உயிரும் மெய்யும் உன்தாள் உவப்ப
தயிரும் நெய்யுந் தருபாலும் - பயிரும்
நற்றிருவும் நீரும் நிலனும் சிறக்க
பொற்புடன்றிகழ் புங்கையூ ரே
அமிழ்தாம் தமிழே! அழகிய குயிலாய்
ஆன்றோர் மகிழ ஆனந்த வெள்ளம்
இயற்கையின் நாத இனிமையைக் கூட்ட
ஈகையும் அறனும் ஈதலின் இன்பமும்
உயிராய்க் கொண்ட உண்மையோர் வாழும்
ஊர் புங்கை யூரெனெப் பலரும்போற்ற
எழில்தரு சோலை எங்ஙனும் சூழ
ஏரொடு பொலிந்து ஏற்றங்கள் நிறைந்து
ஐந்தார் செழிக்க ஐவண்ணம் வளர
ஒள்ளியோர் தங்கள் ஒள்ளொளி ஒளிர
ஓங்கியே மானுடர் ஓர்புடன் வாழ
ஔடத மரங்கள் அவ்விதழ் மலர
அஃகமும் காசும் அகந்தொறும் பெருக
வாழிய புங்குடுதீவு எனக் கூவாய்!
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
நற்றிருவும் - நல்ல செல்வமும்
எங்ஙனும் - எவ்விடத்திலும்
ஏர் - உழவு
ஏர் - உழவு
ஏற்றங்கள் - நீரேற்றங்கள்
ஐந்தார் - பனைமரம்
ஐவண்ணம் - மருதோன்றிமரம்
ஒள்ளியோர் - அறிவுடையோர்
ஒள்ளொளி - அறிவு
ஓர்புடன் வாழ - சிந்தித்து வாழ
ஔடதம் - மருந்து
அவ்விதழ் - அழகிய பூவிதழ்
அஃகமும் - தானியங்களும்
குறிப்பு:
புங்குடுதீவிற்கு 2014ல் சென்ற பொழுது போர்க்கோல மேகம் கொட்டிய குண்டுமழையில் நனைந்து சிதறுண்டிருந்த அதன் நிலையைப் பார்த்த நெஞ்சக்கனலோடு 10 - 04 - 2014 அன்று தமிழின் பன்னிரு உயிரெழுத்தும் ஆயுதவெழுத்தும் அகர வரிசையில் வர எழுதியது. [தமிழை அழகிய குயிலாகமாறி, புங்குடுதீவை வாழ்த்த வேண்டுதல்]
அகரவரிசைப் பாடல் அருமை! (எங்கனும் should be எங்கணும் - கவனிக்கவும்)
ReplyDeleteபாயிரம்போல் உள்ள பாடலும் நன்று! (உந்தாள் = உன்தாள் அல்லது உன்றாள்; பொற்புடந்திகழ் = பொற்புடன் திகழ் அல்லது பொற்புடன்றிகழ் என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். கவனிக்கவும்.)
மகிழ்ச்சி. நீங்கள் சொன்னவற்றப் பார்த்து திருத்தியுள்ளேன். எங்கனும் என்பது எங்ஙனும் என எவ்விடத்திலும் எனும் கருத்தில் வரவேண்டிய சொல். வாழ்த்துக்கள்.
Delete