நான் 'நச்செள்ளை' என்ற பெயரில் ஆம்பல் இதழில் 2009ல் எழுதியது
சென்றது….
பண்டைய இலங்கையின் நாக நாட்டரசன் விசுவகர்மா. அவனின் மகன் மயன். ஓர் இரவு மயனின் மனைவி இளமதி நிலவொளியில் வசந்த மாளிகையில் இருந்து கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கே எதையோ பார்த்ததும் ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' என ஆனந்தக் கூத்தாடினாள். தான் கண்டதைக் காட்ட நிலா முற்றத்திற்கு மயனை அழைத்துச் சென்றாள். அவளது முன்நெற்றியில் இருந்த நாகசூடிகையின் மனோமய மாமணியின் ஒளி அவனைக் கடந்த காலத்திற்கு அழைத்துச் சென்றது.
இனி ....
"இதயதாக ராகம்"
“நெடும் பல் குன்றத்துக் குறும் பல மறுகி தாஇல் பெரும் பெயல் தலைஇய யாமத்து களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம்” - சேந்தன் பூதனார்[நற்றிணை]
மயன் இளவரசனாக இருந்த காலத்தில் உலக அறிவு பெறுவதற்காக குமரிமலைத் தொடரைக் கடந்து பெருவள நாட்டிற்கு அப்பாலுள்ள தேசங்களைச் சென்று பார்த்தான். திரும்பி வரும் வழியில் குமரிமலைத் தொடரின் நீலமலைச் சிகரத்திற்குச் சென்றான்.
அங்கு நீலவானமும் அதில் உலாவரும் வெண் மேகமும் போல நீலமலைச் சிகரமும் அதில் ஆங்காங்கே படர்ந்திருந்த பனிப்பாறைகளும் காட்சியளித்தன. நீலமலைச் சிகரத்திலா அல்லது நீல வானிலா நடக்கின்றான் என்பதை அவனால் அறிந்து கொள்ள முடியாதிருந்தது. ஏனெனில் நீலவானத்து மேகங்களும் நீலமலைச் சிகரத்தை ஊடறுத்துச் சென்று கொண்டிருந்தன. வானில் மிதந்து சென்ற மேகமூட்டங்கள் அவனையும் அவனுடன் வந்த நண்பர்களையும் ஒருவரை ஓருவர் பார்க்க முடியாது தடுமாறவைத்தன. அவனுக்கோ அவன் நண்பர்களுக்கோ இது முதல் அனுபவம் அல்ல. எனினும் முதல் அனுபவம் போல அதை அவன் உணர்ந்தான்.
கூடவே அவன் காதலி இளமதி நினைவில் நிழலாடினாள். மின்னலடிக்கும் நேரத்தில் அவள் வலது கன்னத்தில் தேன்றி மறையும் கன்னக்குழியின் நளினச்சுழிப்பு – பார்ப்பவர் மனத்தை வலைபோட்டு சிறைப்பிடித்து சற்றே கிறங்கவைக்கும். அந்த மோனச் சிரிப்பு மாறா முகத்தோடு அன்றொரு நாள்.
“மேகங்களின் மேலே ஏறி அவற்றோடு மிதந்து செல்ல வேண்டும்” என இளமதி சொன்னாள்.
அதற்காக தன்னவளுக்கென்றே இரவு பகலாக ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்து ஓசையின்றி உந்தியெழும் மயில்ப் பொறி ஒன்றை செய்து கொடுத்ததையும், இருவரும் மயில்ப் பொறியில் ஏறி மேகங்களிடையே பறந்து சென்றபோது அவள் மேகங்களைத் தொட்டு தடவி விளையாடியதையும் நினைத்தான். அந்த இனிய நினைவும் அவனிடமிருந்த ஒரு நீண்ட பெருமூச்சையே வெளிக்கொணர்ந்தது.
மயில்ப்பொறியில் ஏறி இருவரும் வானவீதியிலே உலாப்போய் திரும்பியதால் அவர்கள் காதல் ஊரார் வாயில் மெல்லப்பட்டது. அந்த அலர் அவன் தந்தை விசுவகர்மாவின் காதிற்கும் எட்டியது. அதனை அவர் காட்டிக்கொள்ளாது அவனை உலக அறிவு பெற்றுவா என அவனது நண்பர்களுடன் அனுப்பி வைத்ததையும் எண்ணிப் பார்த்தான். அவளைப் பிரிந்து இரண்டு வருடங்கள் உருண்டோடி விட்டன. அவனை அறியாமலே மீண்டும் வேதனை கலந்த பெருமூச்சு வெளிவந்தது. காதலி இளமதியைப் பிரிந்த நாளில் இருந்து அவளை நினைந்து நினைந்து நினைவாலே சுவைத்து வருபவன் அல்லவா! பெருவள நாட்டினுள் வந்துவிட்டோமே இளமதிக்கு எதைக் கொண்டு செல்வது எனச் சிந்தித்தான்.
“நீலமலைச் சிகரத்திலே மாசுணங்கள் வாழும் பகுதியில் ‘மனோமயமாமணி’ கிடைக்கும். அந்த மாசுணங்கள் நீலமலைச் சிகரத்தின் கிழக்குப் பகுதியில் வாழுகின்றன” என்று என்றோ ஒரு நாள் தந்தை விசுவகர்மா சொன்னது அவனின் சிந்தனைக்கு விருந்தானது. மகிழ்ச்சியுடன் தலையை மெல்ல ஆட்டிச் சிரித்துக்கொண்டு நண்பர்களைப் பார்த்து…
“நாம் இந்த மலையின் கிழக்குப் பக்கத்திற்குப் போவோம்” என்று கூறி விரைந்து சென்று அவர்கள் வந்த 'பணில விமானத்தில்' ஏறி இருந்தான்.
அந்தப் பணில விமானம் பனிமலையில் மெல்ல சறுக்கி ஓடி சரேலெனப் பறந்தது. அவனும் தன் சிந்தனையின் விருந்தை மெல்லச் சுவைக்கத் தொடங்கினான். காதலியர் கடைக்கண் காட்டிவிட்டால் காளையர்க்கு மாமலை கூட கடுகாகிவிடுமே. மயன்மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?
மயனின் நண்பர்களான முகிலனும், நத்தத்தனும் அவன் கூடவே இருந்தார்கள். அவர்கள் அவனின் நண்பர்கள் மட்டுமல்ல மெய்க்காப்பாளர்களும் அவர்களே தான். முகிலனே பணில விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தான். முகிலன் பல குரல்களில் பேசக்கூடியவன். நத்தத்தனோ நல்ல கவிதைகள் எழுதுவான். நத்தத்தனின் கவிதைகளை பல குரல்களில் படித்துக் காட்டிச் சிரிப்பதே முகிலனின் பொழுது போக்ககாக இருந்தது. இருவருமே தசவதானிகள். இரண்டு வருடங்களாக மூவரும் பல இடங்களைப்பார்த்து வருகின்றார்கள். மயனின் மேல் இதுவரை ஒரு சிறு துரும்பு கூடப்பட அவர்கள் விட்டதில்லை. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாக இருப்பார்கள். விசுவகர்மா அவ்விருவரின் திறமைகளைக் கண்டே மயனுடன் அவர்களை அனுப்பினார்.
பறந்து கொண்டிருந்த பணிலத்துள் இருந்த நத்தத்தன் நண்பர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தான். கடைசியில் முகிலனைப் பார்த்து…“முகிலா! நாம் நீலமலைச் சிகரத்தின் கிழக்குப் பகுதியில் என்ன செய்யப் போகின்றோம்" என்று கேட்டான்.
முகிலன் “தெரியாது” எனச் சைகை செய்தான்.
நத்தத்தன் மயனைப் பார்த்து “மாயா! அங்கு எதற்காகப் போகிறோம், என்று செல்லாமல் என்ன சிந்தனை?" என்றான்.
“நத்தத்தா! உன் திறமைகளுக்கு விருந்து வைக்கப் போகின்றேன்” என்றான் மயன்.’
“மாயா! இச்சிகரத்தின் கிழக்கே பனங்கூடலா இருக்கிறது? ஏடுகள் நிறையக் கிடைக்குமோ? இவன் கவிதை எழுத" எனச் சிரித்தான் முகிலன்.
“முகிலா! உலகிலே இந்த நீலமலைச் சிகரத்திலேயே இயற்கையின் எல்லா வளமும் ஒன்றாகக் கொட்டிக்கிடக்கிறது. அதோ பாருங்கள்! இந்த நீலமலைச் சிகரத்தின் வடக்கே வெண்பனியும், வடகிழக்கே பனி மரக்காடும், கிழக்கே பச்சைப் பசுங்காடும் தென்கிழக்கே எத்தனை பெரிய நீர் வீழ்ச்சிகளும் தெற்கே குமரிமலைத் தொடரின் முடிவில் கடலும் தென்மேற்குத் தொடக்கம் வடமேற்கு வரை நீல மலையும் பனிச்சாரலும் தெரிகின்றதே. இப்படி எல்லாவகையான இயற்கையையும் ஓர் இடத்தில் இருந்து பார்த்து இரசிக்க வேறு இடம் உலகில் உண்டா?” என்று கேட்டான்.
தொடர்ந்து “நத்தத்தா! ஒரு கவிஞனான நீ இவ்வியற்கையின் எழிலை இரசித்தால் இதனை ஒரு காவியம் ஆக்குவாய் என நினைத்தேன்” என்றான்.
நத்தத்தன், மயனைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டான். அதற்கிடையில் பணிலம் நீலமலைச் சிகரத்தின் கிழக்குப் பகுதிக்கு வந்திருந்தது. அவ்விடம் நெடிதோங்கிய அடர்ந்த மரங்களாக இருந்ததால் பணிலத்தை எங்கு இறக்குவதென்று முகிலன் கேட்டான்.
"முகிலா! ஓசை இன்றி இந்தக் கிழக்குப் பகுதியில் வட்டமடி நான் பணிலத்தை இறக்கும் இடத்தை தேர்வு செய்கிறேன்” என்றான் மயன்.
முகிலன் இருமுறை பணிலத்தில் வட்டமடித்தான். பின்னர் மயன் காட்டிய இடத்தில் பணிலத்தை ஒசையின்றி இறக்கினான்.
மூவரும் பணிலத்தில் இருந்து இறங்கி தமக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு மேலே நடந்தார்கள். மிகவும் அடர்த்தியான காடாதலால் மூவரும் பேசாமல் ஒருவர் பின் ஒருவராகச் சென்றார்கள். ஒரு காததூரம் வந்த பின்னர் சிறிய வெளியை அடைந்தார்கள்.
மயன் முகிலனைப் பார்த்து!
“முகிலா! இங்கே ஆம்பல் அம் தீங்குழல் கிடைக்குமா பார்” என்றான்.
“முகிலன் இருக்கும் போது உனக்கு எதற்கு மாயா ஆம்பல் அம் தீங்குழல்?” எனக் கேட்ட நத்தத்தன் ‘என்னிடம் இருக்கின்றது” என்றான்.
அவன் பதில் சொல்லி முடிக்க முன்னே முகிலன் ஆம்பல் அம் தீங்குழல் இசையான ஆம்பற் பண்ணை சீழ்க்கையில் அடிக்கத் தொடங்கினான்.
அதைக்கேட்ட மயன்…
“முகிலா! உன் சீழ்க்கையை நிறுத்து!” எனக் கத்திய பேரொலி நீலமலைச் சிகரத்தை அதிரச் செய்து, எதிரொலித்து நின்றது.
அதைக் கேட்ட நண்பர்கள் இருவரும் சிலையென நின்றார்கள்.
மயன் சிறுவயதில் இருந்தே பொறுமைக்குப் பெயர் எடுத்தவன். என்றுமே அதிர்ந்து பேசியறியாதவன் எவர் சொல்வதையும் நிதானத்துடன் கேட்பவன். அவன் கோபத்தை அவர்களிருவரும் இதுவரை பார்த்ததில்லை. இவன் மயன் தானோ? இல்லையேல் மாரீசத் தோற்றமோ என நினைத்தார்கள்.
மயன் கொஞ்சம் கோபம் தணிந்தவனாக “உடனே விரைவாக நாம் இந்த இடத்தை விட்டுச் செல்ல வேண்டும்” எனக்கூறியபடி நடக்கத் தொடங்கினான்.
நண்பர்களும் அவனைப்பின்தொடர்ந்தார்கள். அவன் கோபம் இன்னும் நீங்கவில்லை, என்பதை அவர்கள் உணர்ந்ததால் கண்களால் பேசிக் கொண்டனர். மயனுக்கு என்ன நடந்தது? அதை அறியும் ஆவல் அவர்களிடம் இருந்தது. அதனால் தசவதானிகளாய் இருந்தும் அவர்களைச் சுற்றி நடப்பதை உணர முடியவில்லை.
மயன் நடந்து கொண்டிருந்த போதும் அவனின் ஐம்புலன்களும் கண்ணாக சுற்றுச்சுழலை பார்த்துக் கொண்டே இருந்தன. திடீரென அவர்கள் மேல் இருள் சூழத் தொடங்கியதை அவன் கண்டான். தோரணப் பந்தல் போல் இருள் கவிந்திருப்பதையும் அந்த இருள் தம்மோடு தொடர்ந்து வருவதையும் அவனால் பார்க்க முடிந்தது. சரேலெ அவ்விருள் இரண்டாகப் பிரிந்தது. அவ்விருளின் அமைப்பைக் கொண்டு அது என்ன என்பதை மயன் புரிந்து கொண்டான்.
நண்பர்களை அவன் எச்சரிக்க முன் அவ்விருள் மெல்ல விலகியது. அங்கே நீண்டுயர்ந்து நின்ற மரத்திலிருந்து மாசுணம் ஒன்று ஊஞ்சலாடியபடி முகிலனை நோக்கி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மயன் வீசிய ஒளிவட்டம் மாசுணத்தின் தலைவேறு உடல் வேறாக்கி மயனிடம் திரும்பி வந்தது. அரைநொடி தாமத்தித்திருந்தால் கூட அது முகிலனின் உடலைக் குடித்த பின்னரே தன் உயிரை விட்டிருக்கும். குரல் வளையை ஒளிவட்டம் வெட்டியதால் மாசுணம் எதுவித சத்ததையும் எழுப்பவில்லை. ஊசலாடும் அதன் உடலிலுருந்து தாரை தாரையாக இரத்தம் சிந்தியது.
சிந்தும் இரத்தம் நண்பர்களின் மேல் படாதவாறு மயன் அவர்களிருவரையும் தன்னோடு இழுத்துக்கொண்டான். தடுமாறி நிமிர்ந்த இருவரும் மாசுணத்தின் உடலைப் பார்த்ததும் உறைந்து போனார்கள்.
தலை துண்டாடப்பட்ட மாசுணத்தின் இரத்தவாடை காற்றில் கலந்து பரவியதோ இல்லையோ அவர்களைச் சூழ எத்தனை! எத்தனை! மாசுணங்கள்! அவற்றை கண்டதுமே மயன் இதயவீணையில் மீட்டிய மனோமயமாமணி எனும் இதயதாகராகம் அபசுரமாக ஒலித்தது.
இசை கேட்கும்…...
இனிதே,
தமிழரசி.
சொல், சொற்றொடர் விளக்கம்:
"நெடும் பல் குன்றத்துக் குறும் பல மறுகி
தாஇல் பெரும் பெயல் தலைஇய யாமத்து
களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம்” - நெடிய பல குன்றுகளுள்ள மலைத்தொடரில் சிறிய பல மேகங்களாக இயங்கிப் பெருமழையாகப் பெய்த நடு இரவில் ஆண்யானையைச் சுற்றிப்பிடித்த பெருங்கோபங்கொண்ட மாசுணம் எனும் பேருருவப் பாம்பு.
மயில்ப்பொறி - மயில் வடிவமான சிறு விமானம் (மாந்தை மாண்மியம்)
அலர் - ஊரார் தூற்றும் பழிச்சொல்
மாசுணம் - மாபெரும் பாம்பு (யானையை விழுங்கும்)
மனோமயமாமணி - அணிந்திருப்பவர் மனநிலைக்குத் தக்கபடி நிறம் காட்டும் கல்.
பணிலவிமானம் - பனியில் சறுக்கியும், நீரைக் கிழித்தும், ஆகாயத்தில் பறந்தும் செல்லும் சங்கு வடிவான விமானம். (மாந்தை மாண்மியம்)
பணிலம் - வெண்சங்கு (இங்கு சங்குவடிவான விமானத்தைக் குறிக்கிறது.
தசவதானிகள் - ஒரே நேரத்தில் பத்து விடயங்களை மனதில் தங்கவைப்பவர்.
ஆம்பல் அம் தீங்குழல் - ஒருவகைப் புல்லாங்குழல்
ஆம்பற்பண் - சங்ககால இராகங்களில் ஒன்று. உதயசந்திரிகா (சுத்த சன்யாசி)
சீழ்க்கை - விசில்
மாரீசம் - தமிழர் கலைகளில் ஒன்று. (சூரிய ஒளியின் நிழலில் உண்டாக்கும் பொய்த்தோற்றம்).
கவிந்து - குடை போல் மூடி
ஒளிவட்டம் - ஒருவகை ஆயுதம். வைரம், மாணிக்கம் போன்றவற்றால் செய்யப்பட்ட சக்கரம்.
No comments:
Post a Comment