றிப் பிடித்துக்கொண்டு சுழல்வதாலேயே அடிக்கடி துன்பத்தால் துடிக்கின்றோம். 

இவ்விரு பற்றுக்களையும் நீக்கினால் துன்பம் இல்லாது இன்பமாக வாழலாம். பற்றுக்களை நீக்கி வாழ்வது மிகவும் இலகுவான செயல் அல்ல. பிறந்த கணப்பொழுது முதலே ஏதோ ஒன்றின் மேல் பற்று உடையவராகவே வாழ்கிறோம். பால், உணவு, உடை, கல்வி, வேலை, பொருள், தாய், தந்தை, சுற்றம், வீடு, நாடு, மொழி என பற்றுக்கள் விரிந்து செல்கின்றன. 

இன்பங்களில்  சிறந்த இன்பம் பேரின்பம்.  பேரின்பத்தில் மூழ்கித் திளைக்கும் வழி என்ன? பற்றைவிட்டால் பேரின்பம் காணலாம். ஒரு பற்றை விடுவதற்கு இன்னொன்றைப் பற்றுகிறோம். தாய்வீட்டில் வாழ்ந்த பெண், தாய் எனும் பற்றைவிட்டு காதலன் எனும் பற்றைப் பிடித்து இன்பம் காண்பது போல, யான் எனது என்னும் உலகப் பற்றைவிட்டு, பற்றே இல்லாத இறைவனின் பற்றைப் பற்றிப் பிடித்தால் பேரின்பம் காணலாம். 

Saturday, 20 October 2012

சிறுவர்கள் நாம் இங்கு கூடி



சிறுவர்கள் நாம் இங்கு கூடி 
கானுயர் பெருங்காடு சூழ் 
குளத்தினை நாடி
வானுயர் மரத்தினைத் தேடி
விடுவிடெனத் தாவி ஏறி,
சேணுயர் கொம்பினில் ஆடி 
சடசடென நீரிடைப் பாய்ந்து 
நாணெறி அம்மென நீந்தி
நித்தலும் விளையாடி
செப்படி வித்தைகள் 
செய்குவம் பாரீர்!
                - சிட்டு எழுதும் சீட்டு 43

Friday, 19 October 2012

இவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே! (வஞ்சனையே!)




இதனை நான் சொல்லவில்லை. அதுவும் பூசை செய்வோரைப்பற்றி “இவர் செய்யும் பூசைகள் வஞ்சனையே” என்று பட்டினத்தார் கூறியுள்ளார். அவர் அப்படிக்கூறக் காரணம் என்ன? அவர் மட்டுமல்ல எம் முன்னோர்கள் பலரும் பலவிதமாக எடுத்துக் கூறி இருப்பினும் நாம் அவற்றை சிறிதும் பொருட்படுத்துவதே இல்லை.

அதனாலேயே உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் கோயில்கள் கட்டி, கும்பாபிஷேகம் செய்து காலம் தவறாது பூசைகள் நடாத்திக் கொண்டு இருக்கிறோம். அந்தப் பூசைகளுக்காக எவ்வளவு பொருட்களை நாம் அள்ளி வழங்குகிறோம். நம்மை பிறர் பக்தன் என்று சொல்லவேண்டும் என்பதற்காகவும் எம்மைப்போல் திருவிழாச்செய்ய யார் இருக்கிறார் என்று கூறிப் பெருமை கொள்வதற்காகவும் பொருளை அள்ளி இறைப்போரும் இருக்கின்றனர். நாம் செய்யும் பூசைகள் யாவும் உண்மையானவையா? அவர் சைவக்குருக்கள், இவர் சிவாச்சாரியார், மற்றவர் பரம்பரை ஐயர் என்று ஏதேதோ காரணங்கள் கூறி, பட்டங்கள் சூட்டி கடவுளுக்கு பூசை செய்வோரை கடவுளுக்கும் மேலாக மதிப்பது சரியா?


பட்டினத்தார் என்ன கூறியுள்ளார் என்பதைப் பார்ப்போமா?

“நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆகம நீதிநெறி
ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செபமந்திர யோகநிலை
நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே
சாமங்கள் தோறும் இவர்செய்யும் பூசைகள் சர்ப்பனையே” 

‘முறைகள்(நேமங்கள்), நம்பிக்கைகள்(நிட்டைகள்) என்று சொல்லியும், வேதங்கள், ஆகமங்கள் ஆகியவற்றின் நீதிநெறி என்று கூறியும், ஓமங்கள் செய்யவேண்டும், நீர்க்கடன் (தர்ப்பணம்) செய்யவேண்டும் எனவும், காலை, உச்சிப்பகல், மாலை நேரங்களில் மந்திரங்களால் செய்யும் வழிபாடு (சந்தி செபமந்திரம்) என்றும், தியானத்தில் மூச்சை அடக்கி இருக்க வேண்டும் (யோகநிலை) என்றும், கடவுளின் பெயர்களைக் கூறுங்கள் (நாமங்கள்) என்றும், சந்தனத்தையும் திருநீற்றையும் பூசி அழகாக சாமங்கள் தோறும் இவர்கள் செய்கின்ற பூசைகள் வஞ்சனையே (சர்ப்பனையே)’.  என்று பூசைகள் செய்வதற்காகச் சொல்லப்படும் அத்தனை செயற்பாடுகளையும் சேர்த்துத் தொகுத்து எல்லாவற்றையும் வஞ்சனையே என்று கோடிட்டு பட்டினத்தார் காட்டித்தந்தும் நம் தமிழ்ச்சாதி இன்னும் அவர் சொல்லைப் புரிந்து கொள்ளவில்லையே!

வஞ்சனை என்றால் என்ன? உள் ஒன்று நினைத்து, புறம் ஒன்று செய்வது வஞ்சனையாகும். தாங்கள் செய்வது மடமை என்பதும் கபடம் என்பதும் பூசை செய்வோர் பலருக்கு நன்றாகத் தெரியும். மனித வாழ்க்கைப் போராட்டத்தின் வெற்றிக்காகவே தெரிந்தும் அவர்கள் பூசைகளை செய்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்து, நம்மை நாமே திருத்திக்கொள்ளவேண்டும். ‘வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்’ என்பது தமிழர் சொன்ன உலகநீதி அல்லவா?
இனிதே,
தமிழரசி.

Wednesday, 17 October 2012

நயப்பது எப்போதோ?


கண்ணினில் இருக்கின்றாய்
           களிநடம் புரிகின்றாய்
எண்ணிய கருமங்கள்
           எளிதினில் அருள்கின்றாய்
திண்ணிய திடந்தோளில்
           திகழ்தரு கடம்போடு
நண்ணியே வருகின்றாய்
           நயப்பது எப்போதோ!