Sunday, 3 March 2024

எமை ஆண்டருளே


ஓதற்கு எளியானே ஒண்பொருளே
            ஓங்காரமாய் நின்றரற்றும் நல்
நாதத்து பேரிசையாய் பரந்து பரமாய்
            நுண் இசையாய் நுடங்கும் நாயகா
வேதத்து வித்தாய் விழுப்பொருளாய்
            விண்ணொடு மண்ணாய் விரவி மிளிர்
போதத்து போதனாய் அகம்போந்து புகும்
            பழனிவேலே எமை ஆண்டருளே
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
ஓதற்கு - சொல்வதற்கு
ஒண்பொருள் - மிகச்சிறந்த பொருள்
ஓங்காரமாய் - ஓம் என்னும் ஒலியாய்
அரற்றும் - சத்தம் செய்யும்
பரந்து - பரவி
பரமாய் - பரம்பொருளாய்
நுண் இசையாய் - நுட்பமான இசையாய்
நுடங்கும் - அடங்குதல்
வித்தாய் - மூலமாய்
விழுப்பொருளாய் - மேலான பொருளாய்
விரவி - கலந்து
மிளிர் - மின்னும்
போதம் - ஞானம்
போதனாய் - நிறை ஞானத்தை விரித்துக்கூறும் அறிவுடையவனாய்
அகம்போந்து - மனதினுள் வந்து
புகும் - நுழையும்

No comments:

Post a Comment