Monday, 18 June 2012

சங்ககாலத் தந்தையர் - பகுதி 1


ஆதிமனிதனின் வாழ்க்கை மெல்ல நாகரீகம் அடைய அடைய தாயைவிட தந்தையர் முதன்மை அடையத் தொடங்கினர். தந்தைக்கும் பிள்ளைக்கும் உள்ள தொடர்பு பரம்பரை பரம்பரையாக வருவதை மனிதர் கண்டனர். பண்டைய தமிழரும் அதனை அறிந்திருந்தனர். தொல்காப்பியத்தில் 
“தந்தையர் ஒப்பர் மக்கள்”                            
                                            - (தொல்.கற்பு: 145: 23)
என்னும் பழமொழியை தொல்காப்பியர் கூறுவதால் அவர் காலத்திற்கு முன்பிருந்தே பரம்பரையியல் பற்றிய தெளிவு தமிழரிடம் இருந்ததை நாம் அறியலாம். ஆதலால் தந்தையர் என்ற தகுதியை அடைய ஒருவருக்கு பிள்ளைகளாகிய மக்கள் இருக்க வேண்டும். மக்களைப் பெறுவதற்கு காளையர் காலம் காலமாகச் செய்வது காதல் தானே. காளையர் காதல் செய்ய கன்னியர் வேண்டாமா? கன்னியரைப் பெற்ற சங்ககாலத் தந்தையர் எப்படி கன்னியரை வளர்த்தனர் பார்ப்போமா?
மகள் நிலத்தில் நடந்தாலே மனம் நொந்து அதட்டும் சங்ககாலத் தந்தையைப் பற்றி அகநாநூற்றில் 
“எந்தையும் நிலன் உறப்பெறான், சீரடி சிவப்ப
எவன் இல! குறுமகள்! இயங்குதி என்னும்”        
                                            - (அகம்: 12: 2 - 3)
என மகள் சொல்வதாக கபிலர் காட்டுகிறார். மகள் நிலத்தில் நடப்பதைப் பார்த்த தந்தை அதனைப் பொறுக்கமாட்டது எடி! சின்ன மகளே! உன் சிறிய அடி சிவக்க எதற்காக அங்கும் இங்கும் திரிகிறாய், என அதட்டிக் கேட்பாராம். தான் பெற்றெடுத்த மகள் மேல் சங்ககாலத் தந்தைக்கு எவ்வளவு பேரன்பு பார்த்தீர்களா? 
பொன்போன்ற மேனியும் அழகிய கூந்தலுமுடைய இளநங்கை ஒருத்தி, பெருஞ்செல்வனான தன் தந்தைக்குச் சொந்தமான அகன்ற பெரிய மாளிகையில் நடந்து திரிந்தாள். அதனை கயமனார் என்ற சங்ககாலப் புலவர் பார்த்தார்.
செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி
அஞ்சில் ஓதி இவளும்
பஞ்சில் மெல்லடி நடை பயிற்றுமே”
                                                                   - (குறுந்தொகை: 324: 6 - 9)                               
என அதனை நேரடி வருணனையாகத் தந்துள்ளார்.
விளையாடுகின்ற பந்தை காலால் உருட்டி, உருட்டி ஒடுபவள் போல ஓடி அவளது பஞ்சு போன்ற மென்மையான பாதங்கள் நடை பயில்கின்றனவாம். கயமனார் இப்பாடலில் செல்வத்தந்தையையும் பெரிய மாளிகையில் நடந்து திரிந்த மகளையும் மட்டும் எமக்குக் காட்டவில்லை. அதற்கு மேலாக ஒரு வரலாற்றைப் பொதிந்து வைத்திருக்கிறார். அந்த இளநங்கையின் நடையைக் கூறவந்தவர், ‘ஆடு பந்து உருட்டுநள் போல’ எனச் சொன்ன இடத்தில் சங்ககால மகளிர் கால்ப்பந்து ஆடியதையும்  வரலாற்றுப் பதிவாகத் தந்திருக்கிறார். இந்த இருபத்தொராம் நூற்றாண்டில் கூட தமிழ்ப்பெண்களால் பெரிதாக இன்னும் விளையாடப்படாத கால்பந்தாட்டத்தை, சங்ககாலப் பெண்கள் சாதாரணமாக விளையாடித் திரிந்ததை இவ்வரி எமக்குக் காட்டுகின்றது.   
பாரி பறம்பு நாட்டை ஆண்ட குறுநில மன்னன். அவன் கடைஎழு வள்ளல்களில் ஒருவன். அவனே முல்லைக்கொடிக்கு தேரீந்தவன்.  சங்ககாலப் புலவர்களில் புகழ்பூத்த கபிலர் பாரியின் அரசவைப் புலவராகவும், பாரியின் புதல்வியரான ‘பாரிமகளிரின்’ குருவாகவும் இருந்தவர். பாரிமகளிரின் தமிழ் அறிவைப் பறைசாற்றியபடி சங்க இலக்கியத்தில் ஒரு பாடல் இருக்கிறது. அப்பாடல் பாரிமகளிரை  சங்கப்புலவர் வரிசைக்கு உயர்த்தி இருக்கிறது.
தந்தையாகிய பாரி மேல் அவர்கள் வைத்திருந்த அன்பையும் அவர்களது கையறுநிலையையும் பாடலில் வடித்திருக்கிறார்கள். 
“அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
எந்தையும் உடையோம் எம் குன்றம் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
வென்றெறி முரசின் வேந்தர் எம் 
குன்றம் கொண்டார் யாம் எந்தையும் இலமே”       - (புறம்: 112)
பாரிமகளிரின் இப்பாடல் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழராகிய எமது கையறுநிலைக்கும் பொருந்தும். நாம் தாய் நாட்டைப் பெரிதாக மதித்து ஈழம் எமது தாய்நாடு எனக்கூறுகிறோம். நம் தாய்நாடாகிய ஈழம், போரில் சிக்கிச் சிதறுண்டு சீரழிந்து கிடப்பதுபோல் பாரியின் பறம்புமலையும் சங்ககாலப் போரால் சிதைந்து கிடந்தது. அதைப் பார்த்த கபிலர் பறம்புமலையின் பழைய சிறப்பை கூறுமிடத்தில் பாரிமகளிரின் தந்தைநாடு எனப்போற்றியுள்ளார்.
“பாசிலை முல்லை முகைக்கும்
ஆய்தொடி அரிவையர் தந்தை நாடே”     - (புறம்: 117: 9 - 10)
பசுமையான முல்லை அரும்பு போன்ற பற்களையுடைய அழகிய வளையல்களை அணிந்த பாரிமகளிரின் ‘தந்தை நாடு’ என்கிறார். பாரி பொறுப்பு மிக்க தந்தையாய் இருந்து, தன் மகளிர் இருவருக்கும் கல்வியறிவு ஊட்டி வளர்த்ததாலேயே சங்கப்புலவர் வரிசையில் பாரிமகளிர் தனியிடம் வகுக்கின்றனர். சங்ககாலத்  தந்தையர் வாழ்வுக்கு பாரியும் நல்ல ஓர் எடுத்துக்காட்டாகவே விளங்குகிறான்.
இன்னொரு சங்ககாலத் தந்தை தன் அருமை மகளின் உயிர்காக்க என்ன எல்லாம் கொடுக்க முன்வந்தான் என்பதைப் பார்ப்போமா? நன்னன் பூழி நாட்டை ஆண்ட சிற்றரசன். அவனது தோட்டத்து மாமரத்தில் இருந்த மாங்கனி ஒன்று, அருகே ஓடிய வாய்க்காலில் வீழ்ந்து மிதந்து வந்தது. இளம் பெண் ஒருத்தி அந்த வாய்க்காலில் நீந்தி விளையாடிக்கொண்டிருந்தாள். அவ்வாய்க்காலில் மிதந்து அவளருகே வந்த அம்மாங்கனியை எடுத்து உண்டாள். அதனை அறிந்த நன்னன் அவளுக்கு மரண தண்டனை விதித்தான். சான்றோர் பலர் தடுத்தும் நன்னன் கேட்கவில்லை. 
அவள் தந்தையோ மகள் செய்த தவறுக்காக எண்பத்தொரு ஆண்யானைகளும், அவளுடைய நிறையளவு பொன்னால் செய்த பாவை ஒன்றும் தருவதாகக் கெஞ்சிக் கேட்டான். அதற்கும் நன்னன் உடன்படாது சிறுபெண் என்றும் பாராது ஈவிரக்கமின்றி மரணதண்டனை கொடுத்தான். அதனைப் பரணர்
“மண்ணிய சென்ற ஒள்நுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு, அவள் நிறை
பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான் 
பெண்கொலை புரிந்த நன்னன்”                                                                  - (குறுந்தொகை: 292) 
எனக் குறுந்தொகையில் கூறியுள்ளார். சங்ககாலத் தந்தையர் தமது பிள்ளைகளுக்காக இன்னும் என்ன எல்லாம் செய்தார்கள் என்பதை தொடர்ந்து காண்போம்.
இனிதே,
தமிழரசி.

Sunday, 17 June 2012

தந்தையர் தினம்

Mrs Grace Golden Clayton
இன்று உலகின் பல நாடுகளிலும் தந்தையர் தினத்தை கொண்டாடுகின்றனர். மேற்கு வேஜினியாவில் 1908ம் ஆண்டு யூலை மாதம் 5ம் திகதி தந்தையர் தினத்தை முதன்முதல் கொண்டாடத் தொடங்கினர்.    அதனை திருமதி கிரேஸ் கோல்டன் கிலேடன் (Mrs Grace Golden Clayton) என்பவரே தொடங்கி வைத்தார்.
மேற்கு வேஜினியாவின் நிலச்சுரங்கமொன்றில் 1907ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் திகதி நடந்த விபத்தில் இருநூற்றிப் பத்து தந்தையர் உயிரிழந்தனர். அவர்களின் நினைவாகவே தந்தையர் தினக் கொண்டாட்டம் தொடங்கப்பட்டது. திருமதி கிலேடன் (Glayton) என்ன நோக்கத்திற்காக தந்தையர் தினம் கொண்டாடத் தொடங்கினாரோ அது 1972ம் ஆண்டு வரை கொண்டாடப்படாது கைவிடப்பட்டு இருந்தது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரிக்சாட் நிக்சனே 1972ம் ஆண்டு யூன் மாதத்தில் வந்த மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையையை தந்தையர் தின விடுமுறை நாள் ஆக்கினார். அன்றிலிருந்து தந்தையர் தினம் உலகெங்கும் பல நாடுகளில் கொண்டாடப்படுகின்றது. தமிழர்களாகிய நாம் இறந்த எம் தந்தையர்க்காக ஆடியமாவாசை அன்று தந்தையர் தினத்தைப் பன்நெடுங்காலமாகக் கொண்டாடி வருகின்றோம். 

Thursday, 14 June 2012

குறைந்தா போகும்?



வட்டிக்கு விட்டு வயிறு வளர்க்கும்
செட்டிச்சி மகனே! சிவபாலா!
அட்டி அருகணைத்து கொஞ்சம்
கொட்டித் தந்தால் குறைந்தா போகும்?

Tuesday, 12 June 2012

புத்தகம் தமிழ்ச்சொல்லா!

புத்தகங் கைக்கொண்டு 
இன்றைய தமிழர்களாகிய நாம் பண்டைய தமிழையும் தமிழரையும் பற்றி அறிய விரும்பாது வாழ்கிறோம். அல்லது தமிழர் அல்லாதவர் தமிழைப்பற்றி சொன்னால் நம்பும் அளவுக்கு நம்மவர் சொன்னால் நம்புவதில்லை. இது நமக்கு, நம் மேல் இருக்கும் தாழ்வு மனப்பான்மையையே காட்டுகிறது. 

‘பண்டைய தமிழர் புத்தகம் படித்தார்கள்’ என்று நம்மவர் யாராவது சொன்னால், அவரை ஒர் அசடாகக் கணித்து, ‘ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னரே தமிழருக்கு புத்தகம் தெரியும்,’ என்றும் ‘புத்தகம் தமிழ்ச்சொல் அல்ல, ஆங்கிலச் சொல்லான book என்ற சொல்லில் இருந்து புத்தகம் வந்துது’ எனவும் கூறுகின்றனர். வேறுசிலரோ ‘வடமொழிச் சொல்லான 'புஸ்தக்'கிலிருந்து புத்தகம் வந்ததென்றும்  ‘ஏட்டில் எழுத்தாணியால்  எழுதிய பண்டைய தமிழருக்கு எப்படிப் புத்தகம் தெரிந்திருக்கும்?’ என்றும் கேட்கின்றனர். எழுதுகின்றனர். நாமும் அவற்றைக் கண்டும் காணாதவராய் வாழ்கிறோம்.
உண்மையில் தமிழில் பொத்தகம் என்னும் சொல்லை சங்ககால இலக்கியமான பதினெண்கீழ் கணக்கு நூல்களும், தேவாரமும், சரஸ்வதி துதியும், சிறுகாப்பியங்களும் சொல்கின்றன. சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து எனது அம்மம்மாவும் பொத்தகம் என்றே எப்பொழுதும் சொன்னார். ஆதலால் இந்த நூற்றாண்டில் வாழும் எமக்கு ‘புத்தகம்’ தமிழ் இல்லாத வேற்றுமொழிச் சொல்லாய் தெரிவது புதுமையானதே.  
ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஏலாதி என்னும் நூலின் ஏட்டுப்பிரதியின் செய்யுள் பொத்தகம் என்று சொல்ல, இன்றைய அச்சுப்பிரதிகள் அதே செய்யுளை புத்தகம் என்கின்றன.  அச்சுப்பிரதியின்படி 
ஊணொடு கூறை எழுத்தாணி புத்தகம்
பேணொடும் எண்ணும் எழுத்திவை - மாணொடு
கேட்டெழுதி ஓதி வாழ்வார்க்கு ஈய்ந்தார் இம்மையான்
வேட்டெழுத வாழ்வார் விரிந்து”                                   
                                               - (ஏலாதி: 63)
என்ற இந்தச் செய்யுளில் ‘எழுத்தாணி புத்தகம்’ என வருவதால் புத்தகம் என்னும் சொல் இங்கே ஏட்டையே குறிக்கின்றது என்பதை அறியலாம். 
பொட்டு - பொட்டுதல் - பொருத்துதல் 
போத்து - போந்து - போந்தை - பனக்குருத்து 
பொத்தி -  பனங்குருத்து தொகுதி, பனங்கிழங்கு
பொத்திய - சேர்த்த
பொத்தல்  -  ஓட்டை, குழிந்த, துளைத்தல் 
பொத்துதல்  -  கட்டுதல் - பொருத்துதல் - தைத்தல் 
பொத்தி, பொத்தல், பொத்துதல் என்ற காரணப் பெயர் அடியாய் பொத்தகம் ஆகியிருக்கும். ஏட்டுச் சுவடிகளை பொத்தல் இட்டு பொத்தி வரிந்து கட்டி வைத்ததால் பொத்தகம் என்றனர் போலும். அன்று பனம் பொத்தியில் எழுதி, அப்பொத்தியை பொத்திக்கட்டி வைத்தமையாலேயே இன்றும் அருமையான பொருட்களை பொத்திக்கட்டிவை  எனச்சொல்லும் வழக்கம் எம்மிடை இருக்கிறது. ஆதலால் பனை வளர்ந்த இடத்திலேயே பொத்தகம் என்ற சொல் பிறந்திருக்க முடியும். பனைமரம் தந்த கொடையே பொத்தகம் என்றால் அது மிகையாகாது. 

பொத்தகம் பிறமொழியாளர் வாய்ப்பட்டு புத்தகம் ஆகி, வடமொழி சென்று புஸ்தகம் என உருமாறி நிற்கிறது. பொத்தகம் போல் வாழை மடல், போன்ற மடலில் எழுதியவற்றை மடல் எனவும், தாழைத் தாள் போன்ற தாவரத் தாளில் எழுதியவற்றை தாள் எனவும் அழைத்தனர். நம் முன்னோர் எமக்கு அளித்துச் சென்ற அச்சொற்களை இன்றும் நாம் அதே கருத்துடன் ‘மடல்’ எனவும் ‘தாள்’ எனவும் சொல்கிறோம்.
பலர் தமது வீடுகளில் நூற்றுக்கணக்காக புத்தகங்களை அடுக்கி தொகுத்து நூலகமாக வைப்பர். ஆனால் அவை என்ன சொல்கின்றன என்பதை வாசித்து அறியமாட்டார்கள். பெரும் பாடுபட்டு வீடு முழுவதும் புத்தகங்களை நிறைத்து வைத்தாலும் அவற்றை பாதுகாக்கும் அறிஞர் (புலவர்) ஒருவகையினர். அவற்றில் உள்ள கருத்தை அறிந்து பிறருக்கு எடுத்துச் சொல்லும் அறிஞர் (புலவர்) இன்னொரு வகையினர் என நாலடியார் சொல்கிறது.
புத்தகமே சாலத்தொகுத்தும் பொருள் தெரியார்
உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப்
போற்றும் புலவரும்வேறே பொருள் தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு”                                            
                                                - ( நாலடியார் 318)
எனவே ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் பொத்தகம், புத்தகம் என்ற சொற்களை பயன்படுத்துகின்றனர். கொங்குவேளிர் எழுதிய பெருங்கதை என்னும் உதயணன் சரித்திரமும்
“நிரைநூற் பொத்தகம் நெடுமணை ஏற்றி”                   
                                               - (பெருங். உஞ்சைக்: 34: 26)
எனக் கூறுகிறது.
புத்தகம் என்ற சொல்லை சங்கத்தமிழ் இலக்கியங்கள் மட்டுமல்ல சிற்பநூல்களும் சொல்கின்றன. திருநாவுக்கரசு நாயனாரும்
“செத்தவர்தந் தலைமாலை கையிலேந்திச்
          சிரமாலை சூடிச் சிவந்த மேனி
மத்தகத்த யானை உரிவை மூடி
           மடவாளவளொடு மானொன் றேந்தி
அத்தவத்த தேவர் அறுபதின்மர்
           ஆறு நூறாயிரவர்க் காடல் காட்டி
புத்தகங் கைக்கொண்டு புலித்தோல் வீக்கிப்
            புறம்பயம் நம் மூரென்று போயினாரே”                  
                                           - (திருமுறை: 6: 13: 5)
என சிவனின் கையில் புத்தகம் இருந்ததை தமது தேவாரத்தில் பாடியுள்ளார். நம் முன்னோர் புத்தகம் எனும் சொல்லை பாடல்களில் எழுதி வைத்திருந்தும் கி பி முதலாம் நூற்றாண்டில் எழுத்து வடிவம் பெற்ற வடமொழியும், கி பி பதினோராம் நூற்றாண்டில் உருப்பெறத் தொடங்கிய ஆங்கிலமும் தமிழுக்கு புத்தகம் என்ற சொல்லைத் தந்தது எனச் சொல்வோர் தமிழில் உள்ள பண்டைய  நூல்களைப் புரட்டிப் பார்த்தல் நன்றாகும். 
இனிதே,
தமிழரசி.

Monday, 11 June 2012

குறள் அமுது - (35)


குறள்:
“பயனில் சொல் பாராட்டுவானை மகனெனல் 
மக்கட் பதடி எனல்”                                             - 196

பொருள்:
பயன் இல்லாத சொற்களைப் பாராட்டிப் பேசுபவனை மனிதன் எனச் சொல்ல வேண்டாம். மனிதருள் பதர் என்று சொல்லுக.
விளக்கம்:
திருவள்ளுவர் இக்குறளில் பயனில்லாத சொற்களைப் பாராட்டிப் பேசுபவரை எப்படி அழைக்கலாம் என்பதை எமக்குச் சொல்லிச் சென்றுள்ளார். ஒன்றைப் புகழ்ந்து பேசுதலே பாராட்டுதலாகும். இக்குறளில் மகன் என்ற சொல் மனிதன் என்ற கருத்திலேயே வருகின்றது. 
பதடி என்பது உள்ளீடு இல்லாத சோத்தி. நெல்லினுள் இருக்கும் அரிசியே அதன் உள்ளீடு. உள்ளீடாகிய அரிசி இல்லாத நெல்லை நாம் சாவி அல்லது பதர் என்று சொல்வோம். நெல்லைத் தூற்றும்போதோ புடைக்கும் போதோ காற்றில் தூசுடன் பறந்து போவது நெற்பதர். பதர் உள்ளீடு அற்றதால் காற்றில் பறக்கும். நெல்லைப் போல் ஏனையவற்றிலும் பதர் உண்டு. பதரை மிருகங்களோ, பறவைகளோ உணவாக உட்கொள்ளவும் மாட்டா. நெல்லுக்கு அரிசி உள்ளீடாக இருப்பது போல மனிதருக்கு இருக்கும் உள்ளீடு என்ன? அறிவே மனிதரின் உள்ளீடு. எவரிடம் அறிவு என்னும் உள்ளீடு இல்லையோ அவரும் மனிதரில் பதடே.
வேண்டாத விடயங்களை, விதண்டா வாதங்களை, அவதூறுகளை எமது காது கொப்பளிக்க மிக்க ஆர்வத்துடன் சிறப்பித்துப் பேசுபவரை மனிதன் என்று சொல்லவேண்டாம் மனிதப்பதடி எனச் சொல்லுக என்கிறார். பயனில்லாத சொற்களைச் சொல்பவரைக் கூட திருவள்ளுவர் மன்னிப்பார் போல் தெரிகிறது. ஆனால் ஒருவர் சொன்ன வீண்சொற்களைக் கேட்டு தாமும் சொஞ்சம் போட்டு, அதைப் பெரிதாகப் புகழ்ந்து போற்றி கதைத்துத் திரிபவர் மேலேயே வள்ளுவருக்கு தீராக்கோபம். அதனாலேயே அப்படிப்பட்டோரை எமக்கு இனம்காட்ட பயனில் சொல் பாராட்டுவான் எனக் கோடிட்டுக் காட்டுகிறார். அத்துடன் பதடி எனவும் இழித்துக் கூறுகிறார்.
மனிதர் சொல்லும் சொற்கள் தேனீக்கள் போன்றன. அவை தேனையும் சொரியும். கொடுக்கால் கொட்டி நஞ்சையும் சொரியும். எமக்குப் பயனுள்ள தேன் வேண்டுமா? பயனற்று எம்மை வருத்தும் நஞ்சு வேண்டுமா என்பதை நாமே முடிவு செய்ய வேண்டும். பயனில் சொல் நஞ்சு போன்றது. எம் வாழ்நாளை வீணாக்கி எம்மை அழிக்கக் கூடியது. நஞ்சை எவராவது பாராட்டிப் புகழ்ந்து பேசுவரா? அப்படிப் பேசுபவர் அறிவிலிதானே! அறிவிலியே மனிதப் பதடி.
எவருக்கும் பயந்தராதவற்றை மிக விரிவாகப் புகழ்ந்து கூறுபவர் மனிதருள் பதடி என இக்குறள் கூறுகிறது.

Friday, 8 June 2012

வலைச்சி மக வருவாளா!

ஆசைக் கவிதைகள் - 34
Photo courtesy - The Telegraph




















ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
பாட்டுப்பாட மனமிருக்கா? ஏலேலங்கடி ஏலேலோம்! 
பாட்டுபாட மனமிருக்கு பக்கதுணைக்கு யாரிருக்கா?
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்! 
பக்கதுணைக்கு படகிருக்கு ஏலேலங்கடி ஏலேலோம்!
பக்குவமாய் பாத்து துடுப்பு போடணுமே!
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
துடுப்பெடுத்து போடயில ஏலேலங்கடி ஏலேலோம்! 
தூக்குமந்த கடலலய அடுத்தடுத்து மடக்கணுமே!
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
அடுத்தடுத்து மடக்கயில ஏலேலங்கடி ஏலேலோம்!
அள்ளிவரு மீனலய வலவீசி பிடிக்கணுமே!
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
வலவீசி பிடிக்கயில ஏலேலங்கடி ஏலேலோம்! 
வலயறுந்து போகாம வாரி எடுக்கணுமே!
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
வாரி எடுக்கயில ஏலேலங்கடி ஏலேலோம்! 
வாளமீனு வளத்திமீனு வகவகயாய் பிரிக்கணுமே!
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
வகவகயாய் பிரிக்கயில ஏலேலங்கடி ஏலேலோம்! 
வலச்சிமக வருவாளா! வலகைய தருவாளா!
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
                                                                      -  நாட்டுப்பாடல் (புங்குடுதீவு)
                                           - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 
குறிப்பு:
புங்குதீவில் 1939ல் வாழ்ந்த சுழிகாரர் நாகனாதி என்பவர் பாடித்திரிந்த பாடல் 

Thursday, 7 June 2012

தோண்டி எடுப்பதென்ன?

கணேசபுரத்து உடல்கள்




காடு வெளிகள் எல்லாம்
          கனன்று எரிவதென்ன
வீடு மனைகள் எல்லாம்
           வீழ்ந்து கிடப்பதென்ன
நாடு நகர்கள் எல்லாம்
           நலிந்து போனதென்ன
தேடுமிடங்கள் எல்லாமுடல்
          தோண்டி எடுப்பதென்ன?
                                      - சிட்டு எழுதும் சீட்டு 32