Tuesday, 28 March 2017

உமியைக் குற்றிக் கைவருந்துவோர்


நெல்லை உரலில் இட்டு குற்றினால் அரிசியும் உமியும் கிடைக்கும். நெல்லைக் குற்றிப் புடைத்து அரிசியை எடுத்தபின் அங்கே சப்பியும் உமியும் குவிந்து கிடக்கும். சப்பி அதிகம் இருக்கும் பொழுது அது நெற்குவியல் போலவே காட்சி அளிக்கும். அதனை எடுத்துச் சென்று தம்மிடமும் நெல்லுண்டு என்பதைக் காட்டுவதற்காக உரலில் போட்டு இடிப்பர். சப்பி நெல்லையும் உமியையும் இடித்தால் அரிசி கிடைக்குமா? கிடைக்காது. ஆனால் இடிக்கும் சத்தத்தைக் கேட்போர் நெல்லுக் குற்றுவதாக நினைப்பார்கள். அருகில் சென்று பார்ப்போருக்குத் தெரியும் அவர்கள் உமியைக் குற்றுவது. பார்த்தவர்கள் சொன்னாலும் கேட்டவர்கள் நம்பமாட்டார்கள். உமியை உரலில் இட்டு குற்றியவனுக்கு கடைசியில் கிடைப்பது என்ன? கைநோ. அதன் வலி சிலருக்கு உடனே தெரியும். பலருக்கு நாள் போகப் போகத் தெரியும். காலங்காலமாகப் பகட்டுக்காக உமியைக் குற்றும் வேலைகள் அரங்கேறிய படியே இருக்கின்றன. அதனைப் பார்த்த கடைச்சங்க காலப்புலவரான நல்லாதனார்

“வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கு நோன்பிலியும்
இல்லது காமுற் றிருப்பானுங் - கல்வி
செவிக்குற்றம் பார்த்திருப் பானும் இம்மூவர்
உமிக்குற்றிக் கைவருந்து வார்”
- (திரிகடுகம்: 28)
என உமியைக் குற்றி கை வருந்துவோரை எடுத்துக் காட்டுகிறார்.

தாம் வெற்றி அடைவதற்காக வெகுண்டு இல்லாதது பொல்லாததைச் சொல்பவர்கள் இருக்கிறார்கள். நீங்கதான் போன் செய்து அவர்களிடம் அப்படிச்சொன்னீங்க. நாங்க பதிவு செய்து வைத்திருக்கிறோம். படம் எடுத்து வைத்திருக்கிறோம். இப்படியெல்லாம் பலரைப் பலவிதமாக வெருட்டிச் சினந்து காரியம்  பார்க்கும் தவமில்லாத் தீயோரும், தம்மிடம் இல்லாத பொருட்களை விரும்பி இருப்பவனும் பல நூற்களை ஆராய்ந்த கற்ற கல்வியறிவு இல்லாது கேட்ட விடையங்களை வைத்து கற்றறிந்தவர்களிடம் குறை காண்பவனும் ஆகிய இப்படிப்பட்ட மூவரும் உமியைக் குற்றுவோர் போல வருந்துவர்.

கோபப்பட்டு வாயால் வெருட்டி பிறரை வெல்ல நினைப்போரும் தம்மால் அடைய முடியாததை தமதாகக் கருதுவோரும் பிறரின் கல்வியின் ஆற்றலை அறியாது கேள்வி ஞானத்தால் குற்றம் கண்டுபிடிப்போரும் உமியைக் குற்றிக் கைவருந்துவோர் போல துன்பமடைவர். எவருக்கும் பயன்படாத வேலை செய்வோருக்குக் கிடைப்பது துன்பமே.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment