Friday, 16 December 2016

பாடையிலே படுத்தூரைச் சுற்றும் போதும்


கோடையிலே கொடுவேயிற் காயும் போதும்
          கொழுந்தமிழ் பாமழையிற் தோயவேண்டும்
வாடையிலே வெற்றுடல் நடுங்கும் போதும்
          வண்டமிழின் கதகதப்பிற் காயவேண்டும்
பாடையிலே படுத்தூரைச் சுற்றும் போதும்
          பைந்தமிழில் அழுமோசை கேட்கவேண்டும்
ஓடையிலே ஒண்சாம்பர் கரையும் போதும்
          ஒண்தமிழே சலசலத்து ஓயவேண்டும் 
                                                        - மட்டக்களப்பு புலவர்

என்கின்ற இந்தப்பாடலுக்கு சொந்தக்காரர் விபுலானந்தர் காலத்தில் வாழ்ந்த மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு தமிழ்ப்புலவரே. அப்புலவரின் பெயர்  ஞாபகமில்லை. ஆனால் அவர் மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது தெரியும். அவரின் பெயர் என்ன என்பதை மட்டக்களப்பு மக்களே உலகிற்கு அறியத்தர வேண்டும்.

இப்பாடலில் ஓர் இடத்திலும் என், என்னை, என்றன் போன்ற சொற்களை இப்பாடலை எழுதியபுலவர் எழுதவில்லை. சிறுவயதில் நான் பாடித்திரிந்த பாடல் இது. அத்துடன் என் தந்தை பண்டிதர் ஆறுமுகன் அவர்கள் மேடைகளில் எடுத்துச் சொன்ன பாடல்களில் இதுவும் ஒன்று. அதனாலேயே மிக்க துணிவுடன் இதனை இங்கு பதிவு செய்கிறேன்.

இப்பாடல் எப்படியெல்லாம் நிறம்மாறி வருகிறது என்பதை நீங்களும் கொஞ்சம் பாருங்களேன். சிலர் இப்பாடலை வலைத்தளங்களில்
“கோடையிலே கொதி வெயிலில் காயும் போதும்
           கொப்பளிக்கும் தமிழ் வெள்ளம் தோயவேண்டும்
வாடை தருமூதலிலே நடுங்கும் போதும்
           வயங்கு தமிழ் கதிரென்னை காயவேண்டும்
பாடையிலே படுத்தூரை சுற்றும் போதும்
           பைந்தமிழில் அழுமோசை கேட்க வேண்டும்
ஓடையிலே என் சாம்பல் கரையும் போதும்
           ஒண் தமிழே சலசலத்து ஓடவேண்டும்” 
என எழுதுகின்றனர்.

தமிழ் விக்கிபீடியா ‘தமிழ்ப் பற்று’ என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ள பாடல்களில் இப்பாடலும் ஒன்று. அதில்
“சாகும் போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல்
சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்
பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்
ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்” 
என்று எழுதி அதனை மலையாளத்தைச் சேர்ந்த சச்சிதானந்தம் எழுதியதாகக் குறித்துள்ளது. அந்தக் கவிஞரின் படத்தையும் தமிழ்விக்கிப்பீடியாவில் சச்சிதானந்தம் என்று அடித்துப் பார்க்கலாம்.  

வல்லமை வலைத்தளத்தில் “செம்மாந்த நோக்கர் சிலம்பொலி செல்லப்பனார்” என்ற தலைப்பில் மறவன்புலவு ச சச்சிதானந்தன் அவர்கள் எழுதிய கட்டுரையை வாசித்தேன். அதில் 
“சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும்
என் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்
ஓடையிலே என் சாம்பல் கரையும் போது
ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்”
என்ற வரிகளைப் பாரதிதாசன் இயற்றிய வரிகளாகத் தமிழ்நாட்டு மேடைகளில் ஓங்கி உரத்துச் சொல்வோர் சிலர் இருந்தனர். அந்த வரிகள் பாரதிதாசனுடையவை அல்ல, தவறாகச் சொல்கிறார்கள். ஈழத்துக் கவிஞர் மாவிட்டபுரம் பண்டிதர் க சச்சிதானந்தன் எழுதிய வரிகள் என அடிக்கடி முழங்குபவர் சிலம்பொலி செல்லப்பனார்’ என்று மறவன்புலவு ச சச்சிதானந்தன் எழுதியிருந்தார். சிலம்பொலி செல்லப்பனார் முழங்கும் பாடல் என மறவன்புலவு ச சச்சிதானந்தன் குறிப்பிட்ட  பாடலின் முதல் இரு வரிகளின் தன்மையும் கடைசி இருவரிகளின் தன்மையும் (எதுகை, மோனை) மாறுபடுகிறதே. அந்த மாறுபாடே அப்பாடல் ஒரு பண்டிதரின் பாடல் இல்லை என்பதைக் காட்டும். 

எண்பது வருடங்களுக்கு முன்வாழ்ந்த ஈழத்துத் தமிழ்ப்பற்றாளரின் அற்புதவரிகளை இராஜபாரதி, காசியானந்தன், பாரதிதாசன், மலையாளத்து சச்சிதானந்தம் போன்ற பல கவிஞர்களின் பெயரில் பலவித மாற்றங்களுடன் எழுதுகின்றனர். அவை தவறு என்பதை இன்றைய ஈழத்தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடப்பாடு அப்பாடலைப் பாடித்திரிந்த எனக்கு இருக்கிறது என்பதனால் எழுதுகிறேன்.
இனிதே,
தமிழரசி.

9 comments:

  1. அருமையான கண்ணோட்டம்
    பாராட்டுகள்

    ReplyDelete
  2. நன்று.மிக்க நன்றி .தொடர்க நற் பணி.

    ReplyDelete
  3. உணர்ச்சிக் கொப்பளிக்கும் இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் யார்?

    ''சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன்
    சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்''

    காலத்தை வென்ற கவிதை வரிகளில், முதலாவதாகத் தமிழ் உணர்வு, தமிழ்ப் போராட்டம், தமிழ் உயர்வு பற்றிப் பேசுவோர், எழுதுவோரில் பலர் பாவேந்தர் பாரதிதாசன் பெயரில் வழங்கிவரும் “சாகும்போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும்! என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்!” என உணர்வைத் தட்டி எழுப்பும் கவிதை வரிகளை எடுத்துக் கொள்வார்கள்.

    வேகமாகப் பரவி, விதம் விதமாய் மாறியும் உலவிவரும் இந்தத் தமிழ் உணர்ச்சிக் கவிதை வரிகள் காலத்தை வென்று எழுந்து வந்திருப்பதுபோல, அந்த வரிகளைக் கொண்ட முழுக்கவிதையும் என்றும் காலத்தைவென்று நிற்கும் கவிதையே.

    எழுத்திலும் பேச்சிலும் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட வரி, “சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும் என்றன் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்” என்பது.

    இந்த வரிகளின் கனற்கொதிப்பைப் பார்த்த பலர் இதை எழுதியவர் பாரதிதாசன் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

    உண்மையில் இதை எழுதியவர் ஈழத்துக் கவிஞர் பண்டிதர் க. சச்சிதானந்தன் அவர்கள். [[கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் (அக்டோபர் 10, 1921 - மார்ச் 21, 2008)]]

    .யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை, மாவிட்டபுரத்தில் கணபதிப்பிள்ளை (தும்பளை), தெய்வானைப்பிள்ளை (மாவிட்டபுரம்) ஆகியோருக்குப் பிறந்தவர் சச்சிதானந்தன்.

    ReplyDelete
  4. நீங்கள்குறிப்பிடும் "கோடையிலே கொடுவெய்யிற் காயும்போதும்" என்ற பாடலை எழுதிய மட்டக்களப்புக் கவிஞர், ராஜபாரதி என்னும் புனைபெயர்கொண்ட மட்டக்களப்புக் கவிஞர் என்று மட்டக்களப்புக் கவிஞர் காசியானந்தன் சொன்னதாக பின்வரும் கட்டுரையில், ஆனந்தர் பூபதி வடிவேற்கரன் என்பவர் எழுதியுள்ள பின்னூட்டத்தில் வாசித்தேன்.
    https://mrtcev.blogspot.com/2020/03/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன். ராஜபாரதி விபுலானந்தர் காலத்தவரா? அவரின் இயற்பெயர் என்ன? அறியத்தர முடியுமா? மகிழ்ச்சி.

      Delete
  5. இதையும் பார்க்கவும்:

    https://mrtcev.blogspot.com/2020/03/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. இரண்டும் ஒன்றல்லவா!

      Delete