Friday, 20 July 2012

பாலசுந்தரம் எனும் பெயர்ச் செல்வா!


முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
21 - 07 - 2012
மலர்வு : 26 - 01 - 1922             உதிர்வு: 01 - 08 - 2011
புங்குடுதீவு கிழக்கு 12ம் வட்டாரத்தில் பிறந்து வளர்ந்து, நயினாதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த பண்டிதை புனிதவதி அவர்களை மணந்து நிதியை மகளாய்ப் பெற்று, யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து பின்னர் ஹரோ (Harrow) இலண்டனில் வாழ்ந்து வந்தவரும், வடகிழக்கு மாகாணக் கல்வி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவருமான  அமரர் பாலசுந்தரம் முத்துக்குமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
                                           சீர்திகழு செழுங்கல்வியாளர் மேவு
                                                       சிறந்தோங்கு புங்குடுதீவுப் பதிதன்னில்
                                           ஊர்திகழ உழைத்த பெருமகனாம்
                                                       உயர் முத்துக்குமார் நாகம்மை மகனாய்
                                          பார்புகழு நற்பண்பில் நயந்தே வந்த
                                                       பாலசுந்தரம் எனும் பெயர்ச் செல்வா!
                                          தேர்திகழு நயினை வளர் நாகபூசணி 
                                                      தாள் அடைந்ததேனோ சொல்வாய்!


இனிதே, 
தமிழரசி.

Thursday, 19 July 2012

சகதியிலாடி சலிப்பதும் ஏனோ!



கட்டங்கள் கட்டி தாயங்கள் போட்டு
          களித்தே இருந்த கற்பனை மாந்தர்
பட்டங்கள் என்றும் பதவிகள் என்றும்
          பதறியே ஓடி பதைப்பதும் ஏனோ!
வட்டங்கள் போட்டு வானத்தில் பாய்ந்து
          விரைந்தே குண்டுகள் வீழ்த்திடு மாந்தர் 
நட்டங்கள் என்றும் நாசங்கள் என்றும்
          நிலையினைக் கூறி நடிப்பதும் ஏனோ!
திட்டங்கள் தீட்டி தேசங்கள் ஆண்டு
          தலைத்தே இருந்த தென்தமிழ் மாந்தர்
சட்டங்கள் என்றும் சாத்திரம் என்றும்
          சகதியில் ஆடி சலிப்பதும் ஏனோ!
இனிதே,
தமிழரசி.

Wednesday, 18 July 2012

தோல் அழகு 4


எண்ணெய்த் தன்மையும் வறண்ட தன்மையும் சேர்ந்த தோல்

பொதுவாக இத்தன்மையுடைய தோல் உள்ளவர்களுக்கு நெற்றியிலும் மூக்கிலும் எண்ணெய்த் தன்மை கூடுதலாக இருக்கும். முகத்தில் மோவாய், கண், கன்னம் ஆகிய இடங்கள் வறண்டு காணப்படும். இத்தகைய தோலுள்ள பெரும்பாலான பெண்களுக்கு மூக்கைச் சுற்றி அதிக பருக்களும் கன்னத்து தோல் வறண்டு உரிந்தும் இருக்கும். வரட்சியால் உரிந்து வரும் தோல், எண்ணெய்த் தன்மையான தோலுள்ள பகுதியில் ஒட்டிக்கொள்ளும். அது தோலின் நுண்துளைகளை அடைக்கும். அதைப் போக்க ஒரு தேக்கரண்டி ஓட்மீல் (oatmeal) உடன் ஒன்றரைத் தேக்கரண்டி ரோஸ் வோட்டர் அல்லது தண்ணீர் சேர்த்து கலந்து முகத்தை தேய்த்து கழுவலாம். மிகவும் கரகரப்பான பொருட்களால் எண்ணெய்த் தன்மையான தோலுள்ள பகுதியை தேய்ப்பதைத் தவிர்க்கவும். 

Photo Courtesy: inspiredbysavannah.com
முகத்தில் இருவிதமான தோலும் இருப்பதால் முகம் முழுவதற்கும் ஒரே பொருளைப் பயன்படுத்துவது நல்லதல்ல. இப்படியான தோல்  உள்ளவர்கள் முகத்திற்கு போடும் கிறீம்களை கவனமாகப் பார்த்து எடுத்து பயன்படுத்த வேண்டும். எண்ணெய்த் தன்மையான தோல் உள்ளவர்கள் முகம் கழுவப் பயன்படுத்துபவைகளையோ (harsh cleansers), வறண்ட தோல் உள்ளவர்கள் முகம் கழுவப் பயன்படுத்துபவைகளையோ (milky cleansers) தவிர்த்து, ஈரத்தன்மையான (moisturizing cleansing bar) சோப் பாவிக்கவும். எண்ணெய்த் தன்மையான பகுதியை ஒவ்வொரு நாளும் இருமுறை கழுவவேண்டும். எத்தன்மையான தோலுக்கும் ரோசாப்பூ, மாம்பழம் போன்றவை உகந்தவை ஆதலால் அவைசேர்ந்த பொருட்களைப் பாவிப்பது நல்லது.

கொதிக்கவைத்த நீரை வாயகன்ற பாத்திரத்தில் விட்டு, அதனுள் ஒருத ேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து, துவாயால் தலையை மூடி நீராவியில் ஐந்து நிமிடம் முகத்திற்கு வேட்டு பிடிக்கவும். நீராவி கன்னத்தில் உள்ள வறண்ட தோலை மென்மையாக்குவதுடன், நெற்றியிலும் மூக்குப்பகுதியிலுமுள்ள எண்ணெய்த் தன்மையையும் போக்கும். இப்படி கிழமைக்கு ஒருமுறையாவது செய்வது நல்லது.

முகப்பற்று - எண்ணெய்த் தன்மையும் வறண்ட தன்மையும் சேர்ந்த தோல் உள்ளவர்களுக்கு:

1 புதிதாக மலர்ந்த ரோசப்பூ
1 கப் தண்ணீர்
1 தேக்கரண்டி ரோஸ்வாட்டர்
1 தேக்கரண்டி தேன்
1 தேக்கரண்டி கட்டித் தயிர்

ரோசாப்பூ இதழ்களை தனித்தனியாக எடுத்து 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து வடித்து எடுக்கவும். அந்த ரோசாப்பூ இதழ்களுடன் ரோஸ்வட்டர், தேன், தயிர் சேர்த்து அரைத்து முகத்தில் பற்றுப் போட்டு ஆறு ஏழு நிமிடத்தின் பின்னர் கழுவவும். 

Tuesday, 17 July 2012

அடிசில் 30

வாழைப்பூ வடை

                                                  - நீரா -




















தேவையான பொருட்கள்:
வாழைப்பூ  -  1
கடலைப்பருப்பு  -  1 கப்
வெட்டிய வெங்காயம்  -  1
வெட்டிய பச்சை மிளகாய்  -  4/5
செத்தல் மிளகாய்ப் பொடி  -  2 தேக்கரண்டி 
மிளகு  -  1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம்  -  1 தேக்கரண்டி
வெட்டிய கறிவேப்பிலை  -  கொஞ்சம்
உப்பு  -  தேவையான அளவு
எண்ணெய்  -  பொரிப்பதற்கு 
செய்முறை:
1.   கடலைபருப்பை 20 நிமிடம் ஊறவைத்து வடித்தெடுக்கவும்.
2.  அதனுடன் மிளகு, பெருஞ்சீரகம், உப்பும் சேர்த்து சொர சொரப்பாக ஆனால் உதிர்ந்து போகாதபடி அரைத்துக் கொள்க.
3.  வாழைப்பூவில் வாடியிருக்கும் வெளியிதழ்களை நீக்கி, உள்ளே இருக்கும் வெளிர் மஞ்சட் சிவப்பான  பொத்தியை பொடியாக வெட்டி, சிறிது உப்பு சேர்ந்த நீரில் போட்டு கழுவி பிழிந்து எடுக்கவும்.
4.  அதில் அரைத்த கடலைப் பருப்பையும் செத்தல் மிளகாய்ப் பொடி,  வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து குழைத்துக் கொள்க. 
5.  அதனை சிறிய உருண்டைகளாகப் பிடித்து வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

Monday, 16 July 2012

ஆதாரம் நீயே!


                  பல்லவி 
ஆதாரம் நீயே! ஆதிசக்தி தாயே!
கேதார கௌரி! கேளாயோ நீயே!
                  சரணம்
வேதாரப் பொருளின் விரிவெல்லாமிங்கே
காதாரக் கேட்டே கசிந்தொழுகுஉ 
போதார நெஞ்சம் படைத்திலையே!
ஏதாரம் எனக்கிங்கே! என்றரற்றி 
வீதாரமின்றி விழலுக்கே வீழ்வேனோ!
பாதாரவிந்தம் பணிந்தேன் மாதே!
                                       - ஆதாரம் நீயே!

Sunday, 15 July 2012

இயற்கையின் ஆடலா இறைவனின் ஆடல்!

நிருத்தம் பழம்படி ஆடும் கழல்

இறைவன் ஆடும் ஆடல்களை பலரும் பலவிதமாகச் சொல்ல திருநாவுக்கரசு நாயனார் சற்று மாறுபட்டு இயற்கையோடு தொடர்புபடுத்தி தமது தேவாரத்தில் பதிவு செய்துள்ளார். தமிழ் முன்னோர்கள் அதிலும் சைவசமயப் பெரியோர்கள் பூதம் என்று இன்றைய தமிழர் சொல்வது போல பேய், பிசாசு, பூதம் என்ற வரிசையில் சொல்லும் பூதத்தை சொல்லவில்லை. அவர்கள் இயற்கையிலுள்ள ஐம்பெரும் பூதங்களின் செயற்பாடுகளை இறைவனின் செயல்களாகக் கண்டனர் என்பதை கருத்தில் பதித்தல் நன்று.

நாதன்காண் பூதகண மாட ஆடும் சொக்கன் காண்”
                                                          - (பன்.தி: 6: 7: 2)                                            
நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகாயம் என்ற ஐம்பூதங்களும் ஆட இறைவன் ஆடுவதாகச் சொன்னதோடு,
............உலகம் முற்றும்
இரிக்கும் பறையோடு பூதங்கள் பாட கழுமலவன்
நிருத்தம் பழம்படி ஆடும் கழல் எம்மை ஆள்வனவே”
                                                           - (பன்.தி: 4: 82: 4)
எனவும் கூறியுள்ளார்.
இதிலே இரிக்கும் என்பது அச்சுறுத்தும் என்ற கருத்தைத் தரும். உலகம் முழுவதையும் அச்சுறுத்தும் ஒலியோடு ஐம்பூதங்கள் பாட இறைவன் நிருத்தம் ஆடுவாராம். அவர் ஆடுவதோ பழம்படி. புதுப்படி அல்ல பழம்படி. அது பழமையான ஆடல் வடிவம். இயற்கை தோன்றிய காலத்திலேயே அந்த ஆடல்வடிவமும் தோன்றியது. இயற்கையின் சுழற்சியில் நிருத்தனார் ஆடும் பழம்படியே பேரழிவுகளாகும். அதனாலே அவரை அழித்தல் கடவுளாக்கினர் போலும். உலகம் முழுவதையும் அஞ்சச் செய்யும் ஒலியோடு நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களும் எப்படிப் பாடுகின்றன என்பதையும் நிருத்தனார் எப்படி நிருத்தம் செய்கிறார் என்பதையும் கொஞ்சம் பார்த்து மகிழ்வோம்.

 கோரத்தாண்டவம்
நிலம், திடீரென நடுங்கிக் குமுறிச்சினந்து, எரிமலையாக ஓங்கிஎழுந்து, பேரோசையுடன் பயங்கரமாக வெடித்துச்சிதறி, வானமெங்கும் கரும்புகை மூடி இருள்சூழ அனற்குழம்பாக உயிர்களை எல்லாம் அச்சுறுத்துகிறது. எரிமலை உண்டான போது எழுகின்ற ஒலியே, இரிக்கும் பறையோடு நிலம் என்னும் பூதம் பாடும் பாடல். அந்தப் பாடலுக்கு நிலம், எரிமலையாக வெடித்து கோரமாக சிதறி ஓடுவதே நிருத்தனார் கெக்கலித்து ஆடும்  பழம்படி. பழம்படி என்பது ஆட்டக்கெலிப்பு. மட்டற்ற ஆசையில் மூழ்கி ஆடுதல். எரிமலையால் உண்டாகும் அழிவுகள் யாவும் நடனராஜனின் கோரத்தாண்டவம் ஆகும்.

துளங்கெரியாடல்

நிலத்தினுள் இருந்து எழுந்து எரிமலையாக கக்கி, அனற்குழம்பாக ஓடும் நெருப்பே, காட்டுத் தீயாகவும் கனன்று எரிகிறது. நிலம் கனன்று எரிமலையாக குமுரியதும் காட்டுத்தீயாய் சுழல்ன்று எரிந்ததும் ஒரே நெருப்பே. ஆனால் அதன் தன்மை மாறுபடுகிறது. காட்டுத்தீ உண்டாக்கும் ஒலியே நெருப்பாகிய பூதம் பாடும் பாடல். பசுமையாக இருந்த பச்சைக்காடும் பற்றி எரிந்து பிடிசாம்பலாக மாறும். அதுவே இறைவன் தீயாய் தீக்குள் நின்று ஆடி, தீஏந்தி ஆடும் துளங்கெரியாடல்.  அதனை

“துஞ்சடை இருள்கிழியத் துளங்கெரி ஆடுமாறே”
                                                            - (பன்.தி: 4: 22:1)
என திருநாவுக்கரசு நாயனார் கூறியுள்ளார்.

வீசிதாண்டவம்

நீர் மழையாகப் பொழிந்தும், வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியும், சுனாமியாக எழுந்தும் வரும்போதும் எழும் ஒலிகளே நீராகிய பூதத்தின் பாடல். நீரின் தண்மையான தன்மையில் இருந்து மாறி, உக்கிரமாக யாவற்றையும் தன் வயிற்றினுள் அள்ளி எடுத்து நிலத்தை கழுவித் துடைத்துச் செல்லுமே அதுவே மேலும் கீழுமாய் வீசி தாண்டவமாய் இறைவன் ஆடும் பழம்படி.

சங்காரத் தாண்டவம்

காற்று புயல் என்றும், சூறாவளி என்றும் ‘ஊ’ என இரைச்சலிட்டு கட்டுக்கடங்கா கோபாவேகத்துடன் பாடுவதை கேட்டிருப்பீர்கள். நிலத்தொடு வானம் தொட முறுகி நின்று சுழன்று சுழன்று ஆடும் காற்றின் சங்காரத் தாண்டவத்தில் எத்தனை ஆயிரம் ஆயிரம் உயிர்களும் பொருட்களும் அழிந்து ஒழிகின்றன. இந்த சங்காரத் தாண்டவமும் காற்றின் பாடலுக்கு இறைவன் ஆடும் பழம்படியே.

நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய இந்நான்கு பூதங்களுக்கும் ஆகாயம் உதவுவதோடு, ஊழிமுடிவின் ஊழிக்கூத்தாய் பெரும் பங்கு வகிக்கின்றது. ஊழிக்கூத்தாகிய பழம்படியை
“மண்பாதாலம் புக்கு மாக்கடல்மூடி மற்று ஏழுலகும்
விண்பால் திசை கெட்டு இருசுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே” 
                                                            - (பன்.தி: 4: 94: 9)
என்று திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தில் செப்பியுள்ளார். 

எனவே தமிழர் ஐம்பெரும் பூதங்களால் ஏற்படும் இயற்கையின் பேரழிவுகள் யாவற்றையும் இறையாடலாக, தாண்டவமாக, கூத்தாகக் கண்டனர். அதனால் இயற்கையே தமது கடவுளாகக் கண்ட தமிழரின் கடவுள் கொள்கை போற்றுதலுக்கு உரியது. எனவே இறையாடல் ஆகிய இயற்கையால் வரும் பேரழிவு இயற்கையின் சுழற்சியாய் இறைவனாய் ஒடுங்கி விரிகிறது. அதற்கு அழிவில்லை.
இனிதே,
தமிழரசி.

Friday, 13 July 2012

குறள் அமுது - (38)


குறள்: 
அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
  இன்சொலன் ஆகப் பெறின்”                               - 92
பொருள்:
மன நிறைவோடு ஒருவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதை விட அவரைக் கண்டதும் முகத்தில் மகிழ்ச்சி பொங்க இனிமையாகப் பேசுவதே நல்லது.
விளக்கம்:
அகம் என்பது மனம். ஈதல் என்றால் கொடுத்தல். அகனமர்ந்து ஈதல் மனம் மகிழ்ந்து கொடுத்தலாகும். முகனமர்ந்து என்பது முகம் மலர்ந்து எனப் பொருள் தரும். இந்நாளில் பொருளுக்கே முதலிடம் கொடுக்கிறோம். ஆனால் அந்தப் பொருளைவிட , அன்பு பொங்க மனநிறைவோடு சொல்லும் இனிய சொற்களே பெருமதிப்புப் பெற்றவையாகும்.

அன்பு ஊற்றெடுக்கும் நெஞ்சிலே கயமை, வஞ்சனை, சூது, வாது என்பன தோன்றுவதில்லை. அங்கே இனிமையும் மகிழ்ச்சியிமே குடியிருக்கும். நாம் இனிமையை விரும்பும் அளவுக்கு கயமையை, கசப்பை விரும்புவதில்லை. இனிமையே எமக்கு இன்பம் தரும். பிறந்த குழந்தையும் விலங்கும் கூட அன்பால் விளையும் இனிமையையே விரும்பும், பொருளை கொட்டிக் கொடுத்தால் மகிழுமா? அங்கே, எங்கே பொருளுக்கு மதிப்பு? 
“இன்சொல்லால் அன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே - பொன்செய்
அதிர்வளையாய்! பொங்காது அழல்கதிரால் தண்என்
கதிர்வரவால் பொங்கும் கடல்”
என்கின்றது நல்வழி. வெப்பம் மிகுந்த சூரியனின் கதிரொளியால் பொங்காத கடல் குளிர்ந்த நிலவின் கதிரொளியால் பொங்கும். அதுபோல், இவ்வுலக உயிர்களும் இனிய சொல்லால் அல்லாமல் கொடிய சொல்லால் மகிழாது என்கிறார் ஔவையார்.
படியாத மாணவருக்கு நீ நன்றாகப் படிப்பாய் உன்னால் முடியும் என இன்முகத்தோடு ஆர்வம் ஊட்டி வந்தால் அவனும் வல்லவனாக வருவான். இது போல் மனச்சோர்வு அடைந்தோரிடமும் உடல் ஊனம் உற்றோரிடமும், நோய் வந்தோரிடமும், முதியோரிடமும் நாம் முகம் மலர்ந்து இனிமையுடன் தன்நம்பிக்கையை வளர்த்தால் அவர்களும் தமது தாழ்வு மனப்பான்மையை மறந்து மகிழ்வுடன் வாழ்வர்.
உலகோருக்கு மனம் மகிழ்ந்து பொருளை வாரிக் கொடுப்பதைவிட முகம் மலர்ந்து இனிய சொற்களைக் கூறி எல்லோரும் மகிழ்வோடு இனிது வாழ்வது நன்றாகும்.